ரஷீத் அர்ஸ்லான் மாளிகைக்கு தகவல் தெரிவிக்க, அனைவரும் ஆர்யனும், ருஹானாவும் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்தனர். அம்ஜத் இவானிடம் ஆர்யன் ருஹானாவை காப்பாற்றிய செய்தியை சொன்னான்.
“அசுரன் இளவரசியை காப்பாத்தினது போல சித்தப்பா சித்தியை காப்பாத்திட்டாரா?”
“ஆமா இவான்! கதைல நடந்தது போலவே நெஜத்தலயும் நடந்தது”
“சில சமயம் உன் கால்கள் கனத்து போகலாம். கண்கள் மங்கலாகலாம். உன் எதிர்காலம் தெரியாமல் போகலாம். பாதை தொலையலாம். அப்போ உனக்கு ஒரு வெளிச்ச கீற்று, நம்பிக்கை தெரியணும்னா உன்னோட இதயத்துல ஒரு விதை உருவாகும். அதுக்கு நம்பிக்கைன்னு நீ பேர் வைக்கலாம். காதல்னும் சொல்லலாம். அந்த விதை மலர நீ காத்திருக்கணும். நீ நம்பிக்கையோட காத்திருக்கும்போது உன்னோட வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகும்.
உனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் உன் மனசை வறண்ட நிலமா வச்சிருக்கலாம். அதனால காதல் மரம் பலவீனமா இருக்கலாம். உன் இதயத்துல காதல் மரம் வளர வருஷங்களாகலாம். நீர் ஊற்றி அது பழம் தர நீ காத்திருக்கணும். அதை பலவந்தமா பிடுங்க முயற்சி செய்தா மரமே பட்டுப்போகும்.
அதோட வேர்கள் பலமா இருந்தாலும், காதல் காயப்பட்டு போகும். இதயத்தை தேடி நடக்கற ஒரு பிரயாணி தான் நீ. மூச்சு விட நின்றால் வெப்பம் உன்னை தாக்கும், பாதை கடினமாகும்.
காதலும் சாவை போல தான் எப்போ வரும்னு யார்க்கும் தெரியாது. அதை சந்திக்கும்போது உனக்கு வேற வாய்ப்பே கிடையாது. இரண்டலயும் முழு சரணாகதி தான் செய்யணும்.
காதலுக்காக உன் உயிரையும் நீ கொடுக்கலாம். நீ சாகப்போற சமயத்துல காதல் உன்னை காப்பாற்றவும் செய்யலாம்.
கண்களில் நீர் துளிர்க்க, கை முஷ்டி மடக்கி நெஞ்சின் அருகே வைத்துக்கொண்டவன் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தான்.
——–
காலையில் ஆர்யன் படுக்கையில் படுக்காமல் கட்டுப்போட்ட கையை தூக்கி பிடித்தபடி நடந்து கொண்டிருக்க, “யாக்கூப் ஐசியு ல இருக்கான். போலீஸ் பலத்த காவல் போட்டுருக்காங்க” என ரஷீத் தகவல் சொல்ல, அது எனக்கு தேவையில்லாதது என்பது போல “இவான் சித்தி கண்ணு முழிச்சிட்டாளா?” என ஆர்யன் கேட்டான்.
“இன்னும் இல்ல’ என ரஷீத் சொன்னவுடன் ஆர்யன் வேகமாக கதவை திறந்து கொண்டு செல்ல, பதறிய ரஷீத் “ஆர்யன்!” என அழைத்தபடியே பின்னால் சென்றான்.
ருஹானா இருந்த தீவிர சிகிச்சை பிரிவின் கதவை திறந்துக்கொண்டு இருவரும் உள்ளே செல்ல, அங்கே இருந்த மிஷால் முன்னே வந்து ஆர்யனை மறித்தான். “யாரும் உள்ளே போகக்கூடாது!”
அவனை இருவரும் முறைக்க, ஆர்யனிடம் மிஷாலை நெருங்க விடாமல் ரஷீத் அவன் கையை பற்றி தடுத்தான்.
ஆர்யன் ‘அங்கே அவளை சாகவிட்டு வந்துட்டு, இங்க என்ன பாடிகார்ட் வேஷம் போடுறே?’ என ஒரு கண்டன பார்வையை வீசிவிட்டு முன்னேற, ரஷீத் இன்னமும் மிஷாலை முறைத்துக்கொண்டே நின்றான்.
ஆர்யன் அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வர, இயந்திரங்கள் ‘பீப்! பீப்! பீப்!’ என ஒலியெழுப்பிக் கொண்டிருக்க, மூச்சு மட்டும் விட்டுக்கொண்டு ருஹானா ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள். முகத்தில் உயிர்வாயு கவசம் மாட்டப்பட்டிருந்தது.
அவளையே பார்த்துக்கொண்டு ஆர்யன் அருகே வர, மிஷாலும் வெளியே கண்ணாடி தடுப்பின் அருகே வந்து ஆர்யனை நோக்கினான். ருஹானாவை சற்றுநேரம் பார்த்து நின்ற ஆர்யன், அவள் தலையணை அருகே இருந்த அவளது சங்கிலியை கண்டான்.
தொட்டிலாக கட்டப்பட்டு இருந்த கையை விடுவித்த ஆர்யன், அவள் அருகே குனிந்து அந்த சங்கிலியை எடுத்தான். லாக்கெட்டை மென்மையாக தடவியவன் காயத்துக்கு கட்டு போட்டிருந்த தனது உள்ளங்கையில் அதை வைத்து மூடிக்கொண்டான்.
“கண்ணை திற.. முழிச்சிக்கோ…. எழுந்திரு.. நான் சொல்றது கேட்குதா?” என நிறுத்தி நிறுத்தி அழுத்தமாக சொன்னவன் அவளிடமிருந்து எதிர்வினை எதும் வராவிட்டாலும், “நீ இப்படி செய்ய முடியாது! நீ சரியாகணும். கேட்குதா?.. கண்ணை திற.. எழுந்துக்கோ” என பேசியே அவளை விழிக்க செய்யுமாறு உத்தரவிட்டு சொன்னான்.
மூச்சின் அசைவு தவிர அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. மிகவும் தளர்ந்து போன ஆர்யன் அவளிடம் இருந்து விலகி, சங்கிலியை பார்த்துக்கொண்டே கட்டிலின் கால்மாட்டில் திரும்பி நின்றான். மிஷாலும் உள்ளே நடப்பதை பார்த்தபடி நின்றிருந்தான்.
கண்களை மெல்ல திறந்த ருஹானாவிற்கு ஆர்யனின் பின்னுருவம் மங்கலாக தெரிந்தது. காணும் காட்சியை நம்ப முடியாதவளாக “உயிரோடவா இருக்கீங்க?” என கேட்டாள்.
வானிலிருந்து ஆனந்தமழை பொழிந்தது போல உணர்ந்த ஆர்யன் சடாரென திரும்பி பார்த்தான். கண்கள் திறந்திருந்த ருஹானாவை பார்த்தவனின் கனத்த மனம் லேசானது. முகம் மென்மையுற அவள் மேலிருந்து பார்வையை விலக்காமல் அவளை நோக்கி நடந்து வந்தான்.
ஆர்யனுக்கு பேச வார்த்தைகள் வராமல் தவிக்க, பிராணவாயு கருவியை எடுத்த ருஹானா “நீங்க இறந்திட்டீங்கன்னு நான் நினைச்சேன். அல்லாஹ்க்கு நன்றி. நீங்க உயிரோட இருக்கீங்க!” என அவள் சொல்லவும், தன் மேல் அவள் வைத்திருக்கும் அக்கறையில் நெகிழ்ந்து போனவன் மெல்லிய குரலில் “ஆமா! நான் உயிரோட தான் இருக்கேன். நீயும் தான்” என்றான் கனிவாக.
அவளும் கண்கள் கலங்க அவனை தன் கண்களில் நிறைத்துக் கொள்ள, அவளது கையை பற்றியவன், சங்கிலியை அவள் உள்ளங்கையில் வைத்து அவள் விரல்களை பிடித்து அழுத்தி மூடினான். சில வினாடிகள் கரங்கள் இணைந்திருக்க, அவன் உள்ளுக்குள் என்னவோ உடைந்து சிதற, அந்த பாதிப்புகளில் பயந்து போனவன் அவள் கையை விட்டுவிட்டான். ருஹானாவின் உதடுகள் துடிக்க அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது.
ஆர்யன் ருஹானாவின் கரம் பற்றுவதை கசப்புடன் பார்த்த மிஷால், மேலும் உள்ளே நடப்பதை பார்க்க முடியாமல் அங்கிருந்து விலகினான்.
அவள் மலர்முகத்தில் இருந்து பார்வையை விடுவித்துக்கொண்ட ஆர்யன் “ஓய்வெடு!” என சொல்ல அவளும் தலையாட்டினாள். “இவான்!” என அவள் சொல்ல, தன் புதிய உணர்வுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டவன் “இவான்?” என புரியாமல் கேட்டான்.
“அவன் நல்லா இருக்கானா?” என அவள் விளக்கமாக கேட்க, “நல்லா இருக்கான்” என சொன்னவன் “நீ சரியாகணும்னா நல்லா ஓய்வெடுக்க வேண்டியது முக்கியம்” என்றான்.
ருஹானா சரியென தலையாட்ட மனமே இல்லாமல் அங்கிருந்து விலகி கதவு நோக்கி நடந்தான் ருஹானா கையை தூக்கி லாக்கெட்டை பார்க்க, ‘பீப்! பீப்! பீப்! பீப்! பீப்! பீப்!’ என்ற சத்தம் விடாமல் வேகமாக கேட்டது.
திடுக்கிட்ட ஆர்யனுக்கு தூக்கிவாரிப்போட வேகமாக திரும்பி வந்தான். “ஒன்னுமில்லை. நான் என் கையை அசைச்சேன். அதான் சத்தம் போடுது. அசையாம இருக்கறது கஷ்டமா இருக்கு” என்றாள். அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
நன்றாக மூச்சு விட்டுக்கொண்டவன் “அசையாம இருக்கணும்னா அசையாம இரு. என்னன்ன செஞ்சா சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமோ, அத்தனையும் தவறாம செய்” என பயந்த குரலில் சொல்ல, அவளும் தலையசைத்து ஏற்றுக்கொண்டாள்.
“இவான் உனக்காக வீட்ல காத்திருக்கான். ஒவ்வொரு நிமிடமும் உன்னை தேடிட்டே இருக்கான். நீ இல்லாம அவன் சந்தோசமாவே இல்ல. நீ கதை வாசித்து சொல்றதை கேட்க ஆசையா இருக்கான்” அவள் கண்களுக்குள் பார்வையால் ஊடுருவி அவன் சொல்ல, அவள் கண்கள் நீரால் நிறைந்தது.
இமைக்காமல் இருவரும் இருப்பதை இருவரும் பரிமாறிக்கொள்ள சில விநாடிகள் கடந்தன.
“என் குரல்ல கதை கேட்க அவன் விரும்பலாம் ஆனா அவனுக்கு நீங்க தான் நிஜமான ஹீரோ. அவனை பாதுகாக்கற அசுரன் நீங்க”
“எப்படி இருந்தாலும் இவான் மகிழ்ச்சியா இருக்கணும்னா நீ சீக்கிரம் சரியாகி வரணும்” என இவானை மட்டும் அழுத்தி சொன்னவன் அவன் நிலையும் அது தான் என சொல்லாமல் விட்டான்.
ஆனால் அவன் கண்கள் தான் அவன் இதயத்தில் புதைந்திருந்த அன்பை, அவனும் அறியாத ரகசியங்களை அப்பட்டமாய் எடுத்துக் காட்டுகிறதே! அவன் கண்பேசும் வார்த்தைகள் அவளுக்கு புரிகிறதா, என்ன?
துடிப்பும் தவிப்பும் தேடலும்
இவனின் செய்கையனைத்தும்
இவானின் செய்கையாய்
பரிணமிக்கப் படுகிறது.
எதிர்மறை எண்ணங்கள்
விலகி ஓடிய பின்னும்
அன்பு கரை புரண்டாலும்
நேரிடையாய் பகிரும்
காலங்களை எதிர்நோக்கி…!
தலையாட்டிய ருஹானா பிராணவாயு குழாயை எடுத்து மாட்டிக்கொண்டாள். லாக்கெட்டை பிடித்துக்கொண்டு நெஞ்சில் வைத்துக்கொண்டாள். கழட்டி போட்டிருந்த கைக்கவசத்தை எடுத்துக்கொண்ட ஆர்யன் கண்கள் மூடி இறைவனுக்கு மனதில் நன்றி சொன்னான். பின் அவளை திரும்பி பார்த்துவிட்டு நிம்மதியாக வெளியே சென்றான்.
———-
“மிஷால்!” உள்ளே வந்த அவனை நன்றியுடன் பார்த்த ருஹானா, உணர்ச்சிப் பெருக்கில் தவிக்க, “அல்லாஹ்க்கு நன்றி, நீ பிழைச்சிட்டே!” என மிஷால் சொல்ல, “நீ செத்துப்போற ஆபத்து இருந்தாலும் நீ என்னை காப்பாத்திட்டே!” என ருஹானா சொல்ல, அவன் திகைத்தான்.
“உனக்கு எப்படி நன்றி சொல்ல போறேன் மிஷால்?” என அவள் கேட்க, மிஷால் தப்பு செய்துவிட்ட உணர்வோடு அவள் பார்வையை சந்திக்காமல் கீழே பார்த்தான்.
——-
யாருமில்லாத உணவகத்தில் சையத் புத்தகம் படித்துக்கொண்டிருக்க, அவர் எதிரே அமைதியாக வந்து அமர்ந்தான், ஆர்யன். அவனது முகத்தையும் கைக்கட்டுகளையும் பார்த்த அவர் “என்ன நடந்தது மகனே?” என விசாரித்தார்.
“எனக்கு பயமா இருக்கு, சையத் பாபா!” என ஆர்யன் சொன்னதை கேட்டு, இந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்தது தானா என அவர் நம்பாமல் பார்த்தார்.
இப்போது அவன் மனதை நன்றாக புரிந்துக்கொண்ட சையத் ஒரு நெடிய மூச்சை வெளியிட்டார். “மனிதர்கள் அவங்களுக்கு தெரியாத விசயத்துக்கு தான் பயப்படுவாங்க. மகனே! இப்போ நீயும் உனக்கு தெரியாத வழில நடக்கறே. உன்னோட பயம் இயற்கையானது தான்”
இல்லை என தலையாட்டிய ஆர்யன் “நான்…. என்னால அந்த வழில தொடர்ந்து போக முடியாது, சையத் பாபா! ஏன்னா அதுல எப்படி போகணும்னு எனக்கு தெரியல” என்றான்.
“உன்னால முடியும்.. முதல்ல உன்னை சுத்தி நீ போட்டு இருக்கற கூட்டை உடை, மகனே! உன் உணர்வுகள் கிட்டே இருந்து நீ தப்பிக்க முடியாது. உன் உணர்ச்சிகளை மறைக்காதே! நீ இப்போ முட்கள் நிறைந்த பாதைல நடக்கறே! அதுல இருந்து உன்னால விலக முடியாது. காயம் படாம அதே இடத்துல நிற்கவும் முடியாது. உன்னோட வலிமையான கவசம் கூட இதுல இருந்து உன்னை காப்பாத்த முடியாது”
ஆர்யன் அவரை பார்த்துக்கொண்டு அவர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
“இந்த பய உணர்வுகள்ல நீந்தி தான்.. இந்த பாதைல கடந்து தான்.. நீ உன் இலக்கை அடைய முடியும்” அவர் உறுதியாக சொல்ல, ஆர்யன் அவரை திகைப்பாக பார்த்தான்.
“இதுக்கு நீ தயாரா?” என சையத் கேட்க, ஆர்யன் சிந்தனையில் ஆழ்ந்தான்.