Advertisement

“நான் வாசிக்கிறது சரியா, மாஸ்டர்?”

எதிரே ருஹானா போனை பார்த்து அமர்ந்திருக்க, அவளை கோபமாக பார்த்திருந்த யாக்கூப்பிடம் கேட்டான் இவான்.

“சரி தான் இவான். ஆனா இன்னும் உன் உடம்போட ஒட்டி வச்சிக்கோ” என கிட்டாரை சரியாக வைத்தான்.

“அச்சோ! நான் மறந்து மறந்து போறேன் மாஸ்டர்”

இது எதையும் கவனிக்காமல் ருஹானா செல்பேசியில் ஆர்யனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.

‘சோசியல் சர்வீஸ்ல இருந்து போன் செய்திருக்காங்க. நீங்க இல்லாததால நான் பேசல. அந்த வீட்டுக்கு செக் செய்ய போவாங்களா? பயமா இருக்கு. இந்த மெசேஜ் பார்த்ததும் வீட்டுக்கு வாங்க ப்ளீஸ்’ 

“இவான்! நீ முன்ன விட நல்லா வாசிக்கறே” என யாக்கூப் ருஹானாவை பார்த்துக்கொண்டே பாராட்ட, இவான் சந்தோசமாக சிரித்தான்.

ருஹானா அதையும் கவனிக்காமல் இருக்கவும், எரிச்சலான யாக்கூப் “ருஹானா மேம்! இவான் எப்படி வாசிக்கிறான் பாருங்க” என அவள் கவனத்தை திருப்ப பார்த்தான்.

அப்போதும் இவானை பார்த்தபடியே ருஹானா “ம்.. அற்புதம் அன்பே!” என்றாள்.

அப்போது ஜாஃபர் “ருஹானா மேம்!” என அழைத்துக்கொண்டே வர, வேகமாக எழுந்தவள் “வந்துட்டாரா?” என கேட்டாள்.

“ஆர்யன் சார் இப்போதான் வீட்டுக்குள்ள நுழையுறார்” என ஜாஃபர் சொல்லவும் “நீ வாசித்துட்டு இரு. நான் இப்போ வரேன்” என்று சொல்லி யாக்கூப்பை பார்க்காமல் வெளியே விரைந்தாள்.

யாக்கூப்பின் முகம் கர்ணகொடூரமானது.

———– 

மேல்மாடி வராண்டாவில் செல்பேசியை பார்த்துக்கொண்டே ருஹானா இடைவிடாமல் நடக்க “பொறுமையா இரு. ஒன்னும் ஆகாது. அவங்க இன்ஸ்பெக்ஷனுக்கு வரதா இருந்தா நமக்கு முன்னாடியே தெரிஞ்சிடும். நீ பதட்டப்படாதே!” என ஆர்யன் அவளை அமைதிப்படுத்தினான்.

“ம்ப்ச்! நான் போனை எடுத்து பேசியிருக்கனும். அவங்க ஏதாவது தப்பா நினைச்சிட்டா என்ன செய்றது?”

“அது எப்படி நினைப்பாங்க? நீ திரும்ப கூப்பிட்டு பேசு. அவங்களோட தேவை என்னன்னு  நமக்கு தெரிய வரும். அநேகமா ஃபார்மாலிட்டி எதாவது இருக்கும்”

“போன் செய்ய எனக்கு பயமா இருக்கு. கெட்ட தகவலா இருந்தா?” அவள் அமைதியற்று பேச, அவளை செல்லமாக முறைத்தான்.

“அப்படியெல்லாம் இருக்காது. நீ போன் செய்” என அவன் சொல்ல போனை எடுத்தவள் அதை பதற்றத்தில் தவறவிட்டாள்.

கீழே விழுமுன் அதை பிடித்தவன் அவளிடம் கொடுத்தான். “நல்லவேளை! போன் உடையாம தப்பிச்சதே”

அவள் புன்னகைக்க, பதற்றம் குறைக்க ஆர்யன் செய்த முயற்சி பலித்தது.

“இப்போ போன் செய். ஒன்னும் கெட்ட செய்தியா இருக்காது” 

———

இவான் அறையில் யாக்கூப் விரல்களில் சரத்தை சுழற்றிக்கொண்டே தடுமாற்றமாக நடந்து கொண்டிருந்தான்.

“மாஸ்டர் அடுத்த வரி சொல்லி தரீங்களா?”

இவான் கேட்டது யாக்கூப் காதில் விழவில்லை.

“இது நான் சரியா வாசிக்கலயா, மாஸ்டர்?”

பதில் இல்லை.

“நான் சரியா கிட்டாரை பிடிச்சிருக்கேனா?”

இவான் சத்தமாக கேட்க, அவனிடம் திரும்பிய யாக்கூப் “நீ வாசித்துட்டு இரு. நான் வந்திடுறேன்” என்று சொல்லி ருஹானாவை தேடி சென்றான்.

———

போன் பேசி முடித்த ருஹானா முகத்தில் நிம்மதி கலந்த புன்னகை.

“ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு நான் தான் அதிகமா பயந்திட்டேன். சில பேப்பர்ஸ்ல என்னோட கையெழுத்து வேணுமாம்”

“நான் தான் அப்பவே சொன்னேனே.. அப்படின்னு சொல்ல எனக்கு பிடிக்காது. அதனால நான் அப்படி சொல்ல மாட்டேன்”

ஆர்யன் சிரிக்காமல் சொல்ல, ருஹானா மெல்லிய சத்தத்துடன் சிரித்தாள்.

அவள் முன்னிலையில் இவன் முற்றும் வேறு மனிதனாய் மாறிப் போகிறான்.

“நான் இவான் வகுப்புக்கு போறேன். அவன் என்கிட்டே புதுசா வாசிச்சி காட்டினான். நான் அதை சரியா கூட கேட்கல”

தலையாட்டியவன் கோட் பாக்கெட்டில் இருந்து சங்கிலியை எடுத்து “இதை சரி செய்தாச்சு” என நீட்டினான். 

பச்சை கண்கள் மினுமினுக்க மலர்ந்த முகத்துடன் அவள் அதை அவன் கையில் இருந்து எடுக்க, அவளது மலர்ச்சியை ஆர்யன் மகிழ்வோடு ரசிக்க, தூரத்தில் இருந்து பார்த்த யாக்கூப் கொதித்தான்.

“மிக நன்றி… இன்னைக்கு நீங்க செஞ்ச எல்லாத்துக்கும்… சங்கிலிக்காக.. சோசியல் சர்வீஸ் போனுக்காக…” என்றாள் நன்றி ததும்பும் விழிகளில் மகிழ்ச்சி பூரணமாக பிரதிபலிக்க.

“அது சோசியல் சர்வீஸ் அதிகாரிக்கு போக வேண்டிய நன்றி. நான் போன் கீழே விழாமல் மட்டும் தான் காப்பாத்துனேன். சங்கிலியும் அப்படித்தான்” என அவனும் சன்ன சிரிப்புடன் சொல்ல, ருஹானாவின் புன்னகை விரிந்தது.

பேச்சு குறைவு, சிரிப்பு வராது, புன்னகை தெரியாது, கருணை இல்லை என இருந்த ஆர்யனின் இயல்புகள் எப்படி மாறின? ருஹானாவின் மேல் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு மட்டும் தான் அதற்கு காரணமா?

——– 

“என்ன அழகா வாசிக்கறே அன்பே! எத்தனை சீக்கிரம் கத்துக்கிட்டே!”

“நல்லா இருக்கா சித்தி? நான் போய் குக்கீஸ் சாப்பிடவா? எனக்கு பசிக்குது”

“சரி செல்லம், கொஞ்சமா சாப்பிடு. இது உணவு சாப்பிடுற நேரம்”

“சரி சித்தி!” என இவான் ஓடிவிட்டான்.

“இவான் அதிக திறமைசாலி. சீக்கிரம் கிரகிச்சிகிறான், ருஹானா மேம்”

“நன்றி மிஸ்டர் யாக்கூப்!”

“நீங்க இப்போ தான் நார்மலா இருக்கீங்க. கொஞ்ச நேரம் முன்னே ரொம்ப கவலையா இருந்தது போல தெரிஞ்சது”

“ஆமா தேவையில்லாம கவலைப்பட்டுட்டு இருந்தேன். அது தீர்ந்து போச்சி” என சொன்னபடி ருஹானா தன்வழக்கம் போல லாக்கெட்டை தடவினாள்.

“நீங்க போட்டு இருக்குற சங்கிலி அழகா இருக்கு, ருஹானா மேம்”

“ஆமா! என்னோட விலைமதிக்க முடியாத பொருள் இது” என ருஹானா சொல்ல, யாக்கூப் மனம் உடைந்து போனான், அது ஆர்யனின் பரிசு என நினைத்து.

வேகமாக அவனுடைய கிட்டாரை எடுத்துவைத்து பெட்டியை மூட, “என்னாச்சு மிஸ்டர் யாக்கூப்?” என ருஹானா குழப்பாக கேட்க, “வகுப்பு முடிந்தது. எனக்கு வேற வேலை இருக்கு” என கிளம்பினான்.

——— 

“சல்மா! இன்னைக்கும் மாஸ்டரை சாப்பிட கூப்பிடலாமா?”

“ஆமா அக்கா! ஆர்யன் கோபத்தை அதிகப்படுத்தலாம். ஆனா இந்த பிளான் திரும்ப நம்மையும் தாக்கும் அக்கா. ஒருவேளை ஆர்யன் மாஸ்டரை வேலையை விட்டு அனுப்பிட்டா?”

“ரிஸ்க் எடுக்காம வாழ்க்கை இல்ல, சல்மா. இப்படித்தான் ஆர்யனுக்கும், ருஹானாக்கும் நடுவுல விரிசல் ஏற்படுத்த முடியும். அப்போ தான் தனியா இருக்கற ஆர்யன் கிட்டே நீ நெருக்கமாகலாம், அன்னைக்கு போல. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்”

“சரி அக்கா, நீ மாஸ்டரை கூப்பிடு. மத்ததை நான் பார்த்துக்கறேன்” 

“சாரா என்ன சமையல் செஞ்சுருக்காங்கன்னு பார்த்தியா?”

“யாக்கூப் பேரை சொன்னதுமே அவங்க இன்னும் ரெண்டு டிஷ் அதிகமா செய்றாங்க. எல்லார் மனதையும் கவர்ந்து வச்சிருக்கான், இந்த சைக்கோ”

“என்னைக்கு ருஹானா மனசை கொள்ளை அடிக்க போறான்னு நானும் காத்திட்டே இருக்கேன், சல்மா”

அப்போது யாக்கூப் கீழே இறங்கிவர, சகோதரிகள் அவனை சாப்பிட அழைத்தனர். அவன் மறுக்கவும் “சாரா உங்களுக்காவே ஸ்பெஷலா செய்றாங்க. நீயும் கூப்பிடு, ருஹானா” என சல்மா சொன்னாள்.

“நீங்க எங்கயோ போகணும்னு சொன்னீங்க. அதை ரத்து செய்ய முடியும்னா வாங்க. நீங்களும் எங்களோட சாப்பிட்டா நாங்க சந்தோசப்படுவோம்” என ருஹானா சொல்லவும் அவன் கோபமெல்லாம் பறந்தோடியது.

“நீங்க எல்லாரும் இத்தனை சொல்றதால…..” என அவன் இழுக்கவும், ஆர்யன் மாடிவளைவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

நான்கு பேரும் மேலே நிமிர்ந்து பார்க்க, “வகுப்பு முடிந்ததா?” என அவன் ருஹானாவிடம் கேட்டான்.

“ஆமா! எதும் தகவல் இருக்கா?” என ருஹானா கேட்க, “ஆமா! இப்போ நாம பேசின விஷயம் தான்” என அவன் சொல்ல, “நான் கொஞ்ச நேரத்துல வரேன்” என ருஹானா சொன்னாள். 

யாக்கூப்பின் மேல் ஒரு அனல்வீசும் பார்வையை செலுத்திவிட்டு ஆர்யன் சென்றுவிட்டான்.

யாக்கூப்பின் மறைந்த கோபம் ரெட்டிப்பாக “மன்னிச்சிடுங்க. நான் உடனே போகணும்” என வெளியே கிளம்ப, சகோதரிகளின் திட்டம் குலைய அவர்களின் முகங்கள் சுருங்கின.

கார் வரை உடன் வந்த ருஹானா “நாளைக்கு வகுப்பு இருக்கா?” என கேட்டாள்.

“இல்ல, எனக்கு நாளைக்கு வீட்ல வேலை இருக்கு. அடுத்த நாள் வச்சிக்கலாம்” என்றவன் “நேத்து உங்களை நான் வர சொல்லிட்டு காக்க வச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என சொன்னான்.

“நானே அந்த வீடு பத்தி உங்க கிட்டே பேசணும்னு நினைச்சேன். எனக்கு அது பார்க்கவே பயமா இருந்தது”

யாக்கூப்பின் முகம் வெளிறியது.

“காற்றோட்டமே இல்லாம எல்லாமே மூடி.. ஒரு மாதிரி நான் பயந்திட்டேன்”

சத்தமாக சிரித்து சமாளித்தவன் “வெளிய இருந்து பார்க்க அப்படித்தான் இருக்கும், ருஹானா மேம்! மாதக் கணக்குல மூடியே இருக்கு இல்லயா? ஜன்னல்லாம் பழசாகிடுச்சி. ஒரு தடவை நான் போகும்போது ஜன்னலை உடைச்சி ரெண்டு குடிகாரங்க உள்ளே படுத்துருந்தாங்க. அதுக்கு தான் இப்படி மூடி வச்சிருக்கேன். இப்போ தான் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா சரி செய்துட்டு இருக்கேன்”

“அப்படியா? எனக்கு இப்போ புரியுது. நீங்க சொல்றதும் சரிதான்”

“இப்போ அது பாதுகாப்பான இடம் தான். உங்களால எப்போ முடியுதோ அப்போ வாங்க”  

“சரி தான் மிஸ்டர் யாக்கூப்”

மனக்குறையுடனே யாக்கூப் காரை ஓட்டி சென்றான்.

——-

தூரத்தில் மேல்மாடி தோட்டத்தில் நின்று ஆர்யனும் ருஹானாவும் பேசுவதை கண்டு, உள்ளே சோபாவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சதிகாரிகள் இருவருக்கும் ஆத்திரம் அளவு கடந்தது.

“மாஸ்டர் சாப்பிட வர தான் இருந்தான், அக்கா. கடைசி நிமிடம் ஆர்யனை பார்த்ததும் மறுத்துட்டான்”

கரீமா வெறுப்பாக தலையசைத்து ஒப்புக் கொண்டாள்.

“அவன் இப்படி ஆர்யனுக்கு பயப்பட்டான்னா நமக்கு உபயோகம் இல்லயே, அக்கா”

“சல்மா! அவன் ஒரு சைக்கோ. தன்னோட காதலியா ருஹானாவை நினைக்கிறான். அவ்வளவு லேசுல அவளை விட்டு போக மாட்டான். கவலைப்படாதே! இந்த முறை நமக்கு நல்லது தான் நடக்கும்”

இருவரும் சிரித்துக்கொண்டே இன்னும் பேசிக்கொண்டிருக்கும் ருஹானாவையும் ஆர்யனையும் பார்த்தனர்.

———

கார் ஓட்டிகொண்டிருந்த யாக்கூப்பிற்கு ஆர்யனும் ருஹானாவும் நெருக்கமாக சிரித்து பேசியது மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் தெரிந்தது.

கோபத்தை அடக்கமுடியாமல் முன்னே இருந்த சக்கரத்தில் ஓங்கி ஓங்கி அடித்தான். கார் அவன் கட்டுப்பாட்டை இழந்து வேறு ஒரு கார் மீது மோதியது.

அதன் பின்னே சாலையில் கவனம் வைத்த யாக்கூப் என்ன நடந்தது என கவனித்தான். 

இடித்த காரின் ஓட்டுனர் கீழே இறங்கி, பாதிப்படைந்த தனது காரை பார்வையிட்டான்.

யாக்கூப் காரை நகர்த்த, அந்த காரின் ஓட்டுனர் கத்திக்கொண்டே இவனை நோக்கி ஓடிவர, இவன் வேகமாக காரை செலுத்தினான்.   

———

புத்தகம் படித்திருந்த ருஹானா தூக்கம் வரவும் படுக்க ஆயத்தமானாள். அவளது சங்கிலி முடியில் மாட்டிக்கொள்ள கண்ணாடி பார்த்து அதை எடுக்க முனைந்தாள்.

அப்போது கதவை தட்டி உள்ளே வந்த ஆர்யன் ஒரு ஃபைலை நீட்டி “சோசியல் சர்வீஸ்ல கேட்ட ஆவணங்கள் தயார். நீ இதுல கையெழுத்து போட்டினா, நாளைக்கு அவங்களுக்கு அனுப்பிடறேன்” என்றான்.

நன்றி சொன்ன அவள் அதை வாங்காமல் நிற்கவும், அருகே வந்து மேசை மேல் வைத்தவன் அவள் கையை கழுத்தில் வைத்திருப்பதை கவனித்து “எதும் பிரச்னையா?” என கேட்டான்.

“சங்கிலி முடியில நல்லா சுத்திடுச்சி. எடுக்க வரல”

“நான் உதவி செய்யவா?” என அவன் தயக்கமாக கேட்க, அவளும் சில விநாடிகள் தயங்கி பின் சரியென தலையாட்டினாள்.

அவன் நெருங்கி வர, கூந்தலை முன்னால் அள்ளிப்போட்டுக்கொண்டு அவளும் திரும்பி நின்றாள்.

ஒரு விரலால் சங்கிலியின் மேல் படிந்த முடியை விலக்கிவிட்டவன், அவள் கழுத்தில் கைபடாமல் சங்கிலியை மட்டும் பிடித்துக்கொண்டு, அதில் சுற்றியிருந்த முடிக் கற்றைகளை மென்மையாக ஆர்யன் எடுக்க முயல. அவனின் அருகாமையில் அவள் இதயம் தாறுமாறாக துடித்தது.

“நான் உங்களுக்கு சிரமம் தரேன்” என அவள் வாய் பேசினாலும் இதயத்தின் ஓட்டம் குறையவில்லை. நாணத்தில் முகம் சிவந்தது.

ஆர்யனுக்கு இதில் சிரமமா, என்ன?

இருவரையும் நெருங்க வைப்பதில் இவானின் பங்கு எத்தனை கணிசமோ,  அத்தனை பங்கு தஸ்லீம் அளித்த சங்கிலிக்கும் இருக்கிறது!!

இருவருக்குள்ளும் பற்றிக்கொண்டிருந்த பொறி தனது ஜுவாலையை அதிகப்படுத்தியது.

ஆர்யன் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல், கர்ம சிரத்தையாக ஒவ்வொரு இழையாக எடுத்து விட்டுக்கொண்டிருந்தான்.

பேனாவின் வழியே பார்த்துக்கொண்டிருந்தவனோ சோபாவில் இருந்து எழுந்து குதித்துக் கொண்டிருந்தான்.

“அவளை விட்டு விலகு”

“என் காதலியை விட்டு தள்ளிப்போ, நாயே!”

மேசை மேல் இருந்த எல்லா பொருட்களையும் ஆத்திரமாக தள்ளிவிட்டவன், கணினியையும் தூக்கி உடைக்க போனான்.

பின் அதை மேசை மேல் வைத்தவனின் கால்கள் தானாக நிலைகொள்ளாமல் ஆடின.

பத்து விரல் நகங்களையும் வாயில் வைத்து கடித்து துப்பினான்.

பின்பு பலமாக சிரித்தவன் விரல் நீட்டி திரையை பார்த்து கத்தி பேசினான்.

“சீக்கிரமே அன்பே… இவன் கிட்டே இருந்து நாளைக்கே உன்னை காப்பாத்துறேன்”

“ஒருமுறை என்னை விட்டுட்டு செத்துட்டே! இந்த முறை அப்படி உன்னை தனியா விட மாட்டேன்”

“இவன் கூட உன்னை வாழ விட மாட்டேன்”

“வா.. என்கூட செத்துப்போ, ஷெனாஸ்!”

(தொடரும்)

Advertisement