Advertisement

அவனை மிதப்பாக பார்த்த ருஹானா குறுநகையுடன் நாற்காலியை நகர்த்தி சிறைக்கம்பிகளுக்கு அருகே போட்டாள். “தன்வீர் என் சகோதரன்ங்கறதை மறந்திட்டீங்களா? எளிதான செயல் இல்ல தான். ஆனா தன்வீர் எனக்கு ஏமாற்றம் தர விரும்பல”

நாற்காலியில் அமர்ந்தவள், பேசிக்கொண்டே தான் கொண்டுவந்திருந்த பையில் இருந்த குடுவையை எடுத்தாள்.

“ரஷீத் சொன்னார் தான், நீங்க எங்க யாரையும் பார்க்க வரக்கூடாதுன்னு சொன்னீங்கன்னு.. ஆனா என்னை எதுவும் தடுத்த நிறுத்த முடியாதுன்னு நீங்க தெரிஞ்சிக்கங்க”.

அவளை பார்த்துக்கொண்டே இருந்த ஆர்யனுக்கு சற்று கோபம் குறைந்தது. அவளது அழகு பாவனைகளை ரசித்தபடி நின்றிருந்தான்.

“நீங்க கூட நினைச்சிருக்கலாம், உங்களை இங்க நான் தனியா விட்டுடுவேன்னு… நீங்க அப்படி நினைச்சிருந்தீங்கனா அது தவறு!”

குடுவையிலிருந்து ஒரு கோப்பையில் காபியை ஊற்றி அவனிடம் புன்னகையுடன் நீட்டினாள். “காபி இல்லாம உங்க நாள் ஆரம்பிக்காதே!”

கம்பிகளுக்கு வெளியே கை நீட்டி அந்த சிறிய கோப்பையை வாங்கிக்கொண்டவன் அவளுக்கு இணையாக திண்டில் அமர்ந்தான். அவர்களுக்கு இடையே கம்பிகள் மட்டுமே இருந்தன.

“அப்புறம்… இந்த குக்கீஸ், இந்த நாளை இனிமையா தொடங்க…” என்று குக்கீஸ் இருந்த பாத்திரத்தை ருஹானா நீட்ட, ஆர்யன் வெளியே தெரியும் புன்னகையுடனேயே அதில் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

தனக்கும் ஒரு கோப்பையில் காபியை ஊற்றிக்கொண்டவள் அவன் புறம் பக்கவாட்டில் திரும்பி “அம்ஜத் அண்ணா ஊர்ல இருந்து திரும்பி வந்துட்டாங்க. சுற்றுலா ரொம்ப நல்லா இருந்ததாம். சாரா அக்கா, நஸ்ரியா கூட விடுமுறை முடிஞ்சி வேலைக்கு வந்துட்டாங்க. இவான் காலைல நல்லா சாப்பிட்டான். இப்போ நஸ்ரியா அவனை பார்த்துக்கறா. நான் வரும்போது அம்ஜத் அண்ணா செடிகளுக்கு தண்ணீர் விட்டுட்டு இருந்தார். நீங்க வரும்போது எப்படி இருந்ததோ எல்லாம் அப்படியே இருக்கு. எல்லாரும் நல்லா இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க” என்றபடியே நேராக திரும்பி அவள் காபியை குடிக்க ஆரம்பித்தாள்.

அவளது நீண்ட உரையை கேட்டுக்கொண்டிருந்தவன் மனப்பாரம் நீங்கி அவளை பார்த்துக் கேட்டான். “ஏன்?….. ஏன் நீ இதெல்லாம் செய்றே?”

“ஏன்னா.. என்னால அமைதியா உட்கார்ந்து காத்திட்டு இருக்க முடியல. அப்புறம்…. இது மட்டும் தான் என்னால செய்ய முடிஞ்சது. உங்களை சுத்தி இருக்கறவங்க.. மிஸ்டர் ரஷீத், லாயர்ஸ், போலீஸ் உங்க கேஸை பத்தி மட்டும் தான் உங்ககிட்டே பேசுவாங்க. ஆனா நான்…. நான் உங்களுக்கு ஒரு காபி குடிக்கற சமயமாவது இடைவேளை கொடுக்கணும்னு நினைச்சேன். எல்லாமும் எப்படி நடக்குதுன்னு உங்களுக்கு சொல்ல நினைச்சேன்.”

மனம் தொடும்படி அவள் உருக்கமாக பேச, ஏற்கனவே உருகி இருந்த ஆர்யன் கரைந்து போனான். அவளிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் காபியை சொட்டு சொட்டாக ரசித்து அருந்தினான்.

“உங்களுக்கு பிடிக்கலனாலும் நான் இங்க வந்திருக்கேன். ஏன்னா இதுலாம் கடந்து போகும், எல்லாம் பழையபடி நடப்புக்கு திரும்பிடும்னு நானும் நம்ப ஆசைப்படுறேன்”

ருஹானா கண்கள் லேசாக நீர் திரையிட, ஆர்யன் அவள் அன்பில் கனிந்து அமர்ந்திருந்தான். உண்மையான அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் உணர்த்தப்படுவது!

அன்பு சிறை செய்ய துடித்தவன்

காவலன் பிடியில்…

அகம் நுழைந்தவளின் வருகை

இறுக்கம் குறைத்தது!

இனியவளுடன் குளம்பி நேரம் 

சொல்லொணா ஆறுதல் அளித்தது!

இருவரும் குக்கீஸ் சாப்பிட “நல்லா இருக்கு. நன்றி!” என ஆர்யன் சொல்ல, ருஹானா “இனிய உணவு!” என்றாள். அவள் சிந்தனையில் மூழ்க, அவள் முகம் கவலையை காட்ட அவன் பதட்டமானான். “என்ன நடந்தது? என்ன யோசிக்கிறே?”

“நீங்க வெளிய வந்ததும் என்ன செய்வீங்க?”

“என்ன செய்வேன்? முன்னாடி என்ன செய்துட்டு இருந்தேனோ அதை செய்வேன்”

“நான் அது கேட்கல. உங்க மேலே பழி சுமத்தினவங்களை என்ன செய்வீங்க? நீங்க… நீங்க அவங்களை பழிவாங்குவீங்களா?”

அவள் முகத்தின் பயரேகைகளை பார்த்த ஆர்யன் “இல்லை!” என சொல்ல, ருஹானாவின் முகம் பூவாய் மலர்ந்தது. அவன் இதயமும் குளிர்ந்தது.

அப்போது உள்ளே வந்த தன்வீர் “ருஹானா! கோர்ட்க்கு கூட்டிட்டு போக வண்டி வந்திருச்சி. நீ வெளிய வா” என்று சொல்லி சென்றான்.

ருஹானா கிளம்ப தயாராக, ஆர்யன் “உனக்கு நான் ஒரு காபி கடன்பட்டு இருக்கேன். கோர்ட் முடிஞ்சதும் என் கடனை நான் உனக்கு திருப்பி செலுத்திடுவேன்” என சிரிக்காமல் ஆனால் மலர்ந்த முகத்துடன் சொல்ல, ருஹானாவின் புன்னகை பெரிதாகி கண்களிலும் அந்த மலர்ச்சி பிரதிபலித்தது.

———

நீதிமன்றத்தில் ஆர்யன் முன்வரிசையில் அமர்ந்திருக்க அவனுக்கு பின்னால் ருஹானா பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள். வாசிமும் தன்வீரும் கூட வேறொரு நீண்ட இருக்கையில் அக்கம்பக்கம் அமர்ந்திருக்க, ரஷீத்தை காணவில்லை. அவன் இரவு காவலாளி நிஸாமை அழைத்துவர சென்றிருக்கலாம். நீதிபதிகளில் ஒருவர் தன் முன்னே இருந்த அறிக்கையை வாசித்தார்.

“காவல்துறையின் தேடுதல் வேட்டையின் விளைவாகவும், பல்வேறு விசாரணைகளுக்கும் பின்னர் மிஸ்டர் ஆர்யன் அர்ஸ்லான் ஆட்கடத்தல் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் கிடங்கில் அடைத்து வைத்திருந்தவர்களை காவல்துறையினர் விடுவித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையில் மிஸ்டர் ஆர்யன் அர்ஸ்லான் பணத்திற்காக அவர்களை வெளிநாடுகளில் விற்க அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் சார்பாக நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா, ஆர்யன் அர்ஸ்லான்?”

ருஹானாவை திரும்பி பார்த்துவிட்டு எழுந்த ஆர்யன் “நான் நிரபராதி. இது எல்லாமே எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதிச்செயலே” என்றான்.

வாசிம் “அவங்க எதிர்பார்க்கற சாட்சி வரலனா, இந்த முறை அர்ஸ்லான் சிறைக்கு போறது நிச்சயமா நடக்கும்” என சொல்ல, தலையாட்டிய தன்வீர் “நீங்க சொல்றது சரி தான் கமிஷனர்! ஆர்யனுக்கு கஷ்டமான நேரம் இது” என்றான். இருவரும் மெதுவான குரலில் பேசினாலும், அது ருஹானாவிற்கு கேட்க, அவள் வயிற்றில் பயப்பந்து உருண்டது.

ருஹானா ஆர்யனை பார்க்க, அவன் எந்த பதட்டமும் இல்லாமல் இருக்க, அவள் கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள். சற்று நேரம் காத்திருந்த நீதிபதி “பிரதிவாதி சார்பாக சரியான சாட்சி நீதிமன்றத்தில் அளிக்கப்படாவிட்டால்…“ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரஷீத் நிஸாமை கூட்டிக்கொண்டு உள்ளே வந்தான்.

ருஹானா நிம்மதி அடைய, ஆர்யனின் வழக்குரைநர் “இதோ எங்களுடைய சாட்சி. இவரின் வாக்குமூலம் மூலம் எனது கட்சிக்காரரின் குற்றமற்ற தன்மை நிருபிக்கப்படும்” என சொல்ல, நீதிபதி நிஸாமை பார்த்து “நீங்கள் சொல்ல வந்ததை இங்கே இப்போது சொல்லலாம்” என்றார்.

நிஸாம் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க, ஆர்யன் அவனை திரும்பி பார்த்தான். ஆனால் நிஸாம் ஆர்யனின் பார்வையை தவிர்த்தான்.

“இங்கே அமர்ந்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் அகதிகளை அவரது கிடங்கில் அடைக்க உங்களுக்கு உத்தரவிட்டாரா? ஆர்யன் அர்ஸ்லான் ஆட்கடத்தலை செய்கிறாரா?” என நீதிபதி கேட்க, நிஸாம் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தான்.

வாசிமும் தன்வீரும் நிஸாமை சந்தேகமாக பார்க்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்ட நிஸாம் மெல்ல நிறுத்தி நிறுத்தி பேசினான். “இது எல்லாமே உண்மை தான் ஐயா! இதற்கு முன்னும் ஆர்யன் அர்ஸ்லான் இதை போன்ற கடத்தலை செய்திருக்கிறார். மனிதர்களை அடைத்து வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். என்னை அவர் மிரட்டி இந்த வேலையை செய்ய வைத்தார்”

அதைக் கேட்ட ஆர்யன் கொதிப்புடன் எழுந்தான். “நீ பொய் சொல்றே! எங்கே என்னை பார்த்து சொல்லு, பார்க்கலாம்”

“அமைதி! அமைதி!” என நீதிபதி சொல்ல, ஆர்யன் ருஹானாவை திரும்பி பார்த்தபடியே அமர்ந்தான். ‘நீ இதை நம்புகிறாயா?’ என அவன் கண்கள் கேட்க ‘இல்லை. நான் நம்ப மாட்டேன்’ என அவள் விழிகள் உறுதியாக கூறின. வாசிம் தீவிரமாக யோசித்தான்.

“குற்றவாளி எழுந்து நிற்கலாம்” என நீதிபதி சொல்ல, ஆர்யனோடு அனைவரும் எழுந்து நின்றனர்.

“இதுவரை நீதிமன்றத்தில் நடந்த வழக்காடல்களையும் சாட்சிகளையும் கருத்திற் கொண்டு ஆர்யன் அர்ஸ்லானுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. அவர் மீதான மேற்கட்ட விசாரணைகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்”

‘நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னும் என்மேல் உனக்கு நம்பிக்கை குறையவில்லையா?’ என்பதுபோல ஆர்யன் ருஹானாவை பார்த்தே நின்றான்.

(தொடரும்)

Advertisement