Advertisement

அதற்கு பதில் சொல்லாமல் “உனக்கு பசிக்குதா, அன்பே?” என அவள் கேட்க, “ரொம்ப, ரொம்ப!” என இவான் பதில் சொன்னான்.

“நாம இங்கயே சாப்பிடலாமா, ஒரு மாறுதலா?”

“சரி சித்தி!”

அதே போல கொஞ்சமாக கதவை திறந்து எட்டிப்பார்த்தாள். ஜாஃபர் எதிரே செல்வதை பார்த்து அவனை அழைத்தாள். “ஜாஃபர் அண்ணா! இவான் ரூம்லயே சாப்பிட போறானாம். நஸ்ரியாவை கொண்டுவர சொல்றீங்களா?”

“சாராவும், நஸ்ரியாவும் கல்யாணத்துக்கு போயிருக்காங்க. நாளைக்கு தான் வருவாங்க. நான் எடுத்துட்டு வரவா, ருஹானா மேம்?”

“அவங்களும் இல்லயா? கஷ்டம்!” என முணுமுணுத்தவள் “வேணாம் ஜாஃபர் அண்ணா நான் பார்த்துக்கறேன். நன்றி” என்று சொல்ல, அவனும் தலையாட்டி சென்றான். கதவை மூடியவள் கைகளை பிசைந்துகொண்டு அங்கேயே நின்றாள்.

“ஏன் சித்தி கிச்சன்ல ஏதாவது இருக்குதா? இப்படி பயப்படுறீங்க?”

“இல்லயே! அங்க என்ன இருக்கப் போகுது? நாம போலாமே!” என செயற்கையாக சிரித்தபடி சொன்னாள். கட்டிலிலிருந்து இறங்கிய இவான் அவன் காரை எடுத்துக்கொண்டு கீழே செல்ல தயாராக, ருஹானா அசையாது நின்றாள்.

“என்ன சித்தி, நாம போகலயா?”

“போலாம் தேனே!” என்றவள் ஜாக்கிரதையாக கதவை திறந்து பார்த்துவிட்டு இவானின் கையை பிடித்துக்கொண்டு வேகமாக கீழே இறங்கினாள். அவனை தரதரவென இழுத்துக்கொண்டு அவள் ஓட இவான் காரை தவறவிட்டான். அது விழுந்த சத்தம் கூட அவள் கவனத்தை இழுக்கவில்லை.

“சித்தி! என் காரை நான் கீழே போட்டுட்டேன்” என இவான் பதற, திரும்ப ஓடி சென்று அதை எடுத்து வந்தாள்.

“ஐயோ! இது உடைஞ்சிடுச்சே!”

“நாம சாப்பிட்டதும் சரி செய்யலாம்” என்றபடி அவனை கூட்டிக்கொண்டு சமையலறைக்கு வந்து சேர்ந்தாள். பாதுகாப்பாக நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள். அவள் எதிர்ப்பார்த்த ஆள் இல்லை எனவும் உற்சாகம் அடைந்தவள் இவானிடம் என்ன வேண்டும் என கேட்டாள்.

அவன் பெரிய பட்டியலாக உணவுவகைகளை அடுக்கவும், புன்னகையுடனே அடுப்பின் அருகே சென்றவள் அப்படியே உடம்பு சுருக்கி நின்றுவிட்டாள். என்ன பரிதாபம்! ஆர்யனின் பாதணிகள் சத்தம் கேட்டதே அதன் காரணம்! அவனிடமிருந்து தப்பியோடுகிறாள். ஆனால் அவன் வீட்டில் தான் அவள்  வசிக்கிறாள் என்பதை அவள் மறந்துவிட்டாள்.

“ஆஹா! சித்தப்பா!” என இவான் மகிழ, “உங்களுக்கு காபி தானே வேணும்? நீங்க மேலே வேணும்னாலும் போங்க! நான் ஜாஃபர் அண்ணாட்ட கொடுத்து விடுறேன்” என்று வரவழைக்கப்பட்ட புன்சிரிப்புடன் அவசரமாக சொல்ல, ஆர்யனோ “எனக்கு பசிக்குது!” என்றான்.

“வாங்க சித்தப்பா! நாம மூணு பேரும் சேர்ந்து சாப்பிடலாமா? நீங்க, நான், சித்தி” என இவான் மகிழ்ச்சியாக அழைக்க, “சேர்ந்தே சாப்பிடலாம்” என ஆர்யனும் ருஹானாவை பார்த்து சொல்ல, அவள் தன் புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக பெரிதாக்கினாள்.

பெரிய ஆம்லேட் தயாரித்து அதில் பாதியை வெட்டி இவானுக்கு மட்டும் வைத்துவிட்டு, ஆர்யனுக்கு பரிமாறாமல் மேசையின் நடுவில் ருஹானா வைக்க, வித்தியாசம் உணர்ந்த ஆர்யன், தானே அதில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை அவளுக்கு வைத்துவிட்டான். அவளுக்கு அவன் நன்றி சொல்ல, அவனுக்கு “இனிய உணவு!” என உரைத்தவள், இவானிடம் முட்டையை சாப்பிட சொன்னாள்.

“அதானே சித்தி சாப்பிடுறேன்?”

“நீ இவ்வளவு மெதுவா சாப்பிட்டா, அதோட சுவையே மாறிடும். வேகமா சாப்பிடு” என்றவள் அவனுக்கு பெரிய துண்டாக ஊட்ட “சித்தி! சுடுது!” என்றான். அதை அவன் வாய்க்குள் தள்ளியவள் “இந்த ஜூஸ் குடி” என கோப்பையை அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

“என் வாயில இடமே இல்லயே, சித்தி” என சொல்லி அவன் குடிக்க, “குட்பாய்!” என்றாள். அடுத்த வாய் உணவை எடுத்து அவள் கொடுக்க, அவனோ “நான் இதுவே இன்னும் சாப்பிட்டு முடிக்கலயே” என்றான். “நீ சீக்கிரம் சாப்பிட்டு முடித்தால் உன் ரூம்ல போய் நாம படம் வரையலாம்” என்றாள்.

இவள் அடிக்கிற கூத்தை ஆர்யன் பார்த்துக்கொண்டே இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. “நீ சாப்பிடலயா?” என்று மட்டும் கேட்டான். “எனக்கு பசிக்கல. நான் அப்புறமா சாண்ட்விச் சாப்பிட்டுக்கறேன்” என சாக்கு சொன்னவள் “இதோ! இதான் கடைசி வாய்!” என இவானுக்கு திணித்துவிட்டு “வா போகலாம்” என அவன் கையை பிடித்து இழுத்தாள்.

“சித்தி!” என கொஞ்சல் மொழி பேசி எழுந்து வர மறுத்த இவான், “எனக்கு லெமன் குக்கீஸ் செய்து தாங்க” என அடம் பிடித்தான். ஆர்யன் இவர்கள் சண்டையை பார்த்துக்கொண்டே சாப்பிட, அவள் பிறகு செய்து தருகிறேன் என சமாதானம் செய்ய, இவான் இணங்கவில்லை.

அவள் குக்கீஸ் செய்ய போக, இவான் தன் காரை சரிசெய்து தரும்படி சித்தப்பாவிடம் கொடுத்தான். காரை ஆர்யன் ஆராய்ந்துக் கொண்டிருக்க, ருஹானா தவிப்புடன் மாவை பிசைந்து கொண்டிருந்தாள்.

அப்போது ஆர்யன் செல்பேசியில் ரஷீத் அழைக்க, காரை வைத்துக்கொண்டே அழைப்பை ஏற்ற ஆர்யன், போனை எதிரே மேசையில் வைத்துவிட்டு “ரஷீத்! போன் ஸ்பீக்கர்ல இருக்கு. இவானும் அவன் சித்தியும் என்கூட இருக்காங்க” என நாகரிகமாக சொன்னான்.

“ஆர்யன்! அவசரம் இல்லனா நான் கூப்பிட்டிருக்க மாட்டேன். போன வாரம் ரத்தான மீட்டிங் இன்னைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இப்போ தான் சொன்னாங்க. நீங்க அவசரமா ஆபிஸ் வரணுமே!”

ருஹானா நிம்மதி பெருமூச்சு விட, இவான் முகம் வாடினான். அவனின் பாவமான முகத்தை பார்த்த ஆர்யன் “போனவாரம் அவங்க ரத்து செஞ்சாங்க. இந்தவாரம் நாம ரத்துசெய்வோம். அடுத்தவாரம் ஒருநாள்ல ஏற்பாடு செய், ரஷீத்!” என சொல்லி போனை அடைத்தான். “நீங்க போகலயா, சித்தப்பா?” என இவான் ஆனந்தப்பட, ருஹானாவின் முகம் ஊசி குத்திய பலூனானது.

மாவை தயாரித்து ஓவனில் ருஹானா வைக்க அவளை நோக்கி ஆர்யன் வர, அவள் அப்படியே அசையாது நின்றாள். அவளுக்கு மெலிதாய் மூச்சிரைக்க, ஆர்யன் அவள் அருகில் வந்து “நான் எடுத்துக்கட்டுமா?” என கேட்க, அவள் புரியாது விழித்தாள்.

அவள் தலைக்கு மேலே இருந்த அலமாரியை திறந்த ஆர்யன், அதிலிருந்து ஒரு கோப்பையை எடுக்க, ருஹானா “ஸாரி!” என வழிவிட்டாள். அவள் திருதிருவென முழிப்பதை பார்த்தபடியே ஆர்யன் திரும்ப வந்து அமர்ந்து இவானுக்கு சொல்லிக் கொடுத்தபடியே காரை முடுக்கினான்.

ருஹானா ஓவன் அருகிலேயே நேரம் பார்த்துக்கொண்டு “சீக்கிரம் தயாராகு!” என நடந்தவாறே முணுமுணுக்க, “நீ பார்த்துட்டே இருந்தா அது ரெடி ஆகாது. உனக்கு தான் வேர்க்குது” என ஆர்யன் சொல்ல, அவள் பேய்முழி முழித்தாள்.

அப்போது ஜாஃபர் “உங்களுக்கு வந்த கடிதங்கள், சார்!” என கொண்டுவந்து தர, விடுதலைக்கு வழி கிடைத்துவிட்டது என பூரித்துப்போன ருஹானா,  “ஜாஃபர் அண்ணா! ஓவன்ல குக்கீஸ் இருக்கு. பத்து நிமிடத்துல ரெடியாகிடும். நீங்க பார்த்து எடுத்துடுறீங்களா?” என கேட்க, அவனும் சரியென்றான். நன்றி சொன்ன ருஹானா இவானை அறைக்கு அழைத்தாள்.

“இருங்க சித்தி! சித்தப்பா காரை ஓட வச்சதும் போகலாம்” என அவன் வம்பு செய்ய, ஆர்யன் ருஹானாவின் தவிப்பை பார்த்து உதவிக்கு வந்தான். “நீ ரூம்ல போய் வேற கார் வச்சி விளையாடு, சிங்கப்பையா! நான் இதை சரிசெய்து உன் ரூம்ல வச்சிடுறேன்” என ஆர்யன் சொல்லவும், இவான் நாற்காலியை விட்டு இறங்கினான்.

“வா! போகலாம்” என ருஹானா அவனை அழைத்துக்கொண்டு வேகமாக போய்விட்டாள். செல்லும் அவளை குழப்பமாகவும் வியப்பாகவும் ஆர்யன் பார்க்க, இருவரையும் சிரித்தபடி பார்த்து நின்ற ஜாஃபர் ஓவனையும் கவனித்துக்கொண்டான்.

———

நிலா முற்றத்தில் அமர்ந்திருந்த ஆர்யன் ருஹானாவின் போக்கைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான். ஏன் அவள் தன்னை தவிர்க்கிறாள் என அவனுக்கு புரியவே இல்லை. “இவளுமா?” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அன்புக்கணைகள் அவள் 

இதயத்தில் பாய்கையில்

தெளிந்த நீரோடையாய்

இருந்த மனதின் சலசலப்பு

தவிப்பில் தத்தளிக்கும்போது

விழிகள் அவன் முகம் 

காண மறுத்திடுதே!

மறையும் மலர்முகம்

வில்வீரனுக்கு வருத்தமளிக்கிறதே!   

ஜாஃபர் அங்கே வந்தவன், ஆர்யன் தீவிர சிந்தனையில் இருப்பது கண்டு ஒதுங்கி நின்றான். இலேசாக புன்னகைத்துக்கொண்டவன் ஆர்யனை நெருங்கினான்.

“உங்க போன் நீங்க கிச்சன்ல வச்சிட்டீங்க, இந்தாங்க சார்”

“உட்காருங்க ஜாஃபர்! நாம பேசி ரொம்ப நாள் ஆகுதே!”

நாற்காலியை இழுத்துப்போட்டு ஜாஃபர் அமர்ந்ததும், ஆர்யன் “என் அண்ணா கிளம்பும்போது அதிக மகிழ்ச்சியா இருந்தார் தானே?” என முகம் மலர கேட்டான்.

Advertisement