Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 73

யாக்கூப் இழுத்து பிடித்ததால் அதிர்ச்சியா, அவன் ஷெனாஸ் என்று அவளை அழைத்ததால் அதிர்ச்சியா என உணர முடியாத ருஹானா அவனை தள்ளிவிட்டாள்.

“என்ன!! என்ன சொல்றே? நான் ஷெனாஸ் இல்ல”

“நீ ஷெனாஸ் தான். அது உனக்கும் தெரியும். இப்போ லேசா உனக்கு குழப்பம். ஆனா சீக்கிரம் சரியாகிடுவே”

அவன் கண்களில் தெரிந்த வெறியை கண்ட ருஹானா மிரண்டு போனாள்.

“நீ தான் ஷெனாஸ்! இந்த நொடில இருந்து நாம பிரியப் போறதில்ல”

ஆர்யன் யாக்கூப்பை பற்றி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என உணர்ந்து கொண்டவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

இது அழவேண்டிய நேரம் இல்லை என புரிந்தவள் துரிதமாக செயலாற்ற முடிவெடுத்தாள்.

கதவை நோக்கி வேகமாக பாய்ந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியே போக, அவளை விட வேகமாக செயல்பட்ட யாக்கூப் “ஷெனாஸ்! நீ என்னை விட்டு போகமுடியாது” என அவளை இழுத்து உள்ளே தள்ளினான்.

“என்னை விடு! போக விடு!! இவான் என்னை தேடுவான். நான் போகணும்”

கதவை மூடி சாவி கொண்டு அவன் பூட்ட, அவனை கையை இழுத்து கெஞ்சினாள். அவளை தள்ளி விட்டவன் சாவியை கோட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

“இதுக்கு மேலே இவான் கிடையாது. ஆர்யன் கிடையாது. நீயும் நானும் மட்டும் தான்” என கோட்டை கழட்டி நாற்காலியில் போட்டவன், அவளை நோக்கி நடந்து வந்தான்.

“நான் ஷெனாஸ் இல்ல. என்ன செய்றே நீ? எனக்கு பயமா இருக்கு” என ருஹானா மேசையை சுற்றி செல்ல “நீ பயப்படறதுக்கு எதுவும் இல்ல. இனிமேல் பயமோ கவலையோ எதும் நமக்கு கிடையாது. ரெண்டு நாள்… ரெண்டு நாள் நாம சந்தோசமான ஜோடிகளா இருப்போம். அப்புறம் சேர்ந்தே செத்து போவோம். யாராலும் நம்மை பிரிக்க முடியாது” சிரித்தபடியே அவன் சொல்ல ‘இவன் பைத்தியம்’ என அவள் சந்தேகமின்றி விளங்கிக் கொண்டாள்.

மேசை மேல் இருந்த போனை எடுத்து கைப்பையில் வைத்தவள் கதவருகே ஓடினாள். பின்னாடியே ஓடிய அவன் அவளை பிடிக்க “என்னை போகவிடு” என கெஞ்சினாள்.

“இனி இங்க இருந்து உன்னால வெளிய போக முடியாது” என அவளுடைய குளிராடையை பிடுங்கிய அவன் அவளை கீழே தள்ளினான். அபாய நிலைமையின் முழு தீவிரத்தை உணர்ந்துக்கொண்ட ருஹானா, அவனை தாண்டிக்கொண்டு கதவுக்கு ஓடினாள்.

“ஷெனாஸ்! எல்லாம் உன் விருப்பப்படி தான் நடக்குது. அது ஏன் உனக்கு புரிய மாட்டுது?” என அவளை மீண்டும் அவன் இழுக்க “அவர் உன்னை பத்தி சரியா தான் சொல்லியிருக்கார். உன் மனநிலை சரியில்ல” அவனுடன் போராடிக்கொண்டே சொன்னாள்.

அவனுக்கு கோபம் வர “போதும்” என கத்தினான்.

“அவன் இனிமேல் கிடையாது. உனக்கு நான் மட்டும் தான். நான் தான் எல்லாம் உனக்கு. நான் மட்டும் தான்” என கத்தியவன் சிரித்துக்கொண்டே அவளை உள்ளே இழுத்து சென்றான்.

“என்னை விடு! உதவி! என்னை காப்பாத்துங்க!” என அவள் கத்த கத்த “யாருக்கும் உன் கூச்சல் கேட்காது. யாரும் இங்க வர மாட்டாங்க. நான் மட்டும் தான் உனக்கு” என அவளை சுவரோடு தள்ளினான்.

ருஹானா அப்போது தான் ரோஜா பூக்கள் நிறைந்த அந்த உணவு மேசை, கை சங்கிலி, திருமண உடை, கால் சங்கிலி அனைத்தையும் பார்த்தாள். பகீரென தூக்கிவாரிப் போட “என்னை என்ன செய்யப் போறே?” என திமிறிக்கொண்டு ஓட முயன்றாள்.

“அமைதியா இரு தேனே!” என அவள் தலையை தடவியவன் “உன்னை காயப்படுத்த நான் விரும்பல. ஆனா எனக்கு வேற வழி தெரியல” என அவள் காலை சங்கிலியில் மாட்டிவிட்டான். “வெறி பிடித்தவனே! என்னை கழட்டி விடு!” என அவள் கத்த, அவள் கைப்பையை பிடுங்கி மேசையில் எறிந்தான்.

சங்கிலி அனுமதித்த வரை நடந்த ருஹானா “என்னை விடு!” என கத்த “என்மேல கோபப்படாதே அன்பே! உனக்கு உண்மை புரியவரை உன்னை கட்டி தான் வச்சிருப்பேன். உன் நல்லதுக்கு தான் இதெல்லாம் செய்றேன்” என சிரித்தபடி சொன்னவன் அந்த கதவையும் அடைத்து வெளியே போய்விட்டான்.

“காப்பாத்துங்க! யாராவது இருக்கீங்களா?” என கத்தி ஓய்ந்த ருஹானாவிற்கு தொண்டையெல்லாம் எரிந்தது.

கைப்பையில் இருந்த அவளது செல்பேசி அடித்துக்கொண்டே இருக்க, அதை எட்டமுடியாமல் போராடினாள். கால் சங்கிலியை கழட்ட வெகுவாக பிரயத்தனம் செய்தாள். எதும் முடியாமல் பரிதவித்தாள். “உதவி! உதவி!” என கத்திக்கொண்டே இருந்தாள்.

ருஹானாவிற்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்த ஆர்யனும் தவித்துப் போனான். வேகமாக மேசை இழுப்பறையிலிருந்து துப்பாக்கியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டான்.

“ஆர்யன்! என்ன செய்றே! அல்லாஹ் பெயரால சொல்றேன். பொறுமையா இரு. கோபப்படாதே!” என கரீமா பதட்டப்பட “அந்த சைக்கோ செய்றதுக்கு எல்லாம் பலனை அனுபவிக்க போறான்” என கோபத்துடன் சொன்னவன் விரைவாக வெளியேறினான்.

“ஆர்யன்! போகாதே! நில்லு” என கத்திக்கொண்டே கரீமா பின்னால் வர, படிக்கட்டில் வேகமாக இறங்கினான்.

சத்தம் கேட்டு வந்த சல்மா “என்னக்கா நடந்தது? ஆர்யன் எங்க போறான்?” என விசாரித்தாள்.

“எலக்ட்ரிக் ஒயரை தண்ணீல போட்டது மியூசிக் டீச்சர். ஆர்யனுக்கு அது தெரிஞ்சதும் கோபமாகிட்டான். மாஸ்டரை கொலை செய்ய துப்பாக்கியை எடுத்துட்டு கிளம்பிட்டான்”

“துப்பாக்கியா? ஐயோ!” என அதிர்ச்சியான சல்மா “அக்கா! நாம உடனே ஆர்யனுக்கு சொல்லணும். மாஸ்டர் மனநிலை சரியில்லாதவன்னு. டாக்டர் பேர் கூட அந்த மெசேஜ்ல வந்தது என்கிட்டே இருக்கே. நான் ஆர்யனுக்கு சொல்றேன்” என படிக்கட்டில் இறங்கினாள்.

அவளை பின்னால் இழுத்த கரீமா “உஷ்! என்ன செய்றே சல்மா? நீ இப்போ இதை காட்டினா ஏன் இத்தனை நாளா நீ இதை சொல்லலன்னு ஆர்யன் கேட்க மாட்டானா? நாம மாட்டிப்போம். முட்டாள்தனம் செய்யாதே” என தடுத்தாள்.

“ஆனா அக்கா அவன் ஆபத்தானவன்னு நமக்கு தெரியுமே! ஆர்யனுக்கு எதாச்சும் ஆகிட்டா?” சல்மா கண்கலங்கினாள்.

“எனக்கும் இப்படி நடக்கறது வருத்தமா தான் இருக்கு. ஆனா இதுல நாம செய்றதுக்கு ஒன்னும் இல்ல. பொறுத்திருந்து பார்க்கலாம், சல்மா” என்றாள் இரக்கம் சிறிதுமின்றி.

“இந்த நிகழ்ச்சில இருந்து நாம சேதாரம் இல்லாம வெளிய வரணும். வா போலாம்” என தங்கையை இழுத்து போனாள்.

——-

யாக்கூப்பின் அடுக்ககத்திற்கு வந்த ஆர்யன் “கதவை திற! டேய் சைக்கோ! கதவை திற” என கதவை தட்டினான். பதில் இல்லாமல் போகவும் தோளால் மோதி தள்ள, மூன்றாவது தள்ளலில் கதவு திறந்து கொண்டது.

அவன் உள்ளே செல்லும் வேளையில் பக்கத்து வீட்டுக்காரர் “என்ன சத்தம்?” என கேட்க, இவன் முறைத்த முறைப்பில் அவர் அமைதியாக வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

வீட்டினுள்ளே பரபரப்பாக சுற்றி பார்த்த ஆர்யன், இரத்தம் தோய்ந்த சுத்தியை பார்த்து திகைத்து விட்டான். அதை கையில் எடுத்து பார்த்தவன் கண்களுக்கு சுவரில் இருந்த இரத்தக்கறையும் தெரிந்தது.

‘என்ன நடந்ததோ, அவளுக்கு என்ன ஆச்சோ?” என அவன் மனம் அடித்துக் கொண்டது.

மேசையில் இருந்த மடிக்கணினியை திறந்த ஆர்யன் சில விநாடிகள் செயலற்று போனான். ருஹானாவின் அறையை திரையில் பார்த்தவனுக்கு கோபம் உச்சந்தலையில் வெடிக்க “அட கேவலமானவனே!!” என கத்தினான்.

——-

தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்த ருஹானா யாக்கூப்பிடம் கெஞ்சினாள். “தயவுசெய்து என்னை விட்டுடு! உன்னை வேண்டி கேட்கறேன். யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்றேன். என்னை போகவிடு. எனக்கு தெரியும் நீ கெட்டவன் இல்ல. உனக்கு மனசு சரியில்ல. அதுக்கு சிகிச்சை தேவை”

மேசையில் உணவு வகைகளை வைத்துக் கொண்டிருந்தவனுக்கு இதை கேட்டதும் கோபம் ஏறியது.

“நானே உனக்கு உதவி செய்றேன். நீ குணமாக எது வேணும்னாலும் செய்றேன். தயவுசெய்து என்னை விட்டுடு” என கண்ணீர் வழிய அழுதாள்.

“வாயை மூடு!” என அறை அதிர கத்தியவன், அடுத்த நொடியே பல்லை காட்டி இளித்தான். மெழுகுவர்த்தியை கொளுத்திக்கொண்டே “இது நாம சேர்றதுக்கான நேரம் டியர்! எதும் தடுக்க முடியாது. மரணம் கூட நம்மோட இணைப்பை பாதிக்காது” என்றவன் அவள் அருகே வந்தான்.

Advertisement