Advertisement

இன்னும் பொங்குகிற கண்ணீரை அவள் குனிந்து இருகைகளாலும் துடைக்க, அவள் நாடியை பிடித்து முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். “எனக்கு சத்தியம் செய். இனிமேல் நீ அழவே கூடாது” பிடித்த பிடியை விடாது அவளை நெருங்கி அவன் வாக்கு கேட்க, அவளும் இதயம் கசிந்து  தலையசைத்தாள். இதற்கு மேல் அவளுக்கான அவன் காதலை எப்படி தெரிவிப்பது?

காவலன் ஒருவன் கதவை திறந்து உள்ளேவர, கண்ணாலேயே அவள்  அவனிடம் விடைபெற, அவனும் தலையாட்ட, அவனை திரும்பி திரும்பி பார்த்தவண்ணம் வெளியேறினாள். ஆர்யனுக்கு தன்மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆத்திரம் மிதமிஞ்சி இருந்தாலும், அவன் மீதான ருஹானாவின் நம்பிக்கை அவனுக்கு இதம் தந்தது. அவனுக்கு வலுவூட்டியது.

இந்த இருவரின் உறவு விசித்திரமானது. இருவரும் எதிரிகளாக அறிமுகம் ஆனவர்கள். ஆனால் ஒருவருக்காக ஒருவர் உயிரையும் கொடுப்பர். இருவரின் குணநலன்கள் வெவ்வேறு. ஆனால் இருவரின் பாதையும் ஒன்றே! இருவரும் உயிருக்குயிராய் நேசிப்பவர்கள். ஆனால் தங்கள் காதலை வெளியிட்டதில்லை. இருவரும் இவானுக்கு சிறந்த பெற்றோர்கள். ஆனால் இருவருக்கும் மணமாகவில்லை. என்னே பிரபஞ்சத்தின் விளையாட்டு!!

———

சையத் புத்தகம் படித்துக்கொண்டிருக்க, வாசிம் யாருமில்லா அந்த உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு அவர் முன்னே சென்று அமர்ந்தான். அவர் நிமிர்ந்து பார்க்க, “ஆர்யன் அர்ஸ்லான்! அவனை இன்னைக்கு நான் கைது செஞ்சிருக்கேன், வலுவான ஆதாரங்களோட” என வாசிம் சொல்லவும், அதிர்ந்த சையத் ஏதோ சொல்ல வர, வாசிம் அவரை கை காட்டி தடுத்தான்

“இருங்க, சையத் பாபா! நான் பேசி முடிச்சிடுறேன். எனக்கு தெரியும், நீங்க ஆர்யனை பற்றி நல்ல கருத்துக்கள் வச்சிருக்கீங்க. நான் அவனை பார்க்கறது வேற, நீங்க பார்க்கறது வேற. நான் இங்க உங்களை கிண்டல் செய்ய வரல. உங்களை புரிஞ்சிக்க வந்திருக்கேன். நான் அவனை கெட்டவனா தான் பார்க்கறேன். நான் பார்க்காதது அப்படி என்ன நீங்க அவன்கிட்டே பார்க்கறீங்க?”

அவன் பேச பேச திகைப்பு நீங்கிய சையத், சில விநாடி யோசனைக்கு பின் முகத்தில் லேசான புன்னகையுடன் “உன்னை பார்க்கறேன்!” என சொல்ல, வாசிம் அதிர்ந்தான்.

“ஏன்னா உன்னோட ஒரு பகுதி ஆர்யன்ட்ட இருக்கு. ஆர்யனோட ஒரு பகுதி உன்கிட்டே இருக்கு”

“எனக்கு புரியல, சையத் பாபா!”

“எப்படின்னா எல்லாருக்கும் உள்ள ஒரு விலைமதிப்பில்லாத இரத்தினம் இருக்கு. நீ அவனோட இருண்ட பக்கத்தை பார்க்க ஆசைப்படுறே, அதனால அவன் உனக்கு கெட்டவனா தெரியறான். நீ எதை பார்க்க விரும்புறியோ அதான் உன் கண்ணுக்கு தெரியும். காலம் மாறும், உன்னோட கோணங்களும் மாறும். அப்போ நீ அவனை சகோதரனைப் போல பார்க்கலாம்! காத்திரு! சரியான சமயத்துக்கு காத்திரு”

வாசிம் பலத்த சிந்தனையில் மூழ்கிப் போக, அவனுக்கு உணவு தயாரிக்க சையத் எழுந்து போனார்.

——–

ருஹானா ஆர்யனை பற்றிய கவலையில் ஆழ்ந்து தூக்கம் வராமல் தவிக்க, ஆர்யனுக்கு அத்தனை கவலைகள் இல்லை. அவனும் தூங்காமல் தான் இருந்தான். ஆனால் அவனது தனிமையை தவிடுபொடியாக்கியிருந்தன அவளது நினைவுகள். முகத்தில் மெல்லிய குறுநகை மலர, இருவரும் பிடித்திருந்த கம்பிகளை பார்த்தவன், எழுந்து வந்து அந்த கம்பிகளை அவள் பிடித்த இடத்தில் பிடித்துக்கொண்டான்.

  ———

“குட்மார்னிங் ருஹானா மேம்! நீங்க தூங்கவே இல்லயா?”

“இல்ல ஜாஃபர் அண்ணா! அவர்கிட்டே அழமாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன். ஆனா அவர் கம்பிகளுக்கு பின்னாடி இருக்கார்ன்னு நினைக்கும்போது அழுகையை அடக்கறது எளிதா இல்ல. இப்படி ஒன்னும் செய்யாம சும்மா இருக்கறது சிரமமா இருக்கு”

“ஆர்யன் சார் அழவேண்டாம்னு சொன்னார்னா, வருத்தப்பட ஒன்னும் இருக்காது, மேம்!”

“எனக்கு தெரியும் அவர் நிரபராதி தான். ஆனா அவருக்கு எதிரா பலமான ஆதாரங்கள் இருக்கு. அவர் விடுதலையாகறது மிகவும் கடினம்”

“நீங்க கவலைப்படாதீங்க. இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. நீங்க கடினம்னு நினைக்கிறதுலாம் ஒன்னுமே இல்லாம போய்டும். இதை விட கஷ்டமான காரியத்துல இருந்ததெல்லாம் அவர் மீண்டு வந்திருக்கார். இதுல இருந்தும் அப்படியே வந்துடுவார்”

“நீங்க எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க ஜாஃபர் அண்ணா?”

“அவரை கொல்ல வந்த என்னையே நண்பனா மாத்தினவருக்கு எதுவும் சிரமம் இல்ல, மேம்!”

“என்ன!! நீங்களா?”

“ஆமா! இது விசித்திரமான உலகம் ருஹானா மேம்! சொந்த சகோதரர்களே வெட்டிட்டு சாய்வாங்க. ஆனா இங்க தான் கொல்ல வந்தவனையும் மன்னிக்கிற ஆர்யன் ஸாரை போலவும் மனிதர்கள் இருக்காங்க. முன்னே நான் அவரை கொலை செய்ய முயற்சி செய்தேன். ஆனா இப்போ அவருக்காக ஒரு நொடிகூட யோசிக்காம என் உயிரையும் கொடுப்பேன். அதனால அவர் மேலே வச்ச நம்பிக்கையை இழக்காதீங்க. யார் கைவிட்டாலும், ஆர்யன் சார் எப்பவும் கைவிட மாட்டார்.”

“நன்றி ஜாஃபர் அண்ணா! என்னை நம்பி உங்க கதையை சொன்னதுக்கு”

ஜாஃபர் தலையை ஆட்டி அகல, ருஹானா சத்தமாக சொல்லிக்கொண்டாள்.

“நான் உங்கள நம்பறதை எப்பவும் நிறுத்த மாட்டேன்”

———-

மிஷால் உணவகத்துக்கு ஆள் அனுப்பிய காதர், மிஷாலுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவனுக்கு கேட்கும் உதவியை செய்துவிட்டு வர சொன்னான். பயந்து போன மிஷால் “நான் உங்க கையாள் கிடையாது. எனக்கு உங்ககிட்டே இருந்து எதுவும் வேணாம். என்னை விட்டுடுங்க. இனிமேல் இங்க வராதீங்க” என்று கோபம் கொண்டான்.

“காதர் பாஸ் சொல்றதை உங்களுக்கு சொல்ல வேண்டியது என்னோட கடமை” என அவன் சொல்லி செல்ல, ‘புலி வாலை பிடித்த கதையாகிவிட்டதே!’ என மிஷால் கவலை கொண்டான்.

———

இன்ப சுற்றுலாவில் இருந்து திரும்பிய மூவரையும் அழைத்து வந்த ரஷீத், ஆர்யன் கைதான தகவலை அவர்களுக்கு விவரிக்க, அம்ஜத் நிலை தடுமாறிப் போனான். ருஹானா அவன் கையை பிடித்து அமர வைத்து ஆறுதல் அளிக்க, சல்மா காவல் நிலையம் சென்று ஆர்யனை பார்ப்பேன் என குதித்தாள்.

“ஆர்யன் திட்டமான உத்தரவு தந்திருக்கார். கேஸ் முடியறவரை மாளிகைல இருந்து யாரும் அவரை சந்திக்க வரக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார்” என ரஷீத் சொல்ல, கரீமா “அதெப்படி ரஷீத்? நாங்க கையை கட்டிட்டு உட்கார்ந்து இருக்கறதா? சல்மாவாது போய் ஆர்யனை பார்த்துட்டு வரட்டும். அவனுக்கும் ஆறுதலா இருக்கும்” என சொல்ல, ரஷீத் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

“பயப்படாதீங்க கரீமா மேம்!  ஒரு வழி இருக்கு, ஆர்யன் வெளியே வர!”

“என்ன அது?”

“அந்த கோடௌனோட இரவு காவல்காரன் நிஸாம் ஆளே காணோம். அவனை எதிரிங்க பிடிச்சி வச்சிருப்பாங்கன்னு சந்தேகப்படுறோம். ஒன்னு அவனை மிரட்டி வச்சிருக்கணும் இல்லனா நிறைய பணம் கொடுத்திருக்கணும். அவனை கண்டுபிடிச்சி உண்மையை தெரிஞ்சிக்கிட்டோம்னா, இந்த கேஸ் ஆரம்பமாகும்முன்னே உடைச்சிடலாம். ஆர்யனையும் வெளிய கூட்டிட்டு வந்துடலாம்”

“அப்போ உடனே நிஸாமை தேடுங்க” ருஹானா வேகமாக சொல்ல, கரீமாவும், சல்மாவும் அவளை திரும்பி பார்த்தனர்.

“அதான் தீவிரமா செஞ்சிட்டு இருக்கோம். அவன் கிடைக்கற வரை காத்திருக்கறதை தவிர வேற வழி இல்ல”

————

“பேசுறதை குறைச்சிட்டு வேலையை பாருங்க, வக்கீல்! முதல்ல நிஸாமை கண்டுபிடிங்க! போங்க!” என ஆர்யன் இரைய, அவன் முன்னே நின்ற வழக்குரைஞன் பணிந்து அகன்றான்.

அந்த சினத்தின் ஆங்காரம் குறையாமல் நின்ற ஆர்யன் சில நிமிடங்களில் மீண்டும் கதவு திறக்கப்படவும் வருவது யாரென பார்த்தான். ருஹானா உள்ளே வர, அவன் இன்னும் சீற்றம் கொண்டான்.

“நீ ஏன் இங்க வந்தே? நான் ரஷீத்ட்ட தெளிவா சொல்லியிருந்தேனே!”

அவள் அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவள் முகத்தில் தெளிவும், நம்பிக்கையும் ஒளிர்ந்தன. நேற்றிரவு இருந்த சோகமும், கண்ணீரும் மறைந்திருந்தன.

அப்போது ஒரு காவலன் அவள் அமர ஒரு நாற்காலியை கொண்டுவந்து உள்ளே போட்டுவிட்டு கதவை லேசாக மூடிவிட்டு சென்றான். அதைக் கண்டு ஆச்சரியமான ஆர்யன் “உனக்கு எப்படி விசிட்டர் பாஸ் கிடைச்சது?” என கேட்டான்.

Advertisement