Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 88

அர்ஸ்லான் மாளிகையில் அனைவரும் இன்ப சுற்றுலா சென்றுவிட்டனர் என்பதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ருஹானாவிற்கு ஆர்யன் தங்களை விட்டு சென்றதும், அவர்களை வற்புறுத்தி அழைத்து செல்லாதது மட்டுமல்ல, அவர்கள் வராதது பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாததும் அவளை மிகவும் வாட்டியது.

ஏதோ புரியாத கோபம் ஒன்று நெஞ்சை பிராண்ட, எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி மனம் அலைபாய தவித்துக் கொண்டிருந்தவள் கண்முன்னே அவனே வந்து நிற்கவும், அப்படியே தலைகீழாய் போனது அவளது மனநிலை.

பேச முடியாமல் அவள் நிற்க, நாம் மூவரும் சேர்ந்து பொழுதை கழிப்போம் என அவன் சொன்னது அவள் வாய்ப்பூட்டை திறக்க வைக்க, வேகமாக “உங்க வேலை?” என கேட்டாள். அவன் அவளை திரும்பி பார்க்க, தனது உள்மன பயத்தை வெளிப்படுத்தி விட்டோமோ என சந்தேகித்தவள் “ரெண்டு நாள் ஆபீஸ் போக வேண்டாமா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

“வீட்ல இருந்தே வேலை செய்துக்கறேன்” என ஆர்யன் கனிவாக சொல்ல, “அப்படினா நீங்க எப்பவும் எங்க கூடவே இருக்க போறீங்க, அப்படித்தானே சித்தப்பா?” என இவான் கேட்க, ஆர்யன் தலையாட்டவும் “சித்தி கேட்டீங்களா, ஜாலி தானே?” என இவான் துள்ளிக் குதித்தான்.

அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்ட ருஹானா “ஆமா கண்ணே! வா, உன் தூக்கத்துக்கு நேரம் ஆகுது. டிரஸ் மாத்திக்கோ” என அவனை கவனிக்கலானாள். அவளிடம் ஏதோ அறியமுடியாத மாற்றத்தை கண்டுகொண்ட ஆர்யன் குழப்பமாக கதவடைத்து சென்றான்.

——–

காதர், மிஷாலுக்கு போன் செய்து “நீ கொடுத்தது அற்புதமான தகவல், தம்பி. ஆர்யன் அழிஞ்சி போறதை நீ உன் கண்ணால பார்க்க போறே! நாம சந்திக்கலாமா? அடுத்து….” என தொடங்க, அதை பாதியில் வெட்டிய மிஷால்   “நீங்க என்னவோ செஞ்சிக்கங்க. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. இனி எனக்கு கால் செய்யாதீங்க” என படக்கென்று அழைப்பை துண்டித்தான்.

“இது எனக்காக செய்யல. ருஹானாக்காக செய்தேன். அவளை அந்த மாஃபியா கைல நான் தர மாட்டேன்” என தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

——–

இவான் ஆழந்த தூக்கத்தில் இருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த ருஹானா என்ன செய்வது என தவித்துக் கொண்டிருந்தாள். எழுந்து நடை போட்டவள் கதவை லேசாக திறந்து மெல்ல எட்டிப்பார்த்தாள். ஆர்யன் படிக்கட்டில் ஏறி வருவதை கண்டவள் வேகமாக கதவை மூடிவிட்டாள்.

திரும்ப இவான் அறையிலேயே நடைபயில, அவள் செல்பேசி அடித்த சத்தம் கேட்டது. “அச்சோ! என் போன் என் ரூம்ல இருக்கே!” என தலையில் கை வைத்துக்கொண்டாள். போன் விடாமல் அடிக்க, திருடன் போல தலையை வெளியே நீட்டி ஆர்யன் எங்காவது தெரிகிறானா என பார்த்தாள்.

இல்லையெனவும் நுனிக்காலில் சத்தம் செய்யாமல் அவளது அறைக்கு ஓடி போனை பாய்ந்து எடுத்தாள். “ஹல்லோ!….. ராங் நம்பர்” போனை வைத்தவள் தலையை பிடித்துக்கொண்டாள். “ரெண்டு நாள் நான் என்ன செய்ய போறேன்னு தெரியலயே?” என புலம்பினாள்.

எதிரே இருந்த துணி அலமாரியை பார்த்தவள், உடைகளை ஒழுங்குப்படுத்தி நேரத்தை போக்குவோம் என தீர்மானித்தாள். விரிந்து கிடந்த தலைமுடியை ஒன்று சேர்த்து ஒரு கிளிப்பை எடுத்து மாட்டினாள். ஆடைகளை அள்ளி கொண்டு வந்து கட்டிலில் வைத்தாள்.

மேல் பலகையில் இருந்த உடைகளை அவள் எட்டி எடுக்க போக, அந்த பலகை டமால் என அவளை உரசிக்கொண்டு துணிகளோடு கீழே விழுந்தது. “அச்சச்சோ!” என்றபடி துணிகளை எடுக்க மண்டியிட்டு அவள் அமர, அவள் பின்னால் கதவு திறந்தது. “என்ன நடந்தது?” என ஆர்யன் குரல் கேட்க, அவள் முகம் சுருக்கி கண்களை மூடிக்கொண்டாள்.

‘இவனிடமிருந்து தப்பிக்க நான் ஓசையின்றி நடமாடினால், இந்த அலமாரி இவனை கூப்பிட்டு விட்டதே!’ என நொந்துக்கொண்டவள், அப்படியே அமர்ந்திருக்க, ஆர்யன் அவள் பக்கம் வந்து “என்ன நடந்தது? உனக்கு அடிபடலயே?” என மீண்டும் கேட்டான்.

எழுந்து நின்றவள் அவன் முகத்தை பார்க்காமல் “எனக்கு ஒன்னும் இல்ல. துணி அடுக்க பார்த்தேன். மரத்தட்டு கீழே விழுந்திடுச்சி” என சொன்னபடி கீழே கிடந்த துணிகளில் சிலதை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் வைத்தாள்.

ஆர்யன் அலமாரியை நெருங்கி ஆராய்ந்தவன், அவளுக்கு உதவ அவனும் குனிந்து துணியில் கை வைக்க, திரும்பி வந்த ருஹானாவும் துணியை எடுக்க குனிய, அவளின் கையும், அவன் கையும் தொட்டுக்கொள்ள பார்வை பரிமாற்றம் நடக்க, ருஹானா வெடுக்கென கையை இழுத்துக்கொண்டாள்.

அவள் இழுத்த வேகத்தை கண்டு அவன் வியப்பாக பார்க்க, அவள் முடியை சரிசெய்வது போல குனிந்து கொண்டாள். உடைகளை கொண்டு சென்று கட்டிலில் போட்டு அவள் மடிக்க, ஆர்யன் அலமாரியை சரி செய்தான்.

அவனுக்கு முதுகு காட்டி நின்று வேலை செய்துக்கொண்டிருந்த ருஹானாவிடம் “முடிஞ்சது. நான் சரி செஞ்சிட்டேன். இனி இது விழாது” என்றான்.

கைகளில் உடையை அடுக்கிக் கொண்டு வந்தவள் “நன்றி!” என சொல்லிவிட்டு அதை அலமாரியில் வைத்துவிட்டு திரும்ப கட்டிலுக்கு நடந்தாள். அவன் ஏதோ சொல்ல வர அதை கூட கவனிக்காமல் துணிகளை கொண்டுவந்து வைப்பதில் மும்முரமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாள்.

பொறுத்து பார்த்து பொறுமை போனவன் “உன் பின்கழுத்து….  கீறி இருக்கு. ரத்தம் வருது” என சுட்டிக் காட்டினான். பின்னாடி தொட்டு பார்த்தவள் “நான் கவனிக்கல. அது ஒன்னும் பெருசா இல்ல” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். எப்படித்தான் அந்த சிறிய கீறலை கவனித்தானோ?

ஆர்யன் அவள் மேசையை பார்க்க, அவனுடைய உதட்டு காயத்துக்கு அவள் போட்ட மருந்து அங்கே தான் இருந்தது. அந்த மருந்தை எடுத்து பஞ்சில் நனைத்தபடியே “பெருசோ சின்னதோ, சிகிச்சை செய்யணும்” என்று சொன்னவன், அதை எடுத்துக்கொண்டு அவள் அருகே வந்தான்.

அவனிடமிருந்து விலகியவள் “நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி, வேறு பஞ்சை எடுத்து காயத்தை துடைக்க பார்த்தாள். தலையை சலிப்பாக ஆட்டிய ஆர்யன் “அங்க இல்ல…. என்னை மருந்து போட விடு” என்று சொல்லி அருகே வர, அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள்.

அவன் ஸ்பரிசத்தை எப்படி உணர்வது என அவள் தடுமாறிக்கொண்டு நிற்க, இன்னும் அவன் மருந்து தடவாமல் இருக்க அவனை திரும்பி பார்த்தாள். மிக அருகே கண்கள் கவர்ந்திழுக்க, முதலில் சுதாரித்த ஆர்யன் “உன் முடி… நீ இதை பிடிச்சிக்கோ, நான் காயத்தை சுத்தம் செய்றேன்” என்று அவன் சொன்னதும், “ஹூஹூம்” என்று அவள் முடியை முன்னால் போட்டுக்கொண்டாள்.

நெற்றியில் விழுந்த முடியை ஆர்யன் காதோரம் ஒதுக்கிவிட்டான். அது அவனுக்கு என்ன இடைஞ்சல் செய்ததோ? தேவைக்கதிகமான நேரம் அவள் கூந்தலில் அவன் விரல்கள் விளையாடியதோ?

பஞ்சை காயத்தில் வைத்து அவன் தொட அவள் மெய்சிலிர்த்தாள். “ஸ்ஸ்!” என்றபடி கண்களை மூடிக்கொண்டாள். அவள் இதய துடிப்பு எகிறியது.

“வலிக்குதா?” என அவன் மென்குரலில் கேட்க, காதருகே கேட்ட அவன் குரலில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இல்லை என கூட வாய் திறந்து சொல்ல முடியாமல் இமைகளை மட்டும் அசைத்தாள்.

நிலைகொள்ள முடியாமல் அவள் தலையை அங்குமிங்கும் திருப்ப அவனால் மருந்து போட முடியவில்லை. “அசையாதே…” என அவள் நாடியை அழுத்தமாக பிடித்துக்கொண்டு சிகிச்சை செய்தான்.

“நீ எனக்கு மருந்து போட்டுவிட்டே தானே? எனக்கு உன்கிட்டே கடன் இருந்தது. இப்போ அந்த கடனை தீர்த்துட்டேன்.”

“நன்றி!” என சொன்னவள் “இவான் எழுந்திருப்பான். நான் அவனை போய் பார்க்கறேன்” என சொல்லி ஆர்யனை அவள் அறையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள். அவன் கையில் பஞ்சை வைத்தபடியே நின்றிருந்தான்.

இவான் அறைக்கு நுழைந்து கதவை சாத்தியவள் அதன் மேலேயே சாய்ந்து கொண்டாள். ஆர்யன் தொட்ட பின்கழுத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அசந்து தூங்கிக்கொண்டு இருந்த இவானை பார்த்து “உன் சித்தப்பாவை வச்சிட்டு நான் என்ன செய்யப்போறேன், இவான்?” என்றாள்.

சுரம் இருக்கிறதா என முன்கழுத்தையும் தொட்டு பார்த்துக்கொண்டவள், இவான் கட்டில் அருகே நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

தூங்கி எழுந்த இவான், சித்தி அதே இடத்தில் இருப்பதை பார்த்து “நான் தூங்கும்போதும் இங்கயேவா சித்தி இருந்தீங்க?” என ஆச்சரியமாக கேட்டான்.

Advertisement