Advertisement

 

ருஹானா கட்டிலில் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக்கொண்டு இருந்தாலும் அவள் சிந்தனை அதில் இல்லை. அறைக்கு வெளியே வந்து நின்ற ஆர்யன் சில விநாடிகள் தயக்கத்திற்கு பின் கதவை தட்டினான். அவள் குரல் கேட்கவில்லை எனவும் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான்.

மறுபக்கம் பார்த்துக்கொண்டு அவள் சிக்கெடுக்கும் கூந்தலில் அவன் மனம் சிக்கிக்கொண்டது. அப்படியே அசையாது நின்று பார்த்திருந்தான். இந்தப்புறம் திரும்பிய ருஹானா இவனை பார்த்ததும் எழுந்து வர, இவன் உள்ளே நுழைந்தான்.

“நீங்க நிற்கறதை நான் பார்க்கவே இல்லயே! எதும் சொல்ல வந்தீங்களா?”

“நீ தயாராயிட்டீனா, நாம ரெண்டு மணி நேரத்துல கிளம்புறோம்”

“எங்க?”

“யாட்ல கடல் பயணம் செய்யப் போறோம்”

“யாட்லயா? எதுக்கு?”

“டாக்டர் சொன்னதை செய்யத்தான். கடல் காற்று உன்னோட நுரையீரலுக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னார் தானே?”

“ஆமா!”

ஆர்யன் பின்னாடியே வந்திருந்த சல்மா இதையெல்லாம் கேட்டுவிட்டாள். அவளுக்கு கொஞ்சமும் பொறுக்கவில்லை. கண்கள் கலங்க அங்கிருந்து விலகினாள்.

சாதாரணமாக காதலர்கள் திரைப்படத்திற்கோ உணவகங்களுக்கோ  செல்வார்கள். ஆனால் ஆர்யன் ருஹானாவை உல்லாச படகில் அழைத்து செல்லப் போகிறான்.

காபி டேட்டிங்கிற்கு பிறகு இப்போது கடல் டேட்டிங்!

கடல் காற்று வாங்க கடற்கரை போதவில்லை, அவனுக்கு. நடுக்கடலுக்கே கூட்டி சென்று அவளுக்கு தூய காற்றைத் தரப் போகிறான்.

“நான் இப்போ ஆபீஸ் போறேன். ரெண்டு மணி நேரம் கழிச்சி டிரைவர் உன்னை கடற்கரைக்கு கூட்டிட்டு வருவான்”

சரியென ருஹானா தலையாட்ட, ‘எங்க இன்னும் நின்றால் யோசித்து மறுத்து எதும் சொல்லிவிடுவாளோ’ என ஆர்யன் வேகமாக வெளியே சென்று அறைக்கதவை சாத்த, ருஹானா “இவானை கூட்டிட்டு போகலாமா?” என கேட்டபடி கதவருகே வந்தாள்.

கதவுக்கு முன்னும் பின்னும் இருவரும் படபடப்பாக நின்றனர்.

அதற்குள் சமூகசேவை நிறுவன அதிகாரியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

——-

“யாட்ல போக போறாங்க.. யாட்ல பயணம் செய்ய போறாங்க.. என் முகத்தை கூட பார்க்க மாட்றான். அவளை யாட்ல கூட்டிட்டு போக போறான்” திரும்ப திரும்ப சொல்லியபடி தன் அறையில் நடந்து கொண்டிருந்த சல்மா மேசை மேல் இருந்த கண்ணாடி கோப்பையை தட்டி விட்டாள்.

அது சுக்குநூறாக உடைந்து சிதற, உடைந்த துண்டு ஒன்றின் மேல் காலணியை வைத்து நசுக்கியபடி “இது எப்படி நடக்குதுன்னு நான் பார்க்கறேன்” என சவால் விட்டாள். ஆவேசத்தில் அவள் உடல் நடுங்க, ஓடிவந்து அவளது மாத்திரையை எடுத்து போட்டுக்கொண்டாள்.

——-

“நஸ்ரியா! இவானோட பிறப்பு சான்றிதழ் எங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா? நேத்து நான் அங்க போயிருந்தப்ப சோசியல் சர்வீஸ் அதிகாரி கேட்டாங்க. இப்போ அவனோட மெடிக்கல் ரிப்போர்ட்டும் வேணுமாம். போன் செய்தாங்க”

“எனக்கு தெரியாதே ருஹானா மேம்! பெரியம்மா கடைக்கு போயிருக்காங்க. அவங்க வந்துட்டாங்களான்னு பார்த்துட்டு கேட்டுட்டு வரேன்” என நஸ்ரியா செல்ல, அவளோடு வந்த இவான் “சித்தி! நீங்க கப்பல்ல போகும்போது இதை போட்டுக்கங்க” என ஒரு வெள்ளை தொப்பியை அவள் தலையில் வைத்தான்.

ருஹானா அவனுக்கு சல்யூட் அடிக்க, அவனும் சிரித்தபடி அதையே செய்தான்.

“சித்தப்பா உங்களுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி தருவார். நீங்க கப்பல் மேல நின்னு அதை சாப்பிடுங்க”

மனம் கசிந்த ருஹானா “அன்பே! நீயும் எங்ககூட வாயேன்!” என அழைத்தாள்.

“இல்ல சித்தி! எனக்கு ஒருமுறை படகுல போகும்போது மயக்கம் வந்துடுச்சி!”

“மயக்கமா? அப்போ எனக்கும் வந்துடுச்சினா என்ன செய்றது? இதுக்கு நான் போகாம வீட்லயே இருந்துக்கறேன்”

“நீங்க பெரியவங்களாகிட்டீங்க. உங்களுக்கு வராது, சித்தி. நீங்க போயிட்டு வாங்க. சீக்கிரம் குணமாகிடுவீங்க”

இருவரும் கட்டிக்கொண்டு முத்தமிட ருஹானாவின் தொப்பி கீழே விழுந்தது. அதை திரும்பவும் மாட்டிவிட்ட இவான் அவள் முடியை ஒதுக்கி விட்டான்.

சிரிப்புடன் ருஹானா தொப்பியில் கைவைத்தபடியே ஆவணங்களை தேட, சல்மா உள்ளே வந்தாள்.

“ருஹானா! உன் உடம்பு எப்படி இருக்கு?”

“ஆக்சிஜன் மாஸ்க் வைத்தபின்ன பரவாயில்ல”

“நல்லது, நல்லது! என்ன தேடிட்டு இருக்கே?”

“இவானோட ஆவணங்கள். நாளைக்குள்ள கொடுக்கணும்”

“அது கீழ ஸ்டோர் ரூம்ல இருக்குமே!”

“அப்படியா? நான் அங்க போய் பார்க்கறேன். நன்றி” என சல்மாவிடம் சொன்ன ருஹானா, கார் வைத்து விளையாடிக் கொண்டிருந்த இவானிடம் “நான் இப்போ வந்திடறேன், தேனே” என சொல்லி சென்றாள்.

அவள் கிடங்கு அறைக்குள் நுழையவும், அவள் பின்னாலேயே சென்ற சல்மா அந்த அறையை சாவி கொண்டு மூடிவிட்டாள். காற்றில்தான் கதவு அடித்துக்கொண்டு மூடிவிட்டது என எண்ணி ருஹானா கதவை இழுத்துப் பார்த்தாள். சல்மா கதவின் அந்த புறம் நின்று பார்த்துவிட்டு வெற்றிப் புன்னகையுடன் மேலே சென்றுவிட்டாள்.

கதவை திறக்க முயன்ற ருஹானா பின்னால் காலடி சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள். கையில் நீண்ட குச்சியுடன் கருப்பு ஷூ அணிந்த கால்கள் மட்டும் அலமாரிக்கு பின்னே தெரிய வெலவெலத்துப் போனாள்.

மெதுவாக தலையை வெளியே நீட்டிய ஆர்யனைப் பார்த்ததும் தான் அவளுக்கு உயிர் திரும்பியது.

“நீங்க என்னை ரொம்ப பயமுறுத்தீட்டீங்க!”

“நீ ஏன் இங்க வந்தே?”

“சோசியல் சர்வீஸ்ல கேட்ட இவானோட ஆவணங்கள் எடுக்க வந்தேன். காத்துல கதவு வேகமாக மூடி தாள் மாட்டிடுச்சி போல” என்றவள் “உங்க கையில என்னது?” என கேட்டாள்.

“இது மீன் பிடிக்கிற தூண்டில். நம்மோட யாட் பயணத்துல மீன் பிடிக்கலாம்னு திட்டம் போட்டேன். ஆனா இப்படி அடைபட்டுட்டோம்”

தூண்டிலையும் வாளியையும் கீழே வைத்த ஆர்யன், ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு தாழ்ப்பாளை நெம்பி திறக்க முற்பட்டான்.

“காற்று வேகமா அடிச்சதுல கதவு அழுத்தமா சிக்கிடுச்சி போல” என ருஹானா சொல்ல, “எங்க இருந்து காற்று வீசுதுன்னு கணிக்க முடியாதுன்னு சொல்வாங்களே!’ என ஆர்யன் பழமொழியை நினைவுப்படுத்த ருஹானா மெலிதாக புன்முறுவல் செய்தாள்.

“என்ன?” என ஆர்யன் கேட்க “நான் சின்ன பொண்ணா இருக்கும்போது ஒருநாள் காற்று மேல நான் ரொம்ப கோபப்பட்டேன்” என அவள் சொல்ல, ஆர்யன் ரசிகன் நிலைக்கு மாறினான்.

எப்போதும் அவள் கண்கள் மின்ன விவரிப்பது இவனுக்கு மிகவும் பிடிக்குமே! அவள் பேச்சுமொழி இசையாய் இவன் செவியில் இறங்குமே!

“காற்று மேலயா கோபம்?” ஆர்வமாக கேட்டான்.

“ஹுஹூம்” ருஹானா அழகாக இப்படி ஆம் என சொல்வது அவனை கவரும். இப்போதும் அப்படியே அவள் முகத்தை அவன் ரசித்து பார்க்க, அவள் “அப்போ நான் தொடக்கப்பள்ளியில படிச்சிட்டு இருந்தேன். வீட்ல கரெண்ட் போயிடுச்சி. மெழுகுவர்த்தி ஏத்திவச்சி வீட்டுப் பாடம் எழுதிட்டு இருந்தேன்” என தொடங்க, ஆர்யன் கதவை திறக்கும் முயற்சியை முற்றிலும் விட்டுவிட்டு இவள் பக்கம் திரும்பி கதை கேட்டான்.

“ஜன்னல்ல இருந்து காற்று வேகமா வீசவும், மெழுகுவர்த்தி அணைஞ்சிடுச்சி. நான் வேகமாக ஜன்னல் கிட்டே போனேன். கை ரெண்டையும் இடுப்புல வச்சிக்கிட்டு கோபமா “ஏன்? ஏன்? ஏன்?”னு கத்தறேன். அப்பாவும், அக்காவும் என்னை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க” சிரிப்புடன் தொடங்கியவளின் முகம் சோகமானது, தந்தையையும், தமக்கையையும் நினைத்து.

ஆர்யன் “அதான் காற்று. சிலசமயம் அணைக்கவும் செய்யும். சிலசமயம் பற்றி எரியவும் வைக்கும்” என தத்துவம் பேச, “நல்லவேளை இங்க நெருப்பு இல்ல” என ருஹானா வெகுளியாக சொல்ல, ‘எனக்கு உள்ளே எரியறது உனக்கு எப்படி தெரியும்?’ என ஆர்யன் மனது சொல்ல, வெளியில் “ஆமா! நீ சொல்றது சரிதான்” என தலையாட்டிக் கொண்டான்.

“என்ன! உங்களால திறக்க முடியலயா?” ருஹானா உரையாடலை நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.

“ஷாரிக் ஆட்களுக்கு வாய்ப்பு கொடுத்துடக் கூடாதுன்னு எல்லா பூட்டையும் இப்போ தான் மாற்றினோம். இன்னும் வலிமையா, பாதுகாப்பா”

“இப்போ எப்படி நாம வெளிய போறது?”

“செக்யூரிட்டி ஒவ்வொரு நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை எல்லாத்தையும் செக் செய்வாங்க”

நான்கு மணி நேரமா? நல்லது, நீண்ட டேட்டிங் தான் போல!

ஆர்யன் வெளியே செல்லும் வழி சொன்னதும், அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்க, அக்கம் பக்கம் பார்த்த ருஹானாவின் பார்வை மீன்பிடி தூண்டிலில் விழுந்தது.

“கடல் பயணம் போக திட்டம் போட்டோம். கடைசில தூண்டிலும், வாளியுமா இங்க உட்கார்ந்திருக்கோம்” ருஹானா குறுநகையுடன் கூறினாள்.

ஆர்யன் ருஹானாவினால் பெரிதாக ஈர்க்கப்படுகிறான். தன்னையே மறந்து கண்ணோடு கண் நோக்கி நிற்கிறான். பின் மீட்டுக்கொண்டு சுயநினைவுக்கு வருகிறான். ‘எனக்கு என்ன இந்த மயக்கம்?’ என சங்கடப்படுகிறான் அல்லது கோபப்படுகிறான். இதுதான் வெகு நாட்களாக நடக்கிறதே!

“நான் வேறவிதமா திறந்து பார்க்கறேன்” என ஆர்யன் இன்னொரு சிறிய கம்பியை எடுத்து வந்தான். ருஹானா அங்கே இருந்த ஒரு முக்காலியில் அமர்ந்தாள்.

கதவின் இடுக்கில் கம்பியை வைத்து உள்ளங்கையால் அழுத்தம் தந்து ஆர்யன் திறக்க முயன்று கொண்டிருந்தான். உட்கார்ந்திருந்த ருஹானா திடுக்கிட்டு “ம்ம்ஹூம்!” சத்தமிட்டு எழ, “என்னாச்சு?” என ஆர்யனும் பதறினான்.

“ஒண்ணுமில்ல. சின்ன பூச்சி தான். நான் தான் ஓவரா பயந்திட்டேன்”

“அப்பப்போ பூச்சி மருந்து அடிக்கிறாங்க. ஆனாலும் வந்திடுது”

“இப்போ நாம தான் அவங்க வாழ்விடத்துல வந்து தொல்லை தரோம்” என அவள் சொல்ல, ஆர்யன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“இவானுக்கு மூணு, நாலு வயசு இருக்கும்போது அவன் தோட்டத்துல இருக்குற பூச்சியெல்லாம் பிடிச்சி வீட்டுக்குள்ள எடுத்துட்டு வந்திட்டான். அதுக்கு உணவு கொடுக்கணும்னு. இப்போதான் எனக்கு புரியுது, அவன் சித்தி போல தான் அவனும் இருக்கான்”

ருஹானா வெட்க புன்முறுவல் செய்ய, இவானை பற்றி சொல்லிவிட்டு ஆர்யன் திரும்ப வேலையை தொடர, ருஹானா அவன் செய்கையை கவனித்தாள். ஏற்கனவே காயம் பட்டிருக்கும் உள்ளங்கையில் இரும்பு கம்பி மோத, அது மேலும் புண்ணானது.

அவள் பார்ப்பதை பார்த்த ஆர்யன் தன் உள்ளங்கையை தானும் பார்த்தான். இருவரும் அந்த கொடிய நேரத்துக்கு சென்று வந்தனர். ருஹானா எழுந்து சென்று எதையோ தேட, கதவு திறக்கும் வேலையை நிறுத்தாமல் “என்ன செய்றே?” என ஆர்யன் கேட்டான்.

“உங்க காயத்துக்கு போட மருந்து ஏதாவது இருக்கான்னு பார்க்கறேன்”

“இதுக்கு மருந்து தேவை இல்ல”

“ஏன் தேவை இல்ல? காயம் திறந்திட்டா சீழ் வச்சிடும்”

அதற்குள் மருந்து கிடைத்துவிட, ஆர்யன் அருகே வந்தவள் அவன் நெம்பிக் கொண்டிருந்த கம்பியை பிடித்து நிறுத்தினாள். அவளது அருகாமை அவனை அலைக்கழிக்க, ருஹானா அவன் உள்ளங்கையை பற்றி “என்னை மருந்து போட விடுங்க ப்ளீஸ்” எனவும் அவன் கையை வெடுக்கென இழுத்துக்கொண்டான்.

அவன் நெஞ்சின் நெருப்பு அவள் தொட்டதும் ஆர்ப்பரித்து எரிய, தன் கட்டுப்பாட்டை மீறிவிடுமோ என பயந்து அவன் கையை அவளிடமிருந்து பிடிங்கிக் கொள்ள, அவள் முகம் வாடிப் போனாள்.

——

Advertisement