Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 86

கலங்கிய கண்களை சிமிட்டிக்கொண்டு ருஹானா ஆர்யனை பார்த்து நடந்து வர, மிஷால் “ருஹானா! நான்….” என தொடங்க, அவனுக்கு ரௌத்ரமுகம் காட்டி “மிஷால்!” என அவள் பல்லைக் கடிக்கவும், அவன் மேலே பேசாது நிறுத்திவிட்டான்.

தான் நினைத்து வந்தது நடக்காமல் நிகழ்ச்சிகள் தலைகீழாய் நடப்பதை கண்டு மிரண்டு போயிருந்த மிஷால், ருஹானாவின் கோபம் கண்டு பின்னடைந்தான். இருவருக்கும் இடையே வந்த ருஹானா ஆர்யனை நெருங்கி அவன் காயத்தை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

‘எனக்காக வழியும் உன் ஒரு கண்ணீர்துளிக்கு இன்னும் எத்தனை அடி வேண்டுமானாலும் நான் வாங்குவேனே!’ என்பது போல ஆர்யன் அவளை பார்த்து நிற்க, அவள் முகம் வேதனையால் சுருங்கியது.

மிஷாலை திரும்பி ஒரு முறை முறைத்தவள் மீண்டும் ஆர்யனை பார்த்து உருகி நின்றாள். மனம் குலைந்து போன மிஷால் வேகமாக அங்கிருந்து அகன்றான். சில வினாடிகள் ருஹானாவின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த ஆர்யனும் உள்ளே செல்ல, ருஹானா அங்கேயே நின்றிருந்தாள்.

மேலே நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த சல்மா மிகுந்த ஆங்காரமானாள். அக்காவின் அறைக்கதவை திறந்துக்கொண்டு ஆவேசமாக செல்ல “என்ன நடந்தது சல்மா? ஏன் இப்படி ஓடி வர்றே?” என கரீமா கேட்டாள்.

“அக்கா! அந்த மிஷால் ஆர்யனை அடிச்சிட்டான். அந்த குப்பைக்காரியும் அங்க தான் இருந்தா..” என அழுதுக்கொண்டே அவள் சொல்ல, “சரி, மிக நல்லது சல்மா! இதானே நமக்கு வேணும். ஆர்யனோட முரட்டுத்தனத்தை பார்த்து ருஹானா பயப்படணும்” என கரீமா சிரிப்புடன் சொன்னாள்.

“ஐயோ அக்கா! ஆர்யனோட ஒரு குத்துக்கு மிஷால் தாங்குவானா? ஆனா அவன் ஒரு விரலைக் கூட அசைக்கல அக்கா அசைக்கல” என சல்மா கத்தி கதறினாள். இப்போது தான் சல்மா சொல்வது கரீமா மண்டைக்குள் ஏற “இது எப்படி நடக்கும்? என்னால நம்பவே முடியலயே! என் கண்ணால பார்த்தாக்கூட நம்ப முடியாதே!” என அவள் குழம்பினாள்.

“நம்பு அக்கா நம்பு! நான் சொல்லிட்டே இருந்தேன். நீ என்னை நம்பவே இல்ல. அந்த சூனியக்காரி ஆர்யனை அடியோட மாத்திட்டா. அவ கண்ணை காட்டியே அவனை மயக்கிட்டா” என சல்மா அழுதாள். மேசையில் பலமாக அடித்துக்கொண்டே “நான் அவளை வெறுக்கறேன்! நான் அவளை வெறுக்கறேன்!” என கத்தியவள், மேசை மேல் இருந்த அலங்கார பொருட்கள் அத்தனையும் கீழே தள்ளி விட்டாள்.

கரீமா அவள் கையை பிடிக்க வர, அவளை உதறிய சல்மா கட்டிலில் அமர்ந்து “சூனியக்காரி! பாம்பு! அவளை எனக்கு பிடிக்கல! பிடிக்கல” என கத்த, கரீமா சல்மாவின் வாயை பொத்தினாள்.

சல்மா தலையாட்டி திமிற “சல்மா! நீ கத்த கூடாது. அப்போ தான் நான் உன் வாயில இருந்து கையை எடுப்பேன். சரியா?” என கரீமா சுட்டுவிரலைக் காட்டி எச்சரிக்க, சல்மா சரியென தலையாட்டினாள்.

கரீமா மெதுவாக கையை எடுக்க, சல்மா கண்ணீர் விட்டு அழுதாள். “எல்லாம் முடிந்தது அக்கா! நாம தோத்துட்டோம்!” என அழுதவளை அணைத்துக்கொண்ட கரீமா “எதும் நம்ம கையை விட்டு போகல. உன் அக்காவை உனக்கு தெரியாதா? எப்பவும் நான் தோற்க மாட்டேன்! நடக்காது!” என தேற்றினாள்.

——

தனது அறைக்கு வந்த ஆர்யன் நாற்காலியில் அமர்ந்து மடிக்கணினி திரையில் தன் காயத்தை பார்த்தான். ‘எங்களுக்காக இதெல்லாம் விட்டுவிடுங்களேன்!’ என்ற ருஹானாவின் கெஞ்சலுக்கு தான் அடிப்பணிந்ததை நினைத்து பார்த்தான். அவள் கை காட்டும் வழியே தன் உதட்டுக்காயத்தை கண்டு கொண்டவன், அவள் சொல்பேச்சு கேட்டு தன் மனக்காயத்தை ஆற்றிக் கொள்வானா?

கதவு சத்தம் கேட்கவுமே அவனுக்கு தெரிந்துவிட்டது. வந்திருப்பது யார் என. உள்ளே வரும் ருஹானாவை பார்த்தவன் அவள் கையில் வைத்திருக்கும் முதலுதவிப் பையையும் பார்த்தான். பாவமாக ஆர்யனை பார்த்தபடி வந்த ருஹானா, அவன் முன்னே அந்த பையை விரிக்க, ஆர்யன் வேண்டாமென கை காட்டினான்.

ருஹானா தலை சாய்த்து கெஞ்சுதலாய் கேட்க, அந்த அழகில் லயித்தவன் அமைதியாக இருக்க, அவள் பஞ்சை எடுத்து காயத்தை சுத்தம் செய்தாள். அவன் வலியை அவள் வாங்கியவள் போல அவள் நெற்றி சுருங்கி முகம் வாடி இருந்தது.  அவள் முகத்தை பார்த்த ஆர்யனுக்கு வலி என்பது துளியும் தெரியவில்லை.

அடுத்து மருந்தை பஞ்சில் நனைத்து “ம்பச்!” என்றபடி முகத்தை சுளித்தவாறே காயத்தில் வைத்தாள். “எரியுதா?” என அவனிடம் கேட்டவள் மருந்தை அழுத்த பயந்துகொண்டு நடுங்கும் கையை பின்னுக்கு இழுத்தாள். ஆர்யன் சட்டென அவள் மணிக்கட்டை பற்றிக்கொண்டான். அவள் கண்ணில் தெரியும் வலியை பார்த்தபடி அவன் அவள் கையை கிட்டே கொண்டு வர, ருஹானா காயத்தில் மென்மையாக மருந்தை ஒத்தி எடுத்தாள்.

ஒரு மாத்திரை புட்டியை எடுத்து அவன் கையில் கொடுத்தவள் “இது உங்க வலியை குறைக்கும்” என்றாள். “உங்க காயம் திறந்தே இருக்கட்டும். இரவு ஒருமுறை மருந்து போடலாம்” என்று சொல்ல, ஆர்யன் எதற்குமே வாய் திறக்கவில்லை.

மருந்துப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பியவள் திரும்பி “நன்றி!” என்றாள், கனிந்த குரலில். அப்போதும் அவன் முகத்தில் அசைவில்லை. “எனக்கு தெரியும், நாம பேசாமலே புரிந்து கொள்ளும் நாள் வரும்” என அவள் மீண்டும் அதையே சொல்ல, ஆர்யன் அவள் கண்களில் சிக்கிக் கொண்டான்.

அவன் மௌனமாகவே இருக்க, ருஹானா கதவருகே சென்றவள் அவனை திரும்பி பார்த்தபடியே கதவை மூடி சென்றுவிட்டாள். அவளின் அண்மை வசீகரத்தில் இருந்து சில நிமிடங்களுக்கு பின்பே அவனால் வெளிவர முடிந்தது. அதன் பின்னரே கணினி திரையில் மீண்டும் காயத்தை பார்த்துக்கொண்டான்.

———

மிஷால் உணவகத்தில் தன் கையை பார்த்தபடி நொந்து போனவனாய் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருக்க, ருஹானா வேகமாக உள்ளே வந்தாள். “ருஹானா! நான்….” என அவன் எழுந்து கொள்ள, “எனக்கு தெரியும். என்னை பாதுகாக்க தான் இதெல்லாம் நீ செய்றே! சின்ன வயசுல இருந்து இப்படி தான் செய்வே. ஆனா நாம இப்போ வளர்ந்திட்டோம். சொந்தமா யோசிச்சி முடிவெடுக்கற வயசு வந்திடுச்சி.. நல்லது கெட்டது எதுன்னு தெரியும். எதையும் பேசி தான் தீர்க்கணும். அடிதடியால இல்ல” என ருஹானா படபடவென பொரிந்தாள்.

“ருஹானா! நான் உனக்கு நல்லது செய்யத்தான்….” என மிஷால் இரங்கிய குரலில் மீண்டும் தொடங்க, “என் அப்பாக்காக என்னை பாதுகாக்க வேண்டியது உன்னோட பொறுப்புன்னு நீ நினைக்கிறே! என்னை சுத்தி இருக்கறவங்களை அலசி ஆராயறே! ஆனாலும் எல்லாரும் கெட்டவங்க இல்ல மிஷால்! இவங்க இப்படித்தான்னு தீர்மானிக்கிறது எளிது மிஷால். நான் கூட முன்ன அப்படி செய்திருக்கேன். ஆனா இப்போ எனக்கு தெரியும். அவர் கெட்டவர் இல்ல.. இவானோட சித்தப்பா கெட்ட மனிதர் இல்ல. இதை கேளு, மிஷால். ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க காரணம் இருக்கும். வேற வேற இறந்தகாலம் இருக்கும்.” என ருஹானா நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

அதுவரை அவள் பேசுவதை தன்மையாக கேட்டுக்கொண்டிருந்த மிஷால் கோபத்தோடு “அந்த கேங்க்ஸடர் பத்தி நீ தெரிஞ்சி தான் பேசுறீயா, ருஹானா?” என குரலை உயர்த்தினான்.

அவனை பேசவிடாமல் அவள் அவனுக்கு மேல் சத்தமாக “நீ அந்த வார்த்தையை சொல்லக்கூடாதுன்னு தான் இத்தனையும் சொல்றேன். அடிதடில நீ இறங்கக்கூடாதுன்னு தான் சொல்றேன். இவானோட சித்தப்பா மாறிட்டார். நீ ஒருத்தரை பற்றி புரிஞ்சிக்கணும்னா கை குலுக்கி தான் தெரிஞ்சிக்கணும், கை முஷ்டியை வச்சி இல்ல”

“ருஹானா நீ இப்போ யாரை காப்பாத்துறேன்னு உனக்கு தெரியுதா? யாருக்காக நீ நடுவுல போய் புல்லட்டை வாங்கறன்னு தெரியுதா? எப்பவும் அவனை பத்தி தான் பேசிட்டு இருக்கே! அவனை பத்தியே தான் பேசுறே!”

“மிஷால்!” பல்லைக் கடித்துக்கொண்டு இரைந்தாள்.

“நீ யாரை காப்பாத்தினியோ அவன் ஒரு கொடுமைக்காரன். உனக்கு தெரியாதா அது? நீ பார்க்கல? நீ என்ன குருடா இல்ல நீ அவனை காதலிக்கிறியா?”

ஆத்திரத்தில் கத்திவிட்ட மிஷால் அதன் பின்னரே தான் தவறாக பேசிவிட்டோம் என உணர்ந்தான். கோபமாக இருந்த அவன் முகம் குழப்பமாக மாறியது.

அத்தனை நேரம் அவன் முகத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்த ருஹானாவின் முகம் சிவந்தது. கண்கள் கலங்கின. அப்படியே அவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.

நிமிடங்கள் கடந்தும் மிஷாலுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை.

“நீ..  நீ என்ன பேசுறேன்னு தெரியாம பேசுறே” என அவனிடம் சொல்லி திரும்பி மெதுவாக நடந்த ருஹானா வெளியே வந்தாள். மிஷால் தொப்பென தளர்ந்து போய் அமர்ந்து விட்டான்.

குளிருக்கு கழுத்தை சுற்றி போட்டிருந்த ஸ்கார்ப் அவள் தொண்டையை இறுக்குவது போல இருந்தது. அதை எடுத்துவிட்டபடியே நடந்தவளுக்கு ஆர்யனோடு நெருக்கமாக இருந்த தருணங்கள் எல்லாம் மனத்திரையில் ஓடியது.

இவான் பிறந்தநாள் விழாவில் ஆர்யன் அவளை கீழே விழாமல் தாங்கியது, கடற்கரை காபி கடையில் அவன் கண்ணோடு நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம், கோபத்தோடு அவன் அவளை சுவரோடு அழுத்தி எச்சரித்தது, அவளுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தது, யாக்கூப்பிடம் இருந்து காப்பாற்றியது என அது ஓடிக்கொண்டே இருக்க, அவள் நடந்து கொண்டே இருந்தாள்.

பின்னால் இருந்து பர்வீன் “ருஹானா!” என அழைத்தது கூட அவளுக்கு கேட்கவில்லை.

——–

அர்ஸ்லான் மாளிகை வந்தடைந்த ருஹானா, ஆர்யனின் கார் நிற்பதை பார்த்து பதட்டமானவள், அவன் வீட்டில் தான் இருக்கிறான் என உணர்ந்து கொண்டாள். தோட்டத்தில் எங்காவது இருக்கிறானா என சுற்றுமுற்றும் பார்த்தவள் அவனை காணாததில் நிம்மதியடைந்தாள்.

போன் சத்தம் எழுப்ப திடுக்கிட்டவள் அதை எடுத்து பார்க்க, அதில் பர்வீன் “என்ன ருஹானா, நீ நல்லா தானே இருக்கே. உடம்புக்கு ஒன்னும் இல்லயே?” என கவலையுடன் கேட்டார்.

“ஏன் பர்வீன் அம்மா அப்படி கேட்கறீங்க? நான் நல்லா இருக்கேனே”

“கொஞ்சம் முன்னே மிஷால் உணவகம் வாசல்ல நான் உன்னை பார்த்துட்டு கூப்பிட்டேன். நீ திரும்பி கூட பார்க்கலயே?”

“அப்படியா பர்வீன் அம்மா? நான் கவனிக்கலயே! இவான் என்னை தேடுவானேன்னு அவசரமா வந்திட்டேன்”

“ஆனா உன் முகம் சரியா இல்லயே, மகளே! உன் மனசுல எதாச்சும் கவலை இருந்தா என்கிட்டே சொல்லு, ருஹானா டியர்”

“அப்படிலாம் எதும் இல்ல அம்மா. நீங்க கவலைப்படாதீங்க” என ருஹானா அவரை சமாதானப்படுத்தி போனை வைத்தாள்.

சத்தம் செய்யாமல் வீட்டின் உள்ளே வந்தவள் வேகமாக படிக்கட்டில் ஏறினாள். அவள் படிக்கட்டில் ஓடிவரும் அழகை ரசித்தபடி படிக்கட்டின் வளைவில் ஆர்யன் நின்றிருந்தான். அவனை பார்த்ததும் அதிர்ந்து போனவள் அடுத்த படியில் ஏறாமல் நின்றுவிட்டாள். பின் தலைகுனிந்து கொண்டே மேலே ஏற, அவளிடம் வித்தியாசம் உணர்ந்த ஆர்யன் “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” என கேட்டான்.

“ஒன்னும் இல்லயே! நான் நல்லா தானே இருக்கேன்” என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் பதில் சொன்னபடி அவனை தாண்டி நடந்தாள். எட்டி அவள் கையை பிடித்து நிறுத்தியவன் “என்னை பாரு!” என்றான். அவள் திரும்பி நின்றாலும் அவன் கண்களை பார்க்கவில்லை.

“தலையை நிமிர்ந்து என் முகத்தைப் பாரு” என அவன் மீண்டும் சொல்ல, அவனை ஏறெடுத்து பார்த்தாள். ‘நீ அவனை காதலிக்கிறியா?’ என மிஷால் கேட்டது மனதில் மோத, அவன் பிடியில் இருந்த அவள் கை நடுங்கியது. வேர்த்து ஊற்றியது.

“கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு. நீ சரியாவே இல்ல” என அவன் சரியாக கண்டுபிடித்தான். அவள் மென்று விழுங்கினாள். “என்கிட்டே சொல்லு” என அவன் கேட்க அவள் தலை இடவலமாக ஆடியது. “சொல்ல மாட்டியா?” என அவன் மறுபடியும் கேட்க, அவன் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் “எனக்கு ஒன்னும் இல்ல” என்று சொல்லி அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

பெரிய ஆபத்திலிருந்து தப்பி ஓடிவந்தவள் போல வேகமாக உள்ளே வந்து கதவை மூடியவள், கண்ணாடி முன் அமர்ந்து முகம், கழுத்து என தொட்டு தொட்டு பார்த்தாள், சூடாக இருக்கிறதா என்று.

அறவழியில் நடை போடுபவனை

அடிப்பாயா நீயென நண்பனிடம்

வினவியவளுக்கு கிடைத்தது

விடைக்கு பதிலாக கேள்வியே!

அன்பனாய் தன்னை நினைத்துக்கொண்டு

கேட்டான் பொறாமையால்…

கேடுகெட்டவன் மீது நீ

காதல் கொண்டாயா?

திகைப்பும் தவிப்பும் குழப்பமுமாய்

தன் மனப்போக்கை அறியும்முன்னே

நாயகனின் நெருக்கத்தில்

அச்சம் கொள்கிறதே

நாணமிகு நயனங்கள்!

அவள் செல்லும்வரை பார்த்திருந்த ஆர்யன் அவள் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் புரியாமல் யோசித்தபடி, இவான் அறை கதவை திறந்தான்.

தரையில் அமர்ந்திருந்த இவான், “சிண்டு! பாரு, நீ எவ்வளவு சோர்வா தெரியுற! ஒழுங்கா சாப்பிடணும். சரியா?” என அவனுக்கு மிகப்பிடித்த நாய்க்குட்டி பொம்மையை மிரட்டிக் கொண்டிருந்தான்.

Advertisement