Advertisement

ருஹானா உடை மாற்றி இவான் அறைக்கு வர, ஜாஃபர் பழசாறு கொண்டு வர “இது இவானுக்கா? நான் எடுத்துட்டு போறேன்” என வாங்கிக்கொண்டவள் “ஜாஃபர் அண்ணா! நன்றி எல்லாத்துக்கும்” என சொல்ல, ஜாஃபர் குழப்பமாக பார்த்தான்.

“இந்த குடும்பத்துக்கு நீங்க ஒரு உண்மையான தோழன்” என்று அவள் சொல்ல, புன்னகை செய்த ஜாஃபர் “நீங்க இந்த குடும்பத்துக்கு செஞ்சதுக்கு விலைமதிப்பே கிடையாது ருஹானா மேம்” என்று சொல்லி செல்ல, ருஹானா இவானுடைய அறைக்குள் நுழைந்தாள்.

இவான் ஓடிவந்து “சித்தி! என கட்டிக்கொள்ள, அதுவரை அவனோடு சேர்ந்து கப்பல் விட்டுக் கொண்டிருந்த சாரா, ருஹானாவை பார்த்து புன்னகைத்தபடி அவர் வேலையை பார்க்க சென்றார். 

“சித்தி! நீங்க வந்திட்டீங்க! நான் பயந்திட்டே இருந்தேன்”

“ஏன் செல்லம்?”

“முதல்ல சித்தப்பா வெளிய போனார். அப்புறம் நீங்க போனீங்க”

அவன் நெற்றியில் முத்தமிட்டவள் “நான் உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன் ஆருயிரே!” என்றாள்.

“இப்பவும் நான் உனக்காகத் தான் போனேன். இனிமேல் நீ எப்பவும் கவலைப்படக்கூடாதுன்னு தான் போனேன். நீ பெரியவனானதும் புரிஞ்சிக்குவே அன்பே!”

“சித்தப்பாவும் வந்திட்டாரா?”

“ஆமா செல்லம்”

“அவர் இன்னும் கோபமா தான் இருக்காரா?”

“சீக்கிரம் சரியாகிடுவார் தேனே!”

“நீங்க ரெண்டு பேரும் வெளிய போனா எனக்கு பயமா இருக்கு சித்தி. இனிமேல் வெளியே போனா ரெண்டு மணி நேரம் தான் உங்க டைம். அதுக்குள்ள திரும்பிடணும்” என அழகாக இரண்டு விரல்களை காட்டி சிரித்தான்.

“சரி, நாங்க இனி வெளிய போனா யார் வெளிய போறோமோ அவங்க படத்தை நீ வரை. அப்போ எங்களை நீ மிஸ் செய்ய மாட்டே”

“இல்ல சித்தி! நான் உங்களை தனித்தனியா வரைய மாட்டேன். நீங்க, சித்தப்பா, நான் மூணு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி தான் வரைவேன். உங்களை இளவரசி போல வரைவேன். சித்தப்பாவை அசுரன் போல வரைவேன்”

சந்தோசமாக சிரித்த ருஹானா “உன்னை எப்படி வரைவே கண்ணே!” என கேட்டாள்.

“நான் குட்டி அசூரன். சித்தப்பா போலவே… ஆனா சின்னதா”

“சுருள்முடி அசுரனுக்கு நிலா போல முகம், அழகான சிரிப்பு. அதை விட அழகான மனசு” என இவானை தலையை தடவியவள் “ஐ லவ் யு!” என அவனை கட்டிக்கொண்டாள். இவானும் சிரித்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

——-  

காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த மிஷால் அதில் கவனம் செலுத்தாமல் துப்பாக்கி சண்டையையும், ருஹானா ஆர்யன் நெருக்கத்தையும், மீன் காட்சியகத்தில் ருஹானா ஆர்யனை பற்றி நன்றியோடு பேசியதை பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான்.

ருஹானா தனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற பயம் அவனுக்கு அதிகரிக்க, கத்தியை பலகையில் குத்தியவன் “எனக்கு நீ பதில் சொல்லியே ஆகணும், அர்ஸ்லான்!” என கத்தினான்.

——-  

காரில் கொண்டுவந்த பையை போட்டு கிளம்பிய ஆர்யன், உடன் வர முயன்ற பாதுகாவலர்களை கையை உயர்த்தி தடுத்துவிட்டு காரை எடுத்து சென்றுவிட்டான்.

அவன் இறங்கிய வேகத்தையும், காரை எடுத்து சென்ற தோரணையையும் பார்த்த நஸ்ரியா, எப்போதும் போல அவளது எஜமானரை புகழ்ந்து தள்ளினாள்.

சமையலறையில் காபி குடித்துக்கொண்டிருந்த ஜாஃபரிடம் “ஆர்யன் சாரை பார்த்தாலே அவரோட எதிரிகள் பயந்து நடுங்குறாங்கல? அவரோட நடை என்ன! அவரோட பார்வை என்ன! கிலியாகி பறந்துடுறாங்க!” என பேச்சுக்கு இழுக்க, ஜாஃபர் எதுவும் பதில் சொல்லவில்லை.

“அது என்ன படம் ஜாஃபர் சார்? ஆஹான்! காட்ஃபாதர்!! அதுல வர்ற டான் கார்ல்யோனி தான் நம்ம ஆர்யன் சார்… என்ன மிடுக்கு! என்ன ஸ்டைல்!”

“நானும் அந்த படத்தை பார்த்திருக்கேன், நஸ்ரியா! நல்ல படம்” என ஜாஃபர் சொல்லி வெளியே செல்ல, உள்ளே வந்த சாரா “என்ன படத்தை பத்தி சொல்லிட்டு போறார்?” என கேட்டார். 

நஸ்ரியா “அது ஒன்னும் இல்ல, பெரியம்மா. ஆர்யன் சார் செக்யூரிட்டி இல்லாம தனியா காரை எடுத்துட்டு போனாரா, அவர் எங்க போறாருன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு ஜாஃபர் சார் கிட்டே கேட்டு பார்த்தேன். அவர் தான் டான் கார்ல்யோனியோட விசுவாசமான ஆளாச்சே! ஒரு தகவலும் பெயரல” என தோளை குலுக்கினாள்.

“உனக்கு என்ன தேவை இருக்கு அது தெரிஞ்சிக்க? போய் உருளைக்கிழங்கை உரிச்சி வை. முளைச்சிடப் போகுது” என சாரா விரட்ட, நஸ்ரியா கோணல் வாயை காட்டிவிட்டு போனாள்.

——-

“அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா வாழ்ந்தாங்களாம்” என இவானுக்கு கதை சொல்லி முடித்த ருஹானா “கதை எப்படி இருந்தது, செல்லம்? உனக்கு பிடிச்சதா?” என கேட்டாள்.

அவன் பாணியில் அழகாக தலையாட்டிய இவான் “ரொம்ப பிடிச்சது, சித்தி. ஆனா எனக்கு சித்தப்பா சொல்ற கதை தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சித்தப்பா புது கதை கூட சொல்வார்ன்னு சொன்னீங்களே, சித்தி? இன்னைக்கு நைட் சொல்வாரா?” என்றான் ஆவலோடு.

வருத்தமாக தோளை குலுக்கிய ருஹானா “அன்பே! இன்னைக்கு நான் ஒரு பாடம் கத்துக்கிட்டேன். மத்தவங்களுக்காக நாம வாக்கு கொடுக்கக் கூடாது. உன் சித்தப்பாக்காக உன்கிட்டே வாக்கு கொடுத்து  நான் தப்பு செய்திட்டேன். என்னை நீ மன்னிப்பியா?” என கேட்க, அவனும் பெரிய மனிதன் போல சரியென தலையாட்டினான்.

“உன் சித்தப்பா உனக்கு கதை சொல்லனும்னு நானும் ஆசைப்படறேன், மானே”

“இன்ஷா அல்லாஹ்! சீக்கிரமே சொல்வார் சித்தி”

“இன்ஷா அல்லாஹ்!”

——

ஆள் அரவமில்லா மலைகுன்றின் மீது காரை நிறுத்திய ஆர்யன், பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து காரின் முன்பகுதியில் துப்பாக்கிகளை பரப்பி வைத்துவிட்டு அதை பார்த்தபடியே நின்றான். சையத்திடம் ‘என்னோடு சேர்ந்து அவளும் எரிந்துவிடுவாள்’ என அவன் பேசியதும் அதற்கு ‘அன்பு பாதையை விட்டு உன்னால் விலகி வர முடியாது’ என அவர் சொன்ன அனைத்தும் நினைவு கூர்ந்தான். 

——

வாசல்கதவை திறந்த ஜாஃபர் அங்கே மிஷாலை பார்த்ததும் “ருஹானா மேமை வர சொல்றேன்” என சொல்ல, மிஷால் “இல்ல, நான் பார்க்க வந்தது ஆர்யன் அர்ஸ்லான்” என சொன்னதும், அவன் சொன்ன விதமும் ஜாஃபருக்கு வித்தியாசமாகப் பட்டது. என்றாலும் எதுவும் சொல்லாமல் “சார் வெளியே போயிருக்கார். நீங்க உள்ளே வந்து உட்காருங்க. நான் குடிக்க உங்களுக்கு பானம் கொண்டு வரேன்” என்றான்.

அதை மறுத்த மிஷால் “நான் இங்கயே இருக்கேன். நான் வந்ததை மாளிகைல யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றான். அவனை ஜாஃபர் ஆச்சர்யமாக பார்த்தாலும், சரியென தலையாட்டி வாசல் கதவை மூடி உள்ளே சென்றான்.  

சில நிமிடங்கள் மிஷால் காரோடும் பாதையில் நிற்க, அவனை அதிக நேரம் காத்திருக்க விடாமல் ஆர்யன் கார் உள்ளே நுழைந்தது.

மிஷாலின் கோப முகத்தை பார்த்துக்கொண்டே ஆர்யன் கீழே இறங்க, ஏற்கனவே மிஷாலின் அமைதியின்மையை பார்த்துக்கொண்டிருந்த சுற்றிலும் இருந்த பாதுகாவலரும் இருவரையும் சற்றே நெருங்கினர்.  

மிஷால் ஆர்யனின் பக்கத்தில் வந்து “இதான் உன்னோட எல்லை அர்ஸ்லான்! உன்னோட முடிவை நீ நெருங்கிட்டே” என பல்லை கடித்துக்கொண்டு சத்தமாக சொல்ல, பாதுகாவலர் நாற்புறமும் விரைந்து நெருங்கினர். கையை உயர்த்தி ஆர்யன் அவர்களை தடுக்க, அவர்கள் அதே இடத்தில் நின்றனர்.    

“என்கிட்டே இருந்து ருஹானாவை உன்னால பறிக்க முடியாது. உனக்கு அவளை நான் விட்டு தர மாட்டேன். புரியுதா உனக்கு? நான் தரவே மாட்டேன். அவ கிடைக்க உனக்கு தகுதியே கிடையாது.” மிஷால் பேசப்பேச ஆர்யன் தீவிரமாக பார்த்து நின்றானே தவிர அசையவே இல்லை.

அவன் எதும் பேசுவான் என எதிர்பார்த்திருந்த மிஷால் “ஏன் வாயை மூடிட்டு இருக்கே பேசு! சொல்லு, ஏதாவது!” என கத்தினான். ஆர்யனிடம் அதே நிலை தான். இமையை கூட தட்டி முழிக்கவில்லை அவன்.

“உன்கிட்டே ருஹானாவை கொடுக்க மாட்டேன். அவ வாழ்கையை பாழாக்க விட மாட்டேன்” ஆர்யனிடம் மாற்றம் இல்லாமல் இருக்க மிஷாலின் கொதிப்பு கூடிக்கொண்டே சென்றது. அவன் சத்தமும் அதிகரித்தது.

இவானுக்கு தலைவாரிக் கொண்டிருந்த ருஹானாவிற்கும், இவானுக்கும் அந்த சத்தம் கேட்டது. “என்ன சித்தி சத்தம்?”

அவள் ஜன்னல் வழியே கீழே பார்க்க, பாதுகாவலர் சூழ அருகருகே நின்றிருந்த ஆர்யனையும், மிஷாலையும் பார்த்தாள். “ஒன்னும் இல்ல, கண்ணே! நான் இப்போ வந்துடுறேன்” என வெளியே போனாள்.

“பதில் சொல்லு! இனி ருஹானாவை நெருங்கக் கூடாது. அவ கண்ணை உன் கண் சந்திக்கக் கூடாது. உன்னோட அழுக்கான உலகத்துல அவளை இழுக்காதே. புரிஞ்சிகிட்டியா? நான் இதை அனுமதிக்க மாட்டேன்” ஆங்காரமாக மிஷால் பேச, முகத்தில் உணர்ச்சியை காட்டாத ஆர்யன் இரு கைகளையும் அழுத்தமாக மூடிக்கொண்டான். 

ரஷீத் காதரின் மறைவிடம் பற்றி அனுப்பிய குறுஞ்செய்திக்கு தான் அனுப்பிய ‘நான் வரல!’ எனும் பதிலை ஆர்யன் நினைத்து பார்த்துக்கொண்டான். 

“நான் ருஹானாவை விட்டு விலக மாட்டேன். ஏன்னா நான் அவளை காதலிக்கிறேன். நான் சொல்றது புரியுதா உனக்கு?” என பெருங்குரலில் கத்திய மிஷால் தனது முஷ்டியால் ஆர்யன் முகத்தில் வலிமையாக குத்தினான்.

‘உங்க முஷ்டிகளையும், குண்டுகளையும் கீழே போடாதவரை நீங்க சந்தோசமா இருக்க முடியாது. அந்த நாள் வரும்வரை நான் போராடுவேன்’ என ருஹானா ஆர்யன் மனதில் சொல்ல, ஆர்யன் அமைதியாக அடியை வாங்கிக் கொண்டான். பாதுகாவலர் துப்பாக்கியை எடுக்க முனைய அதையும் தடுத்தான்.

பாதுகாவலர் அத்தனை பேரும் அதிர்ந்து போய் நிற்க, அவர்களை விட மிஷால் ஆர்யனின் இந்த செயலில் திகைத்துவிட்டான். முணுக்கென்று கோபம் வரும் ஆர்யனுக்கு தான் இத்தனை பேசியும், அடித்தும் கையை ஓங்காமல் இருப்பதை பார்த்து மிஷாலுக்கு அதிர்ச்சி தான். 

“நான் அவளை காதலிக்கிறேன்! அடி என்னை! துப்பாக்கி எடுத்து சுடு! உன் காவல்நாய்களை என்னை சுட சொல்லு” என சொல்லி சொல்லி மிஷால் திரும்ப திரும்ப ஆர்யனின் முகத்திலேயே அடித்தான். ஆர்யனின் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது.

கொண்டு போன ஆயதங்களை மண்ணில் புதைத்துவிட்டு திரும்பிய தனக்கு, வன்முறையை விடுத்து அறவழியில் மாற தான் எடுக்கும் முயற்சிக்கு உடனேயே மிஷால் ரூபத்தில் இடையூறு வந்தாலும், ஆர்யன் எடுத்த முடிவில் மாறாமல் அடி வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் நின்றான்.

வாசல் கதவை திறந்து கொண்டு ஓடிவந்த ருஹானா மிஷால் அடிப்பதையும், ஆர்யன் அடிவாங்குவதையும் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள். அவள் பார்க்கும்போதே மிஷால் “ஏன் அமைதியா இருக்கே? பேசு! எதுக்கு காத்திருக்கே?” என ஓங்கி அடித்தான். 

“மிஷால்!!!!!!” ருஹானாவின் கத்தலில் இருவரும் திரும்பி அவளை பார்த்தனர்.

ஆர்யனின் இரத்த காயத்தை பார்த்து ருஹானா அதிர ‘நாம் இருவரும் பேசிக்கொள்ளாமலே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நாள் நிச்சயம் வரும்’ என ருஹானா சொன்னது இருவருக்கும் மனதில் ஓடியது.

கண்கள் கலங்கிய ருஹானா ஆர்யன் மாறிவிட்டதை புரிந்து கொண்டாள். அவள் அறிந்து கொண்டதை ஆர்யனும் புரிந்து கொண்டான்.

ருஹானாவின் கை மெல்ல உயர, அவள் மேல் பார்வையை பதித்திருந்த ஆர்யனின் கையும் அவளைப் போலவே உயர்ந்தது. அவள் உதட்டருகே தொட, ஆர்யனும் அவன் உதட்டருகே தொட்டு பார்த்தான். அப்போது தான் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிவதை அவன் உணர்ந்தான். அவன் இரத்தத்தை தொட்டு பார்க்க, தனக்கே காயம் ஏற்பட்டதை போல அவளின் முகம் வலியை காட்டியது. 

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த மிஷால் திகைத்து விழித்தான். உள்ளுக்குள்ளே கலவரமாக உணர்ந்தான்.

இத்தனை பேர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே எனும் உணர்வே இன்றி இருவரும் பார்த்துக்கொண்டே நின்றனர். ருஹானா கை மெதுவாக கீழே இறங்க, ஆர்யனும் கையை கீழே இறக்கினான்.

(தொடரும்)

Advertisement