Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 77

“ஏன் பதில் சொல்ல மாட்றே? உன்னால நெருப்பில் நடக்க முடியுமா? இல்ல அமைதியா உட்கார்ந்து இருக்க போறீயா?”

சையத் திரும்பவும் கேட்க ஆர்யன் மனதில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலை பாய்ந்தன. கொந்தளித்தன. முட்டி மோதின.

தெளிவு பெற்று முடிவெடுத்தவன் ஒன்றும் பேசாமல் எழுந்து காருக்கு சென்றான். சையத்தும் அவனை தடுத்து நிறுத்தவில்லை.

——-

மிஷால் ருஹானாவின் நன்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்க, “நீ உள்ள வந்தது எனக்கு லேசா நினைவிருக்கு. அப்புறம் நான் மயக்கமாகிட்டேன். நீ என்னை காப்பாத்திருக்கலனா நான் இப்ப இங்க இருந்திருக்க மாட்டேன்” என ருஹானா சொல்ல, மிஷால் “ருஹானா! நான்…” என சொல்லும்போது கதவு தட்டப்பட்டது.

தன்வீரும் அவனது அன்னை பர்வீனும் உள்ளே வந்தனர். “ருஹானா! எப்படி இருக்கே மகளே! நீ எங்களை ரொம்ப பயமுறுத்திட்டே! அல்லாஹ்க்கு நன்றி! நீ பிழைச்சிட்டே!” என பர்வீன் அவள் தலையை தடவி கண்ணீர் உகுத்தார்.

“வருத்தப்படாதீங்க, அம்மா! நான் தான் நல்லாகிட்டேனே! பாருங்க” என ருஹானா அவர் கையை பிடித்து தேற்றினாள். “நான் கிளம்பறேன். அப்புறம் வரேன்!” என்று ருஹானாவிடம் சொல்லி மிஷால் வெளியே சென்றான்.

“எங்க மனசெல்லாம் உன்கிட்டே தான் இருந்தது. நீ திரும்பி வருவியான்னு பக்பக்னு ஆகிடுச்சி. இனி கவனமா இரு” என தன்வீர் அருகே வர, தலையாட்டிய ருஹானா “அவன் என்ன ஆனான்?” என பயத்துடன் கேட்டாள்.

“அதை பத்தியெல்லாம் யோசிக்காதே! உன் உடம்பை தேத்துற வழியை பாரு”

“தன்வீர்! ப்ளீஸ் சொல்லு! அவனுக்கு என்ன ஆச்சு?”

“அவனை ஐசியு வார்டுல வச்சிருக்காங்க. அவன் நிலைமை மோசமா தான் இருக்கு”

ருஹானாவிற்கு பெரிதாக மூச்சிரைக்க பர்வீன் பயந்துபோய் அவள் பக்கம் வர, அவளே கவசத்தை மாட்டிக்கொண்டு பெரிய பெரிய மூச்சுகளை எடுத்தாள்.

“இங்கயா.. இந்த ஹாஸ்பிடல்லயா இருக்கான்?” என ருஹானா நடுங்கியபடி கேட்க, தன்வீர் மெதுவாக தலையாட்டினான்.

“அவனை பத்தி நினைக்காதே, ருஹானா! போலீஸ் அவனை பார்த்துப்பாங்க” என பர்வீன் அவளை அமைதியாக்க முயன்றார்.

செவிலிப்பெண் உள்ளே வந்து ‘நோயாளிக்கு ஓய்வு தேவை’ என அவர்களை வெளியே அனுப்ப, “உன் உடல்நிலையை பத்தி மட்டும் யோசி!” என பர்வீன் சொல்ல “நான் இங்க தான் இருப்பேன். பிறகு வரேன்” என தன்வீரும் சொல்லி சென்றனர்.

யாக்கூப்போடு போராடிய இறுதி தருணங்களை நினைத்து ருஹானாவின் முகமெல்லாம் வெளுத்து வியர்வை வடிய, வாயுக்கவசத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். 

——–

“உன் கூட்டை உடைச்சிட்டு வெளியே வா”

“பயப்படறதால உன்னோட உணர்ச்சிகளை நீ நிராகரிக்க முடியாது. மறைக்கவும் முடியாது”

“இந்த நெருப்பு பாதையை நீ தேர்ந்தெடுத்தா உன் இலக்கை அடையற வரை  நெருப்பு உன்னை சுடத்தான் செய்யும்”

சையத்தின் குரல் பின்னணியில் ஒலிக்க ஆர்யன் காற்றில் மிதந்து செல்பவன் போல மருத்துவமனைக்குள் மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்தான். 

ருஹானாவின் பல்வேறு அழகு பிம்பங்கள் அவன் மனக்கண்ணில் வந்து செல்ல, போருக்கு செல்பவன் போல தீவிரமான முகபாவனையுடன் மனதில் உறுதியோடு நடந்து வந்தவன் ருஹானாவின் அறைக் கதவை திறந்தான்.

கதவு திறக்கவும் பயந்து போன ருஹானா ஆர்யனை பார்த்ததும் ஆசுவாசமாகி “நான் உங்களைத் தான் நினைச்சிட்டு இருந்தேன்” என சொன்னாள். அதை கேட்டதும் அவன் மனம் பனியென உருகியது.

அவனுடைய இளகிய முகமும் கனிந்த கண்களும் உள்ளத்து அன்பை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியது. ருஹானாவால் அதை பார்க்க முடிகிறதா? உணர முடிகிறதா?

“நாம பேசவே இல்லயே! உள்ள வாங்க!” என அவள் அழைத்ததும், கதவை மூடிவிட்டு ஆர்யன் அவள் அருகில் வந்தான்.

“உங்களுக்கு குண்டடி பட்டதும் நீங்க இறந்திட்டீங்கன்னு நான் நினைச்சேன். ரொம்ப பயந்திட்டேன். அந்த நிமிடத்தை என்னால எப்பவுமே மறக்க முடியாது” கைகளை பிசைந்து கொண்டு அவள் பேச, அவள் முகத்தை பார்த்துக்கொண்டு அவன் அமைதியாக நின்றான்.

“உங்க காயம் எப்படி இருக்கு? நீங்க எப்படி இருக்கீங்க?”

“என்னை பத்தி கவலைப்படாதே!” என அவள் கலங்கிய கண்களை பார்த்து சொன்னவன் அவளது அன்பின் வீச்சை தாங்க முடியாமல் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“நீ எப்படி இருக்கே?” உரிமையாக கேட்டான்.

“லேசா சோர்வா இருக்கு. மத்தபடி வேற ஒன்னும் சிரமம் இல்ல”

தலையாட்டிவிட்டு அவளது அருகாமை விட்டு அகலப் போனவன், அவள் முகம் கசங்கவும் பதட்டமாகி மிக அருகில் நெருங்கி “என்ன! என்ன!!” என கேட்டான்.

“திடீர்ன்னு மூச்சு விட முடியல. ஆனா இது நார்மல் தான்னு டாக்டர் சொன்னார். அடிக்கடி இப்படி ஆகுமாம்”

அவன் பதட்டத்தை அவளுக்கு காட்டாமல் மறைத்துக்கொண்டவன் “நான் எதாவது செய்யணுமா?” என கேட்டான். “என் மாத்திரையை எடுத்து கொடுத்தீங்கன்னா…” என அவள் தயக்கமாக கேட்க, மேசை இழுப்பறையில் இருந்த மாத்திரை புட்டியை எடுத்தவன் ‘அவளுக்கு எப்படி தான் கொடுப்பது?’ என யோசித்தான்.

“நான் போய் நர்ஸை கூட்டிட்டு வரேன்” என்று வெளியே போக கதவை திறந்த ஆர்யன் “உன் கூட்டை விட்டு வெளியே வா. உள்ளத்து உணர்ச்சிகளிடமிருந்து ஓடாதே!” என சையத் சொல்லவும், கதவையும் கண்களையும் மூடி நின்றான். 

வாழ்க்கை முழுதும் பெண்களே வேண்டாம் என சிறுவயதிலிருந்தே தீர்மானம் எடுத்தவனுக்கு அவளை நெருங்க தயக்கமாக இருந்தது. 

பலவித போராட்டங்களுக்கு பின் அவன் மனதை தொட்ட அவளை பிரியவும் முடியவில்லை. அவளது அருகாமை விட்டு விலக முடியவில்லை. அவளை வேறு யாருக்கும் விட்டு தர முடியவே முடியாது.

என்ன செய்வான் அவன்? கருப்பு முத்து வெளியே வந்துவிட்டது.

ஆர்யனும் திரும்பி உள்ளே வந்தான்.

அவனை ஆச்சரியமாக பார்த்த ருஹானாவிடம் மாத்திரையை கையில் கொடுத்துவிட்டு தண்ணீரையும் குவளையில் ஊற்றி அவளிடம் நீட்டினான். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்து தவிப்பதை பார்த்தவன் குவளையை கைமாற்றிவிட்டு, அவள் கழுத்தின் அடியில் கட்டுப்போட்ட தன் உள்ளங்கையை கொடுத்து அவளை லேசாக தூக்கினான்.

அவள் அண்மையில் கண்மூடி அவள் கூந்தலின் வாசனையை நுகர்ந்தபடி அவன் ஆடாமல் அசையாமல் நிற்க, ருஹானாவே அவன் கையை இழுத்து பிடித்து தண்ணீரை குடித்தாள். அவள் குடித்தபின்னும் அவன் கையை நகர்த்தாமல் இருக்க அவனை திரும்பி பார்க்க முயன்றாள்

பிடித்திருந்த கையை அவள் விட்டதும் நடப்புக்கு வந்த ஆர்யன் அவள் தலையை மெதுவாக தலையணையில் விட்டான். பூந்தோட்டத்தில் இருந்து மருத்துவமனை வாசனைக்கு வந்தவன், தடுமாற்றமாக “நீ எத்தனை நாள் இங்க இருக்கணும்? இங்க யாரும் எதுவும் சொல்ல மாட்றாங்க. இவான் உன்னை கேட்டுட்டே இருக்கான்” என தன் மனதின் தேடுதலை அவனை அறியாமல் வெளியிட்டு விட்டான்.

ருஹானாவுக்கும் பதில் தெரியாமல் விழிக்க, அவனும் இமைகளை தட்டி சுதாரித்தவன் “நர்ஸை காணோம். நான் போய் பார்த்துட்டு வரேன்” என  வேகமாக கதவை திறந்து  வெளியேறினான். 

கதவை மூடி அதே இடத்தில் நின்று நீண்ட மூச்சை வெளியிட்டான். ஓட்டப்பந்தயத்தில் ஓடிவந்தவன் போல அவன் இதயம் அடித்துக் கொண்டது. அவளை தொட்ட தன் உள்ளங்கையை மெல்ல தடவி பார்த்தான். 

அவன் மனதில் முதன்முறையாக ஏற்படும் புது உணர்வுகளை அவனுக்கு பழக்கமாக்கிக் கொள்ள அவன் பழக வேண்டும் போல. 

அன்பை விதைப்போம் அறம் கற்போம்

உழுதுண்டு வாழ்பவர் மனிதர்

அன்பை பயிர் செய்தே 

கூடும் நல்லுறவுகள்…

பாறையில் உறவு மலருமா?

முட்டி முட்டி தட்டி தட்டி

தன்னை நிரூபிக்க போராடி

அன்பு அணுக்கள்

பாறையின் ஆழத்தில்

வேர் விடும்போது

காதல் துளிர்க்க தவறுமா?

அப்போது அம்ஜத் போனிலிருந்து இவான் அழைத்தான். “சித்தப்பா! சித்தியை கூட்டிட்டு வரீங்களா?” 

“கண்டிப்பா சிங்கப்பையா”

“கூட்டிட்டு வர்றாராம்” என பக்கத்தில் இருந்த அம்ஜத்திடம் இவான் சொல்ல, அவனும் மகிழ்வுடன் தலையசைத்தான்.

“எனக்கு சித்தியை ரொம்ப தேடுது…. உங்களையும் தான்… ஆனா யாரை அதிகம் மிஸ் செய்றேன்னு எனக்கு தெரியல, சித்தப்பா!”

“நாங்களும் உன்னை அதிகமா மிஸ் செய்றோம், அக்னி சிறகே! நான் உன் சித்தியை கூட்டிட்டு வந்துடுவேன். நீ கவலைப்படாதே”

“என்னால கவலைப்படாம இருக்க முடியல. நான் பொய் சொல்ல மாட்டேன், சித்தப்பா. சில சமயம் அதிகமா வருத்தப்படுறேன். கவலைப்பட மாட்டேன்னு என்னால சத்தியம் செய்ய முடியாது, சித்தப்பா”

அங்கே பெரிய தந்தையும், இங்கே சிறிய தந்தையும் இவானின் பேச்சில் அதிசயப்பட்டு நின்றனர்.

“சத்தியம் செய்யாதே, சிங்கப்பையா! உனக்கு என்ன தோணுதோ அப்படியே செய். என்ன நினைக்கிறியோ அதை மாத்த முயற்சி செய்யாதே”

இவானுக்கு சொல்கிறானா? அல்லது இவனுக்கு இவனே சொல்லிக் கொள்கிறானா?

சில மாதங்களுக்கு முன் இந்த பிஞ்சு குழந்தைக்கு என்னவெல்லாம் அறிவுரை சொன்னான் இவன்! ‘எதுக்கும் அழக் கூடாது! மனசை கல்லு மாதிரி வச்சிருக்கணும். உள்ளத்து உணர்ச்சிகளை வெளிக் காட்டாதே’ இன்னும் எத்தனை சொன்னான்! இப்போது என்னவென்றால் கல் தேவையில்லை. மனிதனாக இருக்கலாம், தப்பில்லை என்கிறான்.

ஆர்யனுக்குள் எத்தனை மாற்றங்கள்! எல்லாம் ருஹானா என்னும் மாயக்காரியால் தானே!

“சரி, சிங்கப்பையா! நான் உன்கிட்டே அப்புறம் பேசுறேன். எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு” என போனை அடைத்தவன் விரைந்து சென்றான்

——–

ருஹானாவை நலம் விசாரிக்க வந்த கரீமா அவளை பயமுறுத்திக்கொண்டு இருந்தாள்.

“நல்லவேளை! இதோட தப்பிச்சே! அவன் இன்னும் உன்னை கொடுமைப்படுத்தாம விட்டானே! பார்க்க நல்லவன் போல இருந்தான். அவனோட கொடூர முகத்தை எவ்வளவு திறமையா மறைச்சிருக்கான் பாரேன்!”

அவள் சொல்ல சொல்ல ருஹானாவிற்கு அவள் பட்ட கஷ்டங்கள், யாக்கூப்பின் பயமுறுத்தல்கள் நினைவுக்கு வந்து அப்போது தான் அவை நடப்பது போல உணர்ந்தாள்.

அவள் நடுங்குவதை ஓரக்கண்ணால் பார்த்த கரீமா திருப்தியானாள். அவள் மேலும் ருஹானாவை துன்பப்படுத்த பேசும்போது மருத்துவர் உள்ளே நுழைந்தார், ஆர்யன் பின்தொடர. கரீமா கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

“எப்படி இருக்கீங்க, ருஹானா மேம்?”  

“நல்லா இருக்கேன் டாக்டர்”

“உங்களுக்கு சந்தோசமான செய்தி. நான் உங்களை இன்னைக்கே டிஸ்சார்ஜ் செய்றேன்”

யாக்கூப் இருக்கும் இடம் விட்டு செல்லப் போவதை எண்ணி ருஹானாவின் முகம் பூவென மலர, கரீமா கூம்பி போனாள்.

“சாதாரணமா இவ்வளவு சீக்கிரம் உங்களை அனுப்ப மாட்டேன். ஆனா மிஸ்டர் ஆர்யன் உங்களுக்கு வீட்டிலேயே ஹாஸ்பிடல் வசதி செஞ்சி தரேன்னு சொல்லிட்டார். உங்களுக்கு ஹோம் ட்ரீட்மெண்ட். வீட்டுக்கு போனாலும் நீங்க பெட்ரெஸ்ட் தான் எடுக்கணும்”

இதுதான் அவன் வேகமாக சென்று முடித்த முக்கியமான வேலையோ? அவள் முகத்தில் புன்னகையை கண்டு ஆர்யனும் அகமகிழ்ந்து போனான்.

“முடிஞ்சா கடல் காற்று இல்லனா மலைப்பகுதியில காற்று வாங்க முயற்சி செய்ங்க. அது உங்களை சீக்கிரம் குணமாக்கும்” 

“மிக நன்றி டாக்டர்” என மருத்துவருக்கு சொன்னவள் அவர் சென்றதும் ஆர்யனுக்கு கண்களால் நன்றி சொன்னாள் மென்சிரிப்பு ததும்ப. அவனும் கண்களாலேயே அதை ஏற்றுக்கொள்ள இந்த நன்றி நவில் படலத்தை கண்ட கரீமாவிற்கு திகுதிகுவென எரிந்தது.

——–

கையில் பூச்செடியுடன் அம்ஜத்தின் கைபிடித்து இவான் வாசலை பார்த்து நிற்க, ஆர்யன் கார் உள்ளே நுழைந்தது.

“பெரியப்பா! சித்தி வந்துட்டாங்க”

“நான் சொன்னேன் தானே இவான்? உன் சித்தப்பா சித்தியை காப்பாத்தி கூட்டிட்டு வந்துடுவார்னு”

முத்தமிட்ட அம்ஜத்திடம் இவான் பூச்செடியை கொடுத்துவிட்டு காரில் இருந்து இறங்கிய ருஹானாவை நோக்கி ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டான்.

“என்னுயிரே! மானே! கண்ணே!” என அவளும் மண்டியிட்டு கட்டிக்கொள்ள “உங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் செய்தேன் சித்தி” என இவான் சொல்ல “நானும் தான்!” என ருஹானா ஆனந்த கண்ணீர் வடித்தாள்.

இந்த அன்பு சங்கமத்தை கரீமா கடுப்பாக பார்க்க, ஆர்யனும், அம்ஜத்தும் நெகிழ்வாக பார்த்தனர். ‘எடுத்த காரியத்தை முடித்துவிட்டாயடா தம்பி!’ என்பது போல அம்ஜத், சகோதரனின் தோளில் தட்டிக்கொடுக்க, தமையனிடம் சந்தோஷ முகத்தை காட்டினான் ஆர்யன்.

“சித்தப்பா! என் சித்தியை யாரும் இனி கடத்த மாட்டாங்க தானே! நீ விட மாட்டீங்க, அப்படித்தானே!” என இவான் கேட்க, ருஹானா ஆர்யனின் முகத்தை சங்கடமாக நோக்க, அம்ஜத் பெருமிதமாக நோக்கினான். கரீமா….? வேறென்ன.. வெறுப்பாக பார்த்தாள்.

ஆர்யன் அவள் வெறுப்பை மேலும் விசிறிவிட்டான்.

Advertisement