Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 82

“நம்ப மாட்டேன்னு சொன்னேல, இந்த குண்டுகளை நல்லா பாரு” என்று ஆர்யன் சிதறி கிடந்த குண்டுகளை ருஹானாவிற்கு காட்டினான். பின் குனிந்து ஒரு துப்பாக்கி குண்டை கையில் எடுத்து அவள் முகத்திற்கு நேராக நீட்டி “இது என் முதுகுல பாய்ந்த குண்டு” என்று காட்டிவிட்டு மற்றொரு குண்டை எடுத்தான். “இது எலும்புகளை தாண்டி என் இதயத்துக்கு பக்கத்தில துளைத்தது” என்று இரைய, அவள் அவனை திகைப்புடன் பார்த்தாள்.

குண்டுகளை கையில் மடக்கிக்கொண்டவன் “இது எல்லாம்தான் நான்” என சத்தமாக சொன்னவன், அவளை இன்னும் நெருங்கி அவள் கண்ணை பார்த்து பேசினான். “இத்தனையும் என் மேல் சுடப்பட்டது. இந்த ஈயத்துண்டு ஒருத்தர் உடம்புல தானே ஊடுருவி போகும்?” 

ருஹானா பதில் சொல்லவில்லை. அவனும் எதிர்பார்க்கவில்லை. “ஆனா என்னோட ஆன்மாவை ஊடுருவினது இது!” அவள் அவனை இரக்கமாக பார்க்க அடுத்த கேள்வியை கேட்டான். “ஆன்மால ரத்தம் வடியாது தானே? ஆனா என்னோட ஆன்மா ரத்தம் சிந்திச்சி.”   

அவள் கண்களில் நீர் வடிய “உயிர் போகும்முன்னே ஆன்மா இறந்து போகுமா?” என அவன் கேட்க, அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் கண்களை திறக்கும்வரை காத்திருந்தவன் “என் ஆன்மா செத்துப்போச்சி. இதய உணர்ச்சிகள் மரிச்சிப்போய் என் உடம்புல புதைஞ்சி தழும்பா இருக்கு. நான் ஒரு கல். நான் பெரிய பாறையா மாறிட்டேன். அடிபட்டு அடிபட்டு தான் நான் வளர்ந்தேன்” என்றான்.

துக்கம் ருஹானாவின் தொண்டையை அடைக்க, அவள் வாயடைத்துப் போய் நின்றாள். “நான் யார்னு உனக்கு இப்போ புரியுதா?” என கேட்டவன் கையிலிருந்த குண்டுகளை அவள் முன்னே வீசி அடித்தான். அவளை விட்டு அகன்று மேசைக்கு உட்புறம் சென்று திரும்பி நின்று கொண்டான்.

அவள் என்னிதயத்தின் ஆழம் நுழைய தடை போட்டு

காரணங்கள் கூறுகிறேன் கற்பாறை நான் என்கிறேன்

பாறையில் மறைந்திருக்கும் சிற்பத்தை

கடுமையான தாக்குதல்கள் வெளிக் கொணராது.

 

சில விநாடிகள் அசையாமல் நின்ற ருஹானா பின்பு வேகமாக மூன்று படிக்கட்டுகளையும் தாண்டி வெளியே சென்றாள். 

அவள் இன்னும் வாக்குவாதம் செய்வாள் என எதிர்பார்த்தவனுக்கு அவள் சென்றுவிட்டது அப்பாடா என இருந்தது. ஆனால் சிறிது ஏமாற்றமாகவும் உணர்ந்தான். அது ஏன் என அவனுக்கு புரியவில்லை.

சிறிதுநேரத்தில் அவள் மீண்டும் உள்ளே வர, அவள் காலடியோசையிலேயே வந்தது ருஹானா தான் என அறிந்து கொண்டவன் திரும்பியும் பார்க்கவில்லை.

“இந்த குண்டுகளால மட்டும் நீங்க உருவாக்கப்படல. இதும் நீங்க தான்!” என அவன் முன்னே ருஹானா மரக் காரை நீட்டினாள். அவன் கீழ்க்கண்ணால் அதை பார்க்க, அவள் அதை மேசை மேல் வைத்தாள்.

“இந்த காரை அவரோட அண்ணனுக்காக செய்த சின்ன பையன், இதை நிஜ காராக்க உழைத்தவர், அண்ணனோட சேர்ந்து பெரிய மைதானங்கள்ல மேட்ச் பார்க்க ஆசைப்பட்டவர், இன்னும் இது போல கனவுகளும் ஆசைகளும் கொண்டவர்.. இதும் நீங்க தான்”

ஆர்யன் அவள் புறம் திரும்பாமல் இறுக்கமாக நேரே பார்த்தபடியே இருந்தான்.

“நம்பிக்கையும், கனவுகளும் குண்டு துளைக்க முடியாதவை. அது எல்லாமே உங்களுக்கு உள்ள இருக்கு. நீங்க அதை புறக்கணித்தாலும், மறுத்தாலும் அப்படியே தான் இருக்கு. எல்லாரையும் போல மனதில் நம்பிக்கை கொண்ட நார்மல் சின்ன பையன் தான் நீங்களும்”   

அவள் பக்கம் தலையை திருப்பியவன் “நார்மல் பையன்?” விரக்தியாக கேட்டவன் “நான் நார்மல் பையன்! அஹ்?” என அதையே இரைச்சலாக கேட்டுவிட்டு அவள் கையை பிடித்து “வா என்கூட!” என இழுத்து சென்றான். அவனுடைய வேகத்தில் தடுமாறியவள் “எங்கே?” என கத்த, அதற்கு செவிசாய்க்காமல் படிக்கட்டில் தடதடவென இறங்கினான்.

“என்ன செய்றீங்க? எனக்கு கை வலிக்குது.. விடுங்க.. எங்க கூட்டிட்டு போறீங்க?.. உங்களுக்கு என்ன பைத்தியமா?” என ருஹானா சத்தம் போட, அந்த சத்தத்தில் சல்மா எட்டிப் பார்த்தாள். கத்திக்கொண்டே வரும் ருஹானாவை ஆர்யன் காரில் ஏற்றி செல்லும்வரை பின்னாலேயே வந்தாள்.

கார் சீறிப் பாய அதை பார்த்துக்கொண்டே கரீமா உள்ளே வந்தாள்.

“என்ன நடக்குது, சல்மா?”

“ஆர்யன் அந்த குப்பைக்காரியை இழுத்துட்டு வந்தான், அக்கா. கார்ல தள்ளினான். எங்க கூட்டிட்டு போறான்னு தெரியல” 

“நல்லது. ஆர்யன் அவனோட இயல்புக்கு வந்துட்டான்” கரீமா சிரித்தாள்.

“நல்லதா? இதுல என்ன நல்லது இருக்கு அக்கா?” 

“அவனோட கோபத்தை நாம இன்னும் தூண்டனும், சல்மா. அவனோட இருண்ட உலகத்திலயே அவனை வச்சிருக்க நீயும் முயற்சி செய்யணும். புரியுதா உனக்கு? இப்போ நமக்கு தேவை ஆர்யனோட முரட்டுத்தனம் தான்”

“சொல்லிட்டேல அக்கா! இனி நான் பார்த்துக்கறேன். எப்படி தீ மூட்டனும்னு எனக்கு தெரியும். நீ கவலைப்படாதே”

“நானும் ஒன்னும் சும்மா இருக்க போறது இல்ல” என சொன்ன கரீமா, ஆவலாக பார்க்கும் சல்மாவிடம் புன்னகைத்தபடி செல்பேசியை எடுத்து பதட்டமாக நடித்தவாறே பேசினாள்.

“ஹலோ மிஷால்! நீ ஒரு மணி நேரத்துல இங்க மாளிகைக்கு வர முடியுமா? ருஹானாவுக்கு உன்னோட உதவி தேவைப்படலாம்”

——  

ஆர்யன் காரை நிறுத்திய இடத்தை பார்த்து ருஹானா குழப்பமாக “இங்க ஏன் கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என கேட்டாள். அவளுக்கு பதில் சொல்லாமல் காரின் பின்னிருக்கையில் இருந்த குளிர்காக்கும் அங்கியை எடுத்து அவள் மடியில் போட்ட ஆர்யன் “இதை போடு” என்றான். அவன் அவளை இழுத்து வந்த அவசரத்தில் குளிர் தடுக்கும் எதையும் அவள் அணிந்திருக்கவில்லை.

மிதமிஞ்சிய கோபத்திலும் தன்னிச்சையாக அவள் நலம் பேணும் அவன் அக்கறையை அவனும் உணரவில்லை. அவளும் உணரவில்லை.

சுற்றி வந்து அவள் பக்க கதவை திறந்துவிட்ட ஆர்யன் “வா, என்னோட நார்மல் குழந்தைப் பருவத்தை உனக்கு காட்றேன்” என கையை பிடித்து இழுத்துப் போனான்.

கார் செல்ல முடியாத பாதையில் அவளை நடத்திக் கூட்டிப்போய் ஒரு குப்பை மேட்டின் அருகே விட்டான்.

“இந்த இடத்துல தான் என்னோட முதல் சண்டை நடந்தது. அப்போ எனக்கு எட்டு வயசு. அம்ஜத் அண்ணனை நாலு பசங்க அடிச்சிட்டு இருந்தாங்க. நீ நார்மல்ன்னு காட்டினியே அந்த காரை அவர் கிட்டே இருந்து பறிக்க பார்த்தாங்க”

“உனக்கு தெரியுமா விலா எலும்பு உடையும்போது எப்படி சத்தம் வரும்ன்னு? அது உடைஞ்சா எப்படி உடம்பு உருக்குலைந்து போய்டும்ன்னு? அந்த எலும்பு முறிவு எப்படி ஒரு சின்ன குச்சியை கற்பாறையா மாத்தும்னு?”

ஆர்யன் இதயம் வலிக்க பேச பேச ருஹானா திக்பிரமை அடைந்திருந்தாள்

“அழுகை வரும். உன்னோட உடன்பிறப்பு ரத்தக்காயம்பட்டு தரையில கிடக்கறதை பார்க்கும்போது அழ முடியாது. ஏன்னா காப்பாத்த வேறு யாரும் இல்ல. நீ தான் அவனை காப்பாத்தணும். அப்பான்னு கத்தாம ஆர்யன்னு அவன் கத்தும்போது, அந்த அடிதடில நுழையாம நீ நிற்க முடியாது. விலா எலும்பு உடைஞ்சாலும் பரவாயில்லை, கார் உடையக் கூடாதுன்னு காரை பாதுகாக்கற அண்ணனை நீ எப்படி காப்பாத்துவே?”

ருஹானாவின் கண்களில் இருந்து நீர் இறங்க, வேகமாக பேசியவன் நிறுத்திக்கொண்டான். குரலை தழைத்து “என் நார்மல் சிறுவயதோட மிக பரிதாபமான கட்டத்துக்கு நாம இன்னும் வரல” என திகிலேற்றியவன் அவள் கையை மீண்டும் பிடித்து பக்கத்தில் வேறு இடத்திற்கு கூட்டிப்போனான்.

புற்கள் மண்டிக்கிடந்த இடத்தை அவளுக்கு காட்டினான் “இங்க வயசு பசங்க கால்பந்து விளையாடிட்டு இருந்தாங்க. நான் விளையாடவும் இல்ல. வேடிக்கையும் பார்க்கல. என் அண்ணன்களுக்கு ரொட்டி வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். என் பின்னால சுட்டாங்க. அதான் என்னோட முதல் குண்டு. அப்போ எனக்கு பதினாலு வயசு. இது எதுவுமே நான் எனக்காக செய்யல”  

“நான்….“ என தொடங்கி வார்த்தை வராமல் நின்றவளை “இது இன்னும் முடியல.. வா” என கைப்பற்றி அழைத்து சென்றான். சிறுமலை ஒன்றின் உச்சிக்கு அவளை ஏற்றி சென்றவன் உச்சியிலிருந்து அவளை தள்ளிவிட்டான், அவளை பிடித்த பிடியை விடாமலே.

“ஆஹ்!” என அவள் பயந்து நடுங்க, அவளை பின்னுக்கு இழுத்தவன் “அன்னைக்கு யாரும் இப்படி என்னை காப்பாத்தல. பஜார்ல கடை போட என்னை விட மாட்டாங்க. நானும் தினமும் போவேன். என்னை இங்க கொண்டுவந்து உதைச்சி உருட்டி விடுவாங்க. கை கால் உடைஞ்சா நான் திரும்ப பஜாருக்கு வரமாட்டேன்னு” என சொல்ல அவன் பட்ட பாட்டை கேட்க அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஒரு பெரிய கல்லை காலால் தள்ளிவிட்ட ஆர்யன், அது கீழே உருண்டோட அதை பார்த்துக்கொண்டே சொன்னான். “என்னை ஒரு கல்லா மேல இருந்து உருட்டி விட்டாங்க. நான் உருண்டு உருண்டு பெரிய பாறையா அவங்க எதிர்ல உருமாறி நின்னேன்” 

சிறிது மௌனத்திற்கு பின் “நிஜ ஆர்யனை இப்போ நீ பார்த்திட்டியா? என்னோட நார்மல் சின்ன வயசை பார்த்தியா?” என சொல்லியபடி அவள் தோள்களை பற்றி உலுக்கினான்.  “இதெல்லாம் தான் என்னை உருவாக்குச்சி. இந்த புழுதி, இந்த அழுக்கு, இந்த ஏழ்மை இதெல்லாம் தான்” அவள் சத்தமாக அழவும் அவளை விடுவித்தான்.

“நீ சொல்றே.. நான் பழைய ஆர்யன் இல்ல.. மாறிட்டேன்னு… இப்போ சொல்லு… நான் மாறிட்டேனா?… இல்ல… அதே ஆர்யன் தான் இப்பவும்… நான் மாறல…. நான் ஆர்யன் அர்ஸ்லான்”

இல்லை என தலையாட்டி மறுத்தவள் கண்ணீர் மல்க “நீங்க சொல்லாதது இன்னும் ஏதோ இருக்கு. உங்க கோபத்துக்கு பின்னாடி என்ன இருக்கு? அதை நீங்க எனக்கு சொல்லவேயில்ல..  அது என்ன?” என அவள் கேட்க, அவளிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டான்.

இவள் இதயத்திலிருந்து அவனை அகற்ற அவன் போராடுகிறான். அவளோ அவன் இதயத்தை திறந்து பார்க்க விழைகிறாள்.

‘இதற்கு மேல் இவளிடமிருந்து தப்பிக்க முடியாது’ என அவன் காரில் ஏறி புறப்பட, அவள் அங்கேயே அந்த மலை முகட்டில் நின்றிருந்தாள். அவன் எடுத்து தந்த மேல் அங்கியும் அவள் அணிந்திருக்கவில்லை. கடுங்குளிர் அவளை தாக்க, கைகளை கட்டிக்கொண்டு நின்றவளை பின்பக்க கண்ணாடியில் பார்த்தவன் காரை நிறுத்தினான். சில விநாடிகள் தான். பின் காரை செலுத்திக்கொண்டு அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

———

‘ஆர்யன் தன்னிடம் சொல்லாமல் விட்டது என்ன, அவனின் கடுங்கோபத்துக்கு உண்மையான காரணம் தான் என்ன, அதை எப்படி தெரிந்து கொள்வது?’ என யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்த ருஹானா அம்ஜத்தை நாடி சென்றாள். பின்பக்க மாடி தோட்டத்தில் வாடிய செடிகளுக்கு உரம் போட்டுக் கொண்டிருந்த அம்ஜத்திற்கு அவளும் உதவி செய்து கொண்டே பேச்சுக் கொடுத்தாள்.

“இந்த மலர்கள் எல்லாம் மிக அதிர்ஷ்டமானது. இல்லன்னா உங்களை மாதிரி பார்த்துக்கறவங்க கிடைப்பாங்களா?”

அம்ஜத் நிமிர்ந்து அவளை பார்த்து புன்னகைத்தான்.

Advertisement