Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 75

யாக்கூப் சுட்டதால் கீழே விழுந்து மயங்கிய ஆர்யனின் கன்னம் தட்டி “கண்ணை திறங்க! திறங்க!” என ருஹானா கண்ணீர் விட, அவனிடம் சற்றும் அசைவில்லை. “இல்ல.. அல்லாஹ்! இப்படி நடக்காது.. ப்ளீஸ் எழுந்திருங்க” என அவன் முகத்தை பிடித்து ஆட்டினாள். ஆர்யன் தலை தொய்ந்துவிழ தன் தலை மேல் கைவைத்துக்கொண்டு அழுது கரைந்தாள்.

முன்பு ஒரு முறை ருஹானா ஆர்யனுக்கு முன்னால் ஓடிவந்து அவள் குண்டை வாங்கிக்கொண்டாள் என்றாலும் அது அவன் எச்சரிக்கையையும் மீறி காரிலிருந்து இறங்கியது அவள் தவறே எனும் குற்ற உணர்ச்சியால் தானே!

ஆனால் இன்றைய சூழ்நிலை முழுக்க முழுக்க ருஹானாவால் உருவானது. ஆனாலும் அவன் முன்வந்து குண்டடிபடுகிறான் என்றால் அதற்கு காரணம்  உயிர்க்காதலை தவிர வேறென்ன?

ருஹானா “எழுந்திருங்க! கண்ணை திறங்க!” என திரும்ப திரும்ப தேம்பியபடி புலம்ப, “அவனை விடு! அவன் சாக வேண்டியவன் தான். வா.. போகலாம்” என யாக்கூப் அவள் கையை பிடித்து தூக்கினான்.

“ராஸ்கல்! என்னை தொடாதே! என் கையை விடு கிறுக்கா… அவரை கொன்னுட்டே! நீ ஒரு கோழை” என இருகைகளாலும் அவனை தள்ளிவிட்ட ருஹானா, மீண்டும் ஆர்யனிடம் மண்டியிட்டு அவனை உலுக்கினாள்.

உக்கிரமான யாக்கூப் “நீ என்னைத்தான் காதலிக்கணும். அவனை இல்ல.. புரியுதா? என்னை காதலி. இப்போ எழுந்திரு” என அவளை பிடித்து தரதரவென இழுத்தான்.

“என்னை விடு, மறை கழண்டவனே!” என அவள் கத்த, “வா.. போகலாம்” என அவளை பலவந்தமாக இழுத்துக்கொண்டு அவன் நடக்க, “என்னை விடு! தொடாதே!” என ஆர்யனை பார்த்துக்கொண்டே அவள் திமிற திமிற அவளை காரில் பிடித்து தள்ளினான்.

——–

“அழாதே! எழுந்திரு இவான் டியர்! நீ நல்ல பையன் தானே!” என கரீமா அழைக்க, ருஹானாவின் படுக்கையில் குப்புற படுத்திருந்த இவான் அவள் தலையணையை இறுக பிடித்துக்கொண்டான்.

“சித்திக்கு என்ன ஆச்சு? சித்தியும் என் அம்மா மாதிரி என்னை விட்டு போய்ட்டாங்களா?” என அழுகையோடு கேட்டான்.

“இல்லயே! உன் சித்தி நல்லா இருக்காளே! நாளைக்கு வந்திடுவா” என கரீமா சமாதானம் செய்ய, வேகமாக எழுந்த இவான் “அப்போ என் சித்திக்கு போன் செய்து கொடுங்க. சித்தி குரல் கேட்கணும். நான் ஒரே தடவை பேசிக்கறேன்” என ஒரு விரல் காட்டி பாவமாக கேட்டான்.

“இப்போ நேரமாகிடுச்சே. நாளைக்கு பேசலாம். நீ உன் ரூம்க்கு போய் தூங்கு” என கரீமா சொல்ல, அவன் திரும்பவும் படுத்துக்கொண்டான். சாராவிடம் கண்ணைக் காட்டிவிட்டு கரீமா வெளியேற, சாரா கதை சொல்வதாக அழைத்தும் இவான் மசியவில்லை. “இதுல தான் சித்தி வாசனை வருது. சித்தி வரவரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்”

அவன் பிடிவாதம் கண்ட சாராவிற்கும் கண்ணீர் பெருக, அதை மறைத்துக்கொண்டு ருஹானாவின் குளிராடையை எடுத்துவர, அதை வாங்கிக்கொண்ட இவான் கண்ணீரோடு அதை கட்டிக்கொண்டான். அவனை கைப்பிடித்து சாரா கூட்டிக்கொண்டு அவனது அறைக்கு சென்றார்.

——-

ருஹானாவை திரும்பவும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்த யாக்கூப், அவளை பழைய இடத்திலேயே கட்டிப்போட்டான். “நிதானத்துக்கு வா அன்பு ஷெனாஸ்! பாரு, நாம மறுபடியும் சேர்ந்துட்டோம். அவன் செத்துட்டான். நமக்கு நடுவுல தடையா இருந்தவன் போய் சேர்ந்துட்டான்” என அவன் பரவசப்பட்டான்.

அவனை ஆவேசமாக தள்ளிவிட்ட ருஹானா “ஏன் இப்படி செஞ்சே? ஏன் செஞ்சே? கொலைகாரா! மோசக்காரன்!” என அவன் சட்டையை பிடித்து ஆட்டினாள்.

“போதும் நிறுத்து!” என அவளை உதறிய யாக்கூப் “நாம இனி நிம்மதியா வேற உலகத்துக்கு போகலாம். அது அமைதியானது. நம்ம ரெண்டு பேருக்கும் மட்டுமே சொந்தமானது. நாம அங்க மகிழ்ச்சியா இருப்போம். யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டாங்க” என பேசியபடியே அவளை நாற்காலியில் அமர்த்தி அவள் கைகளை பின்னுக்கு கொண்டுவந்து கட்டினான்.

ருஹானா “அவர் என்னை காப்பாத்த தானே வந்தார்? அவரை ஏன் சாகடிச்சே? ஏன்?” என உடலும் உள்ளமும் தளர கேட்டாள். கட்டி முடித்தவன் சிரிப்புடன் பதில் சொல்லாமல் வெளியே சென்றான்.

——-

வெள்ளையுடை அணிந்த தேவதையாய் ருஹானா கை நீட்டி அழைக்க, ஆர்யன் அவள் கையை பிடிக்க எக்கினான். அவள் பின்னே நகர்ந்து போக அவனும் மிகுந்த பிரயாசையுடன் முன்னேறி அவள் கரம் பற்ற முயன்றான். ஒரு பெரிய இருமலுடன் உணர்வுக்கு வந்த ஆர்யன் கண் திறந்தவுடன் ருஹானாவை தேடினான்.

எங்கும் அவளை காணாததால் அது நினைவே அன்றி நிஜமல்ல என உணர்ந்த ஆர்யன் வாயால் பெரிய மூச்சுகளை விட்டபடி ஒரு கையை கீழே ஊன்றி மெதுவாக எழுந்தான். சுவரை பிடித்துக்கொண்டே கதவருகே வந்தவன் அதை திறந்து உள்ளே எட்டிப் பார்க்க அங்கே யாருமில்லை.

“எங்க இருக்கே?” என கேட்டபடி சுற்றி பார்த்தவன் யாக்கூப்பின் காரும் அங்கே இல்லை என தெரிந்து கொண்டான். இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்த இடத்திலிருந்து குருதி வடிந்துக்கொண்டிருக்க, அதை கையால் பிடித்தபடி சிரமத்துடன் காரை எடுத்தான்.

———

சூரியன் உதித்த அதிகாலையில் ஆர்யன் அலுவலகத்தில் ரஷீத் போனில் உத்திரவுகள் இட்டுக்கொண்டிருக்க, இருவர் இணையத்தில் வெள்ளை மாளிகை இருக்கும் இடத்தை தேடிக்கொண்டிருக்க, தள்ளாடியபடி ஆர்யன் அங்கே வந்து சேர்ந்தான்.

இரத்த கோலத்தில் ஆர்யனை பார்த்து அதிர்ந்த ரஷீத், ஓடிவந்து அவனை தாங்கிக்கொண்டான். “எப்படி அடிபட்டது ஆர்யன்?” என்று ரஷீத் கேட்க, “என்னை விடு. அந்த வீட்டை கண்டுபிடிச்சிட்டீங்களா?” என ஆர்யன் கேட்டான். “இன்னும் இல்ல. முயற்சி செய்துட்டு தான் இருக்கோம். சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்” என்றான் ரஷீத்.

“இத்தனை நேரம் என்ன செஞ்சீங்க? அகாபா நகரத்தை புரட்டி போட்டாவது கண்டுபிடிங்க. இல்லனா உங்க எல்லாரையும் உள்ள தூக்கி போட்டு இந்த நகரத்தையே எரிச்சிடுவேன்.. உடனே கண்டுபிடிங்க” என ஆர்யன் உக்கிரமாக சத்தம் போட, அடிபட்ட இடத்தில் இரத்தப்பெருக்கு அதிகமானது. “சரி, ஆர்யன்! அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க. வாங்க நாம ஹாஸ்பிடல் போகலாம்” என ரஷீத் அழைக்க, ஆர்யன் மறுத்தான்.

———

‘தன்னால் தான் ருஹானாவிற்கு இந்த நிலைமை’ என வருத்தப்பட்ட மிஷால் திரும்பவும் யாக்கூப்பின் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று நின்றான். “என்னை மன்னிச்சுடுங்க. நேத்தும் உங்களை தொந்தரவு செய்தேன். இன்னைக்கும் வந்திட்டேன். ஆனா இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விசயம். யாக்கூப்பை உடனே தொடர்பு கொள்ளனும். அவனோட சொந்தக்காரங்க, நண்பர்கள் யார் நம்பர் இருந்தாலும் கொடுங்களேன்” என மிக தன்மையாக வேண்ட, அவர் மனம் இரங்கி மருத்துவர் தந்து சென்ற அவரின் பெயர் அட்டையை கொண்டுவந்து கொடுத்தார்.

  ——–

கட்டுண்டு கிடந்த ருஹானாவின் தேம்பல் விட்டுவிட்டு வந்தாலும் அவளது கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.

ஆர்யன் தள்ளிவிட ஊஞ்சல் ஆடியதும், அவனோடு சேர்ந்து செடி வைத்ததும், மூவரும் சேர்ந்து செல்பி எடுத்ததும், மரணகுழியிலிருந்து அவன் அவளை காத்ததும், இறுதியாக அவன் கை நீட்டி கூப்பிட்டதும், அவள் அவன் கைப்பற்றியதும் அவள் கண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக ஓட அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ருஹானா மனதில் அந்த நிமிடம் இவானை பற்றி கூட  நினைப்பில்லை. ஆர்யன் இந்த உலகத்தில் இல்லை எனும் நினைப்பு அவளின் உயிர்ப்பை ஒடுங்க வைத்தது. அவளது வாழ்வில் அவனது பாதுகாப்பை, அவனது முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாள்.

திருமண உடையுடன் அவள் முன்னே வந்த யாக்கூப் “டார்லிங், பார் நீ தேர்ந்தெடுத்த கோட். எப்படி இருக்கு? உனக்கு பிடிச்சிருக்கா? இன்னைக்கு நமக்கு திருமணம். ஒருவழியா நாம இப்போ கல்யாணம் செஞ்சிக்க போறோம். இந்த முறை எதுவும் தப்பா போகாது. எல்லாம் நான் திட்டம் போட்டு வச்சிட்டேன், நம்ம கல்யாண சாப்பாடு வரை” என்று சொன்னவன் மேசையில் வெள்ளை விரிப்பை விரித்தான்.

அவன் சொன்னது எதும் அவள் காதில் விழுந்தால் தானே கருத்தில் பதியும்? வெற்று பார்வையுடன் எந்தவித உணர்வும் இன்றி அவள் பார்க்க “நான் செய்த உணவு எல்லாம் உனக்கு பிடிக்கும் பாரேன்” என மேசையை தூக்கி அவள் அருகே போட்ட யாக்கூப், அவள் காலில் கட்டியிருந்த கயிறை மட்டும் விடுவித்தான்.

அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்க, “நான் போய் உணவு எடுத்துட்டு வரேன்” என்று சமையலறைக்கு சென்றான்.

———

Advertisement