Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 74

யாக்கூப்பை ஏமாற்றி தப்பி ஓடிவந்த ருஹானா தனது போலீஸ் சகோதரனையோ, மிஷாலையோ போனில் அழைக்கவில்லை. ‘நீங்கள் திருந்தவேயில்ல. உங்களை நம்பிய நான் ஒரு முட்டாள். நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன்’ என குற்றம் சாட்டிவிட்டு வந்த ஆர்யனையே உதவிக்கு அழைத்தாள்.

ஆனாலும் அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு தெரிவிக்கும்முன் யாக்கூப் கிறுக்கனிடம் சிக்கிக்கொண்டாள். அவள் வாயை பொத்தியிருந்த அவன் “எனக்கு துரோகம் செஞ்சிட்டேல… உன்னோட யாக்கூப்புக்கு துரோகம் செஞ்சிட்டே, ஷெனாஸ்! நம்ம காதலை விட்டு… வீட்டை விட்டு… ஓடி வந்திட்டியே” என கோபத்துடன் கத்தினான்.

அவனிடமிருந்து அவள் திமிற அவளது முழங்கையை பற்றிக்கொண்டான். “நான் ஷெனாஸ் இல்ல.. விடு என்னை.. என்னை போகவிடு.. கை வலிக்கிது.. விடு” என போராடினாள். “அந்த ஆர்யன் என்ன வேற யாராலும் நம்மை பிரிக்க முடியாது. ஷெனாஸ். வா போகலாம்” என அவளை இழுத்துக்கொண்டு நடந்தான்.

“விடு என்னை! அவர் வருவார். உன்கிட்டே இருந்து என்னை காப்பாத்துவார். நிச்சயம் வருவார். உனக்கு கேட்குதா? அவர் என்னை விட மாட்டார்” என ருஹானா திமிற, நின்று திரும்பிய அவன் “நான் மட்டும் தான் உன்கூட இருப்பேன்” என ஆங்காரமாய் அவளை இழுத்து சென்றான்.

——

ஆர்யன் மீண்டும் மீண்டும் ருஹானாவின் செல்பேசிக்கு முயற்சி செய்தான். அது எடுக்கப்படாமல் போக “டேமிட்!” என கத்தியவன், ரஷீத்துக்கு அழைத்தான். “இன்னுமா அந்த வீட்டை கண்டுபிடிக்கல?” என கத்தினான். பின் துயரம் அப்பிய முகத்துடன் கீழே இறங்கி காரை எடுத்தான்.

———

ருஹானாவை அதே இடத்தில் பிணைத்த யாக்கூப் “நீ தான் என்னை இப்படி செய்ய வைக்கிறே, ஷெனாஸ்!” என வருத்தப்பட “நான் ஷெனாஸ் இல்ல.. இல்ல” என ருஹானா ஆவேசப்பட “அந்த ஆர்யன் உன்னை குழப்பிட்டான். அமைதியா யோசி. தெளிவாகிடுவே! நம்ம காதல் எவ்வளவு உயர்ந்ததுன்னு உனக்கு புரிஞ்சிடும்” என அவன் சொல்லும்போது அவள் போன் அடித்தது.

மேசை மேல் இருக்கும் கைப்பையை எடுக்க அவள் பாய்ந்து செல்ல, அவளை இடது கையால் ஒதுக்கிய யாக்கூப் அவள் போனை எடுத்தான். “கொடு.. என் போனை கொடு.. அவரை பத்தி உனக்கு தெரியாது. உலகத்தோட எந்த மூலைல நான் இருந்தாலும் அவர் என்னை தேடிவருவார். புரியுதா? கண்டிப்பா என்னை காப்பாத்துவார்” என ருஹானா உறுதியாக தெரிவித்தாள்.

“வாயை மூடு! நம்ம வீட்டை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது புனிதமான வீடு. நமக்கான வீடு. உனக்கு புரியுதா, ஷெனாஸ்?” என்றவன் கதவை மூடிவிட்டு அவள் போனை எடுத்துக்கொண்டு போய்விட்டான். கணுக்காலில் மாட்டியிருந்த இரும்பு வளைவை கழட்ட முயன்ற ருஹானா ஏமாற்றமே அடைந்தாள்.

வாசல்புறம் இருந்த ஜன்னலின் ஓட்டையில் வெளியே பார்த்த யாக்கூப் “ஒருவேளை வந்துடுவியா நீ? இல்ல.. முடியாது. இந்த வீட்டை கண்டுபிடிச்சிடுவியா?.. முடியாது.. நான் தோற்க மாட்டேன்” என சொன்னபடியே அவன் நடக்க, மேசை மேல் இருந்த அவன் செல்பேசி அடித்தது.

ருஹானா போனை மேசையில் வைத்தவன் அவன் போனை எடுக்க, அவனது பக்கத்து வீட்டுக்காரர் அழைத்திருந்தார்.

“யாக்கூப் நீ  நல்லா இருக்கியா? இங்க உன்னை தேடி ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு”

பயத்துடன் ஓடிப்போய் வெளியே பார்த்த யாக்கூப் “நான் நல்லா இருக்கேன் சார். நீங்க கவலைப்படாதீங்க” என்றான்.

“உன் வீட்டு பூட்டை உடைச்சிட்டாங்க! ஏன் உன்னை தேடுறாங்க?”

“அது என்னை இல்ல சார்! எனக்கு முன்னாடி அந்த வீட்ல இருந்தவனை”

“உண்மையாவா? உன்னைத்தான் வலை வீசி தேடுறாங்கன்னு கேள்விப்பட்டேன். உன் வீடு இன்னும் திறந்து தான் கிடக்கு. நான் போலீஸ்ல சொல்லவா?”

“இல்ல.. வேணாம் சார்.. நான் பார்த்துக்கிறேன். பூட்டு சரி செய்ய ஆள் அனுப்புறேன். அவங்க கிட்டே இருந்து சாவி மட்டும் நீங்க வாங்கி வச்சிக்கங்க, ப்ளீஸ்”

“சரி நான் வாங்கிக்கறேன். நீ கவனமா இரு யாக்கூப்”

நன்றி சொல்லி போனை வைத்தவன் “அவங்க கண்டுபிடிச்சி இங்க வந்துட்டாங்கன்னா என்ன ஆகும்? வந்துடுவாங்களா?” என மிரட்சியுடன் கேட்டுக்கொண்டான். பின் “இல்ல.. முடியாது..” என பல்லை காட்டினான்.

———-

காரை ஓட்டிக்கொண்டே ஆர்யன் அந்த வெள்ளை மாளிகையை தேடிக்கொண்டிருக்க, அவன் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்க, பரபரப்பாக போனை எடுத்து பார்த்தான். ருஹானாவின் எண்ணிலிருந்து அது வந்திருக்கவும் காரை உடனே ஓரமாக நிறுத்தி படித்தான்.

‘என்னால பேச முடியல. போன் பேட்டரி முடியப்போகுது. எப்போனாலும் போன் அணைந்து போய்டும். பழைய கன்பவுடர் வார்ஹவுஸ்ல இவன்  என்னை அடைச்சி வச்சிருக்கான். என்னை காப்பாத்துங்க, ப்ளீஸ்’

காரை வேகமாக திருப்பிய ஆர்யன் அதிவேகமாக செலுத்தினான்.

——

மிஷால் ருஹானாவின் செல்பேசிக்கு அழைப்பு விடுக்க, சதாம் கேட்டான். “அக்கா போன் எடுத்தாங்களா? வரேன்னு சொன்னா அவங்க எப்படியும் வந்துடுவாங்களே! அக்காக்கு உடம்பு சரியில்லையோ?”

ருஹானா யாக்கூப்பை பார்க்க போவதாக சொல்லியதையும், ஆர்யன் ருஹானாவின் உயிருக்கு யாக்கூப்பால் ஆபத்து இருப்பதாக கத்தி சென்றதையும் மிஷால் நினைத்துப் பார்த்தான்.

கவலையான அவன் எழுந்து செல்ல, சதாம் “அர்ஸ்லான் மாளிகைக்கு போய் பார்க்க போறீங்களா?” என கேட்டான். அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாத மிஷால், உணவகத்தை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி சென்றான்.

———

ருஹானா சொல்லியிருந்த இடத்துக்கு வந்த ஆர்யன் காரை நிறுத்திவிட்டு, துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து வந்தான். யாக்கூப்பின் கார் நிறுத்தி இருக்கும் இடம் வரை வந்தவன், அந்த கிடங்கின் வாசல் கதவை தள்ளினான். அது திறக்கவும் உள்ளே கவனமாக காலடி எடுத்து வைத்தான்.

ஒரு நாற்காலியோடு கட்டப்பட்டிருந்த ருஹானா சுவரில் விழுந்த துப்பாக்கி ஏந்திய ஆர்யனின் நிழலை பார்த்தாள். அவளது வாயும் டேப்பால் ஒட்டப்பட்டிருக்க “ம்.. ம்.. ம்.. ம்!” என்ற சப்தம் கொடுத்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.

அவள் அருகே ஓடிவந்த ஆர்யன் “உனக்கு ஒன்னுமில்லயே? பயப்படாதே! நான் வந்துட்டேன். சரியா? கவலைப்படாதே” என்று அவளை தேற்றியபடி அவள் வாயில் ஒட்டிய டேப்பை மெதுவாக இழுத்தான் தன் முகத்தையும் சுருக்கியபடி.

“கொஞ்சம் பொறுத்துக்கோ! நான் டேப்பை எடுக்குறேன். லேசா வலிக்கும்”

தலையை வேகமாக ஆட்டிய ருஹானா, வாய் விடுபட்டவுடன் “இது ஒரு பொறி. அங்க பாருங்க!” என கத்தினாள். அவன் சுதாரிப்பதற்குள் பின்னால் கட்டையுடன் நின்ற யாக்கூப் ஆர்யனின் தலையில் ஓங்கி அடித்தான். ஆர்யன் தலையில் ரத்தம் ஒழுக, கீழே மயங்கி விழுந்தான்.

ருஹானா கதறி அழ, கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்ட யாக்கூப் “நான்தான் சொன்னேனே அன்பே நம்மை யாராலும் பிரிக்க முடியாது” என பல்லைக் காட்டினான். ஆர்யனையும் ஒரு நாற்காலியில் பிணைத்தவன், துப்பாக்கியை ஆர்யன் நெஞ்சுக்கு நேராக பிடித்தான்.

——

“என்ன நடக்குது ரஷீத்?… ருஹானாவை எங்க வச்சிருக்கான்?… சரி… எந்த செய்தி வந்தாலும் எனக்கு சொல்லு” என கரீமா போனை வைக்க, சல்மா ஓடி வந்தாள்.

“அக்கா! அந்த சைக்கோ பத்தி தெரிஞ்சதா?”

“அவன் அவனோட சேர்த்து ருஹானாவையும் சாகடிக்க போறானாம். ஒரு வீடியோல சொல்லி இருக்கான். ருஹானா தான் அவன் காதலி ஷெனாஸ். நாங்க சேர்ந்தே சாகப் போறோம்னு. அவங்க ரெண்டு பேரும் இருக்கற இடத்தை இன்னும் இவங்க கண்டுபிடிக்கல”

“ஆர்யன்?… ஆர்யன் எங்க இருக்கான்? அவன் நல்லா தானே இருக்கான், அக்கா? அவனுக்கு ஆபத்து எதும் வரக் கூடாது. அவனுக்கு எதாவது ஆகிட்டா நாம என்ன செய்வோம் அக்கா?”

கரீமாவின் முகம் மாறி குரூரமானது. “நாம என்ன செய்ய முடியும், சல்மா?”

“அக்கா! நமக்கு முன்னாடியே தெரியுமே அக்கா. மாஸ்டர் சைக்கோன்னு தெரியுமே. அதை ஆர்யன் கிட்ட நாம சொல்லியிருக்கலாமே”

“நமக்கு எப்படி தெரியும் சல்மா இப்படி ஆகும்னு?”

“நீ தான் அக்கா.. நீ தான்.. சொல்ல விடல.. நான் அப்பவே சொல்லியிருப்பேன். அல்லாஹ்! ஆர்யனை காப்பாத்துங்க” என அவள் இடைவிடாது புலம்ப, அவளை உலுக்கிய கரீமா “சல்மா! பொறுமையா இரு” என கையை பிடித்தாள்.

அதை ஆவேசமாக உதறிய சல்மா “நீ தான்.. உன்னால தான்.. நான் சொன்னேன்.. நீ கேட்கல.. உனக்கு தெரியும் இப்படி விபரீதமாகும்ன்னு. ஆர்யனுக்கு எதாவது கெடுதலா நடந்தா நான் சொல்லுவேன், நீ தான் அதுக்கு காரணம்னு கண்டிப்பா சொல்லுவேன். உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்” என அழுதபடி விரல் நீட்டி மிரட்டினாள்.

Advertisement