Advertisement

“சரியா சித்தி நாம சேர்ந்து வெளிய போகலாம்” என இவான் உற்சாகமாக சித்தியை கூட்டுசேர்க்க, “ஓ! போலாமே!” என ருஹானா உணர்ச்சியில்லாமல் சொன்னாள்.

சாரா வெளியே சென்றுவிட, எப்படி ஆர்யனோடு பொழுதை கழிக்க போகிறோம் என ருஹானாவிற்கு மூச்சிரைக்க, துணி கருகும் வாசனையில் திரும்பிப் பார்த்த ஆர்யன் அடுப்பில் துணி எரிந்துக்கொண்டிருப்பதை கண்டு எழுந்தோடி வந்தான்.

ருஹானாவும் அருகே எரிவதை அதற்குள் பார்த்துவிட, ஆர்யன் அவளுக்கு முன்னே அந்த துணியை எடுக்க, அவன் கை மேல் இவள் கை வைத்தாள். உடனே இவள் கையை எடுத்துவிட, ஆர்யன் எரியும் துணியை நீரில் நனைத்தான். ருஹானா அதிர்ந்து போய் நிற்க “ஒன்னும் ஆகல. பயப்படாதே” என ஆர்யன் அவளை தேற்றினான்.

எரியும் துணியை விட அவனை தொட்டது அவளுக்கு பாதிக்க, தன் உணர்வுகளை கட்டுப்படுத்தவோ மறைக்கவோ அவளுக்கு தெரியவில்லை.

அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என சர்வ நிச்சயமாக ஆர்யனுக்கு தெரிந்துவிட்டது.

——–

சையத் திறந்தவெளி உணவகம்

ஆர்யனும் ருஹானாவும் எதிரெதிரே அமர்ந்திருக்க இவான் இருவருக்கும் இடையே அமர்ந்து இருவரையும் மகிழ்ச்சியாக பார்த்திருந்தான். அவனுக்கு அந்த இயற்கை சூழ்நிலையும் மிகவும் பிடித்திருந்தது.

எல்லாம் நலமாக இருக்கிறது என புரிந்துகொண்ட சையத் சந்தோசமாக உணவு பறிமாறிவிட்டு ஆர்யனின் தோளை தட்டி கொடுத்தார். ‘சரியான முடிவெடுத்திருக்கிறாய்’ என்பது போல அவர் கண் சிமிட்ட, ஆர்யனும் மகிழ்வோடே தலையாட்டினான்.

“சையத் அங்கிள்! நீங்க மீட்பால் நல்லா செய்வீங்கன்னு என் சித்தி சொன்னாங்க. அது எப்படி செய்வீங்கன்னு எனக்கு காட்டுவீங்களா?” என இவான் கேட்க, “வா போகலாம் அர்ஸ்லான் சிங்கக்குட்டி!” என சையத் அவனை அழைத்து சென்றார்.

ருஹானா ஆர்யனின் நேர்பார்வையில் தயங்கினாலும் “நீங்க நேத்து இவானுக்கு சொன்ன கதையை நான் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது” என்றாள்.

“அது வெறும் கதை”

“இல்ல.. வெறும் கதை இல்ல. அதுல உண்மையான அர்த்தங்கள் இருந்தது.  நீங்க….”

“நான்… என்ன?’

“என்னை ரொம்ப ஆச்சரியப்பட வைக்கறீங்க”

“நீ தானே சொன்னே! ஒரு பிரிச்சனையை தீர்க்க ஒரே வழி தான் இருக்கணும்னு இல்ல.”

அதிசயமாக அவனை பார்த்த ருஹானா “அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என முறுவலுடன் கேட்டாள்.

தென்றல் இதமாக வீச மரத்திலிருந்து இலைகள் பறந்து வந்து இருவர் மீதும் விழுந்தன.

அவள் மலர்ந்த முகத்தை கண்டு புளங்காகிதம் அடைந்த ஆர்யன் ‘நீ சொன்னது எதையாவது நான் மறந்திருக்கேனா?’ என மனதில் சொல்லிக்கொண்டான்.

ருஹானாவிடம் “இவானுக்கும் அதை புரிய வைக்க நினைச்சேன், மற்ற வழிகளும் இருக்குன்னு” என்றான் ஆர்யன்.

அதுவரை இயல்பாக அவன் கண்களை பார்த்துக்கொண்டு பேசிய ருஹானாவிற்கு சட்டென்று மிஷால் கேட்டது நினைவில் வர கைகளை பிசைந்தாள். சையத்துடன் கறி உருண்டையை திருப்பி போட்டுக் கொண்டிருந்த இவானை திரும்பி பார்த்தாள். முன்னால் விழுந்த முடியை சரிப்படுத்தினாள். மேசையில் இருந்த முள்கரண்டியையும், கத்தியையும் மாற்றி வைத்தாள்.

‘இத்தனை நேரம் நல்லா தானே இருந்தா! அதுக்குள்ளே என்ன ஆகிடுச்சி?’ என ஆர்யன் அவளை விசித்திரமாக பார்த்தான்.

———

“ஏன் சல்மா இப்படி அழுதுட்டு இருக்கே? நல்லாவும் டிரஸ் செய்யல! இப்படி உன்னை ஆர்யன் பார்த்தா?”

“ஆர்யன் ஏன் என்னை பார்க்கப் போறான்?”

“வீட்ல தானே இருக்கான்! மதியம் உணவுமேசைல ஒன்னா தானே சாப்பிடுவோம்?”

“அவன் எங்க இருக்கான்? சூனியக்காரியை கூட்டிட்டு மூணு பேரும் மீட்பால் சாப்பிட போயிருக்காங்க. இன்னும் உனக்கு தெளிவா சொல்லவா? ஆர்யனோட பார்வை அந்த மாயக்காரி மேல தான் எப்பவும் இருக்கு. கோழை மிஷால் கிட்டே கூட அடிவாங்க தயாரா இருக்கான்”

“இந்த உதவாக்கரை மிஷால் என்ன தான் செய்றான்? நீ அழாதே… நான் மிஷாலுக்கு போன் செய்றேன்”

“ஹல்லோ மிஷால்!”

“ஆர்யனை நான் அடிச்சதை கேள்விப்பட்டீங்களா கரீமா மேம்! ருஹானாவை அவன் கிட்டே இருந்து தள்ளி வைக்க எனக்கு வேற வழி தெரியல.”

“நீயும் உன் வீர சாகசமும்! உனக்கு ஒன்னு சொல்றேன், மனசுல ஆழமா போட்டு வச்சிக்கோ. ஆர்யன் நினைச்சிருந்தா உன்னால ஒரு விரலை கூட அவன் முன்னால தூக்கியிருக்க முடியாது. உன்னை தூக்கி போட்டு மிதிச்சிருப்பான். ஆனா நீ ஒரு கீறல் கூட இல்லாம அர்ஸ்லான் மாளிகையை விட்டு வெளியே போயிருக்கே!”

“ஆனா….”

“யார் கூட மோதுறேன்னு தெரிஞ்சிட்டு செய். உன்னை ஒரு பொருட்டாவே அவன் மதிக்கல. அதான் உன்னை போனா போகுதுன்னு தூசி மாதிரி தட்டி விட்டுட்டான்”

“நீங்க அதிகமா சொல்றீங்க கரீமா மேம்”

“ஒஹ்! அவனை அடிச்சதால உன் காதல்ல இருந்து ஆர்யனை விலக்கிட்டேனு நீ சந்தோசமா இருக்கியா? நான் ஒரு முகவரி அனுப்புறேன். அங்க போய் உன் வெற்றியை பார்த்துக்கோ”

———

“நாம திரும்ப இங்க வரலாமா சித்தப்பா?”

“கண்டிப்பா சிங்கப்பையா”

“நான், சித்தி, நீங்க சேர்ந்து வரலாமா?”

“சேர்ந்தே வரலாம்”

சாப்பிட்டுக் கொண்டிருந்த ருஹானா முகம் மாறி நிமிர்ந்து அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு சித்தி, உங்க இதயத்துடிப்பு அதிகம் ஆகிடுச்சா?

“இல்ல அன்பே! சாப்பிட்டதும் நார்மலாகிடுச்சி”

“சித்தி உங்க மீட்பால் ரொம்ப காரமா இருக்கா?”

“ஆமா கண்ணே”

“நான் கொஞ்சம் சாப்பிட்டு பார்க்கவா?”

ஆர்யன் குறுக்கிட்டு “அது நீ சாப்பிட முடியாத அளவு காரம், சிங்கப்பையா!” என்றான்.

“ஆனா சையத் அங்கிள் சொன்னார், நான் உங்களைப் போல  வலிமையானவன்னு”

“இருக்கலாம் அக்னிசிறகே! நீ என்னைவிடவும் வலிமையாகலாம்.” இவான் முகம் மலர்ந்தது. “ஆனா அதை காரம் சாப்பிட்டு நிருபிக்கணும்னு கிடையாதே” இப்போது ருஹானா புன்னகைத்தாள்.

“ஆனா நான் சாப்பிட்டு காட்டணும் சித்தப்பா. நான் எப்படி சாப்பிடுறேன்னு நீங்க பாருங்க” என சொன்னவன், ருஹானாவிடம் அவனுக்கு தருமாறு கேட்டான். ருஹானா சிறிய துண்டை வெட்டி வைத்து “சரி, சாப்பிட்டு பாரு. ஆனா சின்னதா சாப்பிடு” என்றாள்.

ஆர்யன் லேசான புன்னகையுடன் இவான் சாப்பிடுவதை பார்க்க, ஒரு கடி கடித்த இவானுக்கு முகம் சுருங்கிவிட்டது. “ப்ச்!” என்ற ருஹானா ரொட்டியை எடுத்து கொடுத்தாள். “உன் வாய் வெந்திடும். இந்தா கொஞ்சம் ரொட்டி சாப்பிடு!”

அப்போதும் காரம் குறையாததால் “இந்த ஜூஸ் குடிங்க, மிஸ்டர் சக்திசாலி!” என ஆர்யன் புன்சிரிப்புடன் கொடுக்க, அதை குடித்ததும் தான் அவன் எரிச்சல் அடங்கியது.

தூரத்தில் காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மிஷாலுக்கோ என்ன செய்தும் அடங்கவில்லை. எரிதணலில் நிற்பது போல உணர்ந்தான், அவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து.

அதையே சந்தோசமாக பார்த்த சையத் இன்னும் கறி உருண்டைகளை கொண்டுவந்து ருஹானாவின் தட்டில் பரிமாற “என்ன சையத் பாபா. நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். எனக்கு கொண்டுவந்து வைக்கறீங்க?” என்று ருஹானா மறுத்தாள்.

“அது எப்படி மகளே! இது உனக்காகவே ஸ்பெஷலா தயாரிச்சேன். உனக்கு காரமா சாப்பிடறது பிடிக்கும்னு சொன்னியே! சாப்பிடு! ரொட்டி சேர்க்காம தனியா சாப்பிடு”

“ரொம்ப நல்லா இருக்கு சித்தி. நிறைய சாப்பிடுங்க. அப்போத்தான் உங்க ரத்த அழுத்தம் சரியாகும். அப்படித்தானே சித்தப்பா”

“இவான் சொல்றது சரி!” என ருஹானாவிடம் ஆர்யன் சொல்ல, அவள் சாப்பிட ஆரம்பித்தாள். சையத் “சீக்கிரம்! ஆறும்முன்னே சாப்பிடுங்க” என சொல்லி சென்றார்.

அப்போது அங்கே ஒரு சிறுவன் தன் தாய் தந்தையரின் கைகளை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு குதித்துக்கொண்டே வந்தான். அதை பார்த்த இவான் தன் இருபுறமும் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரையும் மாறி மாறி பார்த்தான். பின் இருவரின் கைகளை தானும் பிடித்துக்கொண்டான்.

இருவரும் அவனை கேள்வியாய் பார்க்க, “நாம ஒரு அழகான குடும்பம், அப்படித்தானே? நீங்க எனக்கு அம்மா, அப்பா போல” என இவான் சொல்ல,  இருவரும் உறைந்தனர். ஆர்யன் ருஹானாவின் முகத்தை ஆர்வமாக பார்க்க, அவள் காரமான உருண்டைகளை வேகமாக வாய்க்குள் தள்ளினாள்.

ருஹானாவிற்கு பழசாறு கொண்டுவந்து வைத்த சையத் “அதிக காரமா, மகளே? ஏன் ஒரு மாதிரி இருக்கே? நீ கேட்டதால தானே காரமா செஞ்சேன்” என்று கேட்க, ருஹானா வாய் திறக்கவில்லை. சற்று தள்ளி நின்று அவளின் ரோஜா வண்ண முகத்தை பார்த்தவர், சிரித்துக்கொண்டே இவான் தோளிலும், ஆர்யன் தோளிலும் தட்டி சென்றார்.

“உன் முகம் சரியா இல்லயே! என்ன செய்யுது?” என ஆர்யன் கேட்க, “சித்தி! உங்க இரத்த அழுத்தம் திரும்பவும் அதிகமாகிடுச்சா?” என இவான் கேட்க, தன் முகத்தை ருஹானா தொட்டு பார்த்துக்கொண்டாள். “நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என எழுந்து சென்றாள்.

ருஹானா மீதான தன் காதலை ஆர்யன் மாதக்கணக்கில் மறைத்து வைத்திருக்கிறான். சையத் மட்டும் கண்டுபிடித்துவிட்டார். ரஷீத்திற்கு யூகம் தான்.

ஆனால் ஒரே நாளில் ருஹானா தன்னையறியாமல் எல்லாருக்கும் காட்டிக் கொடுக்கிறாள். சாரா சந்தேகமாக பார்க்கிறார். சையத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை. இவானும் ஆர்யனும் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிஷால்  தான் அவளுக்கே காட்டித் தந்தான்.

——–

மிஷால் சோகமாக உணவகத்தில் நுழைய, சதாம் அவன் அருகே ஓடிவந்து “அண்ணா! இவங்க ரொம்ப நேரமா உங்களுக்காக காத்திருக்காங்க” என்றான்.

பாதுகாவலர்கள் பக்கத்தில் நிற்க, நாற்காலியில் உட்கார்ந்திருந்த புதிய மனிதனை நெருங்கிய மிஷால் “யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” என கேட்டான்.

“நீ தான் அந்த அயோக்கியனை அடிச்ச பலசாலியா? பார்க்கவும் வீரனா தான் தெரியுறே”

“நீங்க யார்? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?”

“என் பேர் காதர். நாம ரெண்டு பேருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு”

“என்ன அது?”

“நாம வெறுக்குற பொதுவான எதிரி… ஆர்யன் அர்ஸ்லான்!”

———

மூச்சிரைக்க முகத்தை கழுவிக்கொண்ட ருஹானா, கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, அதில் மிஷால் வந்து “நீ அவனை காதலிக்கிறியா?” என கேட்டான். அவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

“நீ ஓகே தானே?” ஆர்யன் குரல் கேட்க, அவள் கைகளை விலக்கி பார்க்க, முன்னே இருந்த கண்ணாடியில் அவனே தெரிந்தான். அவன் கண்களிலும் கவலை தெரிந்தது

பின்னே திரும்பிய ருஹானா அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள்!

(தொடரும்)

Advertisement