Advertisement

“அம்ஜத் அண்ணா! நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதானா? அப்பவே மலர்கள் பேசும் மொழி உங்களுக்கு புரியுமா?”

“இல்லயே ருஹானா! வளர்ந்த பின்னாடி தான் இப்படியாகிட்டேன்”

ஸ்நேகமான புன்சிரிப்புடன் அவன் வேலையை தொடர்ந்து செய்தான். அவன் மனதை கஷ்டப்படுத்த போகிறோமே எனும் மிகுந்த குற்றவுணர்வு ருஹானாவிற்கு இருந்தாலும் வேறு எந்த வழியும் அவளுக்கு தெரியாததால் மன வருத்தத்துடனே அவனிடம் பேசினாள்.

“அம்ஜத் அண்ணா! நான் கேட்கறது உங்களுக்கு பழைய துன்பங்களை நினைவுப்படுத்தும். ஆனா நான் இவானோட நல்லதுக்காக கேட்கறேன். உங்க இளமைப் பருவத்தை பற்றி எனக்கு சொல்லுங்க”

வாடி வதங்கிய செடிகளை மண்ணில் போட்டு புதைத்த அம்ஜத் வார்த்தைக்கும் வலிக்குமோ என்பது போல மெதுவாக நிறுத்தி சொன்னான்.

“ஒவ்வொருத்தரா போனாங்க.. முதல்ல எங்க அம்மா.. ஆர்யனை கீழே தள்ளிவிட்டுட்டு போனாங்க.. உன் அப்பா போல இருக்காதேன்னு சொல்லிட்டு போனாங்க… ஆர்யனோட சிறகுகளை உடைச்சிட்டு போனாங்க… மரக்கடை ஃபாரூக்கோட போய்ட்டாங்க… ஆர்யன் ரொம்ப அழுதான்.. ஏங்கி ஏங்கி அழுதான்”

ருஹானா அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள். 

“அப்புறம் அப்பா… நான் அக்ரம் கூட தூங்கிட்டு இருந்தேன். ஆர்யன் எங்களை தூங்கவச்சிட்டு அவன் முழிச்சி உக்கார்ந்து இருக்கான். அப்பா அறையில சத்தம் கேட்கவும் ஓடியிருக்கான். அப்பா கயித்துல தொங்கிட்டு இருக்கார். இவன் அவரை காப்பாத்த நினைச்சி அவர் காலை பிடிச்சி இருக்கான். சின்ன பையன் தானே. பாரம் தாங்கமுடியல. அப்பா அவன் மேலயே விழுந்திட்டார். அவன் கை உடைஞ்சிடுச்சி”

ருஹானா சத்தம் வெளிவராமல் வாயை பொத்திக்கொண்டு தேம்பலானாள்.

“நான் பேசாம நின்னுட்டு இருந்தேன். உண்மையில அப்பா பக்கத்துல நானும் படுக்க போனேன். ஆனா ஆர்யன் என்னை போக விடல. அப்பாவோட உதிர்ந்த முடியை நான் எடுத்து வச்சிக்கிட்டேன்”

அம்ஜத் மண்ணை கொத்திகொண்டே சொல்ல ருஹானாவின் இதயம் துக்கத்தால் தத்தளித்தது. எழுந்து நின்றுவிட்டாள்.

“அப்புறம் ரொம்ப நாளுக்கு அந்த முடியை எடுத்து என் தலையில வச்சிக்குவேன். அது கீழ விழாம இருக்க தொப்பியை போட்டுக்குவேன். வெளிய பசங்க என்னை கிண்டல் செய்து சிரிப்பாங்க. நான் அப்பா முடி பறக்காம இருக்க தொப்பி போடுவேன். ஆனா அவங்க சொல்வாங்க, நீ உன் மூளை பறந்திடக்கூடாதுன்னு தொப்பி வச்சிருக்கேன்னு என் தொப்பியை பிடிச்சி இழுப்பாங்க”

அவள் கண்களில் இருந்து பெருகும் நீரை பார்க்காமல் அம்ஜத் பேசிக்கொண்டே போனான்.

“என்னை பைத்தியம்னு கூப்பிடுவாங்க. நீ ஸ்டோர்ரூம்ல இருந்து ஒரு கார் எடுத்துக் கொடுத்தேல ருஹானா?” என அவன் கேட்க அவளால் தலையைக் கூட ஆட்ட முடியவில்லை. “அதை என்கிட்டே இருந்து பிடுங்கறதுக்காக என்னை அடிச்சி போட்டாங்க. ஆனா ஆர்யன் எல்லாரையும் நல்லா உதைச்சி துரத்திட்டான்” அம்ஜத் சிரித்துக்கொண்டே சொல்ல அவளுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

“அந்த நாள்ல இருந்து எங்களோட குட்டி தம்பி எங்க ரெண்டு பேருக்கும் அண்ணன் ஆகிட்டான்…. எங்க அப்பாவாகிட்டான். அதுக்கு அப்புறம் அவன் ஒரு மலை போல நின்னான்.. வலிமையா, உறுதியா, கடுமையா….”

பெருமை பொங்க தம்பியின் புகழ் பாடிய அண்ணன் “அப்புறம்… நான்… நான் பூக்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். அங்க பாரு, ருஹானா!” என பூத்திருக்கும் செடியின் அருகே போனவன் “இது புதுசா முளைச்சிருக்கு. நம்பிக்கையா முளைச்சிருக்கு” என சொல்லி நீர் வார்க்க ஆரம்பித்தான்.

கண்ணின் நீரை துடைத்துக்கொண்ட ருஹானா வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.

———-

“அந்த காதிர் அண்ணன் தம்பிங்க எங்க ஓடிட்டாங்க ரஷீத்? இன்னுமா உங்களால கண்டுபிடிக்க முடியல? அவங்க சம்பந்தப்பட்ட எல்லா இடங்கள்லயும் தேடுங்க. அவனுக்கு நானே என் கையால தண்டனை கொடுக்கனும். அர்ஸ்லான் யாருன்னு மறந்திட்டாங்க போல. நான் நியாபகம் வர வைக்கிறேன்”

ஆர்யன் செல்பேசியில் கத்திக்கொண்டு இருக்க, சையத் அவன் முன்னால் இரு கோப்பைகளில் தேநீரை கொண்டுவந்து வைத்துவிட்டு அமைதியாக சென்றார். “பாபா! அது யாருக்கு?” என எதிரே இருந்த தேநீர் கோப்பையை கைநீட்டி ஆர்யன் கேட்க, “அது உன் தனிமைக்கு” என திரும்பாமல் சொல்லி நடந்துவிட்டார்.

தேநீரையும் எதிர் முக்காலியையும் ஆர்யன் பார்க்க, காலியாக இருந்த முக்காலி அவன் மனதை அசைத்து பார்த்தது. ருஹானாவோடு அங்கே கழித்த தருணங்களை புரட்டி காட்டியது. சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் ஆர்யன் அவளின் நினைவுத் தீண்டலில் தடுமாறிப் போகிறான்.

முகம் மென்மையுற அந்த கணங்களை சில விநாடிகள் ரசித்து பார்த்த ஆர்யன் உடனே எரிச்சலானான்.

வேகமாக இரு கோப்பை தேநீரையும் எடுத்து கீழே கொட்டிவிட்டு சையத்திடமும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டான்.

——

குளத்தின் திண்டின் அமர்ந்து ருஹானா அழுது கொண்டிருக்க மிஷால் அர்ஸ்லான் மாளிகைக்கு வந்தான். வீட்டின் வெளியே குளிரில் தனிமையில் ருஹானாவை கண்ட மிஷால், தன்னிடம் கரீமா போனில் சொல்லியது உண்மை என நம்பி “ஏன் அழுறே, ருஹானா? அந்த மாஃபியா உன்னை துன்புறுத்தினானா?” என கோபமாக கேட்டான்.

கண்ணீரை அவசரமாக துடைத்துக்கொண்டு எழுந்த ருஹானா “இல்ல மிஷால். நான் தான் அவரை கஷ்டப்படுத்திட்டேன், முதல் முறையா” என்றாள்.

“நீ என்ன சொல்றே, ருஹானா? நீ எப்படி அவனை…..?”

“அதை விடு மிஷால். நான் ஓகே தான். நீ எதுக்கு வந்தே?”

“எனக்கு உன்னை பத்தி கவலையா இருந்தது. அதான் உன்னை பார்க்க வந்தேன். அதும் இல்லாம நீ, நான், இவான் சேர்ந்து எங்காவது போகலாம்னு தோணுச்சி. புது மீன் காட்சியகம் ஒன்னு திறந்திருக்காங்க. அதை பார்த்தா இவான் குஷியாகிடுவான். என்ன சொல்றே? போகலாமா?”

“போகலாமே! நான் இவானை கேட்டுட்டு உனக்கு சொல்றேன். இவான் என்னை தேடுவான். நீயும் வாயேன். உள்ள போகலாம். ஒரு காபி குடிச்சிட்டு போ”

“இல்ல ருஹானா! இன்னொரு முறை பார்க்கலாம். நீ இவான் கிட்டே கேட்டுட்டு எனக்கு போன் செய்”

ருஹானாவிடம் இல்லாத காதலை போராடி பெற முடிவு செய்த மிஷால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள துவங்கினான்.

———

ரஷீத் செல்பேசியில் அவன் ஆட்களை விரட்டிக்கொண்டு இருக்க, சல்மா கையில் செல்பேசியுடன் அங்கே வந்து ரஷீத்திற்கு காட்டினாள். “நான் இணையத்துல வேற ஏதோ பார்க்கும்போது இதை பார்த்தேன்”

காதிர் முகத்தை அவள் போனில் பார்த்த ரஷீத் “என்ன இது?” என கேட்டான். சல்மா காதிர் பேசியதை போட்டுக் காட்டினாள்.

“நாங்க களத்துல இறங்கிட்டோம். தலைவர் ஷாரிக் சொன்னது தான் எங்களுக்கு கட்டளை. ஆர்யன் அர்ஸ்லான்! உன் எல்லையை தாண்டாதே. நாங்க உன்னை நசுக்கிடுவோம்”

காதிர் சுட்டுவிரலை உயர்த்தி மிரட்டலாக பேசும் அந்த காணொளியை ரஷீத் பார்த்து முடித்ததும் அவன் யார் என சல்மா கேட்டாள்.

“இவன் பேரு காதிர். இவனுக்கு ஒரு தம்பி இருக்கான். ரெண்டு பேரும் ஆர்யனோட எதிரி ஷாரிக்கோட சேர்ந்துக்கிட்டு வாலை ஆட்டிட்டு இருக்காங்க. நாங்க இவங்களை பின்தொடர்ந்துட்டு தான் இருக்கோம்”

“பார்த்தா ரொம்ப ஆபத்தானவன் போல தெரியுதே!”

“கவலைப்படாதீங்க சல்மா. ஆர்யனுக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. சீக்கிரம் இவங்களுக்கு முடிவு கட்டிடுவார்”

——–

அறைக்கு திரும்பிய ஆர்யன் தரையில் கண்ணாடி சிதறல்களுடன் கிடந்த துப்பாக்கி குண்டுகளையும், மேசையில் ருஹானா வைத்த காரையும் பார்த்தபடி நின்றான். அவள் பேசிய அத்தனை சொற்களும் திரும்ப அவன் காதை வந்தடைந்தது.

மெதுவாக மேசை அருகே வந்தவன் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான். கதவு தட்டும் சத்தம் அவனை தொல்லை செய்ய, ‘இந்நேரம் வருவது யார்’ என புரிந்தவன் கோபமாக வாசலை நோக்கினான்.

ருஹானா உள்ளே வர, புருவங்கள் சுருக்கி “உனக்கு என்ன வேணும்?” என அவன் வினவ, அவள் அவனுக்கு பதில் சொல்லாமல் நேராக குண்டுகளை பொறுக்க துவங்க, கண்ணாடித் துண்டுகள் அவள் கையில் குத்திவிடுமே எனும் இயல்பாக தோன்றிய பயத்தில் வேகமாக எழுந்தவன் அவள் அருகே வந்து கோபமாக “இதெல்லாம் போட்டுட்டு வெளியே போ!” என்றான்.

அவன் சொன்னதை பொருட்படுத்தாது எல்லா குண்டுகளையும் எடுத்தவள் அதை அவன் முன்னே மேசையில் வைத்தாள். “இன்னும் உங்களை எனக்கு தெரியலன்னு நீங்க என்னை பழிக்க முடியாது. ஏன்னா நான் உங்களை பார்த்தேன். நீங்க யாருன்னு எனக்கு தெரிந்துடுச்சி”   

ஆர்யன் முகத்தை பார்த்து அவள் சொல்ல ‘என்ன இவள், எப்படி சொன்னாலும் ஓய மாட்றாளே’ என சலித்த ஆர்யன் முகத்தில் இன்னும் கடுமையை கொண்டுவந்து “உனக்கு என்ன வேணும்?” என மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

ஒரு குண்டை கையில் எடுத்தவள் அவன் முகத்துக்கு நேரே அதை பிடித்து “ஒரு நாள் இந்த குண்டு இவான் மேல பாயக்கூடாதுன்னு நான் பயப்படுறேன்” என்று அவள் சொல்ல, ஆர்யனின் கோபம் தலைக்கேற “அப்படி நடக்காது” என பல்லை கடித்துக்கொண்டு சொன்னான்.

மற்றொரு குண்டை எடுத்து “இது உங்க குடும்பத்தினர் மேல பாயக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்” என அவள் சொல்ல, “என் உயிர் இருக்கறவரை அப்படி நடக்க விட மாட்டேன்” என சொன்ன ஆர்யனின் சினம் எல்லையை கடந்தது.

மூன்றாவது குண்டை எடுத்து காட்டி “உங்க இதயத்துல இந்த குண்டு பாயாதுன்னு எப்படி நீங்க உறுதியா சொல்ல முடியும்?” அவள் கேட்க, அவன் பதில் சொல்லாமல் அவளை முறைத்துப் பார்த்தான்.

“இனிமேல் இதை நான் அனுமதிக்க மாட்டேன். உங்க இருட்டு உலகத்தில நீங்க தொலைஞ்சி போக நான் விட மாட்டேன். இவானோ, அம்ஜத் அண்ணாவோ, இல்ல….” நானோ என சொல்ல வந்தவள் சிறிது நிறுத்தி “யாரும் உங்களை இழந்துடக் கூடாது” என்று சொல்லி குண்டுகளை அதே இடத்தில் வைத்தாள்.  

அவள் அவனை விட்டு விலகி போவதற்காக அவளை கூட்டி சென்று காட்டியது, பேசியது எல்லாம் அவளை இன்னும் அவனுக்கு நெருக்கமாகவே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது

அவள் சொல்லும் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சில் ஆழமாக குத்த, ஆர்யன் அதிர்ந்துப்போய் கேட்டிருக்க, ருஹானா அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து சொன்னாள். 

“இதை தடுக்க என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் செய்வேன்”

(தொடரும்)

Advertisement