Advertisement

“நீ இந்த ரோஜா பூக்களை விட அழகானவள் கரீமா. நேற்று விட இன்னைக்கு அதிக அழகா தெரியுறே. நீ என் அன்புக்குரியவள் கரீமா. நீ என் மனைவியானது நான் செய்த அதிர்ஷடம். நம்மோட உறவு இன்னும் பல வருடங்களுக்கு தொடரனும், கரீமா” என அம்ஜத் சிரிப்போடு பூங்கொத்தை அளிக்க, கரீமா வெட்க புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்.

பக்கத்தில் சல்மா “ப்ராவோ மச்சான்! நீங்க கூட காதலா பேசுறீங்க!” என கிண்டல் செய்ய, அம்ஜத்துக்கு வெட்கம் வந்துவிட்டது.

“ஆர்யன் நம்ம கல்யாணநாள் கொண்டாட்டத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்திட்டான். உனக்கு பரிசு கூட தயார், கரீமா”

“ஏன் இத்தனை சிரமம், அம்ஜத்? நீங்களே எனக்கு பெரிய பரிசு தானே!” என கரீமா சொல்ல, அவள் கையை பிடித்து முத்தமிட்ட அம்ஜத் தோட்டத்துக்கு செல்வதாக சொல்லி சென்றான்.

“நான் சொன்னேன்ல அக்கா. உனக்கு அழகான நெக்லஸ் காத்திருக்கு. நாம தீவுக்கு போறோம். ரெண்டு நாள் ஜாலியா கொண்டாட போறோம்”

“நல்ல வேளை, இவானுக்கு சீசிக். ஒத்துக்காது. இல்லனா குப்பைக்காரி சித்தியும் நம்மோட வந்து கடுப்பை கிளப்புவா”

“ஆமா அக்கா! நீ மச்சானோட ரொமான்ஸ் செய்துட்டு இரு. நான் ஆர்யனோட இன்பமா பொழுதை கழிப்பேன்”

“பார்த்தியா? நாம கவலைப்படுறதுக்கு எதுவும் இல்ல. நீ தான் ஓவரா சொல்லிட்டு இருந்தே! நாம ரெண்டு தொல்லைகளையும் விட்டுட்டு போறோம்”

சகோதரிகள் இருவரும் சந்தோசமாக சிரித்துக்கொண்டனர்.

——–

இவானோடு தோட்டத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்த ருஹானா, இவான் வீசிய பந்து புதரில் சென்று விழ, அதை எடுக்க அங்கே சென்றாள். புதரின் மறுபுறம் ஆர்யனும், ரஷீத்தும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டாள்.

“ஆர்யன்! காதர் ஆள் ஒருத்தனை போலீஸ் கைது செஞ்சிருக்காங்க. நாம ஆட்களை கடத்துறதா அவன் பொய்யா போலீஸ்க்கு தகவல் சொல்லியிருக்கான். காதரை என்ன செய்யலாம், சொல்லுங்க” என ரஷீத் கோபமாக கேட்டான்.

“என்மேல இத்தனை இழிவா பழி சுமத்த அவனுக்கு என்ன தைரியம்?”

“அவனை பத்தி தெரிஞ்சது தானே, ஆர்யன்! நம்மை பழிவாங்க அவன் எதுனாலும் செய்வான். இப்போ நாம என்ன செய்றது?”

ஆர்யன் சிறிது யோசிக்க, ரஷீத் பொறுமையின்றி அவன் பதிலை எதிர்பார்க்க, ருஹானா திக்திக் இதயத்துடன் கேட்க கவனமாக நின்றாள்.

“ஆயுதம் வேண்டாம். சண்டை வேண்டாம். நாம இதை வேற வழில தீர்ப்போம்”

ரஷீத் குழப்பமாக பார்க்க, ருஹானா சிரிப்புடன் பந்தை எடுத்து சென்றாள்.

——–

வாகிதாவை மிஷாலின் உணவகத்தில் கொண்டுவந்து விட்டுப்போன வாசிம், மதியம் தன்வீரையும் அழைத்துக்கொண்டு அங்கே உணவருந்த வந்தான். சதாம் “ருஹானா அக்கா வாயில் எச்சில் ஊறும் சுவையான உணவு தயாரிப்பாங்க. நீங்க அப்படி சமைப்பீங்களா?” என கேட்டுக்கொண்டே அவளுக்கு உதவி செய்ய, “நிச்சயமாக சமைப்பேன்!” என வாகிதா சொன்னபடியே வேலை செய்து கொண்டிருந்தாள்.

தன்வீரும், வாசிமும் சூப்பை குடித்தபடியே பேசிக்கொண்டிருக்க, பக்கத்து மேசையில் பரிமாறிக்கொண்டிருந்த மிஷாலுக்கு அவர்கள் பேசியது நன்றாக காதில் வந்து விழுந்தது.

“காதரோட கையாள் கிட்டே இருந்து நமக்கு கிடைச்ச தகவல் உபயோகமானது, இல்லயா, தன்வீர்? இப்போ நாம ரெய்டு செய்யலாம்”

“ஆனா எனக்கு இது எல்லாமே கொஞ்சம் வினோதமா இருக்கு, கமிஷனர். ஆர்யன் அர்ஸ்லான் இப்படி மோசமா நடந்துக்க மாட்டான்னு எனக்கு தோணுது. ஒருவேளை நான் தப்பா கூட இருக்கலாம். ரெய்டு முடிஞ்சா எல்லாம் தெரிஞ்சிடும்”

ஆர்யன் பெயர் வரவும் மிஷால் உன்னிப்பாக கவனித்தான்.

“உனக்கு ஏன் அப்படி தோணுது, தன்வீர்?”

“ருஹானா ஆர்யனை பத்தி சொல்றது வச்சி தான் கமிஷனர். அவன் ருஹானாவை உயிரை கொடுத்து காப்பாத்தி இருக்கான். அவனை பற்றிய என்னோட எண்ணங்கள் லேசா மாறுது. யெஸ், அவனுக்கு நிழலுலக தொடர்புகள் இருக்கலாம். ஆனா ஆள் கடத்தல்? என்னால நம்ப முடியல”

“உன்னோட நேர்மறை சிந்தனைகளை நான் பாராட்றேன் தன்வீர். ஆனா ஒரு முறை சட்டத்தை மீறினவன் திரும்பவும் அதை செய்ய தயங்க மாட்டான். கண்டிப்பா ஆள் கடத்தலும் செய்ய கூடியவன் தான் ஆர்யன் அர்ஸ்லான்” சொந்த இரத்தத்தின் மீது என்னவொரு நம்பிக்கை கமிஷனருக்கு!

அதற்கு மேல் வாக்குவாதம் செய்ய விரும்பாத தன்வீர் “சரி கமிஷனர், நாளைக்கு இரவு ஆர்யனோட எல்லா கப்பல்கள், கிடங்குகள், துறைமுக பண்டக சாலைகள், கொள்கலன்கள் எல்லாம் ஒரே நேரத்துல நாம ரெய்டு செய்வோம்” என்றான். ரகசியமாக விவாதிக்க வேண்டிய செய்திகளை இப்படி உணவகத்தில் பேசலாமா இருவரும்?

“அர்ஸ்லான் மாட்டக்கூடிய ஏதாவது சான்று நமக்கு கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு” என உறுதியாக சொன்னான் கமிஷனர் வாசிம்.

                                                                           ———

“மச்சான் எங்கே அக்கா?”

“அவர் கடைசிநேர பேக்கிங்ல இருக்கார். இப்போ வந்திடுவார்”

“சரி, ஆர்யனும் இன்னும் காணோமே?” என கேட்டுக்கொண்டு இருந்தபோது ஆர்யன் படிக்கட்டில் இறங்கி கீழே வந்தான்.

“ஆர்யன்! இன்னும் நீங்க ரெடி ஆகலயா?”

“நான் உங்களோட வரல. எனக்கு இன்னும் உடம்பு சரியாகல. ஓய்வு எடுக்க போறேன்.”

முகம் சுருங்கிய சல்மா “ஆனா இன்னைக்கு…” என சல்மா தொடங்க, அவள் கையை பற்றி தடுத்த கரீமா “சரி, ஆர்யன் டியர். நீ ஓய்வெடு. குடும்பமா நாம எல்லாரும் சுற்றுலா போகலாம்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா உன்னால முடியலன்னா நீ வர வேணாம். ஆனா உன் அண்ணன் கிட்டே நீயே சொல்லிடு. என்னால அவரை சமாளிக்க முடியாது” என்றாள்.

“நான் சொல்லிக்கறேன். எங்க அவர்?”

“மேல ரூம்ல இருக்கார்” என கரீமா சொல்ல, ஆர்யன் திரும்பி நடக்க, சல்மா “ஆர்யன்!” என சத்தமாக அழைக்கவும் நின்றான். “உங்களுக்கு உடம்பு சரியில்லனா நானும் போகல. நான் இருந்து உங்களை பார்த்துக்கறேன்.”

“தேவையில்ல. இங்க ஆட்கள் இருக்காங்க. நீ போ. அங்க எல்லா ஏற்பாடும் சரியா அமைஞ்சிடுச்சி. நல்லா பொழுதை செலவிடுங்க.”

“நன்றி!” என கரீமா சொன்னதும் அவன் மேலே செல்ல, சல்மாவிற்கு பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. கழுத்தில் கையை வைத்து அழுத்திக்கொண்டாள்.

“அவ திட்டம் போட்டுட்டா. அவ சதி செய்திட்டா. ஆர்யன் நம்ம கூட வராம தடுத்திட்டா. ஆர்யனோட தனியா இங்க இருக்க பிளான் செய்திட்டா. இதுக்கு அவளை நான் கண்டிப்பா பழி வாங்குவேன்.”

“உன் மடத்தனமான பேச்சை நிறுத்து, சல்மா. ஆர்யனோட முடிவுகளை மாத்துற அளவுக்கு அவளுக்கு புத்திசாலித்தனம் போதாது. ஆர்யன் சொன்னதை நீ கேட்ட தானே? அவனுக்கு உடம்பு சரியில்லன்னு தெரியும் தானே?”

‘அக்கா! அதை நீ நம்புறீயா? உனக்கு தெரியலயா? அவங்க உறவு பலமாகிட்டே போகுது தினமும்.. ஒவ்வொரு நாளும்…”

அப்போது கரீமாவின் செல்பேசி அடித்தது.

“இரு.. மிஷால் கூப்பிடுறான்”

“யெஸ் மிஷால்”

“கரீமா மேம்! என்னால ருஹானா கூட பேச முடியல. நீங்க எனக்கு உதவி செய்றேன்னு சொன்னீங்களே, அதான் உங்களுக்கு கால் செய்தேன்”

“உதவி செய்ற காலம்லாம் கடந்து போச்சி, மிஷால். எப்பவோ கடந்து போச்சி. நீ செய்தது எல்லாம் தலைகீழா தான் ஆக்கிடுச்சி. நான் சொல்றது உனக்கு கசக்கும். ஆனா அது தான் உண்மை. நீ ருஹானாவை எப்பவோ இழந்திட்டே”

“ஏன் அப்படி சொல்றீங்க? என்ன நடந்தது?”

“நாங்க எல்லாரும் ரெண்டு நாள் வெளியூர் போறோம். ருஹானா எங்க கூட வருவான்னு நினைச்சியா?… இல்ல…! அப்புறம் ஆர்யன்…. இல்ல! அவங்க ரெண்டு நாள் மாளிகையிலயே தனியா இருக்கப் போறாங்க. உனக்கு புரியுதா? நான் போகணும். பை”

“கரீமா மேம்!…… வைக்காதீங்க… இருங்க…. கரீமா மேம்!” என மிஷால் கத்த கத்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஆவேசத்தின் உச்சத்தை அடைந்த மிஷால் கைகளை பிசைந்தான். காலை உதைத்தான். காதர் கொடுத்து சென்ற பெயரட்டை அவனுக்கு நினைவு வந்தது. அதை எடுத்து அதில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தான்.

“நான் மிஷால்!… நாம மீண்டும் சந்திப்போம்னு சொன்னீங்க தானே?… நீங்க சரியா தான் சொல்லியிருக்கீங்க….. ஆமா! நாளைக்கு இரவு ஆர்யன் தொழில் நடத்துற எல்லா இடத்திலயும் போலீஸ் ரெய்டு நடக்கப் போகுது. இந்த செய்தி நான் உங்களுக்கு சொல்லிட்டேன். மத்ததை நீங்க பார்த்துக்கங்க.”

——–

கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு இவான் படம் வரைந்துக்கொண்டிருக்க, அவன் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ருஹானா கையில் புத்தகத்தை வைத்திருந்தாளே தவிர அதில் ஒருவரி கூட அவளால் படிக்க முடியவில்லை.

ஏதோ யோசித்தவள் பின் தலையை வெட்டிக்கொண்டு மீண்டும் படிக்க தொடங்க, இப்போதும் அதில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. “ப்ச்!” என புத்தகத்தை கட்டிலில் கவிழ்த்து போட்டவள், எழுந்து மேசையிலிருந்த செல்பேசியை எடுத்து பார்த்தாள்.

மிஷாலின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் தான் இருந்தனவே தவிர அவள் எதிர்ப்பார்த்த எதுவும் அதில் இல்லை. கண்களை மூடி திறந்தவள், செல்பேசியை திறந்து கூட பார்க்காமல் மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டாள்.

“சித்தி! எல்லாரும் கிளம்பிட்டாங்களா? நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாரும் இல்லையா?” என இவான் கேட்டான்.

“ஆமா செல்லம்! எல்லாரும் போய்ட்டாங்க. நாம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம்” என சொல்ல, அவன் சிரிப்புடன் திரும்ப வரைய ஆரம்பித்தான். அவனுக்கு உலகில் சித்தி மட்டும் போதும்.

இதயம் சோகமாக அடித்துக் கொள்ள, எதிலும் மனம் ஓடாமல் இருக்க கழுத்தை தொட்டு பார்த்துக்கொண்டாள். பெருமூச்சு விட்டவள் முடியை சேர்த்து தலையில் கொண்டையிடப் போனாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தவள், உள்ளே ஆர்யன் நுழைய அப்படியே அசைவற்றாள்.

“ஹே! சித்தப்பா!!” என இவான் உற்சாகமாக எழுந்து கொள்ள, இவளும் பிடித்த முடியை விட்டுவிட்டு எழுந்து நின்றாள். இளமுறுவலுடன் உள்ளே வந்த ஆர்யன் திகைத்திருந்த ருஹானாவை பார்த்தபடியே இவானிடம் நெருங்கினான்.

“நீங்க போகலயா, சித்தப்பா?”

“இல்ல சிங்கப்பையா! நான் போகல”

“பாருங்க சித்தி! நாம தனியா இல்ல. என் சித்தப்பா நம்மோட இருக்கார்.” இவான் குதூகலிக்க, ருஹானா இன்ப அதிர்ச்சி என்றால் அது எப்படி இருக்கும் என முதன்முதலாய் உணர்ந்தாள்.

அவளது அகலமான பச்சை கண்களை பார்த்து முடித்த ஆர்யன், இவானிடம் திரும்பி சொன்னான்

“அவங்க தீவுல இருக்கும்போது உன் சித்தி, நீ, நான்… இங்க பொழுதை கழிக்கலாம்!”

(தொடரும்)  

Advertisement