Advertisement

அலுவலக வேலையில் முயன்று மனதை செலுத்தி பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை செல்பேசி அழைத்தது.

“ஹல்லோ ரஷீத்! என்னாச்சு? மியூசிக் டீச்சர் பத்தி வேற எதும் கண்டுபிடிச்சியா?”

“ஆமா ஆர்யன்! நீங்க சந்தேகப்பட்டது சரிதான். அவன் ஆஸ்திரேலியா பக்கமே போனதில்ல. அவன் சொன்ன அந்த நேரங்கள்ல காணாம போயிருக்கான். ஆள் அட்ரெஸ் தெரியல”

ஆர்யன் கையிலிருந்த பேனா நசுங்க, அவன் விழிகள் வேங்கையின் கண்கள் போல உக்கிரமானது

“அப்புறம் ஆர்யன், இன்னும் ஒன்னு.. இது எவ்வளவு முக்கியம்னு தெரியல அவன் கடந்த மூணு வருசமா மனநிலை சிகிச்சை எடுத்துட்டு இருக்கான். வாரத்தில மூணு நாள். எனக்கு என்னமோ இது சரியா படல”

ஒருவழியாக ரஷீத்தும் உருப்படியாக கண்டுபிடித்து தகவல் சொல்லிவிட்டானே!

“அவன் இதுக்கு எல்லாம் பதில் சொல்லி தான் ஆகணும்”

ரஷீத்தின் அழைப்பை துண்டித்த ஆர்யன் ஜாஃபருக்கு அழைத்தான்.

“ஜாஃபர்! மியூசிக் டீச்சரும் இவானோட சித்தியும் இந்த நிமிஷம் என் அறைக்கு வரணும்”

——-

“மாஸ்டர்! நான் சரியா வாசிக்கிறேனா?”

“இன்னும் கொஞ்சம் அழுத்தமா தட்டணும்”

ருஹானா சிற்றுண்டி கொண்டு வர “சித்தி! பாருங்க நான் எப்படி வாசிக்கிறேன்!” என இவான் கேட்டான்.

ருஹானா புறம் திரும்பிய யாக்கூப்பின் முகம் வெளிச்சமானது.

ஜாஃபர் வந்து “ஆர்யன் சார் உங்க ரெண்டு பேரையும் அவர் அறைக்கு வர சொன்னார்” என்றான்.

ருஹானா குழப்பமாக பார்க்க, யாக்கூப் “வகுப்பு முடிச்சிட்டு வரோம்னு சொல்லுங்க” என்றான்.

“ஆர்யன் சார் இப்பவே வரணும்னு சொன்னார்” கண்டிப்புடன் ஜாஃபர் சொன்னான்.

உடனே ருஹானா “நீங்க இவானை பார்த்துக்கறீங்களா?” என ஜாஃபரிடம் கேட்க, “நிச்சயமா” என ஜாஃபர் சொல்ல, இருவரும் மேலே சென்றனர். 

“ஜாஃபர் அங்கிள்! நான் எப்படி வாசிக்கிறேன்?”

“அருமையா இருக்கு லிட்டில் சார்!” என ஜாஃபர் இவானின் தலையை தடவிக் கொடுத்தான்.

——–

யாக்கூப் உடன் வர கோபமாக உள்ளே நுழைந்த ருஹானா “இன்னைக்கு நீங்க மாஸ்டரை வகுப்பு எடுக்க விட மாட்டீங்களா?” என ஏளனமாக கேட்டாள்.

நாற்காலியில் மிடுக்காக சாய்ந்து அமர்ந்துக்கொண்ட ஆர்யன் “என் கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லட்டும். அதுக்கு அப்புறம் வகுப்பு எடுக்கட்டும்” என்று ருஹானாவிடம் சொன்னவன், பயந்துக்கொண்டிருந்த யாக்கூப்பை பார்வையால் அளந்தான்.

“உன்மேலே எனக்கு முதல் நாளில் இருந்தே சந்தேகம் இருந்தது. அது சரியா போச்சி. நீ எங்ககிட்டே பொய் சொல்லியிருக்கே”

யாக்கூப் மிரண்டு போனான். ருஹானாவை திரும்பி பார்த்தான்.

“நீ சொன்ன இடத்துல நீ வேலை செய்யல. நீ ஆஸ்திரேலியா போனதே இல்ல. அதுவும் இல்லாம நீ மூணு வருசமா மனநல மருத்துவர் கிட்டே தெரபி எடுத்துட்டு இருக்கே”

பதில் சொல்லமுடியாமல் அவன் திணறினான். ருஹானா அவனை பார்க்க தலையை குனிந்து கொண்டான்.

“சொல்லுங்க மாஸ்டர்! இதுக்கு என்ன விளக்கம் வச்சிருக்கீங்க?” ஆர்யன் கிண்டலாக கேட்டான்.

“நீங்க பதில் சொல்லுங்க!” ருஹானா ஊக்கினாள்.

“ஆமா! நீங்க சொன்னது சரி தான். நான் உண்மையை சொல்லல”

 ருஹானா ஆர்யனை பார்க்க அவன் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்துக்கொண்டு நிதானமாக செவி கொடுத்தான். இதே பழைய ஆர்யன் என்றால் துள்ளி குதித்து எழுந்து அவனை அடித்து நொறுக்கி இருப்பான்.

“ஆமா, நான் ஆஸ்திரேலியா போகல. மூணு வருசத்துக்கு முன்ன… நான் என்னோட உயிர் காதலியை… இழந்துட்டேன். என் வாழ்க்கையை.. என் ஷெனாசை.. கார் விபத்துல பறிகொடுத்துட்டேன்…”

சட்டை நுனியை திருகிக்கொண்டே கண்ணீர்விட்டபடி பேசினான்.

“அந்த கொடுமையான வருஷம்.. அதுக்கு அப்புறம் மூணு வருஷம் கடினமான நாட்கள். என்னோட வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சி”

ருஹானாவும் கண்கலங்க, ஆர்யன் முகத்தில் இரக்கம் ஒரு துளியும் இல்லை.

“அதிக மன அழுத்தத்துக்கு ஆளானேன். அதுனால தான் வீட்லயே அடைப்பட்டு கிடந்த அந்த நாட்களை நான் ரகசியமா வச்சிருந்தேன்”

‘இவனை இனிமேல் எதும் செய்ய முடியாதே’ என ஆர்யன் யோசிக்க, ருஹானா மனதில் கருணை அபரிமிதமாக சுரந்தது.

“அந்த மூணு வருஷத்தை நான் மறக்க நினைக்கிறேன். முடிவே இல்லாத கெட்ட கனவு அது”

இவன் இன்னமும் நடிக்கிறான் என ஆர்யன் மனது உறுதியாக சொல்ல, ‘நல்லவனை இப்படி புண்படுத்திவிட்டோமே’ என ருஹானா மனது துடித்தது.

“அதனால தான் எனக்கு தெரபி தேவை பட்டது.. ஆமா அதை நான் சொல்லல. ஏன்னா அது என் சொந்த விஷயம்னு நான் நினைச்சேன். நான் உங்களை ஏமாத்த நினைச்சி மறைக்கல.. அதை பத்தி திரும்ப பேசுறது எனக்கு முடியாது.. நினைக்கிறது கூட கடினம். மனசு ரொம்ப வலிக்கும். ஸாரி.. என்னை மன்னிச்சிடுங்க”

ருஹானாவை பார்த்தபடியும் தரையை பார்த்தபடியும் பேசி முடித்தான்.

“நீங்க வேற எதும் சொல்ல வேணாம். நாம போலாம்” என அவனிடம் சொன்ன ருஹானா ஆர்யனை பார்த்து “இப்போ எல்லாருக்கும் எல்லாமும்  தெளிவா புரிஞ்சி இருக்கும்” என அடக்கப்பட்ட ஆங்காரத்துடன் சொன்னாள்.

“ப்ளீஸ்! நீங்க வாங்க” என யாக்கூப்பை வெளியே கூட்டி வந்தவள் “ஸாரி!  அவர் அப்படி கேட்டுருக்க கூடாது” என மன்னிப்பு வேண்டினாள்.

“நீங்க போங்க! நான் இப்போ வரேன்” என்று சொன்னவள் தடதடவென்று ஆர்யன் அறைக்கு நடந்தாள்.

கதவை பாடாரென திறந்து உள்ளே அவள் வர, ஆர்யன் அவள் பேருரையை கேட்க தயாரானான்.

“நீங்க செய்தது சரியா? ஒரு மனுசனை புண்படுத்திட்டீங்க. அன்புக்குரியவங்களை இழக்கறது எத்தனை துன்பம் கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா? வெந்த புண்ல கத்தியால குத்திட்டீங்க… உங்களுக்கு இப்போ திருப்தியா?”

“நீங்க மட்டும் தான் சரின்னு காட்ட நினைச்சிங்க தானே?”

ஆர்யன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ருஹானா அவனை பேசவிடவில்லை.

“நீங்க சரின்னு காட்டறது அவ்வளவு முக்கியமா? நீங்க யாரையும் நம்ப மாட்டீங்க. நல்லது எதுவும் உங்க கண்ணுக்கு தெரியாது. நீங்க நினைக்கிறது, சொல்றது மட்டும் தான் எப்பவும் சரி”

“நீங்க ஆணவம் பிடித்தவர். கொஞ்சங்கூட மரியாதை தெரியாதவர்.  துக்கத்தில இருந்த ஒருத்தரை இன்னும் காயப்படுத்திட்டீங்க. இப்போ உங்களுக்கு திருப்தியா இருக்குமே?”

யாக்கூப் வெளியே நின்று சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.

“நான் எவ்வளவு பெரிய முட்டாள். நீங்க நம்ம ஒப்பந்தத்தை மதிக்கறீங்கன்னு நினைச்சேன். ஆனா அது தப்பு. நான் அனுபவம் இல்லாத எளிமையானவள். நீங்க என்னை ஏமாத்திட்டீங்க எனக்கு தெரியாம வேவு பார்த்திருக்கீங்க” 

——–

வரவேற்பு அறையில் யாக்கூப்பின் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்க, அந்த பக்கம் வந்த சல்மா யாரும் அருகில் இல்லாததால் அதை எடுத்து படித்தாள்.

யாக்கூப்பின் மனநிலை பற்றி மருத்துவர் தந்த எச்சரிக்கை அதில் இருந்தது “நீங்கள் சிகிச்சை எடுக்க தவறினால் முன்பு போல கற்பனை காட்சிகள் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். நீங்க இப்போ பார்க்கற பொண்ணு உங்க காதலி இல்ல. உங்க காதலி இந்த உலகத்துல இல்ல. நீங்க உடனே தெரபிக்கு வாங்க”

படித்த சல்மாவின் கண்கள் விரிந்தன. முகம் மலர்ந்தது.

யாக்கூப் வரும் சத்தம் கேட்டு போனை மேசையில் வைத்தவள், அங்கே இருந்த அலுவலக கோப்பை எடுத்துக்கொண்டாள்.

“சலாம் மிஸ்டர் யாக்கூப்! எப்படி போகுது உங்க வகுப்பு? இவான் நல்லா கத்துகிறானா?”

“இவான் புத்திசாலி பையன் சல்மா மேம்! எளிதா புரிஞ்சிக்கிறான். ஆனா ஆர்யன் சார்க்கு தான் என்னை ஏனோ பிடிக்கல”

“நீங்க அதை பத்தி பெருசா கவலைப்படாதீங்க. இவானை பொறுத்தவரை ருஹானா சொல்றது தான் செல்லுபடியாகும். அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க ஆர்யனை பற்றி யோசிக்காதீங்க. அவன் ஒரு விசித்திரமானவன். இது நமக்குள்ளேயே இருக்கட்டும். ருஹானா சம்மதிச்சா எல்லாம் நடக்கும்”

“நன்றி சல்மா மேம்! நீங்க சொன்னதை நான் மறக்க மாட்டேன்”

———- 

சல்மா தான் எடுத்துவந்திருந்த புகைப்படத்தை காட்டி அக்காவிடம் யாக்கூப்பின் மனநிலையை விளக்கினாள்.

“இதான் அக்கா அந்த பைத்தியக்கார மாஸ்டர்! டாக்டர் அனுப்பி இருந்ததை நல்லா படிச்சி பார்த்தியா?”

“அப்போ அவன் ருஹானாவை தன்னோட இறந்து போன காதலியா நினைக்கிறான்” கரீமாவும் லாட்டரியில் பரிசு விழுந்தது போல மகிழ்ந்து போனாள்.

“ஆமா அக்கா! மாஸ்டர் யாக்கூப் ஒரு சைக்கோ”

“சல்மா! நமக்கு சரியான ஒரு சந்தர்ப்பம் தானா வந்து மாட்டியிருக்கு. அவன் ருஹானாவை காதலிக்கிறான். அதனால அவளுக்கு ஆபத்து தான் காத்திருக்கு. நாம எதுவுமே செய்ய வேணா. உக்காந்து ரசிச்சி பார்த்து கை தட்டலாம்”

——-  

சந்தோசமாக சிரித்துக்கொண்டிருந்த யாக்கூப் ருஹானாவை பார்த்ததும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான்.

“மிஸ்டர் யாக்கூப்! இவானோட சித்தப்பாக்காக நான் உங்க கிட்டே மன்னிப்பு கேட்கிறேன். அவர் இவானை ரொம்ப பொத்தி வளர்க்கிறார். அவனை பாதுகாக்க சின்ன விஷயமும் யோசிப்பார். அவர் மனதால கெட்டவர் இல்ல. தன்னோட குடும்பத்தினரோட பாதுகாப்புக்கு தான் எல்லாமே செய்றார். மன்னிச்சிடுங்க”

“வேணாம். இதுல உங்க தப்பு ஒன்னும் இல்ல. எனக்கு ஆர்யன் சார் மேலே கூட கோபம் இல்ல. அடில கிடந்த என்னோட துயரங்கள் தான் திரும்ப நினைவு வந்திடுச்சி. இந்த உலகத்துல நான் ஒரு அனாதையை போல உணருறேன். என்னோட ஷெனாசை என்னால மறக்க முடியல. இன்னைக்கு கூட அவ பேரை சொல்லி உங்களை கூப்பிட்டுட்டேன். பக்கத்து வீட்டுக்காரரை கூட அப்படி கூப்பிட்டுடுவேன்”

“உங்க துக்கம் எனக்கு புரியுது. ஏன்னா நானும் என் அக்காவையும், அப்பாவையும் இப்போ தான் இழந்தேன். அந்த இழப்பு எப்போவும் மறந்து போகாது. அந்த நினைப்போட வாழ பழகிக்கங்க”

இவர்கள் பேசிக்கொண்டு நிற்பதை அப்போது படிக்கட்டில் இறங்கி வந்து  நின்ற ஆர்யன் கோபமாக பார்க்க, அவன் பக்கத்தில் அம்ஜத் வந்து நின்றான்.

“இவன் சரியில்ல, ஆர்யன். எனக்கு இவனை பிடிக்கல”

“ஏன் அண்ணா?”

“எனக்கு சொல்ல தெரியல. ஆனா சுத்தமா பிடிக்கல, ஆர்யன்… பிடிக்கல.. பிடிக்கல” என்று சொல்லி அம்ஜத் இடப்புற படிக்கட்டில் ஏற, கோப முகத்துடன் ஆர்யனும் வலப்புற படிக்கட்டில் மேலே ஏறி சென்றான்.

“சரி மிஸ்டர் யாக்கூப்! இன்னைக்கு வகுப்பு போதும். நீங்களும் வருத்தத்தில இருக்கீங்க” என ருஹானா ஆறுதலாக பேசினாள். 

“ஆமா ருஹானா மேம்! நானும் புக் கொண்டுவரல. ஒன்னு செய்யலாமா? நீங்களும் என்னோட புக் கடைக்கு வாங்களேன். என்னோடதும் பழைய புக் தான். இவானுக்காக புதுசு வாங்கலாம். உங்களுக்கும் இந்த மாளிகைல அடைஞ்சிபோய் போரடிச்சியிருக்கும். வெளிக் காத்தும் வாங்கலாம்” என்று ஆவலாக அழைத்தான்.

அவனை மறுக்கவும் முடியாமல், உடன் செல்லவும் மனதில்லாமல் ருஹானா யோசித்து நின்றாள்.  

  ———–

ஆர்யன் அவன் அறையை நெருங்கும் நேரம் ருஹானாவின் செல்பேசி அடித்தது. அவன் ருஹானா அறைக்கு வந்து பேனாவின் அருகே இருந்து அதை எடுத்தான். அவன் கையில் எடுத்த நேரம், அழைப்பு நின்று விட்டது.

எடுத்த இடத்திலேயே அதை வைத்தவனின் பார்வை கட்டில் அருகே  இருந்த டீப்பாய் மேலிருந்த புகைப்படத்தில் விழுந்தது.

இவானை மடியில் வைத்து அவன் கன்னத்தில் அன்பாக முத்தமிட்டு  கொண்டிருந்தாள், ரோஜா வண்ண உடையில் அழகு ருஹானா.

இறுகி இருந்த முகமும் மனமும் இலகுவாக, அதை சில விநாடிகள் பார்த்துவிட்டு திரும்பி நடந்தவன், கீழே கிடந்த கிட்டார் சரத்தை பார்த்துவிட்டான்.

குனிந்து அதை எடுத்தவனுக்கு நேற்று யாக்கூப் ருஹானாவின் அறை வாசலில் பயந்தபடி நின்றது நினைவிற்கு வந்தது.

‘கண்டிப்பாக அவன் ருஹானா அறைக்கு சென்றிருக்கிறான்’ என்ற கணிப்பே அவனுக்கு நெஞ்சில் தீ மூட்டியது. மூச்சில் அனல் காற்று பறந்தது. கண்கள் இடுங்கின.

(தொடரும்)  

Advertisement