Advertisement

அது வானம் நோக்கி சென்று பின் மனம் மாறி பூமி வந்தது. அவன் முன்னே புல்தரையில் குத்திட்டு நின்று ‘உன்னால் அவளை விலக்க முடியாது’ என ஆடியது. அதை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவனை ருஹானா  சமையலறையில் இருந்து கண்ணாடி சுவர் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் மேல் கோபப்பட்டு போனவனும், மன அமைதியற்று தவிப்பதை கண்டு காரணம் யூகிக்க முடியாமல் குழம்பினாள்.

ஆர்யன் பலகையில் ஆழமாக பதிந்திருந்த எல்லா அம்புகளையும் உருவி எடுத்தான். மீண்டும் அம்புவிட யத்தனிக்க, ‘உன்னால் முடியாது. அன்பு பாதையை விட்டு விலக முடியாது. நீ முயன்றாலும் உன்னை அது விடாது’ என சையத் ஆருடம் கூற, அம்புகள் அனைத்தையும் கீழே விசிறியெறிந்தான்.

——— 

காலையில் தயாராகி அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன், எதிரே ருஹானா இவானை எழுப்ப அவன் அறைக்கு வருவதை பார்த்து நின்றான். அவளிடம் விலகி இருக்க முடிவு எடுத்ததெல்லாம் மறந்து அவளை பார்த்ததும் மனங்குளிர, அவளையே நோக்கினான். சேராது இரு துருவங்களும் என தீர்மானித்தும் தேடி தொலைகிறது அவன் விழிகள்.

ருஹானாவும் அவனை ஏறிட்டு பார்த்தும், நேற்று அவன் பேசிய பேச்சின் தாக்கம் அவள் கண்களில் நீரோட வைக்க, குனிந்தபடி விலகி இவான் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளின் கண்ணீர் கண்டு கரைந்து போனவன், இவான் அறைக்கு நடந்து கதவின் பிடியில் கை வைத்தான். ‘இந்த பனிக்கட்டி சுமை என்னை சுடுது. என்னால தாங்கமுடியல’ சையத்திடம் தான் சொன்னது திரும்ப அவனுக்கே கேட்க, திரும்பி வந்துவிட்டான்.

சில அடிகள் எடுத்து வைத்தவன் செல்பேசியை மறந்து வைத்துவிட்டதை உணர்ந்து மீண்டும் அவன் அறைக்கு சென்றான்.

இவான் சோகமாக கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்த ருஹானா “ஏன் கண்ணே கவலையா இருக்கே?” என அவன் தலையை வருடி கேட்டாள்.

“சித்தப்பா என் மேல கோபமா இருக்காரா, சித்தி?”

“உன்மேல ஏன் கோபப்பட போறார்?”

“நேத்து நான் கூப்பிட்டப்போ சித்தப்பா என்னை பார்க்கவே இல்ல. நான் ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா? இனிமேல் சித்தப்பா என்கிட்டே அன்பா இருக்க மாட்டாரா? நான் எந்த தப்பு செய்தாலும் வேணும்னே அதை செய்யல. எனக்கு தெரியாம செஞ்சிருப்பேன்”

“தேனே! நீ எதும் செய்யல. கவலைப்படாதே உன் சித்தப்பா உன்னை அதிகமா நேசிக்கிறார். உன்மேல எப்பவும் அவர் கோபப்பட மாட்டார்”

“அப்படினா சித்தப்பாவோட கோபம் போய்டுமா?”

“கண்டிப்பா, மானே! சரி, உனக்கு பசிக்கலையா? எனக்கு ரொம்ப பசிக்குது. சாரா ஆண்ட்டி உனக்கு பிடிச்ச மாதிரி ஆம்லேட் செஞ்சிருக்காங்க. நாம சேர்ந்து சாப்பிடுவோமா?” என இவானின் மனதை மாற்றி வெளியே அழைத்து வந்தாள்.

ஆர்யன் கோபமாக கத்துவது வெளியே வரை கேட்டது. “உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது ரஷீத்? அந்த ஏமாத்துக்காரனை என்கிட்டே இழுத்துட்டு வா. அவனுக்கு நானே தண்டனை தரேன். என் கையால தரேன்”

பயந்துபோய் ருஹானாவை கட்டிக்கொண்ட இவான் “சித்தி! பாருங்க, சித்தப்பா எவ்வளவு கோபமா இருக்கார்! முன்னாடி மாதிரி கோபப்படுறார்” என அழுதான்.

அவனை அணைத்துக்கொண்ட ருஹானா “பயப்படாதே இவான்! எல்லாம் சரியாகிடும். வா போகலாம்” என கைப்பிடித்து அழைத்து சென்றாள்.

———–

“ருஹானா பத்தி பேசணும்னு என்னை வர சொல்லிட்டு ஏன் நீ பேசாம இருக்கே மிஷால்?”

“கரீமா மேம்! உங்ககிட்டே உதவி கேட்கத் தான் உங்களை கூப்பிட்டேன்”

“நான் தான் போன்லயே சொன்னேனே, மிஷால்! ருஹானாவுக்காக நான் எதுவும் செய்வேனே”

“நன்றி கரீமா மேம்! நான் வருடக்கணக்காக ருஹானாவை காதலிக்கிறேன். அவளை இழக்க என்னால முடியாது. ஆனா எப்போ அர்ஸ்லான் மாளிகைக்கு அவ வந்தாளோ அந்த நாள்ல இருந்து அவ என்கிட்டே இருந்து விலகிப் போயிட்டா”

“இதுல நான் என்ன செய்ய முடியும், மிஷால்?”

“எங்க ரெண்டுபேர் உறவை நீங்க தான் சீர்படுத்தி தரணும். அவ திரும்ப எனக்கு கிடைக்க நீங்க உதவி செய்யணும்”

“கண்டிப்பா செய்றேன். கவலைப்படாதே. முதன்முறையா உன்னை பார்த்தவுடனே நான் நினைச்சேன், நீங்க ரெண்டுபேரும் பொருத்தமான ஜோடியா இருப்பீங்கனு. என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் நிச்சயம் செய்றேன். நீ சந்தோசமா இரு”  

———-

சமையலறைக்குள் இருக்கும் சின்ன மேசையில் எதிரே பரப்பி வைத்திருக்கும் எந்த உணவையும் இவான் தொட்டுக்கூட பார்க்கவில்லை. சாரா சூடாக தயார் செய்து தந்த முட்டையை ருஹானா வாங்கிக்கொண்டு வந்து, இவானுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். 

“நீ சாப்பிட்டதும் அம்ஜத் பெரியப்பாவோட சேர்ந்து பூக்களை பார்க்க போலாம் தேனே!”

“டூலிப்ஸ் செடியோட கிழங்குகள் இன்னைக்கு வரும். நாம அதை நட்டு வைக்கலாம்”

“அப்புறம் உன்னோட களிமண் அச்சு வச்சி விளையாடலாம்”

“இல்லனா தோட்டத்துல சுத்தலாம்”

“ஜாஃபர் அங்கிளை தோட்டத்துல ஊஞ்சல் கட்டித்தர சொல்லலாம். அதுல ஆடினா ஜாலியா இருக்கும் தானே?”

அவனுக்கு பிடித்த அனைத்தையும் ருஹானா சொல்லியும், எதற்கும் இவானிடமிருந்து பதில் வரவில்லை. முகமும் ஆர்வமாக மலரவில்லை. 

“ஏன் சாப்பிட மாட்றே, செல்லம்”

“எனக்கு சாப்பிட பிடிக்கல, சித்தி”

சாரா “என்னாச்சி என் செல்ல ஆட்டுக்குட்டிக்கு? உடம்பு சரியில்லயா?” என இவான் அருகே வந்து நெற்றியை தொட்டு பார்த்தார். இல்லையென தலையாட்டி மறுத்த ருஹானா “அவன் வருத்தமா இருக்கான்” என்றாள்.

சிரித்த சாரா “சின்ன குழந்தை தானே! ஏதாவது விளையாட்டு காட்டினா சீக்கிரம் மனம் மாறிடும். உடம்பு ஆரோக்கியம் குறையாம இருக்கறவரை ஒரு பிரச்சனையும் இல்ல” என்று சொல்லிவிட்டு “நான் சலவை அறைக்கு போயிட்டு வரேன்” என சென்றுவிட்டார்.

அவர் சொன்னதை யோசித்த ருஹானாவிற்கு இவான் மனதை மாற்ற ஒரு உபாயம் தோன்ற “செல்லக்குட்டி! இப்போ சாப்பிட்டு முடிச்சதும் நாம என்ன செய்ய போறோம்னு சொல்லு பார்ப்போம்” என்று அவன் ஆவலை தூண்டினாள். இவான் நிமிர்ந்து பார்க்க “இதுவரைக்கும் உனக்கு நான் அடிக்கடி அனுமதி கொடுக்காதது செய்யலாம். யெஸ், நாம ரெண்டுபேரும் போன்ல கார்ட்டூன் பார்க்க போறோம். சரியா?” என்று ஆசை காட்டினாள்.

இவான் முகத்தில் லேசான மலர்ச்சி. அவன் தலையை ஆட்ட “நீ சாப்பிட்டுட்டே இரு. நான் மேல போய் என் போனை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி ருஹானா போய்விட்டாள்.

சாப்பிடாமல் முள்கரண்டியால் முட்டையை குத்தி விளையாடிக்கொண்டிருந்த இவானுக்கு பூனை கத்தும் சத்தம் கேட்க சமையலறையிலிருந்து வெளியேறினான்.

——-

கீழே நிலவறையில் ரஷீத் ஒருவனை பிடித்து வைத்திருக்க, ஆர்யன் அவனிடம் விசாரணை செய்துக் கொண்டிருந்தான்.

“ஒரு ஏழைப்பெண் கிட்டே என் பேரை சொல்லி அவங்க வீட்டை அபகரிக்க உனக்கு என்ன தைரியம் இருக்கணும்? தர மறுத்த அவங்களை வயசானவங்கன்னும் பார்க்காம அப்படி அடிச்சிருக்கே! அதுவும் என் பேரை சொல்லி…”

மாட்டிக்கொண்டு நின்றவனுக்கு ஆர்யனின் உறுமலில் குலை நடுங்கியது.

“ரஷீத்! அவங்க இப்போ எப்படி இருக்காங்க?”

“அவங்களை அரசாங்க ஹாஸ்பிடல்ல இருந்து தனியார் ஹாஸ்பிடலுக்கு மாத்தியாச்சி, ஆர்யன். சிகிச்சை நடந்துட்டு இருக்கு”

“அவங்க குழந்தைகள்?”

“நம்ம ஆட்கள் பராமரிப்புல நல்லா இருக்காங்க”

தலையாட்டிய ஆர்யன் நடுங்கி கொண்டிருந்தவனை நெருங்க, அவன் “என்னை மன்னிச்சிடுங்க, ஸாப். நான் தெரியாம செஞ்சிட்டேன். இனி மேல் இப்படி செய்ய மாட்டேன்” என கெஞ்ச, அவன் கன்னத்தில் ஆர்யன் பளாரென அறைந்தான்.

——–

செல்பேசியை எடுத்து பார்த்த ருஹானா மிஷாலின் தவறவிட்ட அழைப்புகளை பார்த்தாள். “ஏன் இத்தனை முறை மிஷால் கூப்பிட்டு இருக்கான்?” என சொல்லியபடியே கீழே வந்தவளுக்கு அவனை திருப்பி அழைப்பதை விட இவானை சாப்பிட வைப்பதே முக்கியமானதாக தெரிந்தது.

சமையலறையில் இவானை காணாமல் திகைத்தவள் வெளியே தோட்டத்தில் குட்டிப்பூனையோடு இவான் விளையாடிக் கொண்டிருப்பதை ஜன்னலில் பார்த்து நிம்மதியடைந்தாள்.

அவனை தேடி ருஹானா தோட்டத்திற்கு செல்ல, அவள் சற்றுமுன் பார்த்த இடத்தில் அவன் இல்லை. குட்டிப்பூனை ஓடி விளையாட அதை பின்தொடர்ந்து ஓடிய இவான், ஆர்யனின் குரல் கேட்க திரும்பி பார்த்தான்.

வென்டிலேட்டர் ஜன்னல் வழியாக கீழே நிலவறையில் நடப்பது தெரிய, அப்படியே திகைத்து பயந்து நின்றான்.

“இவான்! இவான்! எங்க இருக்கே என் செல்லம்!” என அழைத்துக்கொண்டே வந்த ருஹானா அசையாமல் நிற்கும் இவானை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். “இங்க ஏன் நிற்கறே?” என கேட்டபடி அவன் அருகே வந்தவள், அவளும் அந்த கோர காட்சியை பார்த்து அதிர்ந்தாள். 

இவானை இழுத்து மறுபுறம் திருப்பியவள் “வா போகலாம் கண்ணே! பயப்படாதே செல்லம்” என அவனை கூட்டி செல்ல, அவன் “சித்தி! சித்தப்பா கதைல வர்ற கெட்டஆளா மாறிட்டாரா? எல்லாரையும் இப்படித்தான் கஷ்டப்படுத்துவாரா?” என கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல, தேனே! அவன் தப்பு செய்திருப்பான். அதனால சித்தப்பா தண்டனை கொடுக்கறார். நீ பயப்படாதே. வா நாம ரூம்க்கு போகலாம்” என அவனை சமாதானப்படுத்தி கையோடு அழைத்துச் சென்றாள்.

———

விரல் முட்டிகளில் இருந்த காயத்தில் இப்போது ஆழமாக அடிபட்டு இரத்தம் வழிவதை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், கதவை தட்டாமல் அவனறைக்குள் ஆவேசமாக வந்த ருஹானாவை பார்த்ததும் அவளை கோபமாக எதிர்கொண்டான்.

“நீங்க என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சி தான் செய்றீங்களா? இவான், உங்க குடும்பம் இருக்கிற வீட்ல வச்சி ஒரு மனுஷனை இப்படித்தான் அடிப்பீங்களா? இவான் அதை பார்த்துட்டான். அது அவனை எவ்வளவு பாதிக்கும்னு நீங்க யோசிக்கலயா?”

“வெளிய போ!” 

“நான் போக மாட்டேன். என்ன நடந்ததுன்னு முதல்ல எனக்கு சொல்லுங்க. யாக்கூப் உங்க கோபத்துக்கு காரணம் கிடையாது. அவன் செஞ்சதுக்கு ஏற்கனவே அவனை பழிவாங்கிட்டீங்க! ஏன் இப்படி மாறிட்டீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு? என்ன பிரச்சனை?” என அவள் ஆங்காரமாக கேட்க, ஆர்யன் திரும்பிக் கொண்டான். 

“நீங்க இப்படிப்பட்ட மனிதர் இல்ல. இது நீங்களே இல்ல. நானும் முதல்ல உங்களை இப்படி தான் நினைச்சேன். உங்களை காட்டுமிராண்டின்னு சொன்னேன். இரக்கம் இல்லாத கொடுமைக்காரன்னு சொன்னேன். ஆனா நீங்க இது எதுவுமே இல்ல.”

ஆர்யன் அவளுக்கு முகம் காட்டாமல் திரும்பியே நிற்க, அவள் அவன் முதுகுப்புறம் நெருங்கி வந்தாள்

“இவானுக்கு நீங்க அன்பா கதை சொல்லும்போது பார்த்திருக்கேன். அவனை எத்தனை கவனமா, பாசமா பார்த்துக்கறீங்க! இவான் இருக்கற வீட்டில ஒருத்தனை இப்படி கொடுமைப்படுத்துறது நீங்க இல்ல. என்னை இப்படியெல்லாம் நீங்க நம்ப வைக்க முடியாது”

“போதும்”

“இவான் ஒரு துளி கண்ணீர் சிந்தினா, அதுக்காக இந்த உலகத்தையே கொளுத்த தயங்க மாட்டீங்க. அவனோட இரக்கமுள்ள அசுரன் நீங்க. கள்ளங்கபடம் இல்லாத அந்த பிஞ்சு முன்னாடி இப்படி கொடுமையை செய்ய உங்களால முடியவே முடியாது. நான் நம்பவே மாட்டேன்”

“நிறுத்து!”  அவள் முகத்தின் அருகே வந்து இரைந்தவன், மேசையை சுற்றிக்கொண்டு சென்று துப்பாக்கி குண்டுகள் இருந்த கண்ணாடி புட்டியை எடுத்து வந்து அவள் முன்னால் போட்டு உடைத்தான். அந்த சத்தத்தில் ருஹானா கண்களை மூடிக்கொண்டாள் 

கண் திறந்து அவள் திகைப்பாக ஆர்யனை பார்க்க, அந்த அறை அதிர கத்தினான். “என்னை உனக்கு தெரியாது. எப்பவும் உன்னால தெரிஞ்சிக்க முடியாது. நீ கேட்டதை இங்க பாரு! இந்த துப்பாக்கிக் குண்டுகளை நல்லா பாரு. இது தான் நான்! இதான் ஆர்யன் அர்ஸ்லான்!”

(தொடரும்)

  

Advertisement