Advertisement

“ஆமா சார்! அவர் கரீமா மேமை மிகவும் நேசிக்கிறார். அல்லாஹ்  எல்லாரையும் ஜோடியா தான் படைப்பார்ன்னு சொல்வாங்க. ஒருத்தரோட மகிழ்ச்சி எப்பவும் அவங்க இணையால தான் இருக்குன்னு நான் நம்புறேன்” என ஜாஃபர் சொல்ல, ஆர்யன் அதை மனதில் வாங்கி யோசித்தான்.

“வாழ்க்கை முழுவதும் தங்களோட இணையைத் தான் எல்லாரும் தேடுறாங்க. அதிர்ஷ்டசாலிகளுக்கு அந்த இணை கிடைச்சிடுது. மிஸ் சல்மா, நஸ்ரியா, நம்ம லிட்டில் சார்க்கு கூட அவங்களோட சரியான இணை கிடைக்கட்டும். இன்ஷா அல்லாஹ்! உங்களுக்கும் கூட தான் சார்”

தன்னை ஜாஃபர் சொன்னதும் அவனை ஏறிட்டு பார்த்த ஆர்யன் ஒரு பெருமூச்சு விட்டான். “அதெல்லாம் எனக்கு நடக்காத செயல்கள், ஜாஃபர்! அந்த பாதை கடினம்”

“ஆனா எல்லாருக்கும் தெரியும், ஆர்யன் அர்ஸ்லான் எதையும் கையாளக் கூடியவர். மிக கடினமான, ஏன் இயலாத காரியங்கள் கூட அவரால முடியும்.”

அவன் மீது அத்தனை நம்பிக்கை வைத்துள்ள, அவன் மகிழ்ச்சி நாடும் அவனுடைய ஊழியனை ஆர்யன் கனிவாக பார்த்தான்.

——-

“ஆர்யன் அர்ஸ்லான் கோடவுன் தானே இது?” என கமிஷனர் வாசிம் அந்த கிடங்கை தனது காவலர்களின் உதவியுடன் சோதனை செய்ய, ஏற்கனவே அங்கே காதர் கையாட்கள் அடைத்து வைத்திருந்த சில மனிதர்கள் போலீஸை பார்த்ததும் எழுந்து நின்றனர்.

“பார் தன்வீர்! அர்ஸ்லானோட இழிச்செயலுக்கு நமக்கு நிரூபணம் கிடைச்சிடுச்சி”

——–

கையில் பேருக்கு புத்தகத்தை வைத்துக்கொண்டிருந்த ருஹானா பொழுதை நெட்டி தள்ளிக்கொண்டிருந்தாள்.

கதவு தட்டப்படும் ஓசையில் பயந்து எழுந்தவள், ஜாஃபரை பார்த்ததும் இழுத்து பிடித்த மூச்சை மெதுவாக விட்டாள்.

“டின்னர் ரெடி மிஸ் ருஹானா!”

“நன்றி ஜாஃபர் அண்ணா! ஆனா எனக்கு வேண்டாம். பசிக்கல”

“நீங்க நாள்பூரா எதும் சாப்பிடல, மேம்!”

“எனக்கு நிஜமாவே பசி இல்ல. எனக்கு அப்புறம் பசிச்சா நானே செய்து சாப்பிட்டுக்கறேன்.”

———

முந்திய இரவு தூங்காதது, இன்று முழுவதும் சாப்பிடாதது, அலைபாயும் எண்ணவோட்டங்கள் அவளுக்கு அசௌகரியமான மனநிலையும், உடல்நிலையும் தர, இயற்கை காற்று வாங்க வெளிமாடத்துக்கு சென்றாள்.

சற்று நேரம் இயற்கை அழகை கண்டு ரசித்தவள் கூந்தலை கோதி முடிச்சிட முனைய, அது அவள் கழுத்துச் சங்கிலியின் கொக்கியில் மாட்டிக்கொண்டது. அதை அவள் விடுவிக்க முயல, சங்கிலி நழுவி கீழே விழுந்தது.

திகைத்துப்போன அவள் அறைக்குள் வந்து கதவை திறந்து இடுக்கில் எச்சரிக்கையுடன் எட்டிப்பார்த்தாள். ஆர்யன் தென்படாததால் கள்ளனைப் போல சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கீழே இறங்கி நிலா முற்றம் வந்தாள்.

“எங்கே போனே நீ?” என கிசுகிசுத்தவாறே குனிந்து சங்கிலியை தேடிக்கொண்டே நடக்க, ஒரு கணம் கண்கள் இருட்டியது. அப்படியே பின்னால் சாய்ந்தாள். ஆனால் கீழே விழவில்லை. எப்போதும் காப்பான் கைகளில் கிடந்தாள். அவளை தாங்கிப்பிடித்தவன் கண்களும், சொகுசாய் சாய்ந்திருந்தவள் கண்களும் அருகருகே பேசிக்கொண்டன. ஆனால் அதைவிட அருகருகே இருந்த இதயங்களுக்கு தான் அவற்றின் மொழி புரியவில்லை.

அவளை நிமிர்த்திவிட்ட ஆர்யன் “நீ ஓகே தானே?” என கேட்டான்.

எழுந்து நின்ற ருஹானா “நல்லா இருக்கேன். லேசா தலை சுத்திடுச்சி” என்றாள்.

“ஏன்னா உனக்கு பசி” என்று சொன்ன ஆர்யன் தூண் ஓரமாக கிடந்த சங்கிலியை பார்த்துவிட்டான். அதை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் “இப்போ நீ சாப்பிட வரே! என்கிட்டே வீண்விவாதம் செய்யாதே!” என கண்டிப்புடன் கூறினான்.

———

மூவரும் சமையலறை சிறிய மேசையில் அமர்ந்து சாப்பிட, சாப்பிட்டு முடித்த இவான் கொட்டாவி விட்டான்.

“நான் இவானை தூங்க வச்சிட்டு வரேன்” என ருஹானா எழுந்து கொள்ள, “நீ அப்படியே உட்கார். எல்லாத்தையும் சாப்பிட்டு முடி” என ஆர்யன் மிரட்ட அவள் எழுந்த இடத்தில் அமர்ந்தாள்.

அங்கே நின்ற ஜாஃபர் “நான் தூங்க வைக்கிறேன்!” என அழைத்து செல்ல அவன் இரவு வணக்கம் சொல்லி சென்றான். இருவரும் அமைதியாக சாப்பிட, அவன் அவளை உற்றுப் பார்த்து என்ன பிரச்சனை என புரிந்து கொள்ள முயற்சி செய்ய, அவள் அவனை தவிர சுற்றிலும் எல்லாவற்றையும் பார்த்தாள்.

“தெருக்களில் வளர்ந்த பசங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியும். ஏன்னா அவங்க நடக்க பழகறதுக்கு முன்னவே பயத்தை ஜெயிக்க பழகிடணும். பயம் பல முகமூடிகளை போட்டுட்டு வரும். ஒரு நாள் காலைல எழும்போது இதுவரையில நாம பயப்படாதது கூட நமக்கு அதிபயங்கரமா தெரியும். ஏன் எப்படின்னு கூட தெரியாது” என அவளுக்கு விளக்கி சொன்ன ஆர்யன், தன் மனதை தேற்றிக்கொண்டு கடைசியாக அந்த கேள்வியை கேட்டுவிட்டான்.

“நீ என்னை பார்த்து பயப்படுறீயா?”

“இல்ல. உங்ககிட்டே எனக்கு பயம் இல்ல” என ருஹானா வேகமாக சொல்ல அவன் மனம் ஆசுவாசமானது.

“நல்லது, கேட்டது… நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய பார்த்துட்டோம். அப்படித்தானே?” என ஆர்யன் தலையாட்டி கேட்க, ருஹானாவிற்கு அவன் அம்பு பாதையின் முன்னே இவானை வேண்டி நின்றது நினைவுக்கு வந்தது.

ஆர்யனுக்கு அவள் தன்னை அறைந்தது தான் முதலில் நினைவு வந்தது. அவன் கன்னத்தில் வாங்கிய அடி அவன் இதயத்தில் இறங்கியதோ? அந்த நொடியில் தான் அவனும் காதலில் விழுந்தானோ?

மோட்டார் அறையில் அவளை தள்ளி சங்கிலியை பறித்தது, அவன்மீது பாயவந்த துப்பாக்கி குண்டை அவள் வாங்கியது, மரணக்குழியிலிருந்து அவளை அவன் காப்பாற்றியது என அனைத்தும் இருவர் நினைவிலும் வந்து போயின.

“முன்ன ஒருத்தருக்கொருத்தர் யார்ன்னு நமக்கு தெரியாது. அதனால நிறைய தப்புக்கள் செய்தோம். ஆனா நாம எல்லாமே இவானுக்காக தான் செஞ்சோம்” என அவன் சொல்ல, ருஹானா மெல்ல தலையாட்டினாள்.

“ஆனா அப்புறம் எல்லாம் எப்படியோ மாறிப்போச்சி. புரிஞ்சிக்கிட்டோம். சேர்ந்து செல்ல ஒரு பாதை அமைச்சிக்கிட்டோம். ஆனா சில நாட்களா நீ இயல்பா இல்ல. உனக்குள்ள ஏதோ சரியில்ல. என்ன அது?”

“உண்மையில் அப்படி எதும் இல்ல.”

“இல்ல.. ஏதோ இருக்கு.. அது நானா? என்னோட அருகாமை தான் அந்த பிரச்சனையா?”

“இல்ல.. நீங்க இல்ல… நீங்க பிரச்சனை இல்ல… நீங்க இல்ல” அவள் அதிவேகமாக சொல்ல, அதே வேகத்தில் அவன் மனதின் பாரம் நீங்கியது.

“ஆரம்பத்துல எல்லாமே வேற மாதிரி இருந்தது. நீங்க சொன்னது சரிதான். வித்தியாசமா தான் இருந்தது. ஆனா நீங்க.. நீங்க மாறிட்டீங்க” ருஹானா சொல்ல, ஆர்யன் மனம் இலேசானது.

“நான் முதல்முறையா உங்களை பார்க்கும்போது நீங்க பயமுறுத்தற அந்நியரா இருந்தீங்க. கொடுமையா, பயங்கரமா…. உங்க கோபத்துக்கு எல்லையே கிடையாது” அவன் வெட்கி தலை குனிந்து கொண்டான்.

“அப்பாவோட சிறகுக்குள்ள வளர்ந்த சின்ன பெண் நான். அவர் தான் எனக்கு எல்லாமே. அதுவரைக்கும் நான் பயப்படற எதுவும் நடந்தது இல்ல.” ஆர்யன் அவளை பாவமாக பார்த்தான்.

“ஆனா உங்களை பற்றிய எல்லாமே எனக்கு புதுசா இருந்தது. பயம் தந்தது. என் வாழ்கையில நீங்க ஒரு புயலை போல வந்தீங்க. அப்படியே தான் ரொம்ப நாள் இருந்தீங்க. ஆனா இப்போ… உங்களை பார்க்கும்போது நீங்க எனக்கு அந்நியரா தெரியல. உங்க மேலே எனக்கு பயம் இல்ல” கண்களில் நீரோட ருஹானா சொல்ல, ஆர்யன் சிறகில்லாமல் பறந்தான்.

“ஏன்னா… இப்போ… நான்… உங்களை… நல்லா தெரிஞ்சிக்கிட்டேன்” அவள் அவன் கண்களை நேராக நோக்கி சொல்ல, ஆர்யன் இதுவரை ஆட்படாத உணர்வுகளுக்கு உள்ளானான். அவை என்ன வகையான அதிர்வுகள் என இனம் காண அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதற்கு காந்தவீச்சிலிருந்து விலக வேண்டியதாகயிருந்தது. ஆனால் அது அவனுக்கு இயலாததாக இருந்தது.

வாசல் மணி ஒருமுறை அடித்து பார்த்தது. அவர்களை அது எட்டவில்லை. மீண்டும் அது ஓங்கி ஓசையாக ஒலித்தது. இருவரும் மாயவலையிலிருந்து மனமில்லாமல் விடுபட, ருஹானா “நான் போய் பார்க்கறேன்” என எழுந்து சென்றாள். ஆர்யன் அப்படியே அமர்ந்திருந்தான்.

வாசலில் காவல் வாகனங்களையும், காவலர்களுடன் வாசிம், தன்வீரையும் பார்த்த ருஹானா அதிர்ந்து போனாள்.

“தன்வீர்! என்ன இது?… இந்த நேரத்துல… ஏதாவது பிரச்சனையா?”

தன்வீர் மௌனம் சாதிக்க, வாசிம் “நாங்க அர்ஸ்லானுக்காக வந்திருக்கோம்” என சொல்ல, ஆர்யனும் வெளியே வந்துவிட்டான்.

“ஆர்யன் அர்ஸ்லான்! ஆட்கடத்தல் குற்றத்திற்கு உங்களை நான் கைது செய்றேன்”

(தொடரும்) 

Advertisement