Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 70

இவானுக்கு ஏற்பட இருந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அனைவர் முன்னும் மாமனிதனாய் யாக்கூப் நிற்க, அவனை மனிதனாக கூட மதிக்காத ஆர்யன் சந்தேக கண்ணோடு பார்க்க, யாக்கூப் இவானை பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டான்.

இவான் எதிரே மண்டியிட்டு அமர்ந்திருந்த ருஹானா “உனக்கு ஒன்னுமில்லயே, ஆருயிரே?” என கேட்க, அவன் இல்லையென தலையாட்டினான்.

“நல்லவேளை, கெடுதலா எதும் நடக்கல” என அவன் முடியை ஒதுக்கிவிட்ட ருஹானா “உன் மாஸ்டருக்கு தான் நன்றி சொல்லணும்” என எழுந்து யாக்கூப்பை பார்த்தாள், நன்றி நிறைந்த விழிகளுடன்.

அவன் பெருமிதமாக புன்னகைக்க, “வர போற ஆபத்தை முன்கூட்டியே தடுத்திட்டார்” என ருஹானா மேலும் சொல்ல, ஆர்யனின் முகம் கடுத்தது.

கரீமாவும், சல்மாவும் மகிழ்வாக பார்க்க, அதற்கு மேல் ஆர்யனின் கூர்பார்வையில் மாட்டிக்கொள்ள விரும்பாத யாக்கூப் “நான் கிளம்புறேன். இன்னைக்கு இவான் ஓய்வெடுக்கட்டும். கிட்டார் வகுப்பு நாளைக்கு தொடரலாம்” என தப்பிக்க பார்த்தான்.

ருஹானாவும் அதற்கு சம்மதிக்க, அருமையான இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது கரீமா இல்லையே! 

“மிஸ்டர் யாக்கூப்! இது டின்னர் நேரம். வாங்க எங்களோட சாப்பிடுங்க. உங்களுக்கு நன்றி செலுத்த எங்க குடும்பத்தின் சார்பா நான் உங்கள சாப்பிட கூப்பிடறேன்” என்று கரீமா ஆர்யனின் கோபத்தை கிளற, ருஹானாவும் தலையசைத்து அழைக்க, யாக்கூப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டான்.

சல்மா யாக்கூப்பை உள்ளே அழைத்து செல்ல, இவானை கைப்பிடித்து கரீமா கூட்டி சென்றாள்.

ஜாஃபர் மின்சார கேபிளை பார்வையிட நகர, அசையாமல் நின்ற ஆர்யனின் அருகே வந்த ருஹானா “இப்போ உங்க சந்தேகமெல்லாம் தீர்ந்துதா?” என கேட்டவள், அவன் பதிலை நின்று கேட்காமல் உள்ளே சென்றாள்.

எரிச்சல் உச்சத்தில் ஏற, ஜாஃபரை அழைத்த ஆர்யன் “இது எப்படி நடந்ததுன்னு எனக்கு உடனே தெரியணும். இந்த கவனக்குறைவுக்கு யார் காரணமா இருந்தாலும் அவங்களுக்கு தண்டனை கிடைச்சாகணும்” என்று கட்டளையிட்டான்.

——- 

கரீமாவிலிருந்து சாரா வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு யாக்கூப்பை உபசரிக்க, அவர்களின் உபசாரத்திற்கு அவன் நன்றி சொன்னான். 

கரீமா “நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இவான் எங்க குல விளக்கு. அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா… எங்களால அதை நினைச்சி கூட பார்க்க முடியல. அதுக்காக நாங்க எத்தனை நன்றி சொன்னாலும் அது போதாது, அப்படித்தானே, ஆர்யன்?” என ஆர்யனையும் நன்றி நவிலல் படலத்தில் இழுத்தாள்.

ருஹானா ‘ஆர்யன் என்ன சொல்லப் போகிறான்?’ என பார்க்க, “ஆமா! நீ இன்னைக்கு செய்தது மதிப்புமிக்க உதவி” என ஆர்யன் சொல்ல, ருஹானா நிம்மதியடைந்தாள்.

யாக்கூப் ஆர்யனின் நன்றியை தோரணையாக அங்கீகரிக்க, சாரா இன்னும் இனிப்புகளை அவன் தட்டில் வைத்தார். “இது மிக அதிகம், சாரா மேம்” என யாக்கூப் தடுக்க, “எங்க இவானை காப்பாத்தி எங்களுக்கு நீங்க செஞ்ச உதவிக்கு இது குறைவு தான்” என அவர் கண்கலங்கினார்.

“இது போல அன்பான சூழல்ல இவான் வளர்றது அவனுக்கு நல்லது” என யாக்கூப் சொல்ல, “உங்களை போல ஒரு ஆசிரியர் இவானுக்கு கிடைச்சது எங்க அதிர்ஷ்டம்” என கரீமா புகழாரம் சூட்ட, அண்ணன் தம்பியை தவிர மற்ற அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி புன்னகை.

அம்ஜத்தையும் தன் வலையில் போட முயற்சி செய்ய, யாக்கூப் “தோட்டத்தை நீங்க நல்லா பராமரிக்கிறீங்க! உங்களுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது?” என கேட்க, அம்ஜத் பதில் சொல்லாமல் யாக்கூப்பை வெற்றுப் பார்வை பார்த்தான்.

ஆர்யன் அண்ணனை கவனிக்க, கரீமா அம்ஜத்தின் சார்பாக யாக்கூப்பிடம் மன்னிப்பு கேட்டாள். “இப்போ கொஞ்ச நாளா அவர் லேசா அமைதியில்லாம இருக்கார். யார்கூடவும் அதிகம் பேசுறது இல்ல”

“பரவாயில்ல மேம்! சிலசமயம் நமக்குள்ளேயே எல்லா உணர்வுகளையும் வச்சிக்கறது நடக்கும் தான். அம்மாவோட கர்ப்பப்பையில் பாதுகாப்பா இருக்கற நம்பிக்கை தரும். அந்த இருட்டு நமக்கு பயம் தராது” என யாக்கூப் தத்துவ மழை பொழிந்து கொண்டே போக, ருஹானாவுக்கு கருணை ஊற்றெடுத்தது.

ஆர்யனின் பொறுமை எங்கோ சென்றுக் கொண்டிருக்க, அவனை அங்கே இருந்து காப்பாற்ற விளைந்த சல்மா “ஒரு முக்கியமான ஃபைல் உடனே பார்க்கணும். வரீங்களா?” என அழைக்க, ஆர்யனும் அவளுடன் சென்றான்.

அறைக்கு சென்று மடிக்கணினியை திறந்தவன், பார்க்க வேண்டிய அலுவலக கோப்பை பற்றி வினவ, சல்மா “அப்படி ஒன்னும் அவசரம் இல்ல. யாக்கூப் பேசினது உங்களுக்கு போரடிச்சது போல எனக்கு தோணுச்சி. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என சொல்ல, ஆர்யன் அவளை அதிசயமாக பார்த்தான்.

“உங்களை முழுசா சாப்பிட விடாதது எனக்கு வருத்தமா இருக்கு” என்று அவள் சொல்ல “எனக்கும் வேலை இருக்கு” என்று ஆர்யன் கணினி திரைக்கு பார்வையை திருப்பினான்.

“நான் ஜாஃபரை உங்களுக்கு காபி கொடுக்க சொல்றேன்” என சொல்லி அவள் செல்ல, அதுவரை இருந்த பாவனையை கைவிட்ட ஆர்யன், முகத்தில் கோபம் ஆக்கிரமிக்க திரும்பி நாற்காலியில் நன்றாக சாய்ந்தான்.

——   

யாக்கூப்பை வழியனுப்பிய ருஹானா மறுபடியும் அவனுக்கு நன்றி சொல்லி, அடுத்த நாளும் இவானுக்கு ஓய்வு தேவை என வகுப்பு வேண்டாமென சொன்னாள்.

“அதுவும் சரி தான்! இவான் மூடு மாறட்டும். நானும் என் வீட்டை சரிசெய்ற வேலையை பார்க்கறேன்”

ருஹானா அவனை அதிசயமாக பார்க்க “ஆமா! ருஹானா மேம்! உங்க யோசனையை செயல்படுத்த போறேன். நீங்க சொன்னதால தான் இந்த முடிவு எடுத்தேன்” என்றான்.

“மகிழ்ச்சி மிஸ்டர் யாக்கூப்!”

“உங்க ஆலோசனையும் சில இடத்துல தேவைப்படுது. நாளைக்கு நான் அங்க போறேன். நீங்களும் வந்தா எனக்கு உதவியா இருக்கும்” என மெலிதாக கோடு போட்டு பார்த்தான்.

அவன் மேல் இளக்கமாக இருந்த ருஹானா, அவனை துயரக்குழியில் இருந்து கை கொடுத்து தூக்கி விடுவதாக நினைத்து “சரி, நான் வரேன்!” என்று சொல்ல, யாக்கூப்பிற்கு அவன் காதை அவனாலேயே நம்ப முடியவில்லை.

ஆனந்தத்தை மறைத்துக்கொண்டு முகவரியை செல்பேசியில் அனுப்புவதாக சொல்லிவிட்டு வெளியே சென்ற யாக்கூப், ருஹானா கதவை மூடவும் அனைத்து பற்களையும் காட்டி சிரித்தான்.

——– 

கட்டிலில் அமர்ந்து ருஹானா துணி மடித்துக்கொண்டிருக்க, ஆர்யன் திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தான்.

அவனை பார்த்ததும் அவள் முகத்தை சுருக்க, ஆர்யன் அவளுடைய கோபமுகத்தை பார்த்தபடி அருகே வந்தான்.

“மியூசிக் டீச்சருக்கு…“ என அவன் தொடங்க, “இன்னும் முடியலயா?” என அவள் சலிப்பாக கேட்க, “நீ சொன்னது தான் சரி” என சொல்லி அவளை ஆச்சரியப்படுத்தினான்.

அவளுடைய கண்கள் அகலமாக அதை மேலும் விரியவைக்கும் ஆவலுடன் ஆர்யன் கூறினான். “மாஸ்டருக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் பணம் கொடுக்கறதை விட மாத சம்பளமா கொடுக்கலாம்னு பார்க்கறேன்” 

“அப்படினா அவரை அதிக நாட்களுக்கு வேலைக்கு வைக்க போறீங்களா?” என ருஹானா கண்கள் மின்ன கேட்க, ‘எனக்கு வேற வழி தெரியல, உன்னை சந்தோசப்படுத்த’ என்பது போல கடுப்பை மறைத்துக்கொண்டு ஆர்யன் தலையாட்டினான்.

கோட் பாக்கெட்டில் இருந்து காசோலையை எடுத்து நீட்டிய ஆர்யன் “இதை நீ கொடுத்துடுறீயா இல்ல ஜாஃபரை கொடுக்க சொல்லவா?” என கேட்க “ஜாஃபர் அண்ணா கொடுக்கட்டும்” என ருஹானா ஆர்யனுக்கு லேசான நிம்மதி தந்தாள்.

வந்த வேலை முடிந்தாலும் ஆர்யன் நகராமல் அவளை ஓரப்பார்வை பார்த்து நிற்க, ருஹானா துணியை மடிப்பதில் மும்முரமானாள்.  

இன்னும் அவளிடம் பேச விஷயம் தேடியவன் “இவான் தூங்கிட்டானா?” என கேட்டான். அவனை பார்த்துவிட்டு தானே இவன் உறங்க செல்வான்? போய் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியது தானே?

ஆமென அவள் தலையாட்டி வேலையை தொடர, “இன்னைக்கு அவனுக்கு கடினமான நாள்” என அவன் சொல்ல “ஆமா!” என ருஹானா அவனை ஏறிட்டு பார்க்க, இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த யாக்கூப் கால்கள் தன்னால் ஆடின.

நகத்தை கடித்துக்கொண்டு “என் காதலி ரூமில் இவன் என்ன செய்றான்?” என கத்திய யாக்கூப் “கவலைப்படாதே ஷெனாஸ்! சீக்கிரமே நீ என்கிட்டே வந்துடுவே! நிரந்தரமா நாம இணைந்திடுவோம்” என்றான்.

——– 

“சித்தி! என்கூட கப்பல் விட வரீங்களா?” யாக்கூப் வாங்கிக்கொடுத்த படகை கையில் வைத்துக்கொண்டு இவான் அழைத்தான்.

“கண்டிப்பா செல்லம்! நீ காலை உணவு சாப்பிட்ட உடனே நாம விளையாடலாம்”

அப்போது ருஹானாவின் செல்பேசியில் பேசிய மிஷால் அவளை உதவிக்கு அழைக்க, அவளும் சந்தோசமாக வருவதாக சொல்ல, இவானின் முகத்தில் வருத்தம் படர்ந்தது.

“சித்தி! நீங்க போறீங்களா?”

“ஆமா அன்பே! நீயும் தான் என்கூட வரே! ரெண்டுபேரும் போய் ஜாலியா சமைக்கலாம்” என்று ருஹானா சொல்ல, இவான் சிரித்தான்.

அப்போது அம்ஜத் கைகளை பின்னால் வைத்துக்கொண்டு ஏதோ மறைத்தபடி வர “பெரியப்பா! நீங்க கைல என்ன வச்சிருக்கீங்க?” என ஆவலோடு கேட்டான்.

“யாரோ கப்பல் விட போறாங்களாம். அவங்களுக்காக கொண்டுவந்தேன்” என ஒரு வெள்ளை தொப்பியை காட்டிய அம்ஜத், அதை இவான் தலையில் வைத்தான்.

இவான் சத்தமாக சிரிக்க, அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட்ட அம்ஜத் நெற்றியில் கைவைத்து சல்யூட் அடித்தான். 

பெரிய தந்தைக்கு தானும் சல்யூட் அடித்த இவான் “சித்தி! நான் பெரியப்பா கூட கப்பல் விட போறேன். நீங்க போயிட்டு சீக்கிரம் வாங்க. நான் எப்படி கப்பல் ஓட்டறதுன்னு உங்களுக்கு சொல்லி தரேன்” என்றான்.

“சரி கேப்டன்! இப்போ வாங்க நாம சாப்பிட போகலாம்” என அவள் அவனின் கன்னம் கிள்ள, துள்ளலாக அவள் கைபிடித்து இவான் செல்ல, சிரித்தபடி அம்ஜத்தும் அவர்களுடன் நடந்தான்.

———

Advertisement