Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 85

‘அல்லாஹ்க்கு நன்றி! இவள் பாதுகாப்பாக இருக்கிறாள்!’ என ஆர்யனும், ‘அல்லாஹ்க்கு நன்றி! இவர் உயிரோடு இருக்கிறார்!’ என ருஹானாவும் கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டனர்.

ஆர்யனுக்கு இணையான தைரியசாலி தான் ருஹானாவும். என்றாலும் இப்படி அபாயமுனையில் வந்து நிற்கும் அசாத்திய துணிச்சல் அவளுக்கு எங்கிருந்து வந்தது? ஆர்யன் உயிரைக் காக்கவும், இவானுக்கு அவன் துணை என்றென்றும் நிலைக்கவும், ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் அவளுக்கு சற்றும் பழக்கமில்லாத சூழலில் வந்து நிற்கிறாள்.

அவளின் இதயம் படபடவென துடிக்கும் ஓசை அவனுக்கு கேட்டது. அதற்கு பக்கவாத்தியம் போல வெளியே துப்பாக்கி குண்டுகளும் ஓசை எழுப்பின. அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஆர்யனிடம் கோப உணர்ச்சியே எழும்பி வந்தது.   

“ஏன் உன் பிடிவாதத்தை விட மாட்டறே? ஏன் இப்படி அடம் பிடிக்கிறே?”

“நான் தானே முன்னமே சொன்னேனே, இவான் அவனோட சித்தப்பாவை இழக்கக்கூடாது. இன்னும் என்னால எவ்வளவு தூரத்துக்கு போகமுடியும்னு நீங்க தெரிஞ்சிக்கணும்னா இது எதையும் நிறுத்தாதீங்க. உங்க விருப்பப்படி தொடர்ந்து செய்ங்க”

வெளியே வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் அவளின் உடம்பு தூக்கி வாரிப்போட்டது. மூச்சிரைக்க நிற்கும் அவளை கையணைப்பில் வைத்திருந்தவனுக்கு அது நன்கு தெரிந்தது.

“இது… இது முட்டாள்தனம்”

“நானும் அப்படித்தான் நினைக்கறேன்”

ஆர்யன் வெளியே எட்டி சுட்டுவிட்டு, ‘சிறுபிள்ளைத்தனமாக அடம் செய்யும் இவளை என்ன செய்வது?’ என அருகாமையில் இருக்கும் அவளை பார்த்தான். அவர்கள் நெருக்கமாக நின்றிருந்தார்கள் தான் ஆனால் தூரத்திலிருந்து பார்க்கும்போது மிகவும் நெருக்கமாக இருப்பது போல தோன்றியது மிஷாலுக்கு.

ருஹானா போனை எடுக்காத காரணத்தால் கரீமாவிடம் முகவரி பெற்று அவன் அங்கேயே வந்திருந்தான். துப்பாக்கி சண்டை நடைபெறுவதை பார்த்தவன் திகைத்துப்போய் காரிலேயே பத்திரமாக அமர்ந்திருந்தான். முழு சண்டையும் அவன் பார்வைக்கு கிடைக்க, இருவரை மட்டும் அசூசையாய், கோபமாய், வெறுப்பாய் உற்று பார்த்திருந்தான்.

காதர் மற்றும் அவன் ஆட்கள் சுட்டுக்கொண்டே பின்வழியாக வெளியேற, ரஷீத் “வாங்க எல்லாரும். கார்ல ஏறுங்க. அவங்களை பின்தொடர்ந்து போவோம்” என உத்தரவிட்டுவிட்டு ஆர்யன் அருகே வந்தான். ஆர்யன் “என்ன ஆனாலும் இன்னைக்கே இந்த விஷயம் முடியணும். எனக்கு தகவல் சொல்லிட்டே இரு, ரஷீத்” என்று சொல்ல, ரஷீத்தும் தலையசைத்து வேகமாக ஓடி காரில் ஏறினான்.

“வா காருக்கு போகலாம்!” என ஆர்யன் ருஹானாவை அழைத்து சென்றான்.

தன்னியல்பை தொலைத்து 

பதற்றம் கொள்கிறான்!

தன்னியல்பால் அன்புப் பாதையில் 

வழிநடத்த முயல்கிறாள்!

இருவருக்கான அக்கறையும் வெளிப்படுத்தாமல்

வெளியிடும் மாயக்காரர்கள்!!

——-

காரை உணவகத்தின் வாசலில் கொண்டுவந்து நிறுத்திய மிஷால் உள்ளே கூட போகவில்லை. “அடச்சே!” என காரை எட்டி உதைத்தவன் அதை சுற்றியே உலாத்தினான். அப்போது கரீமா போன் செய்ய, போனை எடுத்துப்பார்த்த மிஷால் அழைப்பை தள்ளிவிட்டான்.

“இவன் போனை கட் செய்றான், சல்மா” என சொன்ன கரீமா, கோபத்துடன்  திரும்ப அழைக்க மிஷாலில் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. “இவனும் சொல்லலைனா இப்போ அங்க நடக்கறதை எப்படி தெரிஞ்சிக்கறது?” என கேட்டாள் 

“ஒருவேளை ஆர்யனை சுட்டுட்டாங்களா?” என பதறிய சல்மா வெறிப்பிடித்தவள் போல ஆர்யனுக்கும், ரஷீத்திற்கும் மாற்றி மாற்றி தொலைபேசியில் முயற்சி செய்துக்கொண்டே இருந்தாள். கரீமா அவளை அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போனாள்.

——–

ஆர்யனின் கோபமும், அச்சமும் உச்சத்தில் இருக்க, ஒரு அழகிய மலையுச்சியில் கொண்டுவந்து காரை நிறுத்தினான். ருஹானாவிடம் மூர்க்கத்தனமாக கத்திவிடுவோமோ என பயந்தவன் காரை விட்டு இறங்கி, அந்த இயற்கை சூழலில் காற்றில் முடி படபடக்க, அதைவிட அதிவேகமாக மூச்சு வாங்க நடந்தான்.

சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்தபடியே அவன் படும் பாட்டை பார்த்த ருஹானாவிற்கு அவன்பால் இரக்கம் மேலிட்டது. கீழே இறங்கி அவனிடம் வர, அவள் தோள்களை பிடித்த ஆர்யன் “நீ… என்ன நினச்சிக்கிட்டு அந்த மாதிரி ஆபத்தான இடத்துக்கு வருவே நீ? உனக்கு என்ன தான் நோக்கம்? உன்னை நீ என்னன்னு நினைச்சிட்டு இருக்கே?” என உலுக்கினான்.

அவன் கைகளை தள்ளி விட்டவள் “என்னை கேட்கறதுக்கு முன்ன உங்களையே கேட்டுக்கங்க இந்த கேள்வியை. நீங்க யாரு? நீங்க இவானோட சித்தப்பா. உங்களை தான் அவன் அதிகம் நம்புறான். எதிர்காலத்துல உங்களைப்போல வரணும்னு ஆசைப்படுறான்.  நான் உங்க மத்த குணங்களை பத்தி கவலைப்படல. ஒரு சின்ன குழந்தை தன்னோட கனவுக்கோட்டையை உங்களை ஆதாரமா வச்சி கட்டுறான்னா அதுக்கு ஏத்த மாதிரி உங்க குணம் இருக்க வேண்டாமா?” என அவளும் ஆவேசமாக கத்தினாள்.

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சில் சென்று தாக்க, சற்று நிதானமானவன் அமைதியாக கேட்டான். “உன் உயிரை பத்தி உனக்கு கவலை இல்லயா? இவானுக்காக யோசிச்சியே, நீ உயிரோட இருக்க வேண்டாமா? அதுல எதாவது ஒரு குண்டு உன் மேல பாய்ந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?”

வெளியே விடாத நீரால் அவள் கண்கள் பளபளக்க, அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். “கண்டிப்பா உயிர் பறந்திருக்குமே! அது உங்க மேலே பட்டிருந்தா? உங்க இதயத்துல பாய்ந்திருந்தா…? நீங்க அங்கயே இறந்திருந்தா?” அவள் கண்ணீர் வெளியேற துடித்தது. அவள் சொன்னது அவளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலை குனிந்து கொண்டாள். 

“இவான் நிலைகுலைந்து போய்டுவானே!. ஆரம்பத்துல இருந்தே நான் சொல்றேன் தானே, நான் அவனுக்கு சித்தினா நீங்க அவனுக்கு சித்தப்பா. ரெண்டுபேர்ல யார் இல்லனாலும் அவனோட நிலைமை பரிதாபம் தான். அப்படி நடக்க நான் விடவே மாட்டேன்”

அவளின் வைராக்கியமும், அவள் சொன்னதில் இருந்த துன்பமான உண்மையும் அவனை தடுமாற்றம் அடைய செய்ய, அவளிடமிருந்து விலகி மலை முகட்டிற்கு சென்று நின்று கொண்டான்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை பகிர்ந்து கொள்கின்றனர்…. மறைமுகமாக… அவர்களே அறியாமல். ஒருவர் உயிருக்காக மற்றவர் உயிரை தியாகம் செய்ய துணியும் இதை விட சிறந்த அன்பு எப்படி இருக்கும்? 

அவனை சற்று நேரம் யோசிக்க விட்ட ருஹானா, அவனை நெருங்கி அவன் பின்னால் நின்று மென்குரலில் “வாழ்க்கையில இன்னும் உங்களுக்கு என்ன வேணும்? மலை போல சொத்து இருக்கு. பெரும் அதிகாரம் இருக்கு. உங்களுக்கு நாங்க வேணும் தானே!” என சொல்ல, அவன் வேகமாக அவளை திரும்பி பார்த்தான். 

அவள் அவன் கண்களை பார்த்து உருக்கமாக பேசினாள். “எனக்கு தெரியும். எங்களுக்கும் நீங்க வேணும். உங்களை நினைச்சி நாங்க கவலைப்படுறோம். நீங்க கோபமா இருந்தாலோ வருத்தமா இருந்தாலோ மாளிகையில இயக்கமே நின்னு போய்டுது. எப்பவாது தான் நீங்க புன்னகை முகம் காட்றீங்க. அப்போ மாளிகையே மகிழ்ச்சில குதிக்குது. எங்களுக்கு நீங்க ரொம்ப ரொம்ப முக்கியம்,.. இவானுக்கு…, அம்ஜத் அண்ணாக்கு….” என சொல்லி இடைவெளி விட்டவள் “எனக்கும்!” என்றாள்.

ஆர்யனின் பார்வை கூர்மையானது.

“இந்த கொடூர பாதையை விட்டு நீங்க விலகணும்னு நான் ஆசைப்படறேன். எங்களுக்காக நீங்க இதை செய்ய மாட்டீங்களா?”

பதில் சொல்லாமல் நடந்தவன் காரில் ஏறி அதை இயக்கி அவளுக்காக காத்திருக்க, ருஹானாவும் வந்து சேர்ந்தாள்.

——-

“என்ன நடக்குதுன்னு தெரியாம எனக்கு தலை வெடிக்குது, அக்கா”

“அமைதியா இரு, சல்மா! எதாவது கெட்ட செய்தியா இருந்தா இந்நேரம் தகவல் வந்திருக்கும்.”

“என்னால அமைதியாக முடியாது. ஆர்யனை பார்க்கற வரை எனக்கு நிம்மதி இல்ல. அந்த சூனியக்காரி அவன் கூட இருக்கறதை நினைச்சா எனக்கு பத்திட்டு எரியுது.”

‘இவள் என்ன ஆர்யன் மேல் இத்தனை தீவிரமாக இருக்கிறாள்?’ கரீமா யோசிக்கும் வேளையில் கார் சத்தம் கேட்டது.

“ஆர்யன் வந்துட்டான்” என மகிழ்ச்சியுடன் ஜன்னலுக்கு ஓடிய சல்மா அவனோடு ருஹானாவும் இறங்குவதை பார்த்து கொதிப்படைந்தாள்.

“என்ன! ஆர்யனை ஷூட்அவுட் நடுவுல இருந்து இவ கூட்டிட்டு வந்துட்டாளா? என்னால நம்பவே முடியலயே? எப்படி அக்கா?”

கரீமாவும் வந்து எட்டிப்பார்த்தாள். “எனக்கும் தெரியலயே. ஆனா ஆர்யன் நிச்சயமா கோபமா இருப்பான். இவளோட அதிகப்பிரசங்கித்தனத்துக்கு நல்லா வாங்கி கட்டிக்க போறா” என அவள் தங்கையை சமாதானப்படுத்த, இருவரும் மேலே இருந்தே கீழே நடப்பதை பார்த்தனர்.

இருவரும் காருக்கு முன்னாடி வர, ருஹானா ஆர்யனிடம் “நான் சொன்னதை நீங்க யோசிச்சி பார்ப்பீங்களா?” என கேட்டாள். அவன் அவளை ஏறிட்டு பார்த்தாலும் வாயை திறக்கவில்லை.

முகம் வாடிய ருஹானா “நீங்க பதிலே சொல்லல?” என மீண்டும் கேட்டாள். அவன் புருவம் கூட அசைக்கவில்லை.

லேசாக சோகமுறுவல் செய்தவள் “பரவாயில்லை மாட்டேன்னும் சொல்லலயே! அதுவே நல்லதுதான்” என சொல்ல, அப்போதும் அவள் பறக்கும் முடியை, சுருங்கும் புருவங்களை, ஆடும் கண்களை, பேசும் உதடை பார்த்தபடியே இருந்தவன் பேசாமல் வீட்டுக்குள் சென்றான்.   

“அக்கா! இதெல்லாம் ரொம்ப அதிகம். இவங்க சண்டைக்கு போயிட்டு வந்த மாதிரியாவா தெரியுது? ஹோட்டலுக்கு போயிட்டு வந்த மாதிரி இயல்பா வராங்க?” என சல்மா பொசுங்க, “வா! என்னன்னு கேட்போம்” என கரீமா வெளியே வந்தாள்.

படிக்கட்டில் ஏறிவந்த ஆர்யன் கடந்து சென்றுவிட, பின்னால் வந்த ருஹானாவிடம் கரீமா கேட்டாள். “ருஹானா டியர்! நாங்க ரொம்ப கவலையா இருந்தோம். எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கல. என்ன நடந்தது?”

“அல்லாஹ் கருணையால யார்க்கும் எதும் ஆகல, கரீமா மேம். நான் இவானை பார்க்கப் போறேன்” என சுருக்கமாக சொல்லி, ருஹானாவும் நடந்து விட்டாள்

“என்னவோ பெருசா சண்டை நடக்கும், ஆர்யன் இவளை திட்டுவான்னு சொன்னே அக்கா? ஒன்னுமே நடக்கல” என சல்மா மிகுந்த ஏமாற்றமாக கேட்க, கரீமா “எனக்கு தெரியல சல்மா. கொஞ்ச நாளா மாளிகையில நடக்கறது எதுவும் எனக்கு புரிய மாட்டேங்குது” என பொருமினாள்.

——

அறைக்குள் வந்து மேலங்கியை கழட்டி போட்ட ஆர்யன் கட்டிலில் அமர்ந்தான். பின்னால் இருந்த துப்பாக்கி உறுத்த அதை கையில் எடுத்து பார்த்தான். ருஹானா சொன்னவை அனைத்தும் காதில் எதிரொலித்தது. ‘உங்களுக்கு என்ன இல்ல? எதுக்கு இது? எங்களுக்கு நீங்க முக்கியம்.. எனக்கும்… இதெல்லாம் விட்டுடுங்களேன்!’

அவனை துளைத்தெடுக்கும் அவளுடைய தாக்கங்களை விடவா வேறு கூர்மையான ஆயுதங்கள் இருக்கப் போகின்றன?

துப்பாக்கியை கீழே வைத்தவன் இடக்கை மணிக்கட்டை வெகு நாட்களுக்கு பின் பிடித்துக்கொண்டான். அப்போது ரஷீத்திடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

‘காதர் பெட்ரா நகர்க்கு போற வழில இருக்கற ஒரு ஃபார்ம் ஹவுஸ்ல ஒளிஞ்சி இருக்கான். அந்த இடத்தோட லொக்க்ஷேன் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். நாங்க என்ன செய்யணும்? நீங்க வர்றீங்களா, ஆர்யன்?’

ரஷீத்திற்கு பதில் அனுப்பிவிட்டு வேகமாக எழுந்தவன், கட்டிலின் அருகே இருந்த இழுப்பறையில் இருந்த இன்னொரு துப்பாக்கியை எடுத்தான். அலமாரிக்கு சென்றவன் அங்கே இருந்த மற்றுமொரு துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் இருந்த சிறிய பெட்டிகள் அனைத்தையும் எடுத்து ஒரு பையில் போட்டான். பையை எடுத்துக்கொண்டு வெளியேறினான். 

——

Advertisement