Advertisement

“நான் விட மாட்டேன், சிங்கப்பையா! நீ பயப்படாதே!” என்றான் ருஹானாவை பார்த்தபடி.

ஐவரும் வீட்டின் உள்ளே நுழைய சாரா, ஜாஃபர், நஸ்ரியா அனைவரும் அவள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். கரீமா கண்ணை காட்ட, சல்மாவும் அதையே சொன்னாள். ருஹானா நன்றி தெரிவித்தாள். 

“மேல போய் ஓய்வெடு!’ என அவளிடம் சொன்ன ஆர்யன் நஸ்ரியாவிடம் அவளை கூட்டி செல்லுமாறு சொன்னான். நஸ்ரியா வந்து ருஹானாவின் கையை பிடிக்க “நானும் என் சித்திக்கு உதவி செய்வேன்” என இவானும் அவளின் இன்னொரு கையை பிடித்து அழைத்து சென்றான்

——

மருத்துவமனையில் கண்விழித்த யாக்கூப் தான் எங்கே இருக்கிறோம் என பார்த்து ஸ்தம்பித்து போனான். அவன் உயிரோடு இருப்பது உணர்ந்து அவனுக்கு வெறுப்பாக இருந்தது. பிராணவாயு கவசத்தை இடது கையால் எடுத்தவன், இடது கையில் மாட்டியிருந்த மருந்து குழாயை எடுக்க முயன்றான். வலதுகையில் விலங்கு மாட்டப்பட்டு அது கட்டிலோடு பிணைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஆத்திரமுற்றான். 

——

“எல்லாம் இங்க இருக்கு.. உங்க ஆக்சிஜன் மாஸ்க்.. மருந்து இதோ இருக்கு” என நஸ்ரியா ஒவ்வொன்றாக காட்ட “சித்தப்பா உங்களுக்காக எல்லாம் செய்திட்டார், நீங்க சீக்கிரம் சரியாகணும்னு” என்று இவான் சொல்ல, ருஹானா எப்படி உணர்ந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை.

“எனக்கு தெரியும், சித்தப்பா எப்படியும் உங்களை திரும்ப கூட்டிட்டு வந்துடுவார்னு” என சொல்லிய இவான் அவளை கட்டிக்கொள்ள, ஆர்யன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“வாங்க லிட்டில் சார்! நீங்க சாப்பிடற நேரம் வந்துடுச்சி, உங்க சித்தியும் ஓய்வெடுக்கட்டும்” என நஸ்ரியா இவானை அழைக்க, ருஹானாவும் அவனை சென்று சாப்பிடும்படி சொல்ல, இவான் மனதே இல்லாமல் நஸ்ரியாவுடன் சென்றான்.

“இதுக்கெல்லாம் நான் என்ன சொல்லறதுன்னே தெரியல. உங்களுக்கு நான் நிறைய தொல்லை கொடுக்கறேன். எனக்கு சங்கடமா இருக்கு” என ருஹானா ஆர்யனிடம் சொல்ல, அவன் பதில் சொல்லவில்லை. 

“மிகவும் நன்றி. உங்களுக்கும், மிஷாலுக்கும் நான் நன்றிக் கடன்பட்டுருக்கேன். அவன் என் உயிரை காப்பாத்தினான். நீங்க இதெல்லாம் எனக்கு செய்றீங்க” என அவள் சொல்ல, அவன் முகம் யோசனைக்கு சென்றது. 

மயங்கிய அவளை விஷவாயுவின் எல்லைக்கு அப்பால் தூக்கிக்கொண்டு வந்த தருணம் கண்முன்னே தோன்றியது. நடந்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை என புரிந்து கொண்டான். ஆனால் அவளிடம் மறுத்து எதும் சொல்லவில்லை.

“உங்க ரெண்டு பேருக்கும் கைமாறு என்ன செய்யப் போறேன்?” என திரும்பவும் அவள் கேட்க, “நீ படுத்து ஓய்வெடு. இன்னைக்கு அதிக நேரம் நின்னுட்டே இருக்கே!’ என அவன் சொல்ல, அவளும் கட்டிலில் அமர்ந்தான். 

அருகில் வந்து பிராணவாயு கவசத்தை எடுத்தவன் “இதை நீ அப்பப்போ மாட்டிக்கணும். முக்கியமா நீ சோர்வா இருக்கும்போது கண்டிப்பா மாட்டணும்” என்று சொல்லி அவளுக்கு அதை மாட்டிவிட்டான்.

“படுத்துக்கோ. தூக்கம் வரும்போது கழட்டி வச்சிடு” என ஆர்யன் சொல்ல, அவள் தலையாட்டும்போதே அவள் கண்கள் ஓய்விற்கு கெஞ்சியது. அப்போது ரஷீத் வந்து ஆர்யனை முக்கியமான வேலை என அழைக்க “உனக்கு எதும் தேவைனா என்னை கூப்பிடு” என ருஹானாவிடம் சொல்லி ஆர்யன் சென்றான்.

அவனது அறையில் காத்திருந்த ரஷீத் “இன்னும் யாக்கூப்பை ஐசியு ல தான் வச்சிருக்காங்க. போலீஸ் காவல் போட்டுருக்காங்க. இனி பயப்பட ஒன்னும் இல்லை. நீங்க கவலைப்படாதீங்க” என சொல்ல “இருந்தாலும் நம்ம ஆட்களையும் அங்க அனுப்பி வை, ரஷீத்! நாம எச்சரிக்கையா இருக்கணும்” என ஆர்யன் உத்தரவிட, ரஷீத் பணிந்தான்.

“இந்தாங்க ஆர்யன்! ஹாஸ்பிடல்ல இருந்து வாங்கிட்டு வந்தேன். உங்க உடம்புல இருந்து எடுத்த புல்லட்” என்று ஒரு ஜிப்லாக் உறையை கொடுக்க, அதை வாங்கிய ஆர்யன் அதை வெளியே எடுத்து உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றான். பின் மேசையை திறந்து ஒரு புட்டியை எடுத்து, ஏற்கனவே அதில் இருந்த துப்பாக்கி குண்டுகளுடன் இதையும் போட்டு மூடி வைத்தான்.

——–  

மருத்துவமனையிலிருந்து தப்பித்த யாக்கூப் நேராக ருஹானாவை தேடி வந்தான். ஏற்கனவே அவனுக்கு பழகிய இடம் என்பதால் காவலர் அசந்த சமயம் வீட்டின் உள்ளே வந்து ருஹானாவின் அறைக்குள் நுழைந்தான். தூங்கிக்கொண்டிருந்த ருஹானாவிடம் “ஷெனாஸ்! எழுந்திரு! நான் உன்னை கூட்டிட்டு போக வந்துட்டேன்” என சொல்ல, கண்விழித்த அவள் முகமெங்கும் காயமாக கோரமான அவனை மிக அருகில் பார்த்ததும் பயந்து போய் கத்துவதற்கு வாயை திறக்க, அவன் கை வைத்து அவள் வாயை மூடிவிட்டான்.

“ஆ!” என அலறியபடியே வேர்க்க விறுவிறுக்க ருஹானா எழுந்து கொள்ள, ஆர்யன் ஓட்டமாய் உள்ளே ஓடிவந்தான். “என்ன நடந்தது? ஏன் கத்தினே? நீ ஓகே தானே?” என கேட்டபடியே கட்டிலில் அவள் பக்கம் அமர்ந்து, அவள் தோள்களை தன்னிரு கைகளாலும் பற்றினான்.

“அவன்.. அவன்.. இங்க… வந்திட்டான்” என சுற்றுமுற்றும் பார்த்தவள், தான் கண்டது கனவு என உணர்ந்து கொண்டாள். “நெஜம் மாதிரியே இருந்தது. அவன் இங்க வந்திட்டான்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” என அழுதபடியே சொன்னாள்.

ஆர்யன் “அது ஒரு கெட்ட கனவு. இங்க நம்மை தவிர யாரும் இல்ல. உன்னை யாரும் துன்புறுத்த நான் விட மாட்டேன், எப்பவும்” என அவளை தேற்ற, அவள் சுவாசத்துக்கு சிரமப்பட்டாள். வேகமாக அவள் பிராணவாயு கவசத்தை எடுத்து மாட்டியவன் “இப்போ மூச்சை ஆழமா எடுத்து விடு” என யோகா ஆசிரியர் போல அவளுக்கு மூச்சு விட சொல்லிக் கொடுத்தான்.

ஆழமாக நீண்ட மூச்சை எடுத்த அவன், வாய் திறந்து மெதுவாக அதை வெளியிட்டான். இப்படியே அவன் செய்து காட்ட, அவனை பார்த்தபடியே அவளும் கண்ணீர் வழிய அதே போல் செய்தாள். 

இப்படியாக அங்கே சில நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி நடந்தது. பின் அவள் சுவாசிக்க, அவன் அவளை பார்த்தபடியே பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரம் அவள் நீர் நிறைந்த கண்கள் எனும் கடலில் மூழ்கி போனவன், சட்டென வெளியே வந்து “இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லயா?” என கேட்டான். 

அவள் ஆமென தலையசைக்க, கட்டிலை விட்டு எழுந்தவன் “சாராவை கூட்டிட்டு வரேன். அவங்க நீ தூங்குறவரை உனக்கு துணையா இருப்பாங்க” என சொல்ல, அவளும் சம்மதித்தாள். 

கதவு வரை போனவனை ‘நெருப்பு பாதையில் நடக்க நீ தயாரா?’ என சையத் பாபா கேள்வி கேட்க, அப்படியே நின்றுவிட்டான்.

திரும்பி வந்தவன் “நீ படுத்து தூங்கு. நான் எங்கயும் போகல. இங்கயே இருக்கேன்” என அழுத்தமாக சொன்னான். “இல்ல, வேணாம்” என அவள் மறுக்க, “நீ தூங்கு!” என உத்தரவிட்டு முடிக்கவும், அவளும் விம்மிக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்.

இப்போது எந்தவித தயக்கமும் இன்றி அவள் முகத்தையே பார்த்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

———- 

அதிகாலை வரையும் கூட தூங்கும் அழகியை பார்த்திருக்க ஆர்யனுக்கு சலிக்கவில்லை. வேறு புறம் பார்வையையும் திருப்பவில்லை. அவளை தவிர வேறு எண்ணங்களும் மனதில் ஓடவில்லை. 

எப்படி தூங்குகிறாள்? சரியாக சுவாசிக்கிறாளா? காற்றில் ஆடும் முடிக்கற்றை அவள் முகத்தை மறைக்கிறதா? மூடிய இமைகள் எத்தனை அழகாக இருக்கின்றன! அவள் கன்னத்து சிறு தழும்பும் அவள் முகத்திற்கு இத்தனை வனப்பை தர முடியுமா? அவள் புருவங்கள் அம்புவில்லா, வானவில்லா?

அவன் நினைப்பிற்கு தடை போட, ருஹானாவிற்கு விழிப்பு வந்து லேசாக அசைய ஆரம்பிக்கவும், சட்டென திரும்பி ஜன்னலை பார்த்தான்.

“நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க?”

“ஆமா! நீ ஏன் எழுந்தே?”

“எனக்கு இப்போ சரியா சுவாசிக்க முடியுது. மாஸ்க் வேணாம்னு நினைக்கிறேன்” என்று கழட்ட, அது அவளது முடியில் சிக்கிக்கொண்டது. பின்புறம் முடியிலிருந்து விடுவிக்க அவள் சிரமப்பட “நான் எடுக்கறேன்” என ஆர்யன் பக்கம் வந்து அமர்ந்தான்.

மென்மையாக அவன் கவசத்தை எடுக்க, அவனை அதிசயமாக பார்த்தபடியே இருந்தாள், ருஹானா. அவன் உள்ளங்கைகளில் போட்டிருந்த கட்டுக்கள் அவள் கண்ணுக்கு புலப்படவே இல்லை போலும். அவனும் அவள் பார்வையை எதிர்கொண்டவன் எழுந்து கொண்டான். “உனக்கு சோர்வா இருக்கும். இப்போ தூங்கு. கண்ணை மூடு”     

அவன் சொன்ன பேச்சை கேட்ட ருஹானாவிற்கு தூக்கமும் கண்களை சுழற்ற படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். பாதி கண்கள் திறந்து தூக்க கலக்கத்தில் “நீங்க உங்களை மாதிரியே இல்ல. உங்ககிட்ட ஏதோ மாற்றம் தெரியுது. என்னமோ நடந்திருக்கு… என்னமோ நடந்திருக்கு.. நடந்திருக்கு..” என்று சொன்னபடியே தூங்கிப் போனாள்.

அவளை கனிவாக பார்த்தபடியே ‘அவளும் தன் மாற்றத்தை கண்டுபிடித்துவிட்டாளே!’ என வியந்து போன ஆர்யன் ‘அவள் தான் உலகத்திலேயே அழகானவள்’ என மீண்டும் அப்படியே அமர்ந்துக்கொண்டான்.

———

ஆழ்ந்த தூக்கத்தில் தலையணையிலிருந்து அவள் தலை நழுவி கட்டிலில் விழ, அதை தாங்கி பிடிக்க எழுந்தவன் தயக்கத்துடன் கையை பின்னிழுத்துக் கொண்டான். 

லேசாக வாய் திறந்து அவள் அசையாது தூங்க, துணிந்து முன்னேறியவன் கையை தலைக்கு அடியில் கொடுத்து மெல்ல தூக்கி தலையணையில் வைத்தான். அந்த அசைவில் அவள் விழித்துக்கொள்ள “தூக்கத்துல தலையை தொங்க விட்டுட்டே!” என அவன் அவசரமாக சொன்னான்.

“நன்றி! நானே முழிக்கத்தான் இருந்தேன்” என எழுந்து உட்கார்ந்தவள் “நீங்க இரவெல்லாம் தூங்கவே இல்லயா?” என வியப்பாக கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் “உனக்கு காலை உணவு கொண்டுவர சொல்றேன். நேரத்துக்கு மாத்திரை சாப்பிடணும்” என சொல்லி அவள் முகத்தை பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான். 

ருஹானாவிற்கு ஆர்யனின் நடவடிக்கைகள், அவன் பார்வைகள்  வித்தியாசமாக தெரிந்தது. என்றாலும் இரவு முழுதும் அவன் தூங்காமல் தன்னை பார்த்துக்கொண்டதை மகிழ்வாக உணர்ந்தாள்.

கீழே மிஷால் வந்து கதவை தட்ட, கதவை திறந்த ஜாஃபரிடம் “நான் ருஹானாவை பார்க்கணும்” என்றான். ஜாஃபர் என்ன சொல்ல என யோசிக்கும் வேளையில் மேலே இருந்து ஆர்யன் இறங்கும் சத்தம் இருவருக்கும் கேட்க, அவனை திரும்பி பார்த்தனர்.

மிஷாலை பார்த்ததும் பாதி படிக்கட்டில் ஆர்யன் நிற்க, அவனை நோக்கி மிஷால் “எனக்கு ருஹானாவின் உடல்நலம் பற்றி கவலையா இருக்கு” என்றான். இரு விநாடி யோசித்த ஆர்யன் “அவ மேல இருக்கா” என சொல்லி, ஜாஃபரிடம் மிஷாலை மேலே அழைத்து செல்லுமாறு கண்ஜாடை செய்துவிட்டு சமையலறை பக்கம் சென்றான்.

மிஷால் பெயரை கேட்டாலே மின்கம்பியை தொட்டாற்போல மின்சாரம் பாயும் ஆர்யனுக்கு மிஷால் மீது எப்படி கருணை பிறந்தது? ருஹானா ஆர்யன் பால் வைத்திருக்கும் அன்பின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கையா? ருஹானாவின் தோழனுடன் நட்பு கொள்ளும் நல்லெண்ணமா? அவனும் ருஹானாவை காப்பாற்ற முயன்றானே எனும் நன்றியா? ஏதோ ஒன்று மிஷாலை ருஹானாவின் அறை வரை செல்ல அனுமதித்தது.

——- 

“எப்படி இருக்கே ருஹானா? ஒழுங்கா சுவாசம் செய்ய முடியுதா?”

“பரவால்ல மிஷால்”

“உனக்கு எதும் தேவையா?’

“என்னோட நன்றியை உனக்கு எப்படி சொல்வேன், மிஷால்? நீ மட்டும் என் உயிரை காப்பாத்தி இருக்கலனா…. என்னால அதை நினைச்சி கூட பார்க்க முடியல. இவான் என்ன ஆகியிருப்பான்?”

ஏற்கனவே யாக்கூப்பை அறிமுகப்படுத்திய குற்றவுணர்ச்சியில் அவள் கண்களை சந்திக்காமல் பேசிக்கொண்டிருந்த மிஷால், ருஹானா இப்படி சொல்லவும் இன்னும் கூனி குறுகிப் போனான்.

ஆர்யன் அவளிடம் எதும் சொல்லியிருக்கவில்லை என புரிந்துக்கொண்டவனுக்கு, அதை பற்றி பேச மிகவும் வெட்கமாக இருந்தது.

“எனக்கு உன்னை பத்தியும் கவலையா இருந்தது. நீ என்னை காப்பாத்தும்போது உனக்கும் நிறைய கேஸ் உள்ள போய்டுச்சி தானே! நீ டாக்டரை பார்த்தியா?”

யோசனையில் ஆழ்ந்த மிஷாலின் மனசாட்சி அவனை இடித்துரைத்தது. அவன் ஒன்றும் கெட்டவனில்லையே! கரீமாவின் தவறான தூண்டுதல் தானே ஆர்யன் மீது பகைமை வளர்த்தது! 

மனதை திடப்படுத்திக்கொண்டு அவளை நேராக பார்த்து “ருஹானா! நீ ஒரு உண்மையை தெரிஞ்சிக்கணும்!” சற்று இடைவெளி விட்டவன் “உன்னை காப்பாத்தினது…. நான் இல்ல.. அவன் தான்…. ஆர்யன்” என சொல்லியே விட்டான்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ருஹானா படக்கென நிமிர்ந்து முன்னால் வந்தாள். திகைத்து போனவளின் கண்கள் பெரிதானது.

(தொடரும்)

Advertisement