Advertisement

“என்ன சிங்கப்பையா? நீ இன்னும் படுக்கலயா?”

“சித்தப்பா! ஒருவேளை இன்னைக்கு நீங்க எனக்கு கதை சொல்வீங்கனு சித்தி சொன்னாங்க. அதான் காத்திருக்கேன்”

“கண்டிப்பா சொல்றேன், அக்னி சிறகே!” என சொன்ன ஆர்யன், இவானை தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் விட்டான். இவானை திடமான ஆண்மகனாய் வளர்க்கும் இலட்சியம் கொண்டிருந்த ஆர்யன் முன்பெல்லாம் அவனை சிறு குழந்தையாய் நடத்தியதே இல்லை.

உயிராய் இருப்பான். ஆனால் வெளிப்படுத்த மாட்டான். கை பிடிப்பது, கட்டி அணைப்பது, தூக்கி விளையாடுவது… இப்படி ஏதும் இருக்காது. வலிமையாய் அண்ணன் மகன் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அன்பை, கனிவை காட்ட மாட்டான். இப்போது அவனுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் இவானை தூக்குவதை அவனே அறியாமல் இயல்பாக செய்ய வைத்திருந்தது.

“சித்தப்பா உங்க உதட்டுல என்ன ஆச்சு? அசுரனை கெட்டவங்க அடிச்சிட்டாங்களே, அது மாதிரியே உங்களுக்கும் நடந்திடுச்சா?”

“சின்ன காயங்களால எல்லாம் அசுரனுக்கு ஒன்னும் ஆகாது, சிங்கப்பையா”

“ஏன்னா அசுரன் மலையை போல வலிமையானவன். அதானே சித்தப்பா? அவன் கையாலயே எதிரிகளை தூர விரட்டிடுவானே!”

ருஹானா இதை கேட்டுக்கொண்டே இவான் அறைக்கு சமீபம் வந்தாள்.

“ஆனா நான் இப்போ உனக்கு சொல்லப் போற கதையில அவன் சண்டையால ஜெயிக்க போறது இல்ல”

“ஏன் சித்தப்பா?”

“ஏன்னா சிலசமயம் நம்ம அன்புக்குரியவங்களை காப்பாத்த இதயத்தை பயன்படுத்தலாம். அதை தான் அசுரன் செய்தான்”

வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த ருஹானாவின் மனம் நெகிழ்ந்தது. முகம் மலர்ந்தது.

“இதயத்தாலா? அது எப்படி?”

“அவங்கள புரிஞ்சிகிட்டு, அவங்க சொல்றதை காது கொடுத்து கேட்கணும், நம்ம இதயம் சொல்றபடி நடக்கணும்”

“எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சித்தப்பா! நீங்க அந்த கதையை சொல்லுங்க”

“சரி, கேளு. அந்த அடர்ந்த காட்டுல வாழ்ந்த அசுரன் தினப்படி வழக்கம்போல சின்ன பையனை தேடி போனான். அசுரன் பையன் மேல அதிகமா பாசம் வச்சிருந்தான். தினமும் அவனை பார்த்தா தான் அசுரனுக்கு சந்தோசம்…….”

ஆர்யனின் கதையை கேட்டுக்கொண்டே ருஹானா தனது அறைக்கு திரும்பி விட்டாள். படுக்க தோன்றாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தவண்ணம் சிறிது நேரம் நின்றாள். இருட்டில் தெரியும் அகாபா நகரம் அவளை அமைதிப்படுத்தவில்லை.

மாறி வரும் ஆர்யனின் முயற்சியை அறிந்து அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் அந்த மகிழ்ச்சியை அவளால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம் மிஷால் போட்ட கல் அவள் குளத்தில் அலைகளை எழுப்பிக்கொண்டே இருந்தது.

கதை சொல்லி இவானை தூங்க வைத்து வெளியே வந்த ஆர்யன், ருஹானா அறையின் மூடிய கதவை பார்த்து நின்றான். தன்  உதட்டு காயத்தை தொட்டு பார்த்துக் கொண்டான். ‘தூங்கிவிட்டாளோ? இரவில் மருந்து போடணும்னு சொன்னாளே!’ என ஏக்கமாக நினைத்துக்கொண்டவன் ‘அவள் ஏதோ சரியில்லை. காலையில் கேட்கவேண்டும்’ என சொல்லிக்கொண்டான்.

ருஹானா எங்கே தூங்கினாள்? ஜன்னலில் வெளியே பார்த்து நின்றிருந்தவள் நெடுநேரத்திற்கு பின் வந்து படுத்துக்கொண்டாள். ஆர்யன் ‘என் முகத்தை பார்’ என சொல்ல, சடாரென எழுந்து அமர்ந்து கொண்டாள். தன் நாடியை பிடித்து பார்த்தாள். அது மடமடவென ஓடியது.

பின்னர் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயற்சித்தாள். புரண்டு புரண்டு படுத்தாள். பின் எப்போது தூங்கினாளோ தெரியாது. இடையில் தாகம் ஏற்பட விழித்து கொண்டாள். நீர்க்குவளையை எடுக்க அது காலியாக இருந்தது. குவளையை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்க சென்றாள்.

“உனக்கும் தூக்கம் வரலயா?” என கேட்டபடி பக்கவாட்டில் இருந்து வந்த ஆர்யனை பார்த்து திகைத்து விழித்தாள். “நான்… எனக்கு… தாகமா இருந்தது. தண்ணீர் எடுக்க போறேன்” என்று சொல்ல, அதற்குள் அவளை நெருங்கி இருந்த ஆர்யன் “உன் கை ஏன் நடுங்குது? உனக்கு உடம்பு சரியில்லயா?” என மென்மையாக கேட்டான்.

“இல்லயே! நான் நல்லாத்தான் இருக்கேன்” என தடுமாறி சொன்னவள் அவன் நம்பாமல் பார்க்கவும் “நிஜமாவே தான்!” என்றாள். இன்னும் ஒரு எட்டு வைத்து அவளை நெருங்கி வந்தவன் “என்கிட்டே பொய் சொல்லாதே!” என்றான். அவள் மிரண்டு விழிக்க “நீ ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும்!” என்றான் குறும்பு சிரிப்புடன்.

“என்ன… என்ன சொல்றீங்க நீங்க?” அவளின் வார்த்தைகள் திக்க,  அவனோ “உன் முகமெல்லாம் வேர்த்து போய் இருக்கு. உடம்பு நடுங்குது. கண்கள் கனவுல மிதக்குது. கன்னம் ரெண்டும் சிவந்திருக்கு” என அவற்றையெல்லாம் பார்த்து சொன்னவன் “இதெல்லாம் உன்னை காட்டி கொடுத்துடுச்சி” என்றான்.

“நீங்க எதைப்பற்றி பேசுறீங்கன்னு எனக்கு புரியல” என கடகடவென சொன்னவள் திரும்பி நடக்க பார்த்தாள். அவள் முழங்கையை பற்றியவன் “இன்னும் தெளிவா சொல்றேன். நீ….. என் மேலே காதலில் விழுந்திட்டே!” என்றான்.

படக்கென பயந்துபோய் விழித்துக்கொண்ட ருஹானா தான் இன்னும் படுக்கையில் இருப்பது கண்டு சுற்றிலும் பார்த்தாள். தண்ணீர் குவளையை கையில் எடுத்து பார்த்தாள். அது காலியாக தான் இருந்தது. ஆனால் நீர் கொண்டுவர வெளியே செல்ல அவளுக்கு துணிவில்லை.

“ரொம்ப யோசிக்காதே! இது ஒரு முட்டாள்தனமான கனவு!” என சத்தமாக சொல்லிக்கொண்டாள்.

சையத் பாபா வீட்டில் அவளை அணைத்ததிலிருந்து ஆர்யன் அவஸ்தைப்பட்ட அத்தனை மனப்போராட்டங்களையும் ருஹானா இப்போது அனுபவிக்கிறாள். கடற்கரை காபி கடையில் ஒரே மடக்கில் சூடான காபியை குடித்தானே! அதே படபடப்பு தான்  இவளுக்கும்!

——–

சமையலறையில் இருந்த மேசையில் சிறிய மடிகணினியை வைத்து அதை பார்த்துக்கொண்டே ஆர்யன் காபி குடித்துக்கொண்டிருந்தான். “இப்போ இவான் செல்லம் பெரிய ஆம்லேட்டும், ஜாம் மில்க்கும் சாப்பிடுவாராம்!” என்று ருஹானா உற்சாகமாக பேசிக்கொண்டே வருவது அவன் காதில் விழுந்தது.

தூரத்தில் அவள் குரல் கேட்டவுடன் அவன் மனமோ பட்டாம்பூச்சியாக படபடத்தது. உள்ளே நுழைந்த ருஹானாவோ பேயை கண்டது போல பயந்து நின்றாள்.

அவள் கைப்பிடியில் இருந்த இவான் “ஹேய் சித்தப்பா! குட்மார்னிங்!” என்று அவள் கையை விட்டு ஓடினான். ருஹானாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு இவானுக்கு ஆர்யனும் காலை வணக்கம் சொன்னான். ஆர்யனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்ட இவான் “சித்தப்பா! நீங்க சாப்பிட்டீங்களா? நாம சேர்ந்து சாப்பிடலாமா? சித்தி நமக்கு ஆம்லேட் போட்டு தருவாங்க” என ஆர்வமாக கேட்டான்.

சங்கடத்தில் மாட்டிக்கொண்ட ருஹானா ஒன்றும் சொல்லமுடியாமல் விழிக்க, “சரி தான் சிங்கப்பையா” என ஆர்யன் ஒப்புதல் தந்தான், அவளை பார்த்தபடியே.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என எண்ணிய ருஹானா “நான் இதோ செய்றேன்” என்று சொல்லி முட்டையை எடுக்க போனாள்.

நேற்றிலிருந்து அவள் சரியில்லை என உணர்ந்துக்கொண்ட ஆர்யனின் பார்வை அவளையே தொடர, இன்னுமே அலை பாய்ந்தவள் எடுத்த முட்டையை கீழே தவற விட்டாள். “யா அல்லாஹ்!” என அவள் வருத்தப்பட, “நான் உதவி செய்றேன்!” என ஆர்யன் எழ, “இல்ல.. இல்ல… நானே பார்த்துக்கறேன்” என படபடவென சத்தமாக சொன்னாள்.

எழுந்தவன் அப்படியே நின்றுவிட்டான். அவனை அப்படி அவள் மறுத்தது அவனுக்கு ஆச்சர்யம் தர, நாற்காலியில் அமர்ந்தான். ஓரக்கண்ணால் அவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டே ஒரு துணியை கொண்டுவந்து முட்டை விழுந்த இடத்தை சுத்தம் செய்தாள். பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஆர்யனும் அவளது பதட்டம் நிறைந்த செய்கைகளை கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.

“சித்தப்பா! என்ன இது? சாரா ஆன்ட்டி அடிக்கடி இதை கையில மாட்டி பார்ப்பாங்க”

“இது இரத்த அழுத்த மானி, பிபி மானிட்டர் சிங்கப்பையா”

“இரத்த அழுத்தம்னா என்ன சித்தப்பா?”

“நம்மோட இதயத்திலிருந்து உடம்போட எல்லா இடத்துக்கும் ரத்தம் போகுது. அதோட வேகத்தையும் சக்தியையும் அளக்க தான் இந்த கருவி”

“என்னோட இரத்த அழுத்தத்தை பார்க்கலாமா, சித்தப்பா?”

கீழ் கண்ணால் ஆர்யனை அவ்வப்போது ஒரு பார்வை பார்த்துக்கொண்டு இருவரும் பேசுவது காதில் விழுந்தாலும், கருத்தில் ஏறாமல் ருஹானா ஆம்லேட் தயாரித்துக்கொண்டிருக்க, ஆர்யனும் இவானுக்கு பதில் சொல்லிக்கொண்டே ருஹானாவை கண்காணித்தான்.

“இதை இப்படி தள்ளி விட்டுட்டு…” என்று இவானின் சட்டைக்கையை மேலே ஏற்றிவிட்ட ஆர்யன் “இதை இப்படி மாட்டணும்” என்று கருவியை இவானின் முழங்கைக்கு மேலே பொருத்தினான்.

“சித்தப்பா! இந்த ஸ்விட்சை அழுத்தவா?” என இவான் கேட்க, ஆர்யன் தலையாட்டினான். “இது என் கையை கிச்சுகிச்சு மூட்டுது, சித்தப்பா” என இவான் சிரிக்க, ஆர்யன் முகத்திலும் புன்னகை.

“உன்னோட இரத்த அழுத்தம் சரியா இருக்கு, அக்னிசிறகே!” என ஆர்யன் சொல்ல, இவான் “இது என்ன நம்பர்?” என கேட்டான். “அது உன்னோட இதயத்துடிப்பு…. பல்ஸ் ரேட்” என ஆர்யன் சொன்னதும் தெரிந்தவன் போல இவான் தலையாட்டிக்கொண்டான்.

பின்னால் திரும்பி “சித்தி! வாங்க! உங்களோடதும் பார்க்கலாம்” என ருஹானாவின் முகத்தில் பீதியை வரவழைத்தான்.

“நான் வேலை செய்துட்டு இருக்கேனே!” என ருஹானா மறுக்க, பெருவிரலையும், சுட்டுவிரலையும் சிறியது என்பது போல அழகாக காட்டிய இவான் “இவ்வளவு நேரம் தான் சித்தி ஆகும், வாங்க” என கூப்பிட, அவளும் கையை கழுவிவிட்டு வந்தாள்.

ஆர்யன் மேல் ஒரு முறை மற்றபடி அங்குமிங்கும் ருஹானாவின் கண்கள் ஓட, தயக்கமாக அவள் தன் கையில் கருவியை மாட்ட, அது அவள் ஸ்வெட்டரில் சிக்கிக்கொண்டது. “அங்க பார், மாட்டிடுச்சி” என எழுந்து வந்த ஆர்யன் இயல்பாக அதை சரி செய்தான். அவள் சட்டையின் கையை மேலே நகர்த்தி இவானுக்கு செய்தது போல மாட்டிவிட்டான்.

அவனின் அருகாமையில் அவள் இதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது. தொண்டை உலர்வது போல இருந்தது. உதடுகளை மடித்துக்கொண்டாள். கால்கள் நிற்க முடியாமல் நடுங்கியது.

கருவியை அழுத்த இவான் ஆர்வமாக இருக்க, அவன் இயக்கியதும் ஆர்யன் “என்ன இது உன் இதயத்துடிப்பு இவ்வளவு அதிகமா இருக்கு?” என கேட்டான். அவள் “எனக்கு ஒன்னுமில்லை” என அதே பதிலை சொன்னாள்.

அவன் அவளை பார்த்து பேசும்போது அவளுக்கு எங்கு பார்த்து பேசுவது என தெரியவில்லை. கண்களை அலையவிட்டுக் கொண்டே இருக்கிறாள்.

“ஏன் சித்தி?” இவான் கேட்க, “சில சமயம் இப்படி ஆகும். அது நார்மல் தான் செல்லம்” என அவள் சொல்ல, அவளை முறைத்த ஆர்யன் “நேத்து நைட் கூட உன் உடல்நிலை ஒழுங்கா இல்ல” என கோபமாக சொல்ல, “அது பசியால இருக்கலாம். சாப்பிட்டா சரியாகிடும்” என்று சொல்லி அடுப்படிக்கு சென்றுவிட்டாள்.

அவள் மீது வைத்த பார்வையை அவன் மாற்றாமல் இருக்க, அவன் கண்களை தவிர்த்தபடி அவள் தண்ணீரை எடுத்து குடித்தாள். அவளது கைபேசி சத்தம் எழுப்ப, அதில் மிஷால் அனுப்பிய குறுஞ்செய்தி வந்தது.

‘நான் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிடு, ருஹானா. நாம நேர்ல சந்திச்சி பேசினா எனக்கு ஆறுதலா இருக்கும்’

‘பரவால்ல, மிஷால். நாம கொஞ்ச நாள் நேரா பார்த்துக்க வேண்டாம், ஒன்னா வேலை செய்யாம இருந்தா நல்லது’

அவனுக்கு பதில் அனுப்பும்போது, இவான் தண்ணீர் கேட்க, அவள் நகர முயலும்போது “நான் எடுத்து கொடுக்கறேன்” என ஆர்யன் எழுந்து வந்தான். டம்ளரை எடுக்க அவள் பின்னால் இருந்த அலமாரியை ஆர்யன் திறக்க, அவன் கை ருஹானாவின் தோளை தொட்டது.

மின் அதிர்ச்சி ஏற்பட்டதுபோல ருஹானா செய்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு அசையாமல் நிற்க, அவள் பின்னால் நின்ற ஆர்யன் அவளை அதிசயமாக பார்த்தான்.

அவளுக்குள் தோன்றிய காற்றுக்குமிழ் பெரிதாகி கொண்டே செல்ல எந்நேரமும் வெடித்து விடும் அபாயமும் இருக்கிறது.

அப்போது உள்ளே வந்த சாரா, எஜமானரின் கையில் டம்ளரை பார்த்துவிட்டு “நான் தண்ணீ எடுத்து தரேன் சார்!’ என்று சொல்ல, “பரவால்ல சாரா! நான் எடுத்துக்கறேன்” என ஆர்யன் சொல்லி நீர் கொண்டுவந்து இவானுக்கு கொடுத்தான்.

ஆர்யனோடு தனிமையில் இருந்து காப்பாற்றியதற்காக ருஹானா சாராவை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனால் சாரா அடுத்து கேட்ட கேள்வியோ அவளை பகிரங்கப்படுத்த அவள் விக்கித்து நின்றாள். “என்ன ருஹானா? உன் முகமே வெளிறி போய் இருக்கு? ஏதாவது பயந்திட்டியா? உடம்பு சரியில்லயா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சாரா அக்கா. கிச்சன் சூடா இருக்கு” என்று சொல்லி குழாய் அருகே சென்று முகத்தை கழுவினாள்.

சாரா இவானிடம் வந்தவர் “லிட்டில் சார்! மதியம் உங்களுக்கு சாப்பிட என்ன சமைக்கட்டும்?” என கேட்டார். இன்னமும் சித்தப்பாவுடன் நேரம் செலவழிக்க ஆசை கொண்ட இவான் “சித்தப்பா! நாம மீட்பால் சாப்பிட  போகலாமா? சித்திக்கும் அது ரொம்ப பிடிக்கும். என்ன சித்தி?” என்று கேட்டுவிட, அவனை நிறுத்த முடியாமல் ருஹானா தவித்தாள்.

“நாங்க வெளிய சாப்பிட்டுக்கறோம், சாரா” என்ற ஆர்யன், “சரி சிங்கப்பையா! உன் விருப்பம் தான் முக்கியம்’ என்று சொல்லி,  ருஹானா முகம் பார்க்க அதில் பிடித்தமின்மையை கண்டு இவன் முகமும் சுருங்கியது.

Advertisement