Advertisement

கதவை தட்டி உள்ளே நுழைந்த ருஹானா தயக்கத்துடன் அங்கேயே நிற்க, “உள்ளே வாயேன்!” என ஆர்யன் அவளை அழைத்தான்.

அவள் இறங்கி கீழே வர, அவன் மேசையில் இருந்த நான்கைந்து நகைப்பெட்டிகளின் மூடியை ஒவ்வொன்றாக திறந்து காட்டினான். ருஹானாவிற்கு கோபம் மெல்ல ஏற, அவள் அவனை கடுமையாக பார்த்தாள்.

அவளின் கோபப் பார்வையை அவன் புரிந்து கொள்ளாமல், “இதுல எது நல்லா இருக்கு?” என அவன் கேட்க, “என்ன? எனக்கு புரியல!” என கடுப்பாக சொன்னவள், வெளியே செல்ல திரும்பினாள்.

அவள் மணிக்கட்டை பற்றி இழுத்த ஆர்யன், “போகாதே! நில்லு! அப்பவும் நான் என்னன்னு சொல்லறதுக்குள்ள நீ போய்ட்டே. அதான் உன்னை திரும்ப கூப்பிட்டேன். அதுக்குள்ள இந்த நகையெல்லாம் வந்துடுச்சி, நீயும் வந்துட்டே. அண்ணிக்கு எது நல்லா இருக்கும்? நாளைக்கு அண்ணா அண்ணியோட திருமணநாள். அதோட ஏற்பாடுகள் தான் செஞ்சிட்டு இருக்கேன்”

‘ஹோஹ்! எல்லாமே அதுக்கு தானா?’ மனநிம்மதி அடைந்த ருஹானா “அப்படியா? எனக்கு தெரியாதே! அவங்க கல்யாண நாளா?” என ஆசுவாசமாக கேட்டாள்.

“ஆமா! எது எடுக்கலாம் பாரேன்!” என ஆர்யன் மீண்டும் சொல்ல, ஒன்றை தேர்ந்தெடுத்து “இது அழகா இருக்கு!” என்று காட்டினாள்.

“நல்லது!” என அதோடு அதை முடித்துக்கொண்டான். அவள் எடுத்த நெக்லஸ் அவள் கையிலேயே இருக்க, அதை விரல்களில் மாட்டிக் கொண்டே “வேற எதும் இல்லனா நான் போகவா?” என கேட்டாள்.

“உண்மையில இருக்கு. இங்க வா, உட்கார்” என எதிரே சோபாவிற்கு அவளை அழைத்து சென்றான். தானும் அவள் பக்கத்தில் அமர்ந்தவன் சிறிய மடிக்கணினியை அவளுக்கு காட்டினான்.

“நாம யாட்ல இந்த தீவுக்கு போகப் போறோம். அங்க ரெண்டு நாள் தங்க போறோம்”

“ஆனா அம்ஜத் அண்ணாக்கு கூட்டம்னா அலர்ஜியாச்சே? அவர் எப்படி சமாளிப்பார்?”

“நட்சத்திர விடுதி முழுதும் நமக்காக பதிவு செய்திட்டேன். அதுனால எதும் தொல்லை இருக்காது”

பேசும்போதே அவனுக்கு இலேசாக இருமல் வர “கீழ இன்னும் டீ இருக்கு. நான் போய் கொண்டு வரேன்” என அவள் எழுந்துக் கொள்ள பார்க்க, அவளை கை காட்டி தடுத்தான்.

அவளின் நெருக்கத்தை இழக்க விரும்பாமல் “அப்புறம் குடிக்கிறேன்” என சொன்னவன் “நீ குடிச்சியா? நீ தான் மோசமா இருந்தே!” என விசாரித்தான்.

“ஆமா! எனக்கு நல்லா குணமாக்கிடுச்சி” என்றாள். சளி பிடித்தால் தானே குணமாக? அவளுக்கு பிடித்திருப்பது குணமாகாத நோய் அல்லவா? அந்த நோய் என்னவென்றே அவளும் இன்னும் ஆராயவில்லையே!

“அங்க இத்தாலியன் உணவகம் நல்லா இருக்கும். புகழ்பெற்ற சீன உணவகமும் பக்கத்திலயே இருக்கு. ஆனா அண்ணனுக்கும் அண்ணிக்கும் அந்த வகை உணவுகள் பிடிக்காது. வேற எது நல்லா இருக்கும்னு நீ பார்க்கறீயா” என கணினியை அவள்புறம் லேசாக நகர்த்தி கேட்டான்.

லேசாக சிரித்த ருஹானா கையில் இருந்த நெக்லஸில் விளையாடியபடியே  “நெஜமா இதைப்பத்திலாம் எனக்கு ஒன்னும் தெரியாது.. இது போல ஆடம்பர விடுதிலாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன். இதை பற்றி ஆசையும் எனக்கு கிடையாது” என்றான்.

“உனக்கு என்ன மாதிரியான உணவு பிடிக்கும்?” ஆர்யன் ஆசையாக அவளைப் பார்த்தபடி கேட்டான்.

தோள்களை நளினமாக குலுக்கியபடி “எனக்கு பிடிச்சது நல்லா…. சுவையான…. காரசாரமான…” என ருஹானா நீட்டிக்கொண்டே செல்ல

“கார்னியாரிக்!” என இருவரும் ஒன்றாக முடித்தனர். (மசாலா திணிக்கப்பட்ட பெரிய கத்திரிக்காய்)

அவள் வெட்கமாக முறுவலிக்க, “அதோடு நெய் சோறு, யோகர்ட்” என ஆர்யனும் புருவம் உயர்த்தி சொல்ல, சன்ன சிரிப்புடன் ருஹானா “ஆமா! கண்டிப்பா!” என்றாள்.

‘அதிகமாக மனம்திறந்து பேசிவிட்டோமே’ என நினைத்த அவள் “அழகான நெக்லஸ்! கரீமா மேடமுக்கு பொருத்தமா இருக்கும்” என பேச்சை மாற்ற, அவனோ “சுவையான கார்னியாரிக்  செய்ற உணவகம் அங்க இருக்கான்னு தேடுவோம்” என அவள் ஆசையை நிறைவேற்றுவதிலேயே முனைப்பாக இருந்தான்.

இருவரும் மடிக்கணினியை எட்டி பார்க்க பக்கம் பக்கம் நெருங்க, ருஹானா அவன் முகத்தை மிக அருகில் பார்த்து மெய்மறந்திருக்க, ஆர்யன் திரையிலிருந்து பார்வையை திருப்பியவன் அவளது காந்த வீச்சில் மயங்கினான். அவன் பேச வந்த வார்த்தைகள் அவள் விழிமொழியில் சிக்கி  ஓசையின்றி போய்விட்டன.

சட்டென மயக்கம் தெளிந்த ருஹானா “சரி! வேற எதும் இல்லனா நான் போறேன்!” என கிளம்பினாள்.

ஏமாற்றமாக இருந்தாலும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவனும் ருஹானா சொல்வதை போல “ஹூஹூம்! சரி!” என்றான்.

அவன் பார்வை வீச்சிலிருந்து தப்பிக்க நினைத்த ருஹானா ஒரே ஓட்டமாய் தனது அறைக்கு ஓடிவிட்டாள்.

அக்காவிற்கு புதுஉடையை காட்ட, தனது அறையிலிருந்து கரீமா அறைக்கு சென்று கொண்டிருந்த சல்மா இவளது வேகத்தை பார்த்து யோசித்தாள்.

——–

அறைக்கு வந்து பெரிய பெரிய ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்த பின்னே ருஹானா சற்றே நிதானமானாள். அதன்பின்னே கையிலிருந்த நெக்லஸ் அவள் கண்ணிலும் கருத்திலும் பட்டது. அவசரமாக ஓடிவரும்போது அதை அங்கே வைத்துவிட்டு வர மறந்த தன் முட்டாள்தனத்தை நொந்துக் கொண்டாள்.

அப்போது கதவு தட்டப்பட ஆர்யனோ என ஆர்வமாக திறந்த ருஹானா, அங்கே சல்மாவை பார்த்ததும் முகம் மாறினாள்.

“வேகமாக ஓடிவந்தியே, எதும் பிரச்சனையான்னு பார்க்க வந்தேன்”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்க அக்கறைக்கு நன்றி”

சல்மா ருஹானாவின் கையில் இருந்த நெக்லஸை பார்த்துவிட்டாள். “நெக்லஸ் நல்லா இருக்கு! இப்போதான் புதுசா வாங்கினியா?”

“இல்ல! இவான் சித்தப்பா வாங்கினார்”

அதிர்ச்சி அடைந்த சல்மா “உனக்கு வாங்கி கொடுத்தானா?” என கேட்டாள்.

“இல்ல.. கரீமா மேம்க்கு வாங்கியிருக்கார். நான் சர்ப்ரைஸை கெடுக்க விரும்பல. ஆனாலும் சொல்றேன். அவங்க திருமண நாள் பரிசு இது”

“இதுல நீ எப்படி வந்தே?” ஏளனமாக கேட்டாள்

“நான்… தேர்ந்தெடுக்க என் உதவி கேட்டார்” தயக்கத்துடன் வந்தது ருஹானாவின் பதில்.

“என்னோட அக்காவோட ரசனைக்கு நீ செலக்ட் செய்றியா? அதிசயம் தான். ஆர்யனுக்கு எப்படித்தான் இப்படி தோணுதோ?” உதட்டை பிதுக்கி எகத்தாளமாக சொன்ன சல்மா “சரி, வேற என்ன பிளான் செய்திருக்கான் ஆர்யன்?” என அதிகாரமாக கேட்டாள்.

“தீவுல ரெண்டு நாள் தங்கி ஸ்டார் ஹோட்டல்ல உணவு……”

“அப்படினா நீயும் வரே எங்க கூட? இவானை பார்த்துக்க.. “ என இகழ்ச்சியாக சொன்னவள் “எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என அலட்சியமாக கேட்டாள்.

“நாங்க வரல. இவானுக்கு கடல் பயணம் ஒத்துக்காது. நாங்க இங்க தான் இருப்போம்” அந்த நொடி முடிவெடுத்து சொன்னாள் ருஹானா.

பெருத்த நிம்மதியடைந்த சல்மா “நல்லது! இவானோட உடல்நலம் முக்கியம்!” என தலையை கர்வமாக ஆட்டி அங்கிருந்து போய்விட்டாள்

எதிரே ஆர்யன் அறையை பார்த்த ருஹானா “நேரமாகிடுச்சி! நாளைக்கு காலைல கொடுத்துடலாம்” என கதவை பூட்டிக்கொண்டாள்.

——–

காலையில் தயக்கத்துடன் வந்த ருஹானா ஆர்யனின் அறைக்கதவை திறந்து பார்க்க, அவன் அங்கே இல்லாதது பார்த்து நிம்மதியடைந்தவள், மெல்ல சத்தமில்லாமல் நடந்து வந்து நெக்லஸை மேசையில் வைத்துவிட்டு அடிமேல் அடி எடுத்து வைத்து திரும்பி நடக்க, ஆர்யன் போன் பேசிக்கொண்டே படுக்கையறை கதவு திறந்து அலுவலக அறைக்கு வந்துவிட்டான்.

போனில் பேசியவன் “சரி.. நல்லது… அப்போ நான்…“ ருஹானாவை பார்த்துவிட்டான். “ஒரு நிமிஷம்….” என அங்கே சொல்லி போனை ஒரு கையால் அடைத்தவன், ருஹானாவை கேள்வியாய் பார்த்தான்.

“தப்பான நேரம் வந்திட்டேன். ஸாரி. நேத்து நான் நெக்லஸை கையிலயே எடுத்துட்டு போயிட்டேன். அது வைக்க தான் வந்தேன். வச்சிட்டேன். போறேன்”

“கொஞ்சம் இரு” என அவளிடம் சொன்னவன் போனில் தொடர்ந்து பேசினான். இவள் முள் மேல் நிற்பவள் போல கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

“ஆமா… புக் செய்திடுங்க.. மொத்தம் ஆறு பேர்… அதுல ஒரு சின்ன பையன். சரி…”

அவன் போனை வைக்கவும் “வந்து… நீங்க அவங்க திருமணநாள்க்கு புக் செய்றீங்களா?” என அவள் கேட்க, அவன் “ஆமா!” என்றான்.

“ம்ம்…. ஆறு பேருன்னு சொன்னீங்க?” அவள் தயக்கமாக கேட்க, அவன் அவளை கூர்ந்து பார்த்து “ஏன்னா நாம ஆறு பேர் தானே! அண்ணா, அண்ணி, சல்மா, இவான்……. நீயும் நானும்!”

“நான்……”

“உனக்கு வர விருப்பம் இல்லயா?”

“இவானுக்கு கடல்பயணம் சரிவராதே. அவன் வர முடியாது தானே?. அதனால நான் அவனோட தங்கணும்”

“சரி! ஒன்னும் பிரச்சனை இல்ல” என ஆர்யன் எளிதாக முடித்துவிட்டான்.

ஒரு விநாடி தயங்கி நின்றவள் பின் வேகமாக வெளியே சென்றுவிட்டாள். பெருத்த ஏமாற்றம் அடைந்த ஆழ்மனதை அவளால் சமாதானப்படுத்த முடியாமல் கதவை மூடி ஆர்யன் அறை வாசலிலேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டாள். பின் இவானை கவனிக்க அவன் அறைக்கு சென்றாள்.

காதலை உணராத வேளையிலும்

ஒவ்வொரு நொடியும்

மனதால் இணைந்திருந்தாலும்

அருகருகே இருந்திடவும்

ஒன்றாய் பயணிக்கவும்

ஆசை கொள்ளும் மனது!

குடும்பமாய் ஒரு சுற்றுலா

ஆர்வமாய் திட்டமிட்டதை

சூழ்ச்சிகள் மறுக்க செய்திட

உம் சொல்லியவள்

ஊஹூம் சொன்னதை

கண்டுகொள்ளாத காதலன் மீது

வருத்தம் கொண்டது இளமனது

அவர்களுக்கான தருணம் 

தவறவிட்ட ஏமாற்றத்தில்!

——-

Advertisement