Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 87

ருஹானாவிடம் நெருங்கி வந்த ஆர்யன் “என்ன செய்யுது உனக்கு? நீ சரியாவே இல்லயே?” என கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு சளி பிடிக்க போகுதுன்னு நினைக்கறேன்” என தப்பிக்க சொல்ல, “அப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்” என அவன் அழைக்க, “இல்லல்ல.. வீட்ல போய்  இஞ்சி டீ குடிச்சா போதும். எனக்கு சரியாகிடும்” என்றாள்.

இருவரும் பக்கம் நின்று பேசுவதை சையத் வந்து எட்டி பார்த்துவிட்டு மகிழ்வுடன் சிரித்துக்கொண்டே சென்றார். “வெளியே அதிக நேரம் பனியில இருக்கவேண்டாம். மாளிகைக்கு போகலாம்” என ஆர்யன் அவர்களை விரைந்து அழைத்து சென்றான்.

——–

“உங்களுக்கு என்ன வேணும் என்கிட்டே இருந்து?” என மிஷால் காதரிடம் கேட்க, “நீ அர்ஸ்லான் மாளிகைக்கு எளிதா போயிட்டு வர்றே! ஆர்யனை பற்றிய தகவல்கள் கொடுத்தா போதும். அவனை நாம முடக்கிடலாம். இல்லனா காலம் பூரா சிறையில தள்ளிடலாம். நாம சேர்ந்து திட்டம் போட்டு அவனை தீர்த்துக் கட்டலாம்” என அவன் சொன்னான்.

“எனக்கு இந்த சதி, ஏமாற்று இதெல்லாம் ஒத்துவராது. மாஃபியா கூட எனக்கு நட்பும் வேணாம். நீங்க இங்க இருந்து கிளம்புங்க”

“தம்பி! ஆர்யனுக்கு எதிரா சின்ன தீக்குச்சியா நீ நின்னா கூட எனக்கு அது உபயோகம் தான். நான் உன்னை வற்புறுத்த விரும்பல. ஆனா நாம திரும்ப சந்திப்போம்னு எனக்கு தெரியும். ஆர்யன்ங்கற பேர் சொன்னாலே உன் கண்ணுல தெரியுற வெறுப்பு எனக்கு பிடிக்குது” என்று சொன்ன காதர், தன் பெயரட்டையை மேசையில் வைத்துவிட்டு தன் ஆட்களுடன் கிளம்பி விட்டான்.

மிஷால் தலையை பிடித்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்துவிட, சதாம் “அண்ணா! நான் கமிஷனர் ஆபிஸ் போய் சாப்பாடு கொடுத்துட்டு வரேன். தன்வீர் அண்ணா ஆர்டர் செய்திருந்தார்” என சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த மிஷால் தனக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என எண்ணி “அதை என்கிட்டே கொடு. நான் போறேன்” என வாங்கிக் கொண்டான்.

போலீஸ் கமிஷனர் ஆபிஸ் அடைந்த மிஷால், தன்வீர் மேசையில் உணவை வைக்க, அவனை பார்த்த தன்வீர் “ஏன் மிஷால்! சோர்வா தெரியுறே? உடம்பு சரியில்லயா? என கேட்டான். அங்கே இருந்த கமிஷனர் வாசிமும் அருகில் வந்து விசாரித்தான்.

“அதுலாம் இல்ல, தன்வீர்! ருஹானா கொஞ்ச நாள் உணவகத்துக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா. எனக்கு இப்போ உதவிக்கு ஆள் இல்ல. அதான் தேடிட்டு இருக்கேன்” என மிஷால் சொல்ல, வாசிமுக்கு ‘தன் காதலி வாகிதாவை அங்கே அனுப்பினால் என்ன?’ எனும் யோசனை தோன்றியது.

மிஷாலிடம் வாசிம் அதை சொல்ல, அவனும் சந்தோசமாக சம்மதித்தான். நாளையே கூட்டிவருமாறு சொன்னான்.

———

“அக்கா! அந்த நச்சுப்பாம்பு ஆர்யனோட வெளிய போயிருக்கு. நான் வீட்ல உட்கார்ந்து இருக்கேன்”

“எப்பவும் கோபப்பட்டுட்டே இருக்காதே சல்மா டியர்! உன் கட்டுப்பாட்டை இழந்துடுவே”

“வா, இங்க வந்து எட்டி பாரு! எப்படி உன் கட்டுப்பாட்டை மீறாம நீ இருக்கேன்னு நான் பார்க்கறேன்

ஜன்னலில் கீழே பார்த்துக்கொண்டிருந்த சல்மா கோபமாக சகோதரிக்கு காட்ட, வெளியே சென்றிருந்த மூவரும் பேசிக்கொண்டே காரிலிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர், ஒரு குடும்பமாக…

“பாரு, இதுக்கு தான் நான் சொல்றேன். நிதானமா இரு. அவளோட மல்லுக்கட்டாதே. ஆர்யன் மேலே மட்டும் கவனம் செலுத்து. அவ நினைக்கிறது எல்லாம் நடக்க விடாம செய். நாளைக்கு ஆர்யன் கூட டின்னர் போகணும். அதுக்கு என்ன டிரஸ் போடணும்னு பாரு. பசப்புக்காரியை பத்தி யோசிக்காதே.”

——-

“எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இப்படி இருக்கேன்?” என ருஹானா கண்ணாடியை பார்த்து கேட்டுக் கொண்டிருக்க, இன்றைய நிகழ்வுகள் கண்ணாடியில் ஓடி அவளை மேலும் குழப்பியது.

இதே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு ஆர்யனும் ருஹானாவின் உடல்நிலை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்க, அவன் அறைக்கதவை திறந்துக்கொண்டு அம்ஜத் ஓடிவந்தான்.

“ஆர்யன்! ஆர்யன்! அது வந்திடுச்சி! திரும்பவும் வந்திடுச்சி, ஆர்யன்! வந்திடுச்சி”

“என்ன அண்ணா? யார் வந்தது?” அண்ணனை பற்றி சகலமும் புரிந்திருந்த தம்பி பதறாமல் கேட்டான்.

“காலம் ஆர்யன் காலம். கரீமாவோட என்னோட கல்யாண நாள். இந்த வருஷமும் வந்திடுச்சி. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல ஆர்யன். கரீமாக்கு என்ன பரிசு கொடுப்பேன்? எப்படி தேர்ந்தெடுப்பேன். ஆங்.. ருஹானா! அவ உதவி செய்வா! ருஹானா சரியா சொல்வா”

“நீங்க கவலைப்படாதீங்க, அண்ணா. நான் பார்த்துக்கறேன். வழக்கம்போல நாளைக்கு டின்னர் போகலாம்.”

“ருஹானாவை நாம கேட்கலாம். அவளும் பொண்ணு தானே? நம்மை விட அவளுக்கு என்ன வேணும்னு நல்லா தெரியும், ஆர்யன்”

“சரி அண்ணா! அவளையும் கேட்கறேன். நீங்க கவலைப்படாதீங்க”

“அப்பாடா! என் கவலை தீர்ந்தது, ஆர்யன். நான் தோட்டத்துக்கு போய் கரீமாக்கு என்ன பூ கொடுக்கலாம்னு பார்க்கறேன்”

——–

ருஹானாவிற்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது என ஆர்யன் அவளை பாதுகாக்க நினைக்க, மாறாக அவனுக்கு சளியோடு இருமலும் சேர்ந்து பாதித்திருந்தது.

அவனுக்கு இஞ்சி தேநீர் தயாரித்து கொண்டுவந்த ருஹானா, அறைக்கதவின் அருகே தயங்கி நின்றாள். உள்ளே அவன் இருமும் சத்தம் கேட்க, தயக்கம் உதறி உள்ளே எடுத்து சென்றாள்.

முன்னறையில் அவனை காணாமல் மேசையில் கோப்பையை அவள் வைக்க, ‘நீ என்ன எப்பவும் அவனை பற்றியே பேசுறே?’ என மிஷால் கேட்டது நினைவு வர, கீழே வைத்த கோப்பையை எடுத்துக்கொண்டு அவள் நகர, படுக்கையறை கதவை திறந்து கொண்டு ஆர்யன் வெளியே வந்தான்.

“இது எனக்குத் தானே?” என வந்து அவள் பிடித்திருந்த ட்ரேயில் இருந்த கோப்பையை எடுத்துக்கொண்டான்.

“ம்.. உங்களுக்கு தான் கொண்டுவந்தேன். அப்புறம் நீங்க கீழ வந்து குடிப்பீங்கன்னு நினைச்சேன்”

ஒரு மிடறு தேநீரை குடித்தவன், “ஏற்கனவே நீ கொடுத்த டீ குடிச்சதுக்கு பிறகு எனக்கு எவ்வளவோ பரவாயில்லை” என்று பாராட்டினான்.

“இன்ஷா அல்லாஹ்! இதுவும் உங்களை குணமாக்கட்டும்” என்று சொல்லி அவள் எட்டு எடுத்து வைக்க, “உனக்கு நேரமிருக்கா?” என அவன் கேட்கவும், மெதுவாக திரும்பியவள் எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு ”என் ரூம்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கத்தான் செய்யுது” என்றாள்.

தேநீர் கோப்பையுடன் அவன் அவளை நெருங்க, அவள் ஒரு அடி பின்னால் நகர்ந்தாள். “எது ஒரு பெண்ணை சந்தோசப்படுத்தும்?” என அவன் கேட்ட கேள்வியில் கண்கள் விரித்து அவள் திகைக்க, அவளின் பதில் கேட்க தலை சாய்த்து காத்திருந்தவன், அவள் பேசாததால் இன்னும் அவளை அதிர வைத்தான். “உதாரணமா நீ… சொல்லேன்!… எது உனக்கு மகிழ்ச்சி கொடுக்கும்?”

“எனக்கு…. எதும் தெரியல” பதட்டமாக சொன்னாள்.

“ஒரு நட்சத்திர உணவகத்துல அருமையான இசையோட நல்ல இரவு உணவு, அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் பரிசு… அது உன்னை சந்தோசப்படுத்துமா? குறிப்பா ஏன் இதை உன்கிட்டே கேட்கறேன்னா…”

சங்கடமான ருஹானா அவனை முழுதாக சொல்லவிடாமல் “நாம அப்புறம் பேசலாம். நான் இவானை பார்க்க போகணும்” என வேகமாக சொல்ல,  “கொஞ்சம் இரு!” என அவன் அவளை நிறுத்த பார்க்க, அவன் சொல்ல வருவதை காதில் வாங்காமல் விரைந்து சென்றுவிட்டாள்.

தன் அறையில் நிலைகொள்ளாமல் நடந்த ருஹானா “அவர் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? ஏன் என்கிட்டே அப்படி கேட்கணும்? என்னை ஏன் அவர் சந்தோசப்படுத்த நினைக்கிறார்?” என புலம்ப, அவள் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டு அதை எடுத்தாள்.

‘என் அறைக்கு வர்றீயா? நாம முக்கியமா ஒரு விசயம் பேச வேண்டியிருக்கு’ என ஆர்யன் அனுப்பியிருக்க, தன் கழுத்தை தொட்டுப்பார்த்து கொண்டவள், என்ன எது என்று நேரிலேயே கேட்டுவிடுவோம்’ என தீர்மானித்து, ‘சரி, நான் வரேன்!’ என பதில் அனுப்பினாள்.

கண்ணாடியில் பார்த்து முகத்தை சரி செய்து கொண்டவள் தண்ணீர் எடுத்து குடித்தாள்.

——-

“அக்கா! இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு!”

“இதை போட்டுக்கிட்டா நீதான் ரொம்ப அழகா இருப்பே, சல்மா டியர்!”

“உண்மையை சொல்லணும்னா அக்கா, எனக்கு நாளைக்கு வரவே பிடிக்கல. ஆனா எனக்காக நீ இத்தனை சிரமப்படுறதால வரலாம்னு யோசிக்கிறேன்”

“அது எப்படி? ஆர்யனை உன் அழகால அசத்துற சந்தர்ப்பத்தை எப்படி தவறவிடலாம்?”

“இந்த டிரெஸ்ஸை நான் உடுத்தி பார்க்கவா அக்கா?”

“இந்த செயினோட சேர்த்து போட்டு பாரு, அப்போத்தான் பொருத்தமா இருக்கும்”

அழகு உடை, விலையுயர்ந்த சங்கிலி கிடைத்த சந்தோசத்தில் கரீமாவை சிரிப்புடன் கட்டிக்கொண்டாள் சல்மா.

——-

Advertisement