Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 69

ஆர்யன் கிட்டார் சரத்தை கையில் வைத்துக்கொண்டே ருஹானாவின் அறையை விட்டு வெளியே வந்தவன், அதை போல மற்றொன்று இவான் அறைவாசலில் கிடப்பதை கண்டான்.

அதையும் அவன் குனிந்து கையில் எடுக்க, அறையினுள் விளையாடிக்கொண்டிருந்த இவான் “சித்தப்பா! என்கிட்டே இன்னும் நிறைய இருக்கு. மாஸ்டர் கொடுத்தார்” என பல வண்ணங்களில் இருந்த சரங்களை அள்ளி எடுத்து காட்டினான்.

அங்கே மேசையை துடைத்துக்கொண்டிருந்த நஸ்ரியா “லிட்டில் சார் எடுத்திட்டு வரும்போது அங்கங்க போட்டுட்டார். நான் எடுத்துவைக்கிறேன் சார்” என்றாள்.

அங்கே ருஹானா இல்லாததை பார்த்த ஆர்யன் “இவான்! உன் சித்தி எங்கே?” என கேட்க, நஸ்ரியா “அவங்க மியூசிக் டீச்சர் கூட இப்போ தான் வெளிய போனாங்க, சார்!” என்றாள்.

ஆர்யன் வேகமாக வெளியே சென்றான்.

——— 

“இவான் புக் சீக்கிரமே கிடைச்சிடுச்சி. நேரம் இருக்கே. நாம கடற்கரையோரமா டீ குடிக்க போகலாமா?” என யாக்கூப் கேட்க, ருஹானா தயங்கினாலும் யாக்கூப் மனதை மேலும் துன்புறுத்தக்கூடாது என்னும் குற்ற உணர்வில் யோசித்தாள்.

“இன்றைய நாள் எனக்கு கடுமையான நாள். கடல்காத்து சுகமா இருக்கும். மனசுக்கு லேசா இதம் தரும். ஆனா ஆர்யன் சார் திட்டுவார்னா வேணாம்” சரியான இடம் பார்த்து ருஹானாவை தூண்டினான் யாக்கூப்.

“இவான் தான் தேடுவான். அதுக்கு தான் யோசித்தேன். பரவாயில்ல, நாம போகலாம்” ருஹானா சம்மதித்தாள்.

ஆர்யன் காரில் அக்கம்பக்கம் படபடப்பாக சுற்றிவந்தான்.

யாக்கூப் தேநீரை குடித்தபடியே “ஷெனாஸ்!… என்னோட காதலி.. என்னோட வருங்கால மனைவி…. அவ ஒரு இன்டீரியர் டிசைனர்… நாங்க ஒரு பழைய வீட்டை வாங்கினோம், திருமணத்துக்கு பின்னாடி வசிக்க… அதை புதுப்பிக்க நினைச்சோம். எங்க கனவு இல்லமா மாத்த திட்டம் போட்டோம். ஷெனாஸ் தான் எல்லா ஏற்பாடும் பார்த்துக்கிட்டா” உருக்கமாக சொன்னான்.

ருஹானா முகத்தில் இரக்கம் வழிந்தது.

“ரெண்டு பேர் மனசார ஆசைப்பட்டு சேர்ந்து செய்யும்போது அதுக்கு மதிப்பு அதிகம். எங்க வீட்டை நாங்க ஆனந்தமயமாக்க நினைச்சோம். ஆனா அது நடக்கல. ஷெனாஸ்க்கு அப்புறம் என்னோட கனவெல்லாம் குலைஞ்சி போச்சி. அந்த வீடும் பாழா போச்சி”

“நீங்க உங்க கனவை மறக்க வேண்டிய அவசியம் இல்ல. ஷெனாஸ் ஆசைப்பட்டது போல உங்க வீட்டை நீங்க உருவாக்கலாம்”

யாக்கூப் முகத்தில் மலர்ச்சி. 

“நாம நேசிக்கிறவங்களை சில சமயம் நாம சீக்கிரம் இழந்திடுறோம். ஆனா அவங்க நம்ம வாழ்கையை விட்டு போறதில்ல. இவான்.. என்னோட அக்கா அப்பாவோட வாரிசு. அவங்க எனக்கு விட்டுப்போன பொக்கிஷம். என்னோட வாழ்க்கையே அவன் தான். அவனால தான் நான் உயிரோட இருக்கேன். எல்லா துயரத்தையும் மறக்கறேன். அதுபோல உங்களுக்கு அந்த வீடு அமையலாம். நீங்க அதுல உங்க மனசை திருப்பினா அது உங்களுக்கு நல்லதும் கூட. உங்களுக்கு அமைதியும் கொடுக்கும்”

யாக்கூப் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அவர்களை தேடி அலைந்து கொண்டிருந்த ஆர்யன் முகத்தில் கோபம் கொந்தளித்தது.

இறுதியாக அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த திறந்தவெளி உணவகத்துக்கு அருகே வந்தவன், அவர்களை பார்த்துவிட்டு காரை நிறுத்தினான்.

கார் ஜன்னலை திறந்தவன் ருஹானா யாக்கூப்பிடம் ஆறுதலாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து “நீ நினைக்கிற மாதிரி கிடையாது அவன்!” என்றான், கையிலிருந்த சரத்தை பார்த்துக்கொண்டே.

“உங்க கூட பேசிட்டு இருந்தது எனக்கு நல்லா இருந்தது. நீங்க உணர்வுகளை புரிஞ்சிக்கிறீங்க. உங்களை சுத்தி இருக்கறவங்க எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்”

“அப்படிலாம் இல்ல” ருஹானாவிற்கு சங்கடமானது. 

“உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையில்ல. தெரியாதவங்க கஷ்டத்தை எல்லாம் இந்த சின்ன வயசுல யார் காது கொடுத்து கேட்பாங்க?”

மேலும் சங்கடப்பட்ட ருஹானா பார்வையை வேறுபுறம் திருப்ப, அவர்களையே முகசுளிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை பார்த்துவிட்டாள்.

எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டு “இவான் என்னை தேடுவான். நான் கிளம்பறேன்” என எழுந்தாள்.

“உங்களுக்கு மிக்க நன்றி, என்னோட துன்ப கதையை கேட்டதுக்கு”

“நீங்க என்னை நம்பி சொன்னதுக்கு உங்களுக்கு தான் நன்றி. நான் வரேன்” என்று கை நீட்டியவளின் கையை சந்தோசமாக பிடித்த யாக்கூப் விடவேயில்லை.

அதை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் மனநிலை எப்படி இருக்கும் என நமக்கே உணர முடியும்! 

ருஹானா முகத்தை சுளிக்கவும் யாக்கூப் “சாரி.. திரும்பவும் நான் ஷெனாசை நினைச்சிட்டேன்” என கையை விட்டான்.

“இது எனக்கு ஒரு கஷ்டமான நாள்” என அவன் பரிதாபத்தை சம்பாதிக்கும்படி பேச “பரவாயில்லை. பை” என ருஹானா சொல்ல, அவன் சென்றுவிட்டான்.

அவன் மறையும்வரை அங்கேயே நின்ற ருஹானா, பின் விறுவிறுவென ஆர்யன் காரை நோக்கி வந்தாள். அவளை பார்த்து காரிலிருந்து ஆர்யன் இறங்கி நிற்க, அதே விறுவிறுப்புடன் “என்னை பின்தொடர்ந்து வரீங்களா?” என கேட்டாள்.

ஆர்யன் அவளை தலை சாய்த்து பார்க்கவும், “நீங்க ஏன் எப்பவும் அமைதியில்லாமலே இருக்கறீங்க? ஏன் யாரையும் நம்ப மாட்றீங்க? யாக்கூப் கெட்டவர் இல்ல. அதை ஏத்துக்கங்க முதலில்”  என்றாள் ருஹானா.

“உனக்கு போன வாரமே சொன்னேன், என்னோட எதிரி ஷாரிக் பத்தி. அவன் ரொம்ப ஆபத்தானவன். நீ பாடிகார்ட் இல்லாம வெளிய வந்திருக்க கூடாது” என்றான் மென்மையான குரலில்.

யாக்கூப் பற்றி பேசாமல் ஆர்யன் இப்படி சொன்னதும் ருஹானாவின் வேகம் தணிந்தது.

“வா, மாளிகைக்கு திரும்பலாம்” என ஆர்யன் சொன்னதும் மௌனமாக காரில் முன்னால் ஏறி அமர்ந்தாள்.

‘டீச்சரை பற்றி என்ன சொன்னாலும் இவள் கேட்க மாட்டாள். சண்டை போடுவாள். எதுவும் சொல்லாமல் விட்டுவிடுவோம் ஆனால் ஒரு கண் மட்டும் வைத்துக்கொள்வோம்’ என ஆர்யன் முடிவெடுத்து விட்டான் போலும்.

அர்ஸ்லான் மாளிகையில் காரை கொண்டு நிறுத்திய ஆர்யன், அதன் இயக்கத்தை நிறுத்தவில்லை.

கீழே இறங்க ஆயத்தமான ருஹானா “நீங்க வரலயா?” என கேட்டாள்.

“எனக்கு வெளிய வேலை இருக்கு. நான் போகணும்”

“நீங்க மாஸ்டர் மேலே கோபமா இருக்கீங்களா?”

“எனக்கு எந்த கோபமும் இல்ல” பட்பட்டென பதில்கள் வந்தன ஆர்யனிடமிருந்து.

“நீங்க மாஸ்டர் கிட்டே கொஞ்சம் தன்மையா நடந்துக்க முயற்சி செய்ங்க”

“வெளிய போயிட்டு வந்ததும் பேசலாம். நான் அவசரமா போகணும்”

ருஹானா காரை விட்டு இறங்க, ஆர்யன் காரை திருப்பிக்கூட செலுத்தாமல் அப்படியே பின்பக்கமாகவே வெளிகேட் வரை சென்றவன் சாலையில் இறக்கி வேகமாக இயக்கினான். 

——

உற்சாக மனநிலையில் துள்ளலாக நடைப்போட்டு வீட்டிற்கு வந்த யாக்கூப்,  வீட்டுவாசலில் தனக்காக காத்திருந்த மருத்துவரை பார்த்து எரிச்சலடைந்தான்.

“இங்க ஏன் வந்தீங்க? உங்களை போன் கூட செய்ய வேணாம்னு சொன்னேன்ல?”

“யாக்கூப்! நீ மருந்தும் தெரபியும் எடுத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம். பாதில சிகிச்சையை நிறுத்தறது ஆபத்து”

“எனக்கு உங்க மருந்தும் வேணாம். தெரபியும் வேணாம். அதெல்லாம் உங்க பைத்தியகார நோயாளிகளுக்கு போய் கொடுங்க”

“நான் சொல்றதை தயவு செய்து கேளு. கட்டுப்பாட்டை மீறி போய்ட்டா அதிக ஆபத்தாயிடும்”

“என்னோட ஷெனாஸ் திரும்பி வந்துட்டா, டாக்டர். அவளோட யாக்கூப்பை தேடி வந்திட்டா”

“அவ இந்த உலகத்தை விட்டு போய்ட்டா, யாக்கூப்! அந்த உண்மையை நீ மனசுல நிறுத்து”

“இல்ல.. ஷெனாஸ் ருஹானாவோட உருவத்துல திரும்ப வந்துட்டா. இனி எனக்கு எந்த சிகிச்சையும் வேணாம். என்னை தொந்தரவு செய்யாதீங்க” என சொன்ன யாக்கூப், மருத்துவர் கூப்பிட கூப்பிட அந்த அடுக்குமாடி இல்லங்கள் கொண்ட கட்டிடத்துக்குள் சென்றுவிட்டான். 

————- 

காபி தயாரித்துக் கொண்டிருந்த யாக்கூப் அழைப்பு மணி சத்தம் கேட்டு “உங்க எல்லையை  தாண்டறீங்க டாக்டர்” என்றபடியே ஆத்திரமாக வந்து கதவை திறந்தான்.

வந்தது மருத்துவர் என நினைத்தவன் ஆர்யனை பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.

“ஆர்யன் சார்!……. என்ன…. வேணும் உங்களுக்கு?” தடுமாறியபடி கேட்டான்.

“உள்ளே போய் பேசலாம்” சொற்கள் உத்தரவாக வெளிவந்தது.

அப்போதும் உள்ளே வழிவிடாமல் கதவை பிடித்தபடி யாக்கூப் நிற்க “என் வீட்டுக்குள்ள நான் உன்னை அனுமதித்தேன். என்னை வாசல்லயே நிறுத்தி வைப்பியா?” என ஆர்யன் கடுமையாக கேட்க, யாக்கூப் எச்சிலை கூட்டி விழுங்கி வழிவிட்டான்.

நரியின் இருப்பிடத்திற்கு வரும் சிங்கமென நேரே உள்ளே வந்த ஆர்யன் வரவேற்பறை சோபா வரை நடக்க, அதன் எதிரே இருந்த டீப்பாயில் கணினி திரையில் ருஹானா தலைவாரிக் கொண்டிருந்தாள்.

யாக்கூப்பின் இதயம் வெளியே வந்து துடித்தது. ஆர்யன் மேலும் முன்னேறாமல் தடுக்க “காபி போட்டுட்டு இருந்தேன். அடுப்பு அணைச்சிட்டு வரேன்” என்றான். வரவேற்பு அறையின் ஓரத்திலேயே அடுப்பு மேடை இருந்தது.

கணினியின் பின்புறம் நின்று அவனை திரும்பி பார்த்த ஆர்யன் சுவரில் மாட்டியிருந்த ஒரு படத்தை கண்டான். அது ஒரு பழைய பெரிய வீடு. முழுதும் வெள்ளை நிறத்தில் இருந்தது.

“சொல்லுங்க ஆர்யன் சார்” அடுப்பை அணைத்துவிட்டு கணினி பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.

“நான் சொல்றதை கவனமா கேளு. நீ சொன்னதுலாம் கேட்டபின்னாலும் உன்மேலே எனக்கு நம்பிக்கை வரல. இவான் சித்தி உன்னை நம்பலாம். ஆனா…”

கணினி பக்கம் இருந்த செல்பேசி இசைத்தது.

“எடுத்து பேசு”

“இல்ல நீங்க சொல்லுங்க நான் அப்புறம் பேசிக்கறேன்” 

திரும்ப ஆர்யன் பேச துவங்க, செல்பேசியில் குறுஞ்செய்தி வந்து ஒலியெழுப்பியது.

ஆர்யன் கீழே குனிந்து கணினியை தாண்டி செல்பேசியை கையில் எடுத்தான்.

“இதை நிறுத்து” என நடுங்கிக்கொண்டிருந்த யாக்கூப்பின் கையில் கொடுத்தான்.

யாக்கூப் கை தடுமாற “இதோ! ஒரு நிமிஷம்” என அதை நிறுத்தினான். அப்படியே செல்பேசியை கீழே வைக்க போனவன், கணினியை சட்டென்று மூடிவிட்டான் வேகமாக.

Advertisement