Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 89

அர்ஸ்லான் மாளிகை வளாகத்தில் ஆர்யனும், வாசிமும் முறைத்து நிற்க, நடுவில் ருஹானா திகைத்து நின்றாள். காவல்படை சூழ, ஆர்யனை கைது செய்ய வந்த கமிஷனர் வாசிம் ஆர்யனை உக்கிரமாக பார்க்க, ஆர்யனும் அவனை கோபமாக பார்த்து “நீங்க உங்க எல்லையை மீறிட்டீங்க, கமிஷனர்! இவ்வளவு கீழான குற்றத்தை என்மேலே சுமத்தறீங்க. நான் உங்க கூட எங்கயும் வரமாட்டேன். எல்லாரும் இங்க இருந்து போங்க” என்றான், தன்வீரையும் பார்த்து.

“நீங்க வரலனா நாங்க வன்முறையை பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும், அர்ஸ்லான்!” என்றான் வாசிம். “எதை வச்சி இப்படி செய்றீங்க? என்ன ஆதாரம்? யார் சாட்சி?” என ஆர்யன் உச்சபட்ச கோபத்தில் கத்த, ருஹானா “வாசிம்! ஏதோ பெரிய தப்பு நடந்திருக்கு” என்றவள், வாசிம் ஆர்யனிடமிருந்து பார்வையை திருப்பாதது கண்டு தன்வீரிடம் சென்றாள்.

“தன்வீர்! இப்படி நடக்க வாய்ப்பே இல்ல!”

“நீ இவரை பற்றி சரியா புரிஞ்சிக்கல, ருஹானா!”

தன்வீரிடம் இல்லை என தலையாட்டியவள், வாசிம் ஆர்யனிடம் தனது கைத்தொலைபேசியை காட்டி “இதோ! நீங்க கேட்ட ஆதாரம்!” என காட்ட, இவள் அங்கே ஓடினாள்.

ஆர்யனோடு சேர்ந்து அவளும் அந்த காணொளியை பார்த்தாள். ஆர்யனுக்கு சொந்தமான கிடங்கில் மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கின. “நான் நம்ப மாட்டேன். இதுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இப்படிப்பட்ட காரியத்தை இவர் எப்பவும் செய்யமாட்டார்” என அழுதாள்.

அவள் கண்ணீர் கண்ட ஆர்யன் “கவலைப்படுறதுக்கு எதும் இல்ல. கமிஷனர் சீக்கிரமே தன்னோட தப்பை உணர்வார்” என ருஹானாவிடம் சொல்ல, ஆர்யனின் கையை பற்றிய வாசிம் “பேசினது போதும். போகலாம்” என இழுத்தான். கையை உதறிய ஆர்யன் “எனக்கு நடக்க தெரியும். தள்ளிப் போ!” என்றவன், தன் மெய்காப்பாளர்களுக்கு கண்ணை காட்டிவிட்டு நடந்தான்.

“தன்வீர்! நான் சொல்றதை கேளு” என ருஹானா பின்னாலேயே ஓடிவர, “இதுல நீ உள்ள வராதே, ருஹானா! இது உனக்கு எட்டாத செயல்” என தன்வீர் அவளுக்கு அறிவுறுத்தினான். “நீங்க சொல்றது எதையும் அவர் செய்திருக்க மாட்டார்” என ருஹானா கெஞ்ச, காரில் ஏறப்போன ஆர்யனின் உள்ளம் நெகிழ, திரும்பாமல் தனக்கு பின்னால் அவள் பேசுவதை கேட்டான்.

“நீ ஆயிரம் ஆதாரம் காட்டினாலும் நான் நம்ப மாட்டேன். அவர் இப்படி செய்யவே மாட்டார்.. எப்பவும்” என அவள் அழ, தன்மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை கண்டு ஆர்யன் அதிசயித்தான். இதற்கு மேல் அவன் மீதான அவள் காதலை எப்படி தெரிவிப்பது?

காவல் வாகனத்தில் அவன் ஏறி அமர “வாசிம்! தன்வீர்! எங்கயோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அவர் நிரபராதி” என கத்திக்கொண்டே ஆர்யன் இருந்த காருக்கு ஓடிவந்தாள். கண்ணீர் வடிக்கும் அவளை ஆர்யன் பார்த்துக்கொண்டே இருக்க, கார்கள் வேகமாக வெளியே சென்றன

    ——-

ஆர்யனை காவல்நிலைய லாக்கப்பில் அடைத்து பூட்டிய வாசிம் “கோர்ட் திறக்கறவரை நீங்க இங்க தான் இருக்கணும்” என திரும்பி செல்ல, “நீங்க தப்பு செய்யறீங்க, ஆபிசர்” என ஆர்யன் சொன்னதும் அவனிடம் வந்த வாசிம் சொன்னான்.

“நான் சட்டப்படி தான் நடக்கறேன். யாருக்காகவும் நான் சட்டத்தை மீற மாட்டேன். என்னோட அம்மா, அப்பா, சகோதரன் குற்றம் செய்தாலும் நான் இப்படி தான் நடவடிக்கை எடுப்பேன்”

சட்டத்தை உயிரென மதிக்கும் வாசிம் நேர்மையானவனே! ஆனால் சொந்த சகோதரனையும் அறிந்து கொள்ளவில்லை. அவன் குணத்தையும் புரிந்து கொள்ளவில்லை.

———

“ஏன் ருஹானா நீ இப்போ இங்க வந்தே?”

“தன்வீர்! அவர் எங்க இருக்கார்?”

“உள்ள லாக்கப்பில்! ஸ்டேட்மெண்ட் வாங்கினதும் நாளைக்கு காலைல கோர்ட்க்கு கூட்டிட்டு போவோம். நைட் லேட்டாகிடுச்சி. வா, உன்னை நான் அர்ஸ்லான் மாளிகைல கொண்டுபோய் விடுறேன்”

“அவரை பார்க்காம நான் எங்கயும் போக மாட்டேன். நான் சொல்றதை கேளு, தன்வீர்! அவர் இதை பற்றி ரஷீத்ட்ட பேசிட்டு இருந்ததை என் காதால கேட்டேன். அவரோட ஆட்களையும் அவர் அடக்கி வச்சார். நான் நின்னு கேட்டுட்டு இருந்தது கூட அவருக்கு தெரியாது. மனிதக் கடத்தல் குற்றம் பற்றி பேசினப்போ அவர் குரல்ல அவ்வளவு கசப்பு தெரிஞ்சது, தன்வீர்! அவர் இதை கண்டிப்பா செய்யல”

“ஆனா நீ அந்த வீடியோவை பார்த்தே தானே, ருஹானா?”

“பார்த்தேன்! ஆனா நம்ப மாட்டேன். அவரை மாட்டிவிட யாரோ செஞ்ச சதி இது. என்னை நம்பு. நீ என்னோட சகோதரன், தன்வீர். உன்னை தவிர என்னை யார் நல்லா புரிஞ்சிகிட்டவங்க இருக்காங்க? நான் உண்மைன்னு நம்பாததை இத்தனை உறுதியா எப்பவாவது சொல்லியிருக்கேனா? அவரோட கடந்த காலம் வேற மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இத்தனை இழிவா அவர் கண்டிப்பா செய்ய மாட்டார்”

“ருஹானா! இதெல்லாம் கோர்ட்ல எடுபடாது. நீதிமன்றம் ஆதாரம், சாட்சியைத் தான் நம்பும். இதுக்கு மேலே இது எங்க கட்டுப்பாட்டுல இல்ல”

அப்போது அங்கே வாசிம் வர, ருஹானா அவனிடம் ஓடினாள்.

“ப்ளீஸ் வாசிம்! நீங்களாவது நான் சொல்றதை கேளுங்க”

“ருஹானா! போதும்! உன் மனசை உடைக்க நான் விரும்பல. வீணா முயற்சி செய்யாதே. அந்த கிடங்குல ஆர்யனோட கைரேகைகள் இருக்கு. இதுக்கு மேலயும் ஒரு சாட்சி இருக்கு. நானே நினைச்சாலும் எதுவும் செய்ய முடியாது. இனி எல்லாம் நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நீ கிளம்பு. இங்க நீ காத்திருக்கறதுல ஒரு பயனும் இல்ல”

“எனக்கு ஒரே உதவி மட்டும் செய்ங்க. அவரை ஒருமுறை பார்த்து பேசிட்டு போய்டுறேன். ப்ளீஸ்”

அதை மறுக்க முடியாத வாசிம் “சீக்கிரம் பேசிட்டு வந்துடணும்” என்றவன், தன்வீரிடம் ஜாடை செய்தான்.

தன்வீர் அவளை அழைத்து சென்று ஆர்யன் இருந்த இடத்தில் விட்டு சென்றான். கம்பிகளுக்கு பின்னே சிறிய திண்டில் அமர்ந்து சுவரில் சாய்ந்திருந்த ஆர்யனை பார்த்ததும் அவள் கண்கள் கலங்கின. கதவு திறந்து ருஹானா வந்த சத்தம் கூட அவன் சிந்தனையை கலைக்கவில்லை.

ருஹானா உள்ளே வந்து கம்பிகளை இருகைகளிலும் பிடித்து நின்றபின்னே அவளை பார்த்த ஆர்யன் எழுந்து வந்தான். அவள் பிடித்திருந்த இரு கம்பிகளிலும் மேலே பிடித்துக்கொண்ட ஆர்யன் அவளை கூர்ந்து பார்த்தான்.

நிர்மலமான அவள் கண்கள் துக்கத்தை காட்ட, ஆர்யன் அந்த துக்கத்தை உடனே துடைத்தெறிய ஆசை கொண்டான்.

கலங்கிய குரலில் “இன்னும்கூட உங்களுக்கு எதிரா அவங்க கிட்டே ஆதாரம் இருக்காம்” என ருஹானா சொல்ல, ஆர்யன் “எது இருந்தாலும் எனக்கு அது பற்றி கவலை இல்ல. நான்…. ” என கோபமாக பேசுவதை தடுத்த அவள், “ப்ளீஸ்! நான் சொல்றதை கேளுங்க. நீங்க எதுவும் சொல்லத் தேவையேயில்லை. ஏற்கனவே எனக்கு தெரியும், நீங்க குற்றமற்றவர். அவங்க என்ன வேணா சொல்லட்டும். எனக்கு உங்க மேலே நம்பிக்கை இருக்கு” என அவள் சொல்லவும், கோபம் சூழ்ந்த அவன் மனதை நிம்மதி நிறைத்தது.

அவளுடைய நம்பிக்கையை பெற்றதை விட உலகில் மற்ற எவரின் கருத்தும் அவனுக்கு தேவையில்லாதது என உணர்ந்தான்.

“ஏன்னா உனக்கு என்னை தெரியும்!” என மிருதுவான தொனியில் அவன் சொல்ல, அவள் தலையாட்டினாள். “ஆமா, உங்களை எனக்கு தெரியும்” என திருப்பி சொன்னாள். சற்றுமுன் வக்கீலிடம் சீறியவன் இப்போது ருஹானாவிடம் செல்லப் பொம்மையாகி விட்டான்.

அவன் அவளின் கண்களை விடுத்து கம்பிகளை பிடித்திருக்கும் இருவரின் கைகளை பார்த்தான். நெருங்கி இருந்தும் தொடாமல் இருந்தன. ஒரு மயிரிழையே இடைவெளி இருந்தது.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வழிய, “வேண்டாம்! இனி நீ எப்பவும் அழக்கூடாது. நான் உயிரோட இருக்கிற வரை உன் ஒரு துளி கண்ணீர் வெளியே சிந்தக்கூடாது” என வேகமாக ஆர்யன் சொல்ல, அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

“புட்டியில சேர்த்து வச்சிருக்கிற துப்பாக்கி குண்டுகள் மட்டும் ஒருத்தனை வலிமையாக்குறது இல்ல. இது போன்ற சந்தர்ப்பங்களும் அவனை பலமாக்குது. இது திடமா இருக்க வேண்டிய நேரம். கலங்குற சமயம் இல்ல” என அவன் அவளை ஆழ்ந்து பார்த்து சொன்னான்.

Advertisement