Advertisement

காலையில் கண்ணாடி முன் நின்று கருப்பு சட்டை அணிந்து, கையில் தந்தையின் பழைய கைக்கடிகாரத்தை கட்டிய ஆர்யன், செல்பேசியை எடுத்து “கேப்டன்! எல்லாம் ரெடியா? டேபிள் அழகா செட் செய்திட சொல்லுங்க. ஒரு முக்கியமான விருந்தாளியை கூட்டிட்டு வர போறேன். எல்லாம் கச்சிதமா இருக்கணும்… சரி.. நாங்க ஒரு மணி நேரத்துல வந்திடுவோம்” என்று சொல்லி வைத்தான்.

அணிந்திருந்த கருப்பு சட்டையை பார்த்தவன் துணி அலமாரி முன் போய் நின்றான். எண்ணற்ற கருப்பு சட்டைகளுக்கு இடையே அங்கே மாட்டப்பட்டிருந்த வெள்ளை சட்டையை எடுத்தான்.

‘நீ இப்போ நெருப்பு சட்டையை போட்டு இருக்கே. அதை கழட்டவும் முடியாது. எரியாமல் தப்பிக்கவும் முடியாது. சும்மா இருக்கவும் முடியாது’ சையத் சொன்னது நினைவு வர, அணிந்த ஆடையை கழற்றிவிட்டு வெள்ளை சட்டையை போட்டுக்கொண்டான். அவனுக்கே அவனை கண்ணாடியில் பார்க்க வித்தியாசமாக தெரிந்தது. என்றாலும் கருப்பு நிறம் அவனுக்கு எத்தனை கம்பீரம் தந்ததோ அத்தனை வெள்ளை நிறமும் வசீகரம் தந்தது.

ருஹானாவும் சிரத்தையெடுத்து உடுத்திக் கொண்டாள். அவளிடம் இருக்கும் சொற்ப ஆடைகளில் சிறந்ததை அணிந்து அழகாக சிகை அலங்காரம் செய்துக் கொண்டு தயாரானாள். இவான் அறைக்கு சென்று அவனிடம் விடைபெற்றாள்.

“அன்பே! நாங்க சீக்கிரம் வந்துடுவோம். நீ நஸ்ரியா அக்கா சொன்னபடி கேட்கணும்”

“சரி சித்தி! நான் வளர்ந்ததும் எனக்கும் மயக்கம் வராது. பெரிய கப்பல் வாங்கி உங்களை அதில கூட்டிட்டு போவேன்”

“அப்போ நான் தான் உலகத்துலயே மகிழ்ச்சியான சித்தியா இருப்பேன்”

சிரிப்புடன் இவான் அவள் கையை பிடித்து முத்தமிட அவள் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நஸ்ரியா! இவானை கவனமா பார்த்துக்கோ. போன் நான் கையிலயே தான் வச்சிருப்பேன். எதுனாலும் என்னை கூப்பிடு”

நஸ்ரியா சிரிப்புடன் தலையாட்ட, ருஹானா கதவை மூடி வெளியே வந்தாள். அதே நேரம் பக்கத்து அறையிலிருந்து ஆர்யனும் வெளியே வர, அவனை புது தோற்றத்தில் பார்த்ததும் அப்படியே நின்றாள். ஆர்யன் வெள்ளை சட்டையின் மேல் கருப்பு கோட் மாட்டியிருந்தான்.

அவனையும் ருஹானாவின் தோற்றம் கவர, அவள் சொன்ன காலை வணக்கத்திற்கு அவனும் பதில் வணக்கம் சொன்னான். அவனுடைய ஆடைக்கு ஈடில்லாத அவளது எளிய உடையை பற்றி ருஹானா யோசிக்க, ‘தான் அதிகப்படியாக உடுத்தி இருக்கிறோமோ?’ என அவன் யோசித்தான்.

வெள்ளை சட்டை அவனுக்கு அசௌகரியமாக இருக்க, அதன் காலரை தடவிக்கொண்டான். “நீ தயாரா?” என கேட்டான். “ஹிம்ஹூம்… ஆமா!” என அவள் சொல்லவும், “அப்போ போகலாம்” என சொல்ல, அவள் முன்னே படிக்கட்டில் இறங்க, இன்னும் சட்டையை சரிப்படுத்திக்கொண்டே அவனும் பின்னால் சென்றான்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த சல்மா இருவரும் ஜோடியாக செல்வதை பொறாமையோடு பார்த்தாள்.

———

ஆர்யன் காரை செலுத்திக்கொண்டே ருஹானாவின் முகத்தை பார்த்தான். அவள் சாலையை பார்த்துக்கொண்டிருக்க திரும்பவும் திரும்பி பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்க்க, “எப்படி இருக்கு உனக்கு? வேணும்னா ஜன்னலை திறந்து விடவா?” என கேட்டான். “இல்ல.. சிரமம் ஒன்னும் இல்ல, நன்றி” என அவள் சொன்னாள்.

அவனுக்கு தான் மூச்சு விட திணறல் ஏற்பட்டது போல. திருப்பு சக்கரத்தில் விரல்களை தட்டிக் கொண்டான். பக்கவாட்டு கண்ணாடியில் வெளியே பார்த்தான். வலது புறம் அவளை திரும்பி பார்த்தான். இமைக்காமல் பார்க்கக்கூடியவன், இப்போது இமைகளை தட்டிக்கொண்டான்.

“இன்னைக்கு வெதர் நல்லா இருக்கு. கடலும் அமைதியாக இருக்கும்” என பேச்சுக் கொடுத்தான். “ஆமா நல்லா இருக்கு!” ருஹானாவும் பதில் சொன்னாள்.

“நான் தூண்டிலை எடுத்துக்கிட்டேன்”

“அப்படியா? நல்லது”

“நீ கூட மீன் பிடிக்க முயற்சி செய்யலாம்”

“கண்டிப்பா!”

நீள மூச்சை இழுத்துவிட்டவன் சட்டை காலரையும் இழுத்து விட்டான்.

“நீங்க ஓகே தானே?”

“வெப்பம் அதிகமா இருக்கு” 

இப்பொழுது தானே தட்பவெப்ப நிலை அருமையாக இருக்கிறது என்று சொன்னான்?  

“நான் கண்ணாடியை இறக்கி விடுறேன். ஏர்கண்டிசனர் காற்றை டிரை ஆக்கிடுச்சி. இது உனக்கும் நல்லது இல்ல” என சொல்லி ஜன்னல் கண்ணாடியை திறந்துவிட்டான். ருஹானா அவன் பதட்டத்தை பார்த்துக்கொண்டே வந்தாள்.

சீறும் சிறுத்தையென இருப்பவன் அவள் அருகே செல்லப் பூனைக்குட்டியாக மாறிவிடுகிறான். 

நல்லவேளையாக போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிய காரை நிறுத்தினான். அங்கே பூ விற்றுக்கொண்டிருந்த இளம்பெண் அருகே ஓடிவந்தாள். “அழகு பொண்ணுக்கு அழகு பூக்கள் கொண்டு வந்திருக்கேன். வாங்கிக்கங்க. இதான் கடைசி பொக்கே!” என சிவப்புரோஜா மலர்களின் பூங்கொத்தை நீட்டினாள்.

வேண்டாம் என ஆர்யன் மறுக்க, “உங்களுக்கு வேணாம். அவங்க எப்படி வேணாம்னு சொல்வாங்க? உங்க காதலியை நீங்க சந்தோசப்படுத்த மாட்டீங்களா?” என பூக்காரப்பெண் கேட்க, இருவரும் சங்கடமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ருஹானா சமிக்ஞையை பார்க்க அங்கே இன்னும் சிவப்பு தான் ஒளி வீசியது. வாங்கவா வேண்டாமா என தயங்கிய ஆர்யன் பணத்தை எடுத்துக் கொடுத்தான். “காசு வாங்கிக்கோ. பூக்கள் வேண்டாம்”

“அது எப்படி? பணம் கொடுத்துட்டு மலர்களை மறுப்பீங்களா? உங்க காதலி  வருத்தப்படுவாங்க. நீங்க எடுத்துக்க தான் வேணும்” என சொல்லி திறந்திருந்த ஜன்னல் வழியே ஆர்யன் மடியில் வைத்துவிட்டு ஓடிவிட்டாள்.

மடியில் இருந்த சிகப்பு வண்ண ரோஜாக்களை பார்த்த ஆர்யனுக்கு அது காதலை சொல்லும் மலர்கள் என தெரிந்து தான் இருந்தது. ‘என்ன செய்ய?’ என அவன் யோசிக்கும் வேளையில் ‘போகலாம்!’ எனும் பச்சை விளக்கு வழிகாட்ட, “இதை பிடி!’ என அவன் வேகமாக ருஹானாவிடம் நீட்ட, அவளும் தயங்கியபடி வாங்கிக்கொள்ள, காரை எடுத்தான்.

அன்பை சொல்லும் மலர்களை இப்படியா தருவது? நகைப்பிற்குரிய செயல் தான் என்றாலும் வேறு எங்கும் வைக்காமல், வெளியே தூக்கிப் போடாமல் அவளிடம் தந்தானே! பாராட்ட வேண்டியது தான். இன்னும் அவன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறதோ!

அவள் பூக்களை கையில் வைத்தபடியே பார்த்திருக்க, அவன் அவளை பார்த்தான். “இதை பின்சீட்டில் வைக்கறேன். வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்” என திரும்பி வைக்க போனவளை, கோபமான ரோஜா முள் ஒன்று கீறிவிட்டது.

ருஹானா “ஸ்ஸ்!” என்றபடி விரலை பிடிக்க, “என்ன!” என ஆர்யன் பதறினான். “ஒன்னுல்ல.. லேசா கீறிடுச்சி” என அவள் சொல்ல “அங்க டிஸ்யூ இருக்கும், பாரு” என சொன்னவன் தானே அவள் முன்னால் இருந்த டாஷ்போர்டை திறந்தான். அதில் மேலுறை மட்டும் இருக்க உள்ளே ஒன்றும் இல்லை.

அவள் பரவாயில்லை என சொன்னாலும் அவன் சாலையோரமாக கடைகளை பார்த்தவாறே வண்டியை செலுத்தினான். ஒரு அங்காடி முன் நிறுத்தியவன் “நான் போய் கைக்குட்டையும், பேண்டேஜூம் வாங்கிட்டு வரேன்” என இறங்கி சென்றான். ருஹானாவும் ரோஜா பூங்கொத்துடன் இறங்கி காற்றாட நின்றாள்.

கடைக்காரரிடம்  கைக்குட்டையும், பேண்டேஜூம் வேண்டும் என கேட்டவன், அங்கே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட்களை பார்த்தான். ருஹானாவிற்கு அவளுக்கு பிடித்த வால்நட் சாக்லேட்டை பரிசளித்து நன்றி சொல்லப் போவதாக அண்ணன் சொன்னது நினைவு வர, அந்த சாக்லேட்டை எடுத்தான்.

அவன் பின்னால் திரும்பி பார்க்க, காரின் அருகே நடைபாதையில் ருஹானா பூங்கொத்தை ஏந்தியபடி புன்சிரிப்புடன் நின்றிருந்தாள். வாங்கிய பொருட்களுடன் சாக்லேட்டை சேர்த்தவன் பணம் செலுத்த காத்திருந்தான்.

பின்புறமாக வந்து ருஹானாவின் வாயை பொத்திய யாக்கூப் “நான் வந்துவிட்டேன், என் அன்பே!” என சொல்ல, ருஹானா உடல் அதிர கையில் இருந்த பூங்கொத்தை தவறவிட்டாள். கத்தவும் முடியாமல் திமிறினாள்.

கடையை விட்டு வெளியே வந்த ஆர்யன், ருஹானா அங்கே இல்லாதது கண்டு காலாற நடக்கிறாளோ என சுற்றுமுற்றும் பார்த்தான். சாலையில் பூங்கொத்து சிதறிக் கிடப்பதை பார்த்து திடுக்கிட்டவன் “என்னை விடு! தொடாதே!” என்ற ருஹானாவின் குரல் வந்த திசையை பார்த்தான்.

யாக்கூப் அவளை இழுத்துக்கொண்டு காரில் ஏற்ற முயல்வதை கண்டு கொதித்துப் போனான். அவன் கையில் இருந்த சாக்லேட், கைக்குட்டை,  பேண்டேஜ் நழுவி பூங்கொத்தின் மேல் விழுந்தன. ருஹானாவை நோக்கி ஓட்டமாய் ஓடினான்.

ருஹானாவை காரில் அடைத்த யாக்கூப் இளிப்புடன் சுற்றிவந்து காரில் ஏறப்போகும் சமயம் அவன் சட்டையை பிடித்து இழுத்த ஆர்யன் அவனை காரின் மீது தள்ளி முகத்தில் வலிமையான குத்து ஒன்றை விட்டான்.

அவன் கீழே விழ, ருஹானா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தாள். சாலையில் கிடந்த அவன் முகத்தில் ஆர்யன் முஷ்டியை மடக்கி ஓங்கி ஓங்கி இடைவிடாது குத்தினான். ருஹானா பயத்துடன் பார்க்க, ஒரு கையால் யாக்கூப்பின் சட்டையை பற்றிக்கொண்டு ஆர்யன் பலமாக கையால் மோத இரத்தம் தெறித்தது.

யாக்கூப் ருஹானாவிற்கு எரிவாயு செலுத்தி கொல்ல பார்த்தது, இவானை அபாயத்தில் சிக்க வைக்க முயன்றது, பேனா கேமிரா மூலம் ருஹானாவை நோட்டமிட்டது, படாதபாடுபட்டு ருஹானாவை காப்பாற்றி தான் வெளியே கொண்டு வந்தது, தன்னை துப்பாக்கியால் அவன் சுட்டது எல்லாமே அவனுக்கு மனத்திரையில் ஓட, அவனது வேகமும், ஆத்திரமும் அதிகமாகி அடி ஒவ்வொன்றும் இடி போல இறங்கியது.

அவனது முகத்தில், வெள்ளை சட்டையில் இரத்தத்துளிகள் கோடுகளாய் தெளிக்க ஆர்யன் அடிப்பதை நிறுத்தவேயில்லை. நடுங்கிக்கொண்டு நின்ற ருஹானா “போதும், நிறுத்துங்க, அடிக்காதீங்க…. உங்களை கெஞ்சி கேட்கறேன். விடுங்க அவனை… செத்துடப் போறான்… ப்ளீஸ்.. நிறுத்துங்க” என சொல்லிக்கொண்டே இருக்க, வெறிகொண்டு அடித்துக்கொண்டிருந்த  அவன் கேட்கவேயில்லை.

“போதும்!” என அவள் ஓங்கி குரலெடுத்து கத்த, அடிப்பதை நிறுத்திவிட்டு அவளை திரும்பி பார்த்தான். அவன் கை முழுவதும் இரத்தமாக இருக்க, முகம் பூராவும் சிவப்பு புள்ளிகளாக, பார்க்கவே மிரட்சியாக இருந்தது.  

மூச்சு வாங்க நிமிர்ந்தவன், இன்னும் கையை ஓங்கி யாக்கூப்பை அடிக்க பார்த்தான். அவன் மூச்சுப்பேச்சின்றி மயங்கி கிடக்க, அவன் பிடியை விடுவிடுத்து எழுந்தான். ஆர்யனிடம் மரண அடி வாங்கவே யாக்கூப் தப்பித்து வந்தான் போல. வந்தவன் அவர்களின் இனிமையான படகு உலாவையும் தடுத்துவிட்டான். அவர்களுக்கு இடையே மலர்ந்த நெருக்கத்தையும் கெடுத்துவிட்டான்.

தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்ட ஆர்யன் தன்னை பார்த்து மிரண்டு நிற்கும் ருஹானாவை பார்த்தான்.

——-

காவல் அதிகாரிகள் வந்து யாக்கூப்பை கைவிலங்கிட்டு கூட்டி செல்ல, ருஹானா நடைபாதையில் கால்களை கட்டியபடி அமர்ந்திருந்தாள். ஆர்யன் அவளை பார்க்க, அவள் அவன் பார்வையை சந்திக்க மறுத்தாள். 

அவனருகில் வந்த ரஷீத்திடம் “அவளை மாளிகைக்கு அழைத்துப் போ!’ என்று ஆர்யன் சொல்ல, ரஷீத் ருஹானாவை நெருங்கினான். அவன் வந்தது கூட தெரியாமல் ருஹானா இலக்கின்றி வெறித்து அமர்ந்திருக்க, ரஷீத் அவள் தோளை தொட்டான். அவள் நிமிர்ந்து பார்க்க, அவள் மேல் இரக்கமான ரஷீத் மென்மையாக அவள் கைப்பற்றி காருக்கு அழைத்து சென்றான்.

ஆர்யன் சிதறிக்கிடந்த பூக்களையும், சாக்லேட்டையும் பார்த்தபடியே நின்றான். அவன் கையை விட அவன் இதயம் புண்பட்டிருந்தது.

——

காரில் இருந்து இறங்கிய ருஹானா நடந்த பயங்கரத்தை நினைத்து தள்ளாடியபடியே நடந்து தனது அறையை வந்தடைந்தாள். யாக்கூப்பிடம் திரும்ப மாட்டிக்கொண்ட அதிர்ச்சியையும், கண்ணெதிரே கண்ட ஆர்யனின் வன்முறையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

——

காரில் ஏறிய ஆர்யன் அங்கே கிடந்த ஒற்றை ரோஜாப்பூவை எடுத்து பார்த்தான். அதை கையில் வைத்து அழுத்தமாக மூடிக்கொண்டான். காரை செலுத்தி சையத் உணவகத்திற்கு வந்தான்.

காரில் இருந்து மெல்ல இறங்கி ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தவன், உள்ளங்கையை விரித்து ரோஜாவை பார்த்தான். தன் கையில் இருந்த இரத்தம் பூவிலும் படர்ந்திருப்பதையும், அதன் இதழ்கள் உதிர்ந்திருப்பதையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவன் தோற்றம் கண்டு கலங்கிய சையத் அவன் எதிரே வந்து அமர்ந்தார். அவன் கோட்டை விலக்கி பார்த்த அவர் வெள்ளை சட்டையில் இருந்த இரத்தக்கறையைப் பார்த்து திகைத்துப்போய் “மகனே!” என அழைத்தார்.

அவரை நிமிர்ந்து பார்த்த ஆர்யன் நிறுத்தி நிறுத்தி மெதுவாக சொன்னான். “நான் முயற்சி செய்தேன் சையத் பாபா! உண்மையா முயன்றேன்……. ஆனா என்னால அந்த பாதையில நடக்க முடியாது…….. இந்த சட்டை எனக்கு இறுக்கமா இருக்கு…… ரொம்ப இறுக்கமா இருக்கு”

  

(தொடரும்)

Advertisement