Advertisement

அவள் கன்னத்தில் கரீமா பளாரென அறைந்தாள். அவள் அடித்த அடி சல்மாவை லண்டனுக்கே அனுப்பியிருக்கும். “வாயை நீ திறந்தே உன்னை கொன்னுடுவேன். இது போல நடக்கும்னு எனக்கு எப்படி தெரியும்? இப்போ நம்மால எதும் செய்ய முடியாது. இதை உன் மண்டைக்குள்ள ஏத்திக்கோ. அமைதியா இரு”

கன்னத்தில் கை வைத்தபடி ஓடிய சல்மா எதிரே காபியுடன் வந்த சாராவை இடித்துவிட்டு ஓடிவிட்டாள். சாரா மேல் அத்தனை காபியும் கொட்டிவிட்டாலும் அவர் கரீமாவை விசாரித்தார்.

“உங்க முகம் வெளுத்துருக்கே, கரீமா மேம்! உங்க ரத்த அழுத்தம் அதிகமாகிடுச்சா? மாத்திரை கொண்டுவரவா?”

“அந்த… மியூசிக் டீச்சர்…. ருஹானாவை கடத்திட்டான்”

நெஞ்சில் கை வைத்துக்கொண்ட சாராவின் முகம் வெள்ளை வெளேர் என மாறியது.

——–

மிஷால் யாக்கூப்பின் வீட்டின் கதவை தட்ட, தன் வீட்டின் கதவை திறந்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரர் கோபமாக வந்தார்.

“இது என்ன வீடா? ஹோட்டலா?”

“மன்னிச்சிடுங்க, நான் யாக்கூப் தோழன். அவன் எங்க போயிருக்கான்?”

“அவனை தேடி எத்தனை பேர் தான் வருவீங்க? முதல்ல அந்த ரவுடி கூட்டம். அப்புறம் டாக்டர். இப்போ நீ. என்ன தான் மனசுல நினைச்சிருக்கீங்க? இப்போ தான் நான் அந்த கதவை சரிசெய்தேன்”

“கண்டிப்பா ஏதோ தப்பா நடந்திருக்கு. அவன் எங்கன்னு தயவுசெய்து சொல்லுங்க”

மிஷாலின் வார்த்தை காதில் விழாததுபோல அவர் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார். மிஷால் என்ன செய்வது என புரியாமல் நின்றான்

———–

கரீமாவிடம் இருந்து கேட்ட செய்தியை சாரா நஸ்ரியாவிடமும் ஜாஃபரிடமும் சொல்லிக்கொண்டிருக்க, அதை இவான் கேட்டுவிட்டான். அவன் கையில் இருந்த மோட்டார் படகு கீழே விழுந்து உடைந்தது.

“சித்தியை யாரோ கடத்திட்டாங்களா?” அதிர்ச்சியான அவன் குரல் கேட்டு மூவரும் திரும்பி பார்க்க, இவான் சமையலறை விட்டு வெளியே ஓடினான்.

“நான் பார்த்துக்கறேன், பெரியம்மா!” என நஸ்ரியாவும் அவன் பின்னே ஓடினாள்.

———-

“அவரை என்ன செய்ய போறே? அவரை தொடக்கூட செய்யாதே” என ருஹானா அழுகையுடன் கதற, “அவன் முழிக்கட்டும். அப்புறம் அவனை நாம என்ன செய்யலாம்னு பார்க்கலாம்” என்று கிண்டலாக சொன்ன  யாக்கூப் துப்பாக்கியால் ஆர்யனின் துவண்ட தலையை நிமிர்த்தினான்.

“அவரை எதும் செய்திடாதே. தயவுசெய்து எதும் செய்யாதே!” என ருஹானா ஆர்யனின் உயிருக்காக மன்றாட, ஆர்யனுக்கு லேசாக விழிப்பு வந்தது. தலையை நிமிர்ந்தவன் கண்களை சுருக்கி நேராக பார்த்தான். இருக்கும் சூழ்நிலையை புரிந்தவன், தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்த யாக்கூப்பை பார்த்து சிறுத்தையென சீறினான்.

பயந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்த யாக்கூப், நாற்காலியை ஆட்டிய ஆர்யனை பார்த்து சுதாரித்துக்கொண்டு “பொறுமை! மெதுவா மெதுவா” என ஏகத்தாளமாக சிரித்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க! எல்லாம் என்னோட தப்பு தான்!” என ருஹானா ஆர்யனிடம் சொல்ல, திரும்பவும் யாக்கூப் ஆர்யனின் நெற்றிப்பொட்டில் குறி வைத்தான்.

“வேணாம்! வேணாம்!” என ருஹானா கத்த, யாக்கூப் “ஆர்யன் அர்ஸ்லான் நான் உன்னை ஏன் வர வச்சேன் தெரியுமா? ஏன்னா நீ எங்களை தனியா விடமாட்றே… இந்த ரெண்டு நாளுக்காக நான் உயிரையும் தருவேன். ஆனா நீ ஏன் நடுவுல வந்தே? இப்போ தேவையில்லாம சாகப்போறே. என்கிட்டே இருந்து அவளை பிரிக்க முடியும்னு நீ எப்படி நினைச்சே? அவ்வளவு முட்டாளா நீ? ஷெனாஸ் என்னுடையவள்!” என அவன் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து சுழற்றினான்.

நாற்காலியோடு சேர்ந்து அவன் மேல் பாய முயன்ற ஆர்யன் “அவ ஷெனாஸ் இல்ல. நீ அவளை காயப்படுத்தினா உன்னை நான் கொன்னுடுவேன். கேட்டுச்சா? உன்னை உயிரோட விடமாட்டேன்” என கர்ஜித்தான்.

கட்டுண்டு கிடக்கும் சிங்கத்தின் சீற்றம் கண்டு ஓநாய் மிரண்டு பின்னால் நகர்ந்து துப்பாக்கியால் குறி வைத்தது. “வேணாம்! வேணாம்! எங்களை விடு!” எனும் ருஹானாவின் கெஞ்சல் குரல் கேட்டுக்கொண்டே இருக்க, “எங்களை பிரிக்க பார்த்தே தானே நீ? இப்போ சாகப் போறே” என யாக்கூப் கொக்கரித்தான்.

அத்தனை பாதுகாவலர் இருந்தும் ஆர்யன் இப்படி தனியாக வந்து சிக்கிக்கொண்டானே!

“அவரை விட்டுடு! உனக்கு நான் தானே வேணும்? என்னை சுடு! அவரை போகவிடு! அவரை ஒன்னும் செய்யாதே” என ருஹானா கதறிக்கொண்டே இருக்க, அதை தாங்க முடியாத யாக்கூப் அவள் வாயை துணி கொண்டு அடைத்தான்.

“அவ கிட்டே போகாதே! அவளை தொடாதே!” என ஆர்யன் இரைய, அவளிடமிருந்து நகர்ந்து ஆர்யன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான் யாக்கூப். ஆர்யன் துப்பாக்கிக்கு துளியும் பயப்படவில்லை. கண் சிமிட்டவில்லை. தலை தாழ்த்தவில்லை.

ருஹானாவின் கண்களில் துக்கமும் கண்ணீரும் நிறைந்திருக்க, ‘வேண்டாம்’ என கண்களால் பேசியபடி ஆர்யன் அவளையே பார்த்தான் தன் வாழ்வின் இறுதி வினாடிகளில்.

‘நான் இந்த உலகத்தோடு போராடி கூட உன்னை காப்பாற்ற உறுதியாய் இருக்கிறேன். அதை ஏன் நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய்?’ அவன் பார்வையின் மொழி அவளுக்கு புலப்பட்டிருக்குமா?

அப்போது போலீஸ் சைரன் ஒலி கேட்க, யாக்கூப் திகைத்து பார்க்க, ருஹானா முடிந்தமட்டும் குரல் எடுத்து கத்தினாள். துப்பாக்கியை பின்னால் செருகிய யாக்கூப் ஆர்யனின் வாயையும் கட்டினான். பின் வாசலுக்கு விரைந்தவன் லேசாக கதவை திறந்து பார்த்தான்.

போலீஸ் காரில் இருந்து இரண்டு காவல் அதிகாரிகள் இறங்கி, யாக்கூப் காரை பார்வையிட்டனர். பின் ஒலிபெருக்கியில் கார் எண்ணை சொல்லி அதன் உரிமையாளர் உடனே வருமாறு அறிவித்தனர். வெளியே வந்த யாக்கூப் அதிகாரிகள் முன்னே நின்றான்.

“நீங்க தான் இந்த கார் ஓனர் யாக்கூப்பா?”

“ஆமா சார்!”

“உங்க அடையாள அட்டை கொடுங்க”

எடுத்து நீட்டிய யாக்கூப் “எதும் பிரச்சனையா ஆபிசர்?” என கேட்டான்.

“நீங்க செவ்வாய்க்கிழமை ஒரு காரை இடிச்சிட்டு நிறுத்தாம போய்ட்டீங்க. உங்க மேல புகார் வந்திருக்கு. நீங்க இப்போ எங்களோட போலீஸ் ஸ்டேஷன் வரணும்”

ஆர்யன் சங்கிலியை ருஹானாவிடம் கொடுத்து நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பொறுக்கமுடியாமல், கோபத்துடன் அர்ஸ்லான் மாளிகையில் இருந்து திரும்பிய அவன் காரை கட்டுப்பாடின்றி ஓட்டிவந்ததும், ஒரு கார் மேல் மோதியதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது.

“நான் அப்புறமா வரலாமா? எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு”

“நீங்க ஏன் இங்க இருக்கீங்க? இது உங்க இடமா? உங்க முகத்துல என்ன காயம்?” அடுக்கடுக்காய் கேள்விகள் வந்தன.

“அது பெருசா ஒன்னுமில்லை. சின்ன அடி தான். ஆறிட்டு இருக்கு”

“ஆள் இல்லாத இடத்துல தனியா என்ன செய்றீங்க?”

“நான் ஒரு கோடௌன் வாடகைக்கு எடுக்க வந்தேன். ஏஜென்ட் வரேன்னு சொன்னான். அவனுக்காக காத்திருக்கேன்” சரமாரியாக பொய்களை அடுக்கினான்.

காவலர் இருவரும் சந்தேகமாக பார்க்கவும் “இதுக்கு மேல் ஏஜென்ட் வர மாதிரி தெரியல. நான் உங்ககூட வரேன்” என முன்வந்தான். இதற்கு மேல் நின்றால் அவர்கள் உள்ளே சென்று பார்வையிடுவார்களோ என பயம் அவனுக்கு.

“சரி! உங்க கார் எடுத்துக்கிட்டு எங்க பின்னாடி வாங்க.” காவலர் காரில் ஏற, யாக்கூப்பும் காரை எடுத்தான்.

ருஹானா தலையை ஆட்டி வாயில் இருந்த துணியை தள்ளியவள் “உதவி! யாராவது இருக்கீங்களா? எங்களை காப்பாத்துங்க’ என கத்தினாள்.

கார்கள் கிளம்பி செல்ல, ஆர்யனும் துணியை நகர்த்தி “வீணா கத்தாதே! வெளிய கேட்காது” என சொன்னவன் வெளிச்சத்தங்களை கூர்ந்து கவனித்தான்.

“இவனும் திரும்பி வரலயே!” என ருஹானா சொல்ல “காலடி சத்தம் கேட்கல. ஒருவேளை போலீஸ் அவனை கூட்டிட்டு போயிருக்கலாம். இல்லனா இந்நேரம் வந்துருப்பான்” என ஆர்யன் உறுதிப்படுத்தினான்.

அதற்கு பிறகே அமைதியான ருஹானா ஆர்யனை கெஞ்சுதலாக பார்த்தாள், மன்னிப்பு வேண்டி. அதையும் தாங்கிக்கொள்ள முடியாத ஆர்யன் அவளை கனிவாக பார்த்தான்.

“நான் உங்க பேச்சை கேட்கல. ஆரம்பத்துல இருந்தே நீங்க சரியா தான் சொல்லியிருக்கீங்க. நிறைய முறை என்னை எச்சரிச்சிட்டே இருந்தீங்க”

“ஏன்னா உனக்கு எந்த கெடுதலும் நடக்க நான் விரும்பல”

அவள் நெஞ்சம் வெகுவாக சுட, கண்ணீருடன் சொன்னாள்.

“என்னை மன்னிச்சிடுங்க. உங்களை நான் ரொம்ப தப்பா பேசிட்டேன். கடுமையா நடந்துக்கிட்டேன். உங்களை தவறா நினைச்சிட்டேன்”

“சரி விடு! அதெல்லாம் முடிஞ்சி போனது” பெருந்தன்மையாக சொன்னான்.

“இல்ல.. நான் ஒரு முட்டாள்” அவன் தேற்றும் மொழி இன்னும் அவளை சுட்டெரிக்க தலை குனிந்து கொண்டாள்.

அவளை விட வேகமாக இல்லை என சொன்னவன் “நீ மனிதர்கள் மேல நம்பிக்கை வைக்கிறே! அவ்வளவு தான்” என்றான்.

‘என்னையும் அப்படி தானே நம்பினே! அதனால தானே நானும் மாறினேன்’ என நினைத்துக்கொண்டவன் வெளியே சொல்லவில்லை.

Advertisement