Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 79

‘நீங்க என்னை விரட்ட பார்த்தீங்க தானே! நாயை விட்டு என்னை பயமுறுத்தினீங்க தானே! என் தலையில துப்பாக்கி வச்சீங்க தானே! என்னை போலீஸ்ல மாட்டி விட்டீங்க தானே! அப்புறம் எப்படி இப்போ உங்க உயிரை கொடுத்து என்னை காப்பாத்தினீங்க?’ இத்தனையும் ஆர்யனை பார்த்து கேட்க ருஹானாவால் இயலவில்லை. ஒரே ஒரு வார்த்தையாய் கேட்டாள் ‘ஏன்’ என்று.

காற்றில் காதல் கலந்திருந்தாலும் அவளால் இனம் காண முடியவில்லை. அவளுக்கு அவன் மனதின் தாறுமாறான ஓட்டம் புரியவில்லை. தன்னை அவன் நேசிப்பான் என கற்பனையிலும் நினைக்கவில்லை. அவன் கண்ணில் வழியும் நேசம் அவள் கண்ணுக்கு தெரியவில்லை.

இவான் மேல் உயிர்அன்பு கொண்ட ஆர்யன் இவானுக்காகத்தான் தனக்கு எல்லாம் செய்கிறான் என அவள் நினைத்திருக்க, தன்னுயிரை காப்பாற்றியதும் இவான் தானில்லாமல் இருக்க மாட்டான் என்பதாலேயே என அவள் நம்பியிருக்க, இப்போது ‘தன் சந்தோசத்திற்காக பார்த்து பார்த்து அவன் செய்வது எதனால்?’ என்று சந்தேகம் தோன்ற அவனிடமே கேட்க வந்துவிட்டாள்.

ருஹானாவின் கேள்வியில் ஆர்யன் அடைந்த நிலையோ விவரிக்க முடியாததாக இருந்தது. ஏன் எனும் அவள் கேள்விக்கு ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ எனும் மூன்று வார்த்தையில் பதில் சொல்ல முடியுமா, அவனால்? அந்த தைரியம் அவனுக்கு இருக்கிறதா?

அவளிடமிருந்து பார்வையை விலக்கி யோசித்தவன், எழுந்து அவள் அருகே வந்தான். “ஏன்னா.. நீ இந்த மாளிகைல ஒருத்தியாகிட்டே. அதனால தான் நான் மாளிகையோட சாவியை உனக்கு கொடுத்தேன். இவானுக்கும் எனக்கும்….” என அவன் சொல்ல, அவள் கூர்ந்து கவனிக்கவும் “அதாவது.. மாளிகைல இருக்கறவங்க எல்லாருக்கும் நீ முக்கியமானவளா மாறிட்டே” என சொல்ல, இந்த வார்த்தைகளுக்கே அவள் மிகவும் மகிழ்ந்து போனாள்.

மலர்ந்த அவள் முகத்தை பார்த்துக்கொண்டே “இவானுக்கும் பாதி அம்மாவாகிட்டே!” என அவள் சொல்ல, இன்பமாக அதிர்ந்தவள் சில விநாடிகள் மலைத்து நின்றாள்.

“நான்.. எனக்கு புரியுது… நன்றி” என சொன்னவளின் பார்வை அவன் கண்களிலேயே தொக்கி நின்றது. பின் மெல்ல அவள் திரும்பி நடந்து வெளியே செல்ல, ஆர்யனுக்கு தன் மீதே கோபம் வந்தது. ‘சரியான சந்தர்ப்பம் கிடைத்தும் ஏன் சொல்லாமல் போனோம்?’ என வெறுப்பில் தொப்பென நாற்காலியில் அமர்ந்தான்.

அவன் பேச நினைத்த வார்த்தைகளும் தூரமானது அவளருகில்!

“மிக கடினம்!” என வாய்விட்டே சொல்லிக் கொண்டான். எழுந்து உலாத்தியவன் கோட்டை கழட்டி நாற்காலியில் விட்டெறிந்தான். சட்டையின் மேல் பொத்தானை கழட்டிவிட்டு கழுத்தை தடவி விட்டுக்கொண்டான்.

காற்று கடுமையானது. வெப்பம் அதிகமானது. மூச்சுவிட சிரமமானது. உள்ளே காதல் கொழுந்துவிட்டு எரிந்தது, பலமாக.

‘நெருப்பில் நடக்க தயாரா?’ என சையத் கேட்க, உள்ளங்கை காயத்தை பார்த்தவன் “நான் நடப்பேன்!” என்று சொல்லி முடிவுக்கு வந்தான். அதன் பின்னே அவன் படபடப்பு குறைந்தது. மடிக்கணினியின் முன் அமர்ந்து அவனுக்கு வந்த மின்னஞ்சல்களை பார்வையிட ஆரம்பித்தான்.

செல்பேசியில் ரஷீத் அழைத்தான். “ஆர்யன்! புசைரா நகரத்துல இருக்குற நம்ம கோடவுனுக்கு காதிர் ஆளுங்க தீ வச்சிட்டாங்க”

“என்ன!!” ஆர்யன் நாற்காலியை விட்டு எழுந்துவிட்டான்.

“அவங்க நம்ம பக்கம் தானே இருந்தாங்க, ரஷீத்?”

“ஆமா ஆர்யன்! இப்போ ஷாரிக்கோட சேர்ந்துட்டாங்க. அதை தான் இப்படி நெருப்பு வச்சி சொல்றாங்க”

“யாருக்கும் ஒன்னும் ஆகலயே?”

“ஸம்பக் மட்டும் தீயில மாட்டிக்கிட்டான், ஆர்யன். அவனுக்கு கால்ல காயம். இதுக்கு நாம காதிரை பழிவாங்குவோம்”

ஆர்யன் மேசையில் இருந்த கைப்பிடிப்பானை (ஹாண்ட் கிரிப்பர் – கைக்கு பயிற்சி கொடுக்கும் கருவி) பிடித்த பிடியில் அவன் கோபம் தெரிந்தது. ஆனாலும் சொன்னான். “ரஷீத்! நீ எதுவும் செய்யக் கூடாது!”

“ஆனா காதிர்க்கு குளிர் விட்டு போய்டும். நாம கண்டிப்பா பதிலுக்கு…”

“தேவையில்ல. நான் சொல்றேன் தானே! விட்டுடு, ரஷீத்! நீ ஸம்பக்கோட சிகிச்சையை கவனி. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பணம் கொடு”

“சரி, நான் பார்த்துக்கறேன். உங்களுக்கு தகவல் சொல்றேன்”

இன்னும் ஆர்யன் கைப்பிடிப்பானை அழுத்திக்கொண்டே தான் இருந்தான். ஆனாலும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை.

“ஆங்.. அப்புறம்.. ஆர்யன்! இன்னொரு செய்தி. ஒரு சின்ன சைட்ல நம்ம இடத்துல கடத்தல் நடக்கறதா புரளி கிளப்பி விட்டுருக்காங்க. அதோட லிங்க் நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன்”

போன் பேசிக்கொண்டே திறந்திருந்த தன் மடிக்கணினியிடம் வந்த ஆர்யன் இணையத்தில் அந்த இணைப்பில் போய் பார்த்தான். அவனுடைய கோபமுக புகைப்படத்துடன் வதந்திகளாக செய்திகள் போடப்பட்டிருந்தன

“இதெல்லாம் ஒரு விஷயமா? கண்டுக்காம விடு! நீ காதிர் பத்தின தகவலை சேகரி” என்று ஆர்யன் போனை வைத்துவிட்டு, அந்த இணைப்பை தள்ளியவன் அதன் கீழே இருந்த இதயக்குறியில் இடறப்பட்டு அது என்ன என பார்த்தான். ‘பெண்ணின் இதயத்தில் குடியேற வழிகள்’ எனும் தலைப்பு அவனை இழுத்தது.

“முட்டாள்தனம்!” என முனகியவன் அதை மூட பார்த்தான். ஆனால் அப்படி செய்ய மனம் வராமல் உள்ளே போனான். ‘தங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவார்கள். அவர்களுடன் வெளியே செல்லுங்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் நெஞ்சத்தை அள்ளுங்கள்!”

“இது ரொம்ப நல்லா இருக்கு, சித்தப்பா!” எனும் குரலில் நடுங்கிப்போய் திரையை பட்டென மூடிவிட்டு திரும்பி பார்த்தான். கையில் பஞ்சுமிட்டாயுடன் இவான் பக்கத்தில் நின்றிருக்க ‘அவனுக்கு படிக்க தெரியாது. இன்னும் பள்ளிக்கூடமே செல்லவில்லை’ என்பதெல்லாம் அவனை திகைப்பாக பார்த்திருந்த ஆர்யனுக்கு மெதுவாகவே உறைத்தது.

“இது மேகம் இல்லன்னு சித்தி சொன்னாங்க. ஆனா எனக்கு அப்படித்தான் தெரியுது” என சொல்லியபடி ஆர்யனின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனின் தோளை சுற்றி ஆர்யன் கை போட்டுக் கொள்ள “சித்திக்கும் இது பிடிக்குது” என பஞ்சு மிட்டாயை சாப்பிட்டுக்கொண்டே இவான் சொல்ல “அப்படினா உனக்கு பிடிக்கிறதுலாம் உன் சித்திக்கும் பிடிக்குதா?” ஆவலை காட்டிக்கொள்ளாமல் ஆர்யன் கேட்டான்.

மேலே பார்த்து அழகாக யோசித்த இவான் “லெமன் குக்கிஸ்…. ஐஸ்கிரீம்… அப்புறம்… கடல்… கப்பல்” என சொல்ல, ஆர்யனுக்கு யோசனை எங்கோ சென்றது. “கப்பலா?” என உறுதி செய்துக்கொள்ள ஆர்யன் மீண்டும் கேட்க “ஆமா, சித்தப்பா! அவங்களுக்கு படகுல போறது கூட பிடிக்கும். ஆனா அவங்க போனதே இல்லயாம்” என அவனுக்கு தேவையான செய்திகளாக இவான் சொல்லிக்கொண்டே போக ஆர்யனுக்கு ருஹானாவின் விருப்பங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

 

இரும்பென இருந்தவனின்

இதயத்தில் காந்தமாய் அவள்….

இளகிய இரும்பு காந்தத்தை 

இழுக்கும் வகையறியாது 

இணையம் முதல் இவான் வரை

இடைவிடாது இவனும் தேட….. 

இறுதியில் திட்டமிடப்பட்டது

இனிய பாய்மரப்படகு உலா..!

 

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா, சித்தப்பா? என்னை ஒரு தடவை படகுல கூட்டிட்டு போனீங்களே! எனக்கு உடம்பு சரியில்லாம போய்டுச்சே! எனக்கு கப்பல் பயணம் ஒத்துக்கல” என இவான் கவலையுடன் சொல்ல “நீ பெரியவனானதும் அதெல்லாம் சரியாகிடும், சிங்கப்பையா!” என ஆர்யன் தேற்றினான்.

“உங்களைப் போல வளர்ந்ததும் நான் கப்பல் கேப்டனாவேன், சித்தப்பா!” என இவான் ஆசைப்பட “கண்டிப்பா, அக்னி சிறகே! இப்போ போய் கை கழுவிட்டு பல் தேய்! தூங்குற நேரம் ஆகிடுச்சே!” என ஆர்யன் சொன்னான். இந்நேரத்தில் இவான் பஞ்சுமிட்டாயை முழுவதுமாக சாப்பிட்டு முடித்திருந்தான்.

சித்தப்பாவின் மடியில் இருந்து இறங்கிய இவான் “நான் கப்பல் வாங்கியதும் என் சித்தியை தான் முதல்ல என் கப்பல்ல ஏத்துவேன். அப்புறம் தான் நீங்க!” என சொல்ல, ஆர்யன் புன்சிரிப்புடன் தலையாட்டினான். இரவு வணக்கம் சொல்லி இவான் வெளியே சென்றான்.

‘——-

“காலை வணக்கம் கேப்டன்! யாட் (பாய்மர உலாப் படகு) தயாரா இருக்கா? நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வருவேன். பயணத்துக்கு எல்லா ஏற்பாடும் சரியா செஞ்சிடுங்க. பாதுகாப்பை ஒன்னுக்கு ரெண்டு தடவை சரிபார்த்துடுங்க”

கவர்ச்சியான கருப்பு உடையில் கம்பீரமாக இருந்த ஆர்யன் செல்பேசியில் பேசி முடிக்க, அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.

காலை வணக்கம் சொல்லியபடியே உள்ளே வந்த சல்மா அழகாக உடுத்தி இருந்தாள். “நேத்து ரத்து செய்த சந்திப்பை இந்த வாரம் வச்சிக்கலாமா, ஆர்யன்?”

அவளை பார்க்காமல் மேசை இழுப்பறையில் ஏதோ எடுத்த ஆர்யன் “இந்த வாரம் முழுதும் நான் பிஸி. என்னோட எல்லா மீட்டிங்கும் தள்ளி தான் வைக்கணும்” என்றபடியே அவள் முகம் பார்க்காமல் வெளியே போய்விட்டான்.

கொதித்து போன சல்மா “இந்த வாரம் அந்த சூனியக்காரி என்ன வேலை வச்சிருக்காளோ?” என பல்லைக் கடித்தாள்.

——–

Advertisement