Advertisement

“சித்தி! சித்தி! எங்க இருக்கீங்க?” என இவான் வரவேற்பு அறைக்கு வந்து தேட, சோபாவில் அமர்ந்திருந்த சல்மாவிற்கு காபி கொடுத்த சாரா “என்ன லிட்டில் சார் உங்க சித்தியை தேடுறீங்க? அவங்க எங்க?’ என கேட்டார்.

“அவங்க கீழே ….” அதற்குள் அவன் ‘ஸ்டோர் ரூம்’ என சொல்வதை தடுத்த சல்மா “உன் சித்தி வெளியே போயிட்டாங்களே!’ என்றாள். ருஹானா கிடங்கு அறையில் இருப்பது சாராவிற்கோ, மற்றவர்களுக்கோ தெரிந்தால் திறந்துவிட போய்விடுவார்களே என்று.

பாவம் அவள் அறியாதது, கடல் பயண டேட்டிங் ஸ்டோர் ரூம் டேட்டிங்காக மாறியது. ஆர்யனும், ருஹானாவும் நெருக்கமாய் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்தால், இப்படி ஓய்வாக சிரிப்புடன் காபி அருந்திக் கொண்டிருப்பாளா?

“சித்தி வெளிய போயிட்டாங்களா? சீக்கிரம் வந்துருவாங்களா?”

“ஆமா இவான்!” என சொல்லிய சல்மா “சாரா அவனுக்கு குக்கிஸ் கொடுங்க” என்றாள்.

“எனக்கு வேணாம்! நான் என் ரூம்ல போய் சித்திக்காக காத்திருக்க போறேன்”

சாரா ‘அவன் சாப்பிடாமல் போகிறானே’ என கவலையாக பார்க்க, ‘அப்பாடா! சமாளித்துவிட்டோம். ருஹானா இன்னும் அதிக நேரம் கிடங்கில் அடைபட்டு கிடப்பாள்’ என சல்மா சந்தோசப்பட்டாள்.

——–

ருஹானா கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருக்க, ஆர்யன் நேரத்தை பார்த்தபடி சுவரோரம் நின்றிருந்தான். அவளுடைய கன்ன கதுப்பையும், விரல்களின் அழகையும், தோளில் புரண்டு கிடக்கும் நெளிநெளியான கூந்தலையும் அவன் ரசிக்க நேரம் போவதே அவனுக்கு தெரியவில்லை.

அவள் அருகே ஒரு காலை மடக்கி மண்டியிட்டவன் அங்கே இருந்த தூண்டிலை கையில் எடுக்க, அவன் அருகாமையின் சங்கடத்தில் ருஹானா நெளிந்தாள். அவள் முன்னே மண்டியிட்டு அவள் மீதான காதலை தெரிவிக்க போகிறான் என்று பார்த்தால், தூண்டில் மேல் அவன் மனதை மாற்ற முயற்சி செய்கிறான்.

“உன் அப்பா கிட்டே தூண்டில் இருந்ததுன்னு சொன்னியே”

“ஆமா! இது போல இல்ல. சாதாரணமானது தான்”

“நீ மீன் பிடிக்க முயற்சி செஞ்சிருக்கியா?”

“ஒரு தடவை செய்தேன். ஆனா தூண்டில் முள்ல என் விரல் மாட்டிடுச்சி”

“அது எளிது தான். பொறுமை வேணும். கவனமா செய்யணும்” என்று சொன்னவன் “மீன் பிடிக்கும்போது நான் கடலை தான் கவனிப்பேன். தூண்டிலை போட்டதை மறந்திடுவேன்”

“என் அப்பாவுக்கும் மீன் பிடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஆத்தோரமா மணிக்கணக்கா உட்கார்ந்து இருப்பார்” என சொன்ன ருஹானா “அவர் மீன் பிடிக்க பிடிக்க, நான் அவருக்கு தெரியாம மீனை எடுத்து ஆத்துல திரும்ப விட்ருவேன்” என குறும்புடன் சொன்னாள்.

“நல்லவேளை நான் உன்னை யாட்ல கூட்டிட்டு போகல. எனக்கும் அப்படிதான் செய்வியா?” அவன் முகத்தில் மறைக்கப்பட்ட புன்னகை. ஆனால் கண்கள் சிரித்தன.

“நீங்க என்மேல கோபப்படுவீங்களா?” மலர்ந்த முகம் தான் அவளுக்கும். பயம் இல்லை.

“நான் உன்மேல் கோபப்பட மாட்டேன்” அவன் கனிவு கண்டு அவள் குளிர்ந்து போனாள்.

அதற்கு மேல் தாங்க முடியாமல் “நான் ரிப்போர்ட்ஸ் தேடுறேன்” என எழுந்து சென்றாள்.

———-

மருத்துவமனையில் யாக்கூப் கண்மூடி படுத்திருக்க, அவனுக்கு மருந்து ஏற்றிக் கொண்டிருந்த செவிலிப்பெண்ணிடம், காவல் அதிகாரி “இவன் எப்போ கண் விழிப்பான்?” என கேட்க “இப்போ எதுவும் சொல்ல முடியாது. நேரம் பிடிக்கும்” என்றாள்.

“இவன் கூட அனுமதிக்கப்பட்ட பொண்ணும் குணமாகி போயிட்டாளே!”

“அவளை விட இவனுக்கு கேஸ் பாதிப்பு நிறைய. இவன் குணமாக நாள் எடுக்கும்”

இருவரும் வெளியே செல்ல, இத்தனை நேரம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த யாக்கூப் கண் திறந்தான்.

அறைக்கு வெளியே காவல் அதிகாரி “அவன் மயக்கமா தான் இருக்கான். வா நாம போய் காபி குடிச்சிட்டு வருவோம்” என, அங்கே காவலுக்கு நின்ற மற்றொரு காவல் அதிகாரியையும் அழைக்க, இருவரும் நகர்ந்து சென்றனர்.

எழுந்து அமர்ந்த யாக்கூப் கைவிலங்கை எடுக்க முயலாமல், அது மாட்டியிருந்த கட்டிலின் சட்டத்தை கழட்டலானான். தன்னுடைய நீண்ட நகத்தை வைத்து சட்டத்தை இணைக்கும் திருகாணியை சுழற்ற ஆரம்பித்தான்.

“காத்திரு ஷெனாஸ்! நான் வரேன்”

——–

ஆவணங்களை தேடி உருட்டி கொண்டிருந்த ருஹானா மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய வண்டியை அவளறியாமல் கீழே தள்ளி விட்டுவிட்டாள். அவள் குனிந்து எடுக்கும்முன் ஆர்யன் எடுத்துவிட்டான். மலர்ந்திருந்த அவன் முகம் இறுக்கமாக தெரிய “இது உங்களுதா?” என அவள் கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் அந்த வண்டியை புரட்டி பார்த்துக்கொண்டே இருந்தான். தன் பதிலுக்காக அவள் காத்திருப்பதை உணர்ந்து “என்னோட குழந்தை பருவம் இந்த வண்டி தான். வறுமையின் காரணமா பழைய கட்டைகளை வைத்து இந்த வண்டியை நானும் அம்ஜத் அண்ணனும் செய்தோம். நாங்களே பழுது பார்ப்போம். உடைஞ்சி போகாம கண்ணுங்கருத்துமா பார்த்துகிட்டோம்” என மெதுவாக சொன்னான்.

ருஹானா அவனை பாவமாக பார்க்க “நாங்க பேசிப்போம், பெரியவனானதும் பெரிய கார் வாங்கி அதுல உலகம் பூரா சுத்தி வரணும். பெரிய பெரிய மைதானங்களுக்கு போய் விளையாட்டுகளை பார்க்கணும்” என வண்டியை பார்த்து பேசியவன், அவளை பார்த்து சொன்னான். “இந்த வண்டி எங்களுக்கு வெறும் பொம்மைக்கார் இல்ல. எங்களோட நம்பிக்கை. எங்க கனவு. எங்க முழுஉலகம். எங்களுக்கு உலகத்திலயே அரிதான பொக்கிஷம் இது தான்”

கண்களில் நீரோடு அவனை நெகிழ்ச்சியாக பார்த்த ருஹானா “உங்க குழந்தை பருவ பொக்கிஷத்தை இங்கயா வச்சிருப்பீங்க? இந்த இருட்டு ஸ்டோர் ரூம்லயா?” என கேட்க, அவன் பதில் சொல்லவில்லை.

“மனிதர்கள் மறக்க நினைக்கறதை தான் கிடங்கு அறையில கண்ணுக்கு மறைவா வைப்பாங்க. இந்த வண்டிக்கான சரியான இடம் இது இல்லன்னு நான் நினைக்கறேன். உங்களுடைய அருமையான பொருள் இது. உங்க சின்ன வயசுல இது எவ்வளவு சந்தோசத்தை கொடுத்ததுன்னு நீங்க இப்போ உணர வேண்டாமா?”

அவன் கையிலிருந்து அந்த வண்டியை வாங்கியவள் அதன் மேல் படிந்த தூசியை துடைத்தாள். “மேல நல்ல பார்வையான இடத்துல இதை வைக்கலாம்”

இதுவரையில் மௌனமே சாதித்தவன் அவள் கையிலிருந்த காரை  சிறுகுழந்தை போல பட்டென பிடுங்கிக்கொண்டு “எல்லாருக்கும் எல்லாமும் தெரியணும்னு அவசியம் இல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டு, அதை மேல் அலமாரியில் தூக்கிப் போட்டான்.

திரும்பவும் கதவு திறக்க முயற்சியில் அவன் ஈடுபட அவளுக்கு சுவாசம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆர்யன் வேகமாக கம்பியை சுழற்றுவதை பார்த்து “அதிகமாக புண்படுத்திக்காதீங்க” என்று சொன்னாள். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. காது கொடுத்தும் கேட்கவில்லை.

அங்கே அத்தனை நேரம் நிலவிய இனிய சூழல் இறுக்கமானது. ஒருநேரம் மனந்திறந்து பேசும் ஆர்யன், மறுநேரம் சட்டென்று ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல உணர்வுகளை மறைத்துக்கொள்கிறான்.

ருஹானாவின் பார்வை மங்கலாக, தடுமாறி நடந்து வந்து முக்காலியில் அமர்ந்தவளுக்கு மூச்சு எடுக்க முடியவில்லை. கழுத்தை பிடித்து கொண்டவளிடம் இருந்து வினோத சத்தம் வர, ஆர்யன் திரும்பி பார்த்தான். அவள் நிலை கண்டு பதறி ஓடிவந்து அவள் முன்னே மண்டியிட்டு அவள் முழங்கைகளை பிடித்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு?” என அவன் கேட்க, அவள் பேச திணறினாள்.

“என்னை பார். நிதானமா இரு. என்னோட சேர்ந்து மூச்சுவிடு” என அவனுடைய மூச்சு பயிற்சியை ஆரம்பித்தான். நீளமாக காற்றை உள்ளே இழுக்க, வாய் வழியே நிதானமாக வெளியிட, அவன் செய்ய செய்ய அவனை பார்த்துக்கொண்டே அவளும் செய்தாள்.

“என்னை போல செய்…… மூச்சு உள்ளே இழு…. வெளியே விடு…..” என சொல்லிக்கொண்டே செய்தான். அவளை பிடித்த கைகளை விடவுமில்லை. அவளிடமிருந்து நகரவுமில்லை.

ஆறு, ஏழு முறை இப்படி செய்ததும் வெளுத்திருந்த ருஹானாவின் முகத்தில் இரத்தம் பாய்ந்தது. “குட்! இப்போ எப்படி இருக்கு?” என அவன் கேட்க “பரவாயில்ல” என சொன்ன ருஹானா, அவனின் பார்வையின் பேதம் புரிய எழுந்து விலகினாள்.

அவனும் மண்டியிட்ட நிலையில் இருந்து எழுந்தான். அவள் கையை பிடித்து தன்னிடம் இழுத்த ஆர்யன், அவள் திகைத்து பார்க்க, அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.

(தொடரும்)

 

 

Advertisement