Advertisement

“எனக்கும் ஆசை தான். ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு, சிங்கப்பையா!”

“நீங்க சீக்கிரமா எல்லா வேலையும் முடிக்க முடியாதா, சித்தப்பா?”

‘என்னை இப்படிப்பட்ட சங்கடத்தில் மாட்டி விடுறியே!’ என்பது போல ருஹானாவை பார்த்த ஆர்யன் எழுந்து சென்று விட்டான். இவான் சோகமாக அவன் முகம் சுருங்கியது. ருஹானா அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் தலையை தடவிக்கொடுத்தாள்.

அண்ணன் மாடி தோட்டத்தில் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்ட ஆர்யன் அவனிடம் சென்றான். ஆர்யனை பார்த்ததும் எப்போதும் போல அம்ஜத் மலர்ந்து சிரித்தான்.

செடிகொடிகளிலேயே வேலை செய்துக் கொண்டிருக்கும் சகோதரன் இப்போது அமைதியாக நிற்பதைக் கண்டு “ஏன் அண்ணா? உடம்பு சரியில்லையா?’ என கேட்டான். குழப்பமான அம்ஜத் “இல்லயே ஆர்யன்! நான் நல்லா இருக்கேனே” என்றான்.

“உண்மையை சொல்லுங்க, யாராவது எதாவது சொன்னாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் சரியா தான் இருக்கேன். பார்க்கப்போனா நீ தான் சில நாட்களா சரியா இல்ல. உனக்கு எதும் குழப்பமா, ஆர்யன்?”

“கவலைப்படாதீங்க அண்ணா. நான் ஓகே தான்”

லேசாக சிரித்த அம்ஜத் “சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்ல. நான் ஆபத்துல மாட்டிக்கிட்டா உடனே உதவிக்கு நீ ஓடி வருவே. ஆனா நீ யார்கிட்டேயும் உதவின்னு நின்னது இல்ல. உன் பிரச்சனைகளை நீயே தீர்த்துக்குவே” என்று சொன்னான்.

“ஆர்யன்! உனக்கு ஞாபகம் இருக்கா? படிக்கட்டுல இருந்து கீழே விழுந்து என் கால்ல அடிபட்டு புண்ணாகிடுச்சே! நீ தினமும் மருந்து போட்டுவிடுவே, அது ஆறுற வரைக்கும்”

ஆர்யன் தலையாட்ட அம்ஜத் தொடர்ந்தான்.

“எப்பவும் என்னோட காயங்களுக்கு மருந்தா நீ இருந்திருக்கே, ஆர்யன்! நான் நினைக்கறேன், எல்லாருக்கும் உன்னைப் போல ஒருவன் தேவை அவங்களை குணப்படுத்த” என சிரித்த அம்ஜத்துக்கு மலர்ந்த முகம் காட்டிய ஆர்யன், மாளிகையின் உள்ளே தட்டுக்களை எடுத்து செல்லும் ருஹானாவை பார்த்தான்.

அவள் கண்பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்தவன் அண்ணனிடம் திரும்பினான்.

“சிலர் உயிர் வாழ ரணங்களை ஆற்றிக்க நினைக்கிறாங்க. சிலருக்கு அந்த ரணங்களோட தான் உயிர் வாழ முடியும், அண்ணா!”

ஆர்யன் சொன்னது புரியாவிட்டாலும் அம்ஜத் சிரித்தபடி தலையாட்டினான். ஆனால் ருஹானாவின் மந்திரக்கை ஆர்யனின் இரணங்களையும் ஆற்றும் வல்லமை படைத்தது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

—— 

மேசையில் செல்பேசியை எடுக்க வந்த ஆர்யன் அங்கே இருந்த தாள்களை கண்டு கையில் எடுத்து பார்த்தான். மூன்று அனுமதிச்சீட்டுகளோடு ஒரு குறிப்பு சீட்டும் இருந்தது.

“இவான் இன்று உங்களோடு இருக்க ஆசைப்படுகிறான். தயவுசெய்து அவனுக்கு ஏமாற்றம் தராதீங்க”

ருஹானாவின் குறிப்பை படித்தவன் அந்த அனுமதி சீட்டுகளை எடுத்து பார்த்தான். ‘கடலுக்கடியில் கண்கொள்ளா காட்சி’ என எழுதி இருந்த சீட்டுகளில் வண்ணமயமான மீன்களின் படங்களும் அழகுற வரையப்பட்டு இருந்தது.

அப்போது ஆர்யன் செல்பேசியில் பேசிய சல்மா, காதர் இருக்குமிடம் தெரிந்துவிட்டதாகவும், உடனே அலுவலகம் வரும்படியும் அவனை அழைத்தாள். கையில் வைத்திருந்த மீன் காட்சியகத்தின் சீட்டுகளை பார்த்துக்கொண்டே ஆர்யன் “நான் வரேன்!” என்றான்.

துணி மடித்துக்கொண்டிருந்த ருஹானா, கையில் நுழைவு சீட்டுடன் உள்ளே நுழைந்த ஆர்யனை பார்த்ததும் மகிழ்ச்சியோடு எழுந்தாள். கண்டிப்பாக மீன் காட்சியகம் அழைத்து செல்வான் என உறுதியாக நம்பியவள் அவனை புன்சிரிப்புடன் ஏறிட்டாள்.

அருகில் வந்த ஆர்யன் கடுமையான முகத்துடன் இன்னும் கடுமையாக சொன்னான். “நீ என்ன நினைச்சி இதெல்லாம் செய்றேன்னு எனக்கு தெரியும்”

“நான்தான் ஏற்கனவே என்னோட நோக்கம் என்னன்னு உங்ககிட்ட சொல்லிட்டேனே. அதுல இருந்து நான் பின்வாங்க மாட்டேன்”

“நான் உன்னை கடைசி முறையா எச்சரிக்கறேன். இது எல்லாத்தையும் விட்டுடு. என் வாழ்க்கையில தலையிடாதே”

“நானும் உங்களுக்கு நினைவுப்படுத்தறேன். நீங்க விரும்பறீங்களோ இல்லயோ, நான் இந்த வீட்டோட… உங்க வாழ்க்கையோட ஒரு பகுதியாகிட்டேன். உங்க வாழ்கையில தலையிடுறது தாண்டி இன்னும் முன்னேறின இடத்துக்கு நான் வந்துட்டேன். உங்க வாழ்க்கையின் நடுவுல நான் நிற்கறேன்” 

“ஏற்கனவே நீ உன்னோட எல்லையை மீற ஆரம்பிச்சிட்டே!” என அவன் சொல்லவும், ருஹானாவின் முகம் சுருங்கியது. ஆர்யன் மேசை மேல் சீட்டுகளை விட்டடித்தவன் விருட்டென்று வெளியேறிவிட்டான்.

ருஹானாவின் செல்பேசி அடிக்க மிஷால் ருஹானாவையும் இவானையும் வெளியே செல்ல அழைத்தான். அப்போது உள்ளே வந்த இவான் “சித்தப்பா நம்ம கூட வர்றாரா சித்தி?” என கேட்க, ருஹானாவின் முகம் யோசனையானது.

——–

அலுவலகத்தில் சல்மா ‘காதரின் புகைப்படத்தில் பின்னால் தெரியும் உணவகம் தான் அறிந்ததே’ என சொல்லி அதன் பெயரையும் ஆர்யனிடம் சொல்ல, ஆர்யன் ரஷீத்தை ஆட்களுடன் அந்த இடத்திற்கு அனுப்பினான்.

“ரஷீத் தேடிட்டு போனாலும் நானும் என் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்றேன், ஆர்யன்”

“இனி நாங்க பார்த்துக்கறோம்” சல்மாவின் புறம் திரும்பாமல் கணினியை பார்த்து பேசினான் ஆர்யன்.

“உங்க விருப்பம். நீங்க மத்தவங்க உதவியை விரும்பமாட்டீங்கன்னு எனக்கு தெரியும். காதர் பிரதர்ஸ் உங்களை பத்தி தெரியாம வம்பு வளர்க்கறாங்க. உங்க கோபம் இந்த உலகத்தையே சுட்டெரிச்சிடும்னு அவங்களுக்கு தெரியல. நீங்க பலசாலி ஆர்யன். நான் உங்ககிட்டே இருக்கும்போது பாதுகாப்பா உணருறேன்” 

அவள் பேச்சுக்கு ஆர்யனிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லாததால் சோர்வாகி “நான் என் கேபினுக்கு போறேன். எனக்கு வேலை இருக்கு” என சென்றுவிட்டாள்.

ஆர்யனின் எதிரியின் இருப்பிடம் காட்டியதால் ஆர்யன் தனக்கு நன்றி சொல்வான், தன்மீது கவனம் திருப்புவான், நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என ஆசைக்கோட்டை கட்டியிருந்த சல்மா மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள்.  

———

“இவான்! உனக்கு மீன் காட்சியகம் பிடித்ததா?”

“ஹ்ம்ஹூம்” என ருஹானா சொல்வதை போல சொன்ன இவான் “ரொம்ப பிடிச்சது, மிஷால் அங்கிள்!” என்றான்.

“நாம மீன்களை பார்த்துக்கிட்டே நடந்ததால எவ்வளவு தூரம் நடந்தோம்னு நமக்கு தெரியல. ஆனா மிகப்பெரிய காட்சியகம், இல்லயா ருஹானா?” என வினவிய மிஷால் “இப்படி கொஞ்ச நேரம் உட்காரலாமா?” என கேட்டான்.

கடற்கரையோரமாக அவர்கள் நடந்த பாதையில் ஓரமாக கல்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. ருஹானா சம்மதிக்கவும், மூவரும் ஓக் மரத்தின் அடியில் இருந்த பெஞ்ச்சில் அமர, மிஷால் ஒரு பரிசுப்பெட்டியை இவானிடம் தந்தான்.

“ரொம்ப நாளா நானும் வாங்கி கொடுக்கணும்னு இருந்தேன். இதையும் வாங்கி வச்சிட்டு கொடுக்க இத்தனை நாளாகிடுச்சி”

“ஏன் மிஷால் உனக்கு இந்த சிரமம்?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, ருஹானா. நம்ம இவானுக்கு தானே?”

ஆவலாக வாங்கிய இவான் பெட்டியை பிரித்தான். அதில் விளையாட்டு துப்பாக்கியை பார்த்ததும் அவன் முகம் சின்னதானது. “எனக்கு இது வேணாம்” என பக்கத்தில் பெஞ்ச்சில் வைத்துவிட்டான். ருஹானா “இவான்! இவான்!” என கூப்பிட, காதில் வாங்காமல் எழுந்து சென்று கடலை பார்த்துக்கொண்டு நின்றான்.

“அவனுக்கு இது பிடிக்கலயா?”

“அதான் எனக்கும் தெரியல. நான் வீட்ல போய் கொடுத்துக்கறேன், மிஷால்”

“ஆனா இன்னைக்கு இவான் முகம் மலர்ச்சியாவே இல்ல” என்று சொன்ன மிஷால், ருஹானாவின் முகத்தை பார்த்து “நீயும் அப்படித்தான் இருக்கே! வந்ததிலிருந்து நீயும் அதிகமா பேசல” என சொல்ல, ருஹானா முன்னால் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டாள்.

“அந்த ஆர்யன் உன்னை துன்புறுத்தினானா? அதான் நீ கவலையா இருக்கியா?”

ஆமாம், இல்லை என எதுவும் சொல்லாமல் ருஹானா அமைதியாக இருக்க, “எனக்கு தெரியும் அவன் தான் உன் உயிரை காப்பாத்தினான். ஆனா அதுக்கு முன்ன உன்னை கொடுமைப்படுத்தினதும் அவன் தானே. நீ ஏன் தான் அவன்கிட்டே கனிவா நடந்துக்கறியோ! இது உன் இயல்பே இல்ல, ருஹானா. அது உனக்கு தெரியல. ஆனா நான் பார்க்கறேன்”

“அவரும் கடினமான சூழ்நிலையை தாண்டற கட்டத்தில தான் இருக்கார்”

“அவனோட கஷ்டம் உனக்கு ஏன் இத்தனை வருத்தம் தருது, ருஹானா?” 

“நான் இவானோட சித்தப்பா மேல அக்கறை காட்றதுக்கு காரணம் அவர் வெளிய தெரிய மாதிரி கடுமையானவர் கிடையாது, அது எனக்கு தெரியும். அவரோட நல்ல தன்மைகளை என்னால பார்க்க முடியுது. அவர் எல்லாத்தையும் தனக்குள்ள மறைச்சி வச்சிக்கறார்”

ருஹானா ஆர்யனை பற்றி அறிந்து வைத்திருப்பதை கேட்க, மிஷாலுக்கு பொறாமையாக இருந்தது.  

“எனக்கும், இவானுக்கும் அவர் செய்ததே அவரோட நல்ல குணங்களுக்கு உதாரணம். இவான் எந்த அளவு அவன் சித்தப்பா மேல பாசம் காட்றானோ, அதை விட அதிகமா அவர் அவன் மேல பாசம் வச்சிருக்கார். பார்க்கறதுக்கு விலகி இருக்கற மாதிரி தெரிஞ்சாலும் உண்மையில அந்த குடும்பத்தை தாங்கி பிடிக்கிறவர் அவர் தான். அவர் அவருக்காக வாழல. அவரோட குடும்பத்துக்காக வாழ்றார். ஏன், என் உயிரையும் காப்பாத்தினார் தானே, அதும் அவர் உயிரைக்கூட துச்சமா நினைச்சி. நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கேன், மிஷால்”

மிஷால் கசப்புடன் கேட்க, தான் அதிகம் பேசிவிட்டதை உணர்ந்த ருஹானா “நான் போய் இவானை கூட்டிட்டு வரேன். நேரமாச்சி, வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லி இவான் அருகே செல்ல, ஆர்யன் மேல் இத்தனை நல்லெண்ணம் வைத்திருக்கும் இவளை எப்படி மாற்றுவது என மிஷால் பார்த்திருந்தான். 

——–

ஆர்யன் அலுவலகத்தில் வேலையில் நாட்டம் செல்லாமல் ஒரு கோப்பை பிரித்து அமர்ந்திருக்க, குறுஞ்செய்தி வந்த சத்தம் செல்பேசியில் கேட்க அதை எடுத்து பார்த்தான்.

ருஹானாவிடமிருந்து வந்தது என அறிந்தாலும் சற்று தயங்கினாலும் அதை திறந்தான். கடலுக்கடியில் நீண்ட பாதையில் சுற்றிலும் மீன்கள் நீந்த, இவானை கையில் பிடித்தபடி ருஹானா நின்றிருக்கும் அழகிய புகைப்படம் அது. கூடவே செய்தியும்.

“நீங்க இல்லாம இவானோட முகம் வாடியே இருந்தது. நீங்களும் இந்த போட்டோல இருந்திருக்கலாம்னு நான் ஆசைப்படுறேன்”

அப்படியே ஆர்யனின் வாட்டமெல்லாம் வடிய, மனங்கவரும் அந்த படத்தை முறுவலுடன் பார்த்துக்கொண்டே இருந்தவன் அதை பெரிதாக்கி பார்த்தான். பார்த்தவன் திடுக்கிட்டான். அவர்களை பார்த்தபடி ஓரத்தில் மிஷால் நின்று கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு அமர்ந்திருக்க முடியவில்லை.

‘ருஹானாவை காப்பாற்றி திரும்பவும் அவளை என் வாழ்கையில் கொண்டு வந்ததுக்கு உனக்கு நான் நன்றிக்கடன்பட்டு இருக்கேன்’ என மிஷால் சொன்னது அவனுக்கு நினைவு வர, வேகமாக எழுந்தவன் அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த மனதை தற்சமயம் அடக்க முடியாமல் விரைந்து வெளியேறினான்.

——— 

ருஹானாவையும் இவானையும் இறக்கிவிட காரை அர்ஸ்லான் மாளிகை வளாகத்தின் உள்ளே மிஷால் கொண்டுவர, கார் நின்றவுடன் இவான் இறங்கி ஓடப் பார்த்தான். ருஹானா “நம்மை மீன் பார்க்க கூட்டிட்டு போனாரே, மிஷால் அங்கிள்க்கு நீ நன்றி சொல்ல மாட்டியா?” எனக் கேட்க, இவான் “நன்றி மிஷால் அங்கிள்!” என்றான்.

“உனக்கு பிடிச்சது எனக்கு மகிழ்ச்சி இவான். உனக்கு திரும்ப போகணும்னு ஆசையா இருந்தா சொல்லு. நான் கூட்டிட்டு போறேன். வேற எங்கனாலும் நாம போகலாம்” என மிஷால் சொல்ல, தலையாட்டிய இவான் வாசலுக்கு வந்த நஸ்ரியாவை பார்த்துவிட்டு அவளோடு பேசிக்கொண்டே வீட்டுக்குள் சென்றான்.

“நஸ்ரியா அக்கா! நாங்க கடலுக்கு அடியில போனோமே! பெரிய மீன்லாம் பார்த்தோமே!”

ருஹானாவும் “எல்லாத்துக்கும் மிக நன்றி மிஷால். என்னோட பிரச்னையெல்லாம் சொல்லி உன்னை போரடிச்சிட்டேன். ஸாரி!” என்று சொல்ல, “என்ன நீ? உனக்கு உதவி செய்ய நான் எப்பவும் தயாரா இருக்கேன். நீ என்கிட்டே சொன்னது எனக்கு மகிழ்ச்சி தான். உனக்கு எப்போ என்ன தேவைன்னாலும் எனக்கு போன் செய், ருஹானா!” என்றான்.

அந்த நேரம் ஆர்யன் கார் உள்ளே பாய்ந்து வந்தது. ருஹானாவும், மிஷாலும் திரும்பி பார்க்க, மிஷாலின் காருக்கு எதிரே காரை நிறுத்திய ஆர்யன் கோபமாக கீழே இறங்கினான். கார்க்கதவை கூட மூடாமல் வேகநடையிட்டு வந்தவன், மிஷாலின் சட்டை காலரை பிடித்தான். 

“இவங்க கூட இனி நீ போகக்கூடாது. இன்னொரு முறை என் அண்ணன் மகன் கூட உன்னை பார்த்தேன், நீ அவ்வளவு தான், உன்னை தொலைச்சிடுவேன்”

(தொடரும்)  

Advertisement