Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 80

ருஹானாவை முத்தமிட்டு நிமிர்ந்த ஆர்யன் தான் இன்னும் அவள் முன்னே அதே இடத்தில் மண்டியிட்டு இருப்பதை பார்த்தான். தன் ஆழ்மன ஆசையே கற்பனைக்காட்சியாய் கண்முன்னே தெரிந்தது என உணர்ந்து ஏமாற்றம் அடைந்தான். கனவு காண மட்டுமே தனக்கு தைரியம் உள்ளது என புரிந்து கொண்டான். 

அவன் பார்வையில் தர்மசங்கடமான ருஹானா “நான் ஆவணங்களை தேடறேன்” என அவன் கைப்பிடிக்குள் இருந்து எழுந்து சென்றாள். அப்படியே அமர்ந்திருந்த ஆர்யன் அதன் பின்னே அவளின் மாயப்பிடியில் இருந்து விடுபட்டு ‘ஒழுங்கா நடந்துக்கோ, ஆர்யன்!’ என தனக்கு தானே திட்டிக்கொண்டான்.

அவள் இன்னும் மூச்சுக்கு திணறுவதை பார்த்தவன் எழுந்து அவள் அருகே வந்தான். “அதிகம் நடக்காதே! நீ இன்னும் முழுசா குணமாகல. மயக்கம் வரப்போகுது”

“இல்ல.. இப்போ பரவாயில்ல எனக்கு. ஆவணங்கள் முக்கியம். தேடப் போறேன்” என விருட்டென்று நடந்தவளுக்கு தலை சுற்றிவிட்டது. அவளையே கவனித்திருந்தவன், தடுமாறி விழப்போனவளை தாங்கிக் கொண்டான். “நான் சொன்னேன் தானே!”

நெருக்கத்தில் கண்கள் கலந்து நிற்க, அந்த வேளையில் கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்த காவலன் உள்ளே எஜமானரை பார்த்து அதிர்ந்தான்.

“எங்கே போனே நீ?” என கோபமாக கேட்ட ஆர்யன், ருஹானாவின் தோளை சுற்றியிருந்த கையில் கடிகாரத்தை பார்த்துவிட்டு “நாலு நிமிஷம் லேட்டா வந்திருக்கே” என திட்டினான். ருஹானாவிடம் இருந்து விலகவும் இல்லை. அவளை பிடித்த பிடியையும் விடவில்லை.

காவலன் மன்னிப்பு கேட்க, ஆர்யன் ருஹானாவை நடத்திக்கொண்டு வெளியே நடந்தான். “ரிப்போர்ட்ஸ் நான் தேட சொல்றேன். உனக்கு உடனே ஆக்சிஜன் தேவை. நீ வா… போகலாம்”

படிக்கட்டில் ருஹானாவை பிடித்துக்கொண்டு ஏறிவரும் ஆர்யனை பார்த்து மேலே கரீமாவுடன் நின்ற சல்மா திகைத்துப் போனாள். “எப்படி.. எப்படி.. எப்படி இது நடந்தது? இவங்க வெளிய போக கூடாதுன்னு தானே நான் இவளை அடைச்சி போட்டேன்” என மெல்லிய குரலில் அக்காவிடம் புலம்பினாள்.

“என்ன நடந்தது ருஹானா? ஏன் இப்படி இருக்கே?” என கரீமா கேட்க, ஆர்யன் “நாங்க ஸ்டோர் ரூம்ல மாட்டிக்கிட்டோம். இவளுக்கு மூச்சு விட சிரமமாகிடுச்சி. ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கணும்” என சொல்லி ருஹானாவை தானே அழைத்துச் சென்றான், முன்பு போல் கரீமாவிடம் தராமல்.

“இவ்வளவு நேரம் ரெண்டுபேரும் தனியா இருந்திருக்காங்க, அதும் என்னால” என சல்மா பொரும, “உன்னோட மடத்தனமான திட்டத்தால! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா…” என கரீமா வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினாள். அவளை மேலே பேசவிடாமல் “வாயை மூடு அக்கா வாயை மூடு” என கத்திவிட்டு சல்மா கோபமாக சென்றாள்.

பிராணவாயு கவசத்தை மாட்டி ருஹானாவை படுக்க வைத்த ஆர்யன் “இப்போ எப்படி இருக்கு? இன்னைக்கு ஓய்வெடு. நாம நாளைக்கு யாட்ல போகலாம். ஆனா இப்பவே சொல்லிட்டேன். நான் பிடிக்கிற மீனையெல்லாம் நீ கடல்ல தூக்கி போடக்கூடாது” என சிரியாமல் மிரட்டினான்.

“குட்டி மீன்கள் மட்டும் போடுறேனே!” என சிரிப்புடன் ருஹானா சொல்ல, மிகலேசாக முறுவலித்த ஆர்யன் “சரி, தூங்கு!” என சொல்லி, அவள் கண்களை மூடி அவளின் சுவாசம் சீராகியதும் கதவை மூடி வெளியே சென்றான்.

திரும்ப கிடங்கு அறைக்கு சென்ற ஆர்யன், அங்கே ஜாஃபர் தேடிக்கொண்டிருப்பதை பார்த்து கேட்டான்.

“இன்னுமா கிடைக்கல?”

“இதோ! இப்போ தான் கிடைச்சது. இது தானா பாருங்க ஆர்யன் ஸார்?”

“ஆமா! முக்கியமான டாகுமென்ட்ஸ்லாம் ஏன் ஸ்டோர் ரூம்ல வச்சிருக்கீங்க? இது ஒரு காப்பி எடுத்து சோசியல் சர்வீஸ்க்கு அனுப்பிடுங்க. இவான் சம்பந்தப்பட்ட எல்லா பேப்பர்ஸ்ஸும் எடுத்து என் ஆபீஸ் ரூம்ல வைங்க”

“சரி ஸார்! இப்பவே செய்றேன்” 

ஆர்யன் மேல்அலமாரியில் இருந்த மரக் காரை பார்த்தான். ‘உங்க இளமைக்கால நினைவுகளை இங்கயா வச்சிருப்பீங்க?’ ருஹானாவின் குரல் ஒலிக்க, அதை கையில் எடுத்தான்.

நிலா முற்றத்தில் வானத்தை ரசித்துக் கொண்டிருந்த அம்ஜத்திடம் சென்று அதை நீட்டினான். அம்ஜத் முகம் பரவசமாக கண்கள் மின்ன சிரிப்புடன் மிகுந்த ஆவலோடு காரை வாங்கிக்கொண்டான்.

“இதை ஸ்டோர்ரூம்ல இருந்து எடுத்திட்டியா? நாம எத்தனை சிரமப்பட்டு இந்த காரை செய்தோம், இல்லயா? நீ ரொம்ப சின்ன பையன் அப்போ. நிஜ காரே நம்ம கிட்டே இருந்தது போல எவ்வளவு சந்தோசப்படுவோம்!”

அண்ணனின் ஆனந்தத்தை ஆர்யன் ஆசையாக பார்த்திருந்தான்.

“இந்த காரில ஏறி எல்லா இடமும் சுத்தி வருவோம்னு பேசுவோம் தானே? நம்மோட கவலைகள் இருந்து தப்பிக்க இதை பயன்படுத்திக்க நினைச்சோம். ஆனா நம்மால தப்பிக்க முடியல தானே ஆர்யன்… முடியவே இல்ல”

அம்ஜத் சோகமாக ஆர்யன் முகமும் இறுக்கமானது.

காரை மீண்டும் புரட்டி பார்த்த அம்ஜத்க்கு புன்னகை திரும்ப “இதை நான் பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல. ஏன்னா நீ இதை மூலைல போட்டு வச்சிருந்தே! நம்மோட சிறுவயசு சந்தோசத்தை அந்த இருட்டு ரூம்ல தூக்கி போட்டுட்டே!” என சொன்னவன் ஆர்யனை சந்தேகமாக பார்த்து “நீயா இதை எடுத்துட்டு வந்தே? இதை நானே வச்சிக்கலாமா?” என கேட்டான்.

ஆர்யன் தலையசைக்க “அப்போ, ஏதோ மாறி இருக்கு! கண்டிப்பா மாறி இருக்கு” என அம்ஜத் உற்சாகமாக சொல்ல, “ஆமா அண்ணா! மாறி இருக்கு!” என ஆர்யன் தலையாட்டி ஏற்றுக்கொண்டான். அம்ஜத் சில விநாடி சிந்தனைக்குப் பின் “நான் ருஹானாக்கு நன்றி சொல்லணும்” என சொன்னதை கேட்டு ஆர்யன் அதிசயித்தான்.

“ருஹானாக்கு நான் பரிசு கொடுக்க போறேன்” தலையை தடவி யோசித்த அம்ஜத் “அவளுக்கு பிடிச்ச வால்நட் சாக்லேட் வாங்கி கொடுக்க போறேன்” என ஆர்வமாக சொன்னான்.

“ஏன் அண்ணா? அவளுக்கு ஏன் பரிசு கொடுக்கணும்?”

“ஏன்னா அவ இங்க வர்றதுக்கு முன்ன நீ இப்படி இல்ல ஆர்யன்”

ஆர்யன் அதிர்ந்து பார்க்க “அவ வந்த சில மாதங்கள்ல நீ நிறைய மாறியிருக்கே ஆர்யன்” என மேலும் அண்ணன் தம்பியை அதிர வைத்தான்.

“இப்போலாம் உனக்கு கோபம் வர்றது இல்ல. நீ பார்க்கறது கூட மாறி இருக்கு. இதெல்லாம் ருஹானாவால தான்”

‘இத்தனை வெளிப்படையாக, அண்ணன் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கா தன் மனநிலை வெளியே தெரிகிறது?’ என ஆர்யன் திகைப்பாக பார்க்க, “நான் இப்பவே போய் ருஹானாக்கு நன்றி சொல்லிட்டு வரேன்” என அம்ஜத் காரை கையில் செருகிக்கொண்டு செல்ல, ஆர்யன் தன்னிலைக்கு மீண்டான்.

“இப்போ வேணாம் அண்ணா. அவ தூங்கிட்டா. நீங்க காலைல சொல்லுங்க”

சரியென தலையாட்டிய அம்ஜத், ஆர்யனை கூர்ந்து பார்க்க, ஆர்யன் அந்த பார்வையிலிருந்து தப்பித்து உள்ளே நடக்க “ஆர்யன்!” என அண்ணன் அவசரமாக அழைத்தான்.

“உன் மேலே எப்பவுமே நான் அதிக பாசம் வச்சிருக்கேன். ஆனா இந்த புது ஆர்யன்… வித்தியாசமா இருக்கான். இவனை எனக்கு இன்னும் அதிகம் பிடிக்குது. ருஹானா நிரந்தரமா இங்கயே தங்கட்டும். நம்ம கூடவே எப்பவும் இருக்கட்டும். சரியா?” என அம்ஜத் கேட்க, ஆர்யன் பதில் சொல்லாமல் உள்ளே நடந்தான்.

அம்ஜத் காரை உயர்த்தி வானத்துக்கு காட்டி சுற்றி வந்தான், மகிழ்வோடு.

அன்பு அண்ணன் அறிந்ததும் 

புரிந்து கொள்வதும்

அன்பின்றி வேறேது?

கடுஞ்சுவராய் மாறியே

வேலி தன் குடும்பத்தைக்

காப்பது அன்பென்று

உணர்ந்த தமையன்….

கற்சுவரில் மென்மையை

கூட்டும் காதல் விந்தையின்

செயல்களை உணர்வது

எளிது தானே!

  ——— 

ருஹானா நாய்க்குட்டி பொம்மையை எடுத்துக்கொண்டு இவான் அறையில் இருந்து வெளியே வர, எதிரே வந்த ஆர்யனை பார்த்து நின்றாள். காற்றை கண்டவுடன் நடனமாடும் மரங்களை போல, அவளை கண்டவுடன் அவன் மனமும் நடனமாடுகிறது.

ஆனால் அவன் அமைதியாக நிற்க “இவானை தூங்க வச்சிட்டு வந்தேன்” என ருஹானா சொல்ல, தலையாட்டிய ஆர்யன் அவள் கையை பார்க்க, “இதுல தையல் பிரிஞ்சிடுச்சி. தைக்க எடுத்துட்டு போறேன். இவானுக்கு பிடித்த நாய்க்குட்டி” என அவள் சொல்ல, திரும்ப தலையாட்டினான்.

அவள் இரவு வணக்கம் சொல்லி நடக்க, ஆர்யன் “அதை அண்ணன் கிட்டே கொடுத்துட்டேன்…… ஸ்டோர் ரூம்ல இருந்ததை” என மெல்ல சொல்ல, முகம் மலர்ந்த ருஹானா “பொம்மை காரையா?” என கேட்க, அவன் தலையாட்டினான்.

“அம்ஜத் அண்ணா சந்தோசப்பட்டாரா?” என ருஹானா கேட்க, அதற்கு பதில் சொல்லாத ஆர்யன் “நன்றி!’ என்றான். அவள் ஆச்சரியமாக பார்க்க “அண்ணன் சொன்னார்!’ என முடித்தான்.

சிரிப்புடன் ருஹானா திரும்பவும் இரவு வணக்கம் சொல்லி செல்ல, அவளிடம் இன்னும் பேச ஆசைப்பட்ட ஆர்யன் வேகமாக “நாளைக்கு உனக்கு மீன்களை காப்பாத்துற வேலை இருக்கே! மறந்திடாதே!” என சொல்ல, அவனை திரும்பி பார்த்த ருஹானா “மறக்கல, மனசுல வச்சிருக்கேன்” என புன்னகைத்தாள். 

——–  

மருத்துவமனையிலிருந்து இரவோடு இரவாக மருத்துவரின் உடையில் சாமர்த்தியமாக தப்பித்த யாக்கூப், கார் ஒன்றையும் திருடிக்கொண்டு அர்ஸ்லான் மாளிகை விட்டு சற்று தொலைவில் அதன் வாயிலை பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தான்.

“வா ஷெனாஸ்! உனக்காக காத்திருக்கேன்!”  

——–

Advertisement