Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 71

கதவு மூடிய சத்தத்தில் பயந்து போன ருஹானா அதே இடத்தில் அசைவற்று நின்றாள்.

அப்போது அவள் கைப்பையில் இருந்த செல்பேசி ஒலிக்க, அந்த நிசப்த பிரதேசத்தில் அதன் ஒலி ஓங்கி ஒலித்தது.

பயத்தை உதறி செல்பேசியை பார்க்க, அது நஸ்ரியாவின் அழைப்பு. வாசற்கதவை இழுத்து பார்க்க, காற்றில் மூடியிருந்த அது திறந்து கொண்டது.

வெளியே வந்து அழைப்பை ஏற்றாள்.

“என்ன நஸ்ரியா?”

“சித்தி! நான் தான். நஸ்ரியா அக்கா போன்ல இருந்து கூப்பிட்டேன்”

“சொல்லு செல்லம், என்ன வேணும்?”

“சித்தி! எனக்கு மாஸ்டர் கொடுத்த ஹோம்வொர்க் செய்யவே தெரியல. நீங்க வந்து சொல்லி கொடுக்கறீங்களா?”

“சரி அன்பே! நான் இப்பவே வரேன்” என்று சொல்லி அந்த மாளிகையை விட்டு விலகி வெளியே வந்தவள், டாக்ஸி ஏதும் வருகிறதா என பார்த்தாள்.

———- 

மேல்மாடி மாடத்தில் நின்று கொண்டிருந்த ஆர்யனின் கையில் செல்பேசி சுழன்று கொண்டிருந்தது. அவன் கண்கள் வெளிகேட்டை பார்த்து கொண்டிருந்தன.

செல்பேசியில் ‘இவான் சித்தி’ என்ற தொடர்பை எடுத்தவன் அழைப்பு பொத்தானில் விரல் வைத்தான். ஆனால் அழுத்தவில்லை. சையத் பாபா சொன்னதுபோல கண்களை மூடிக்கொண்டான். 

——–

ருஹானா சாலையில் சென்ற டாக்ஸியை கைக்காட்டி நிறுத்தினாள். அவள் காரில் ஏறப்போகும் சமயம், யாக்கூப் தனது காரை வேகமாக கொண்டுவந்து நிறுத்தினான்.

“ருஹானா மேம்! உங்களை காத்திருக்க வச்சதுக்கு ஸாரி. சூப்பர் மார்க்கெட்க்கு போனேன். லேட்டாகிடுச்சு”

“நீங்க வீட்ல இல்ல. அதான் கிளம்பிட்டேன்”

“நான் தான் வந்திட்டேனே. உள்ள வாங்க ப்ளீஸ்”

“ஸாரி மிஸ்டர் யாக்கூப்! இப்போ தான் இவான் போன் செய்தான். அவன் என்னை உடனே வர சொன்னான். நான் போகணும்” 

ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்ட யாக்கூப் “சரி தான். இவானை காக்க வைக்கறது சரியில்ல. நீங்க இன்னொரு நாள் வாங்க கண்டிப்பா” என்றான்.

“நிச்சயம் வரேன் மிஸ்டர் யாக்கூப். பை” என்று ருஹானா காரில் ஏறி சென்றுவிட்டாள். 

வீட்டுக்குள் வந்த யாக்கூப் சத்தமாக கத்தினான். கையை ஆழமாக கடித்துக்கொண்டான். நாற்காலியை தூக்கி சுவரில் ஓங்கி அடித்தான்.

கண்ணாடியை செங்கலால் உடைத்தான். அதில் விகாரமாக தெரிந்த தனது முகத்தை பார்த்து “அமைதியா இரு. பொறுமையா இரு. போகட்டும் விடு. மறுபடியும் வருவா. சீக்கிரம் ஒன்னு சேர்வோம். அப்புறம் பிரியவே மாட்டோம்” என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான். 

—— 

நீருற்று குளத்தின் அருகே பழுதான மின்சார கேபிளை விளக்கு வெளிச்சத்தில் ஆர்யன் ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்போதும் வெளிகேட்டை ஒரு பார்வை பார்த்துக்கொண்டான்.

பக்கத்தில் நின்ற ஜாஃபர் “மெக்கானிக் ஆச்சரியப்படுறான், ஆர்யன் சார். இப்படி நடக்க வாய்ப்பே இல்லன்னு சொல்றான்” என்றான்.

“அப்படியா? சரி, நீங்களும் கவனமா பார்த்துடுங்க, ஜாஃபர். இவானுக்கு ஆபத்து ஏற்படுத்துற மாதிரி எதுவும் இருக்க கூடாது. எல்லா மின்சார இணைப்பையும் டபுள் செக் செய்ங்க”

“கண்டிப்பா செய்றேன், சார்” என்று ஜாஃபர் செல்ல, வாசலில் காலடியோசை கேட்க, ஆவலோடு ஆர்யன் திரும்பி பார்க்க, ருஹானா வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆர்யன் மனது ஆசுவாசமானது. 

அவளுக்கு மாலை வணக்கம் சொன்னவன் “அதிக வேலையா?” என்று கேட்டான்.

முன்பெல்லாம் அவள் வணக்கம் சொல்லும்போதும் தலையை மட்டும் ஆட்டி அங்கீகரிப்பவன், இப்போதெல்லாம் அவனே முதலில் சொல்கிறான்.

பலவித உணர்ச்சி கலவைகளில் இருந்தவள் தனது கழுத்து சங்கிலியை பிடித்துக்கொண்டு பதற்றமாக “நான்.. மியூசிக் டீச்சரை….” என இழுத்தாள்.

“நான் உன்கிட்டே எந்த விளக்கமும் கேட்கலயே!” என்றான் அவளை பார்த்து கண்களில் கனிவு ததும்ப.

அவள் அவனை பார்த்தபடி நிற்க, இவான் உள்ளே இருந்து “சித்தி!” என ஓடிவந்தான். “நீங்க வந்துட்டீங்களா?” என அவளை இழுத்து கட்டிக்கொண்டான்.

அவனை அணைத்துக்கொண்ட ருஹானா “ஆமா தேனே!” என முத்தமிட்டாள்.

ஒவ்வொரு முறையும் இவானுக்கு ருஹானா முத்தம் கொடுக்கும்போது ஆர்யனுக்கு ஏதோ ஆகிறது. இப்போதும் அப்படியே ஆக, அது என்னவென்று புரியாமல் அவர்களை பார்த்து நின்றிருந்தான்.

“சித்தி! என் ரூம்க்கு போலாமா?” என கேட்ட இவான், ருஹானா தலையாட்டவும் “சித்தப்பா நாங்க ஹோம்வொர்க் செய்ய போறோம்” என அவளை கைப்பிடித்து அழைத்து சென்றான்.

அவர்கள் உள்ளே போவதையே பார்த்த ஆர்யன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

திரும்ப கேபிளை பார்வையிட திரும்பியவன் கண்ணுக்கு தரையில் பளபளவென ஏதோ பட்டது.

குனிந்து என்னவென பார்க்க அது இவான் லாக்கெட் உள்ள ருஹானாவின் சங்கிலி. 

அவள் மண்டியிட்டு இவானை கட்டிக்கொண்டபோது கீழே விழுந்திருக்க வேண்டும்.

அதை கையிலெடுத்தவன் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக மூடிக்கொண்டான்.

———-

“அல்லாஹ்! எங்க போயிருக்கும்?” என கட்டில் கீழே, மேசையில், சோபாவில் என எல்லா இடங்களும் தேடினாள் ருஹானா. வெளியே விழுந்திருக்கும் என வெளியே செல்ல போனாள். அறைக்கதவை திறந்த ஆர்யனை பார்த்து நின்றாள்.

உள்ளங்கையில் சங்கிலியை வைத்து நீட்டியவன் “இதான் தேடுறீயா?” என கேட்டான்.

“ரொம்ப பயந்திட்டேன். தொலைச்சிட்டேனோன்னு கவலையா போச்சி” 

“ஃபவுண்டன் கிட்ட விட்டுட்டே” என சொல்லி அவள் நீட்டிய கையில் மெல்ல நழுவ விட்டான் அவளை தொடாமல்.

“மிக்க நன்றி” என சொன்னவள் லாக்கெட்டை முத்தமிட்டாள்.

“இது காணாம போயிருந்தா நான் அதிக துக்கமாயிருப்பேன்”

அவளை கனிவுடன் பார்த்தவன் “அதோட கொக்கி பிய்ந்து இருக்கு. அதான் கழண்டு விழுந்து இருக்கு” என்றான்.

“யா அல்லாஹ்!” என அவள் கவலையுடன் கொக்கியை பார்க்க,  “ஒண்ணுமில்ல. ஜாஃபர் சரிசெய்துடுவார்” என திரும்ப கையை நீட்டினான்.

அவன் கையில் ருஹானா சங்கிலியை வைக்க, அதன் லாக்கெட்டை, அவள் முத்தம் தந்த லாக்கெட்டை பெருவிரலால் மெல்ல தொட்டான்.  

மீண்டும் நன்றி சொன்னவள் அவன் நகராமல் நிற்பதை பார்த்தாள். அவள் யோசனையாக பார்ப்பதை கண்டு சுதாரித்தவன் “இவான் என்ன செய்றான்?” என கேட்டான்.

“அவனுக்கு நல்லா தூக்கம் வந்துடுச்சி. ஹோம்வொர்க் ஹோம்வொர்க்னு குதிச்சிட்டு இருந்தவன் அதை கூட மறந்திட்டு தூங்கிட்டான்” என மெல்லிய சிரிப்புடன் சொன்னாள்.

“எப்பவும் நீ பக்கத்துல இருக்கணும்னு அவன் நினைக்கறான்” என அவன் சொல்ல அவளிடம் ஒரு பெருமித சிரிப்பு மட்டுமே. இவான் மட்டுமா அப்படி நினைக்கிறான்?

“உன் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்கான்” அவள் கண்களை ஆழ பார்த்து அவன் சொல்ல “நானும் அவன் மேலே என் உயிரையே வச்சிருக்கேன். என்னோட சந்தோசம், என்னோட நிம்மதி, என்னோட எல்லாமே அவன் தான்” என அவள் சொல்ல, ஆர்யன் கையிலிருந்த சங்கிலியை பாதுகாப்பாய் இறுக்கிக்கொண்டான், தானும் அந்த பாசப்பிணைப்பில் இணைய மாட்டோமா என.

“என் சங்கிலிக்காக திரும்ப நன்றி சொல்றேன்” என அவள் சிரித்த முகமாக சொல்ல, வெகு நாட்களுக்கு பின் சண்டையில்லாமல் இதமாக பேசும் அவளுடன் பேச்சை நிறுத்தி செல்ல, அவனுக்குள் இருக்கும் ரசிகனுக்கு மனதில்லை.  

என்றாலும் அவன் இரவு வணக்கம் சொல்லி இன்னமும் நிற்க அவளும் இரவு வணக்கம் சொன்னாள்.

பிடித்தவை கண்ணில் படாமல்

தேடவைக்கும் மாய விளையாட்டு

சிலநேரம் சுவராஸ்யமாய்

பலநேரம் தவிப்பாய் தேடலாய்

மீண்டும் கிடைக்கும்போது பெரும் பேரின்பம்

வார்த்தைகளில் வடிக்க முடியாது…

மனம் தீண்டும் பெண்ணின் 

இதழ் தீண்டல் கிடைக்கப்பெற்ற

பதக்கம் மட்டுமே பாக்கியம் செய்தது..!

 

முதல்முறை காதல் வயப்படுபவன், அது காதல் தான் என புரியாதவன், எப்படி நடந்து கொள்வது என தெரியாதவன் இப்படி தான் விழித்து நிற்பானோ? 

———

வெள்ளை திருமண உடையை எடுத்து நாற்காலியில் வைத்த யாக்கூப் அதன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான்.

“இன்னைக்கு நீ வர முடியாம போயிருக்கலாம், பேபி. ஆனா சீக்கிரமே நீ இங்க வருவே. அந்த நாளை நாம இனிமையா களிக்கலாம். அதுக்கு அப்புறம் சேர்ந்தே இறந்து போகலாம். நம்மை யாராலும் பிரிக்க முடியாது டார்லிங். நீ எப்பவும் என்னுடையவள் தான்”

ஆடையை பார்த்துக்கொண்டே பேசியவன் பலமாக சிரித்தான்.

———–

ருஹானா கட்டிலில் அமர்ந்துக்கொண்டு கண்ணாடியை பார்த்தபடி கூந்தலை மெல்ல வாரிக்கொண்டிருந்தாள். ஆர்யனுடன் நடந்த உரையாடலை குறுநகையுடன் அசைப்போட்டு கொண்டிருந்தாள்.

ஆர்யன் தனது அலுவலக மேசையின் மேல் தகுந்த உபகரணங்களை பரப்பி வைத்துக்கொண்டு முழுமூச்சுடன் சங்கிலியின் கொக்கியை பழுது பார்த்துக்கொண்டிருந்தான், தேர்ந்த பொற்கொல்லன் போல.

‘வாழ்க்கையோட்டத்தில் மிதந்து செல் மகனே! மூச்சு திணறும் என யோசிக்காதே. தவறு செய்வோம் என தயங்காதே. உன் தவறால் பாதிப்பு நேர்ந்தால் அதை சரிப்படுத்து’ சையத்தின் அறிவுரை மொழிகள் அவன் மனதில் ஒலித்தது.

ஒருநேரத்தில் அவள் கழுத்திலிருந்து அந்த சங்கிலியை பறித்தவன், இன்று வேறு யாரிடமும் கொடுக்காமல் அதுதான் தன் முழுமுதல் கடமையென கவனம் முழுதும் அதில் வைத்து தானே மாட்டிக்கொண்டிருக்கிறான்.

  ————-

காலையில் குளித்துவந்த ருஹானா தலைவாரி முடித்துவிட்டு சீப்பை மேசை இழுப்பறையில் வைத்தாள். அங்கே வேறு சில சங்கிலிகளும் இருந்தன. என்றாலும் அது எதையும் எடுத்து அவள் கழுத்தில் மாட்டவில்லை.

அவள் செல்பேசியை எடுத்து பார்க்க, சமூகசேவை நிறுவனத்தில் இருந்து வந்த தவறவிட்ட அழைப்பை கண்டாள்.

திரும்பும் புதுவீட்டிற்கு வர போகிறார்களோ அல்லது வேற என்ன சிக்கலோ என பயந்து போனவள் ஆர்யனை நாடி வேகமாக சென்றாள்.

கீழே யாக்கூப்பை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்த  நஸ்ரியா, ருஹானாவிடம் அவனது வருகையை தெரிவிப்பதாக சொல்லி படிக்கட்டில் காலை வைக்க, மேலே இருந்து ருஹானா பரபரப்பாக இறங்கிவந்தாள்.

“நஸ்ரியா! இவானோட சித்தப்பா எங்க? அவர் போன் கூட எடுக்க மாட்றாரே”

“ருஹானா மேம்! சார் அவசரமா கிளம்பி போனாரே, ஏதோ முக்கியமான மீட்டிங்ன்னு பேசினதை கேட்டேன். அதான் சார் போனை சைலன்ட்ல போட்டு இருக்கலாம்”

“ஓ, அப்படியா! நான் இப்போ அவர்கிட்டே உடனே பேசணுமே!”

இதெயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த யாக்கூப்பின் முகத்தில் இருந்த அத்தனை நரம்புகளும் துடித்தன.

அப்போது தான் யாக்கூப் அங்கே இருந்ததை பார்த்த ருஹானா “ஒஹ் மிஸ்டர் யாக்கூப் நீங்க வந்திட்டிங்களா? நீங்க மேல இவான் ரூம்க்கு போங்க. அவன் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கான்” என்றாள், போனை பார்த்துக்கொண்டே.

“சரி ருஹானா மேம்! நீங்க ஏதோ கவலையா இருக்கீங்க போலிருக்கே!”

“ஆமா…“ என ஏதோ சொல்ல வந்தவள் “நீங்க போங்க. நான் அப்புறம் வரேன்” என ஆர்யனின் எண்ணுக்கு முயற்சி செய்துக்கொண்டே வாசல் கதவை திறந்து வெளியே சென்றாள்.

மனதில் குமுறிக்கொண்டே யாக்கூப் மேலே செல்ல, இதை கரீமா சிரித்தபடி பார்த்திருந்தாள்.

——–

Advertisement