Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 83

குடும்ப சூழ்நிலைகளாலும் சுற்றுப்புற கொடுமைகளாலும் கடுமையாக உருவாக்கப்பட்டவன் ஆர்யன். சகோதர்களை காப்பாற்ற எத்தனை கடினமான வாழ்க்கை முறையை ஆர்யன் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை ருஹானா புரிந்து கொண்டாள். அவனுடைய கடந்த காலத்தை அவளால் மாற்ற இயலாது. 

ஆனால் பழைய பாதையிலிருந்து அவனை  வெளியே வரவைக்க அவளால் மட்டுமே முடியும். அவள் அதை புரிந்து கொள்ளாமலே அவனை திசை திருப்ப தீர்மானித்துக் கொண்டாள். வன்முறை வாழ்க்கை முறையிலிருந்து அவனை விலக வைக்க எல்லாமும் செய்வேன் என்று அவனிடம் சூளுரைத்தாள்.

அவளை நெருங்கி வந்த ஆர்யன் “உன்னால எதுவும் செய்ய முடியாது!” என்றான்.

“என்னால முடியும்”

“நீ எனக்கு சவால் விடுறீயா?”

“ஆமா, சவால் தான் விடுறேன். என்னால முடியாதுன்னு நீங்க சொல்றீங்க. ஆனா முடியும்னு நான் சொல்றேன்”

அவளது கோபவிழிகளையும் துடிக்கும் இதழ்களையும் அந்த சண்டை நேரத்திலும் ஆர்யனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஆனா இது உங்களுக்கு வித்தியாசமான வழியா இருக்கும்னு நான் தெளிவுபடுத்துறேன்”  

“எனக்கு இதை தவிர வேற வழி கிடையாது. புரியுதா உனக்கு? நீ என்ன செஞ்சாலும், என்ன சொன்னாலும் இது மாறாது”

“நீங்க சொல்றது தப்பு. நீங்க எப்படி மறுத்தாலும் உங்களோட உண்மையான முகத்தை உங்க கண்ணுல நான் பார்த்தேன்”

கண்களில் பார்த்தேன் என அவள் சொல்லவும் இத்தனை நேரம் கண்ணோடு கண் நோக்கிக் கொண்டிருந்தவன் கண்களோடு சேர்த்து தலையையும் திருப்பி கொண்டான்.

“நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா? அந்த உண்மையான ஆன்மா…. சிறையில் அடைக்கப்பட்ட அந்த ஆன்மா தப்பித்து வெளிய வர உதவி செய்ய போறேன்” 

“அதுக்கு உனக்கு சக்தி கிடையாது. எங்க நான் இருக்கேனோ அங்க கோபம் இருக்கும். வலி இருக்கும். மரணமும் இருக்கும். உன்னோட வழில இது எதையும் நீ மாத்த முடியாது” என்று அவன் சொல்ல, ருஹானா தலையாட்டி மறுத்தாள்.

அவன் முஷ்டியை இறுக்கிக்கொண்டு “இப்போ போ வெளியே!” என்று சொல்லி திரும்பி நின்று கொண்டான்.

“என்னோட சவால் நீங்க பழகினது போல குண்டுகள், கோபம், வன்முறை இல்ல. அதுக்கு மாறா அன்பால உங்களுக்கு நான் சவால் விடுறேன், இந்த குடும்பத்தின் மீது எனக்கு இருக்கும் அன்பால! நீங்க, நீங்க எல்லாரும் இவானோட ஒரு பகுதி. என் அக்கா மூலம் எனக்கு கிடைத்த உரிமை, உறவு”

ஆர்யன் திரும்பாமல் அவள் பேசுவதில் லயித்து நின்றான்.

“உங்களை போல இல்லாம என்னோட ஒரே ஆயுதம் அன்பு தான். என்கிட்டே இருக்கறது கருணை காட்டி அன்பு செலுத்துறது மட்டும் தான். உங்க குஸ்திகளையும், குண்டுகளையும் நீங்க கீழ போட்டா மட்டும் தான் நீங்க மகிழ்ச்சியா இருக்க முடியும். அந்த நாள் வர்ற வரை என்னோட போராட்டத்தை நான் நிறுத்த மாட்டேன், ஆர்யன் அர்ஸ்லான்!”

அவன் பெயர் அவள் சொல்லக் கேட்டு அதிர்ந்தாலும், ஆர்யன் கண் சிமிட்டாமல் கேட்டுக்கொண்டே இருந்தான். 

“ஏன்னா நீங்க சந்தோசமா இருந்தா தான் இவான், அம்ஜத் அண்ணா………. நான் சந்தோசமா இருக்க முடியும்”

அவளையும் அறியாமல் அவன் மீது அவளுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறாள். அவள் அன்பில் கரைந்தாலும் அவளை நிறுத்த வேண்டியது அவசியம் என ஆர்யன் தன்னை திடப்படுத்திக்கொண்டு “வெளியே போ!” என்றான் மெதுவாக.

“இந்த முறை உங்களால என்னை பயமுறுத்த முடியாது”

அவனது காதலை உயிரோடு கொல்ல முடிவெடுத்தவன், அவளை திரும்பி பார்த்து “உன்னை வெளிய போக சொன்னேன்! போ!” அறை அதிர கத்தினான். 

அவள் நடுங்கவில்லை. நிமிர்ந்து பார்த்த கண்களை தாழ்த்தவில்லை. முகம் சுருக்கவில்லை. சில விநாடிகள் அவனை தைரியமாக எதிர்கொண்டவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்

நன்மை தீமை அன்பாய் 

கோபமாய் வெளிப்பட

தீமை தன் எல்லை 

வலி மரணம் வரை 

செல்லுமென பறையடிக்க…..

அன்பாய் புன்னகைத்தே 

தன் உறுதியை பறைசாற்றுகிறதே

நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிந்தாலும்

அன்பின் நீர் அணைத்தே தீரும்!

கதவருகே இவான் நிற்பதை பார்த்தவள் “ஆருயிரே! நீ எப்போ வந்தே?” என்று கேட்டு, அவன் சோகமுகம் பார்த்து மண்டியிட்டு அவனை கட்டிக் கொண்டாள்.

“இப்போ தான் சித்தி! சித்தப்பா திரும்பவும் கோபமா இருக்கார்ல?”

“கவலைப்படாதே தேனே! எல்லாம் சரியாகிடும்! இப்போ இப்படி இருக்கார். சீக்கிரம் மாறிடுவார். வா நாம ரூம்க்கு போகலாம்”

அவனை படுக்க வைத்து தட்டி கொடுத்தும் தூங்காமல் சோகமாகவே இருந்தான். “செல்லம்! கண்ணை மூடி தூங்கும்மா. நேரமாச்சே!”

இவான் திரும்பி படுத்துக்கொண்டான். “நேத்து பாதி கதை சொல்லும்போதே தூங்கிட்டே. மீதி கதையை இப்போ சொல்லவா, மானே?”

“சித்தப்பாவோட அசுரன் கதை சொல்றீங்களா?”

“அது உன் சித்தப்பாவே சொல்லுவார். இன்னும் வேற கதைகள் கூட சொல்லுவார். சில நாட்கள் பொறுமையா இரு அன்பே!”

இவான் கண்களை மூடிக்கொள்ள ருஹானா கதை படித்தாள்.

——-

தூக்கம் பிடிக்காமல் நிலா முற்றத்தில் ஆர்யன் நின்றபடி ருஹானா சொன்னதையே எதிரொலிக்க வைத்திருந்தான். அவனது உறக்கத்தை உணவாக்கி கொள்கிறது அவளைப் பற்றிய நினைவுகள்!

———

துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஆர்யன் எதிரியை தேடிக்கொண்டிருக்க, ருஹானா அவன் முன்னே வந்து “உங்களை எனக்கு தெரியும்!” என்றாள். அவன் வேறு பக்கம் திரும்பினால் அங்கேயும் வந்து “நீங்க உள்ளுக்குள்ள நல்லவர். அங்க பாருங்க!” என கண்ணாடியை காட்டினாள். அங்கே வெள்ளைநிற உடையில் கண்ணியமான ஆர்யன் நின்றுக் கொண்டிருந்தான்.

படக்கென்று சோபாவில் இருந்து எழுந்த ஆர்யனுக்கு தான் அங்கேயே சாய்ந்து கண் அசந்துவிட்டது புரிந்தது. நெற்றியெல்லாம் வியர்த்திருக்க ‘இவ என்ன தூக்கத்திலும் வந்து தொந்தரவு செய்றா?’ என நினைத்தபடி முகத்தை துடைத்துக்கொண்டான். 

அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் காபி கோப்பை இருந்தது.

“குட் மார்னிங்!”

“எனக்கு உன்னோட காபி தேவையில்ல”

“காலை உணவுக்கு முன்ன நீங்க காபி குடிப்பீங்கன்னு நான் நினைச்சேன்”

“எனக்கு வேணும்னா நான் பணியாளர் கிட்ட கேட்டுப்பேன். நீ எனக்காக எதுவும் யோசிக்க வேணா”

“சரி, காபிக்கு பதிலா வேற எதாவது தேவையா?”

“இல்ல.. நான் தனியா இருக்கணும். அதான் எனக்கு வேணும்”

“சரி, உங்க விருப்பம். காலை உணவு தயாரானதும் நான் உங்களை கூப்பிட வரேன்”

“நீ ஒன்னும் கூப்பிட வேண்டாம். நான் இங்கயே சாப்பிட்டுக்குவேன்”

“ஓகே, உங்க ஆசைப்படி! நல்ல நாள்!”

‘என்ன தான் நினச்சிட்டு இருக்கா?’ என ஆர்யன் அவளை முறைக்க, படியேறியவள் அவனை பார்த்தபடியே கதவை மூடி சென்றாள்.

——- 

உணவு தட்டுடன் சித்தியை பார்த்த இவான் “சித்தப்பாக்கா சாப்பாடு கொண்டு போறீங்க, சித்தி?” என கேட்க, அவள் ஆமென்றாள்.

“சித்தப்பாக்கு என்மேல கோபம் வராதுன்னு நீங்க சொல்லியிருக்கீங்க தானே, சித்தி? நானும் சித்தப்பாக்கு எடுத்துட்டு வரவா?”

“கண்டிப்பா செல்லம்! மத்ததுலாம் கனமா இருக்கு. இந்த ரொட்டிக் கூடையை நீ பிடிச்சிக்கோ”

புன்னகையுடன் ருஹானா தர மகிழ்ச்சியுடன் அதை தூக்கிக்கொண்ட இவான், ஆர்யனின் அறைக்கதவை தட்டினான்.

“என்னை தொல்லை செய்யாதேன்னு உனக்கு நான் சொல்லியிருக்கேனா, இல்லயா?” என ஆர்யன் கத்த, இவான் கையில் தட்டுடன் உள்ளே வருவதை பார்த்ததும் வருத்தப்பட்டான்.

“சித்தப்பா! நான் உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கேன்”

எழுதிக் கொண்டிருந்த பேனாவை கீழே வைத்த ஆர்யன் இவானை பார்க்க, “இவான் உங்களோட சாப்பிட வந்திருக்கான்” என பின்னால் நின்ற ருஹானா சொல்ல, ஆர்யன் எழுந்து இவான் அருகே வந்து அவன் கையில் இருந்த கூடையை வாங்கிக்கொண்டான்.

இவானின் கைப்பிடித்து படிக்கட்டில் இறக்கிவிட்டவன் அவனை சோபா அருகே அழைத்துச் சென்றான். ரொட்டிக் கூடையை டீப்பாய் மேல் வைத்துவிட்டு “இங்க பாரு, அக்னி சிறகே! நீ ஒரு அர்ஸ்லான். அர்ஸ்லான் யார்க்கும் சேவகம் செய்ய மாட்டாங்க. உனக்கு எதாவது தேவைன்னா நீ கட்டளை இடனும். அது உனக்கு உடனே வந்து சேரும்” என சொல்லிவிட்டு ருஹானாவின் மீது ஒரு கோபப்பார்வையை வீசினான்.

‘இவனை திருத்தறது மிக சிரமம் போலவே!’ என ருஹானா மேலே பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“ஆனா என் சித்தி தான் இந்த உணவு தயாரிச்சாங்க” என்று சொல்லிவிட்டு “சித்தப்பா! நாம ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாமா?” என கேட்டான். அவன் கேட்டவிதம் ஆர்யனை நெகிழ வைக்க “சரிதான் சிங்கப்பையா!” என்றான்.

ருஹானா “நான் தேனும், வெண்ணையும் மறந்திட்டேன். நீங்க சாப்பிட்டே இருங்க, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றாள்.

அவள் சற்று நேரம் கழித்து திரும்பி வந்தபோது இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவான் தட்டில் “இந்த சீஸ்ஸும், ஆலிவ்வும் சாப்பிடு செல்லம்” என்று பரிமாறியவள், எட்டி ஆர்யன் தட்டிலும் வைத்தாள். ஆர்யன் உண்ணுவதை நிறுத்திவிட்டு அவளை கோபமாக பார்க்க, அவளும் ‘அப்படித்தான் செய்வேன்’ என்பது போல பார்த்தாள். “இனிய உணவு!” என்றாள், அப்படி பார்த்துக்கொண்டே.

“சித்தப்பா! தட்டை காலி செய்யணும், என்னைப்போலவே. சித்தி சொன்ன பேச்சை கேட்கணும். சித்தி வச்சதையும் சாப்பிட்டு முடிக்கணும்” என சொல்ல ஆர்யன் கண்களை உருட்டி அவளை பார்த்தான். “ஆமா இவான்! உடல் நலத்துக்காகவும், இவானுக்கு முன்மாதிரியாவும் உன் சித்தப்பா சாப்பிட்டு முடிப்பாங்க! அப்படித்தானே?” என ருஹானா கேட்க, இவான் முன்பு எதும் சொல்லமுடியாமல் “ஆமா!” என்று சொன்னவன் சாப்பிட்டு  முடித்தான்.

“நான் போய் உன் சித்தப்பாக்கு டீ கொண்டு வரேன்” என அவள் எழுந்து கொள்ள, “இல்ல, எனக்கு வேணாம். வேலை இருக்கு. அதை பார்க்கப் போறேன்” என்றான் ஆர்யன்.

தலையாட்டிய ருஹானா தட்டுக்களை எடுக்க, “சித்தப்பா! நீங்க வேலையை முடிச்சதும் நாம எங்காவது போலாமா?” என இவான் கேட்க, ஆர்யன் பதில் சொல்ல வாயை திறக்க, அதற்குள் ருஹானா “ஓஹ்! எனக்கு ஒரு நல்ல இடம் தெரியுமே! அது உன் சித்தப்பாவுக்கும் பிடிக்கும்” என சொல்ல, ஆர்யன் ‘இவள் அடங்கவே மாட்டாளா?’ என பார்த்தான்.

“ஒரு பெரிய மீன் காட்சியகம் திறந்திருக்காங்க. அங்க நூத்துக்கணக்கான மீன்கள் இருக்கு”  

“அப்படியா சித்தி? நிறைய இருக்கா?”

“ஆமா அன்பே! ஆனா இந்த முறை நாம மீன்களை பிடிக்க முடியாது” என ருஹானா அவர்களது யாட் சம்பாஷணையை நினைவு கூறவும், ஆர்யன் அவளை விழியெடுக்காமல் பார்த்தான், ‘உனக்கு ரொம்ப தைரியம் தான்’ என்பது போல.

“பிடிக்க முடியலனா பரவால்லை சித்தி! நாம பார்த்தா போதும்” என சொன்ன இவான் ஆர்யனிடம் திரும்பி “நாம போலாமா, சித்தப்பா?” என கெஞ்சுதலாக கேட்டான்.

Advertisement