Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 68

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் முழுமனதாக ஈடுபட முடியாமல் ருஹானா மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருக்க, அவள் செல்பேசி அடித்தது.

அவளை கணினி திரையில் பார்த்துக்கொண்டே யாக்கூப் பேசினான்.

“இரவு நேரத்தில் உங்களை தொல்லை செய்றதுக்கு மன்னிச்சிடுங்க”

“பரவாயில்ல, சொல்லுங்க”

“என்னோட கைக்கடிகாரத்தை நான் அங்கயே வச்சிட்டு வந்துட்டேனான்னு தெரியல. உங்களுக்கு சிரமம் இல்லன்னா இவான் ரூம்ல பார்க்க முடியுமா?” பல்லைக்காட்டிக் கொண்டே பவ்வியமாக கேட்டான்.

“இதோ பார்க்கறேன்” என்று ருஹானா எழுந்து சென்றாள்.

——— 

ருஹானாவின் சோகப்பாடல் அவளின் இனிய குரலில் ஆர்யனின் காதிலும், மனதிலும் ரீங்காரமிட, அந்த இனிமையை சில நிமிடங்கள் கூட அனுபவிக்க முடியாமல், அவள் மேல் படிந்த யாக்கூப்பின் பார்வை அவனுக்கு நினைவூட்டி எரிச்சலை கிளப்பியது.

குளியலறையில் கண்ணாடி முன்நின்றவன் வாஸ்பேசின் குழாயை திறந்து தலையில் நீரை இறைத்துக்கொண்டான். அப்போதும் அந்த எரிச்சல் தணியவில்லை. கூடவே ருஹானா யாக்கூப்பை நம்ப சொல்லி பேசியதும் மனதில் தோன்ற, துடைக்க எடுத்த துண்டை வீசியடித்து வெளியே வந்தான்.

அதே நேரம் ருஹானாவும் பக்கத்து அறையில், இவானின் அறையில் இருந்து வெளியே வர, அவளையும் அவள் கையிலிருந்த கடிகாரத்தையும் ஆர்யன் கேள்வியாக நோக்கினான்.

“மாஸ்டர் அவர் வாட்சை மறந்து விட்டுட்டார். இப்போ எனக்கு போன் செஞ்சி அது இருக்குதான்னு பார்க்க சொன்னார்”

ஆர்யனின் கொதிநிலை புரியாமல் அவள் பதிலளிக்க, அவன் தேகம் முழுதும் அனலாய் சுட்டது. 

அப்போது தான் நீர்சொட்டும் அவன் முடியையும் முகத்தையும் பார்த்த ருஹானா “என்ன இது? உங்களுக்கு என்ன ஆச்சு?” என கேட்டாள்.

“ஒண்ணுமில்ல” என விறைப்பாக சொன்னவன் நகர்ந்து சென்றுவிட்டான்.   

———

யாக்கூப்பிற்கு போன் செய்து “உங்க கடிகாரம் இவான் அறையில தான் இருந்தது” என்று ருஹானா சொல்ல, “நன்றி! உங்களை இராத்திரில தொந்தரவு செய்ததுக்கு மன்னிச்சிடுங்க” என்று அவன் நடித்தான்.

“பரவாயில்ல. இதை நாளைக்கு நான் உங்ககிட்ட தரேன். நானும் நீங்க வகுப்புக்கு வர்றதை பத்தி சொல்ல மறந்திட்டேன். நாளைக்கு வர முடியுமா, உங்களால?” 

“கண்டிப்பா வரேன்”

“சரி! பை”

ருஹானா அழைப்பை துண்டிக்க போக யாக்கூப் அவசரமாக பேசினான்.

“நீங்க களைப்பா தெரியுறீங்க”

ருஹானா திகைப்பாக பார்க்க “இல்ல, உங்க குரல்ல சோர்வு தெரியுது. உங்களுக்கு உடம்பு சரியில்லயா?”  என சமாளித்தான்.

“இல்லயே! நல்லா தான் இருக்கேன்!” என்றாள் முகம் சுருக்கி. 

“உங்க நிலைமைல நான் இப்போ இருந்திருந்தா ஒரு மூலிகை டீ குடிச்சிட்டே எனக்கு பிடிச்ச புக் படிச்சிட்டு இருப்பேன்”

“சொன்னா ஆச்சரியப்படுவீங்க. நான் இப்போ அதே தான் செஞ்சிட்டு இருக்கேன்”

“எனக்கு ஆச்சரியம் ஒன்னும் இல்ல. ஒரே சிந்தனை உள்ளவங்க ஒரே மாதிரி தான் இருப்பாங்க. சரி.. நான் இன்னும் உங்க நேரத்தை எடுத்துக்க விரும்பல. உங்க புக்கையும் டீயையும் தொடருங்க. குட்நைட்”

“குட்நைட்” என ருஹானா போனை வைத்தபின் அவளை பார்த்துக்கொண்டே சொன்னான்.

‘சீக்கிரம் ஒன்று சேர்வோம் அன்பே!’

——-

கோபமாக கீழே இறங்கி வந்த ஆர்யன் வானில் நிலவை பார்த்துக்கொண்டு பின்முற்றத்தில் நடை பயில, அங்கே வந்த சல்மா “நீங்களும் இன்னும் தூங்கலயா?”  என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்க்க, “ஏதாவது யோசிக்கணும்னா நானும் இங்க தான் வருவேன். தனியா நிக்கறது நல்லா இருக்கும்” என சல்மா பேச்சை தொடர்ந்தாள்.  

ஆர்யன் பின்னால் திரும்பி தலையை உயர்த்தி மேலே பார்த்தான். ருஹானா திரைசீலையை மூடிக்கொண்டிருந்தாள். 

“சிலசமயம் தனியா இருக்கறது தான் நல்லது” என ஆர்யன் சொல்ல, அவன் தன்னிடம் பேசுவதில் புளகாங்கிதம் அடைந்த சல்மா மேலே பேசினாள். 

“ஆனா எப்பவும் தனிமை நல்லது இல்ல. நமக்கு நம்பிக்கையா இருக்கறவங்க நம்ம பக்கம் ஆதரவா நிற்கணும்” என்றாள் அவனை பார்த்தபடி.

அவன் பார்வை தான் அவள் மேல் இருத்தது. ஆனால் அவன் சிந்தனை இசைக்கலைஞனிடம் இருந்தது.

அது தெரியாத சல்மா அவன் தன்னை பார்க்கட்டும் என வானை நோக்கியபடி பேசினாள்.

“ஆதரவை பற்றி பேசும்போது எனக்கு உங்க நினைவு தான் வருது. நீங்க எனக்கு எத்தனையோ உதவியா இருக்கீங்க. அகாபாவுக்கு திரும்பி வரும்போது நான் ரொம்ப பயந்து போய் தான் வந்தேன். வீடு இல்ல, வேலை இல்ல. ஆனா எனக்கு இப்போ வீடு இருக்கு. பெரிய குடும்பம் இருக்கு. மிக்க நன்றி” என்று சொல்லி திரும்பியவள் அங்கே ஆர்யன் இல்லாததை கண்டு வெறுத்துப்போனாள்.

‘தனியா இங்க இருக்க உனக்கு பிடிக்கும்னு சொன்ன தானே! நீயே இருந்துக்கோ’  என சென்றுவிட்டான் போல.

———-

ரொட்டி துண்டில் வெண்ணெய் தடவி ருஹானா, காலை உணவாக இவானுக்கு கொடுக்க அவன் வேண்டாமென மறுத்தான்.

“நீ சாப்பிடலனா எனக்கு வருத்தமா இருக்குமே, தேனே!”

“சித்தி! நான் இப்போ பெரிய பையன்! நானே பட்டர் தடவிப்பேன்” என்று சொன்ன இவான் ஒரு ரொட்டியை எடுத்தான்.

அழகாக நாக்கை லேசாக வெளியே நீட்டிக்கொண்டே அவன் வெண்ணெய் தடவ, ருஹானா அவனை ரசித்து பார்க்க, சத்தம் இல்லாமல் அங்கே வந்த யாக்கூப் எச்சில் விழுங்க அவளை பார்த்து நின்றிருந்தான்.

எதற்கோ மறுபுறம் பார்த்த ருஹானா அங்கே யாக்கூப்பை பார்த்து பயந்துவிட்டாள்.

“உங்களை நான் பயமுறுத்திட்டேனா?”

“இல்ல.. உங்களை நான் எதிர்பார்க்கல”

“ஸாரி, நான் உங்களுக்கு இடைஞ்சல் தர விரும்பல. உங்களை பார்க்க இனிமையா இருந்தது”

தன்னையும் இவானையும் சேர்த்து தான் யாக்கூப் பேசுகிறான் என ருஹானா எடுத்துக்கொண்டாலும், அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

“நான் சீக்கிரம் வந்திட்டேனா?”

“இல்ல.. இவான் எழுந்துக்க நேரமாகிடுச்சி. இப்போ தான் காலை உணவு சாப்பிடுறான். நீங்க சாப்பிடலனா வாங்களேன் சாப்பிட”

“நன்றி. உங்களுக்கு ஏன் சிரமம்? நான் வெளியே நிற்கிறேன். இவான் சாப்பிட்டு முடிச்சதும் கூப்பிடுங்க”

ருஹானா தலையாட்ட அவளை ரசித்துக்கொண்டே வெளியே வந்தவன், பின் பக்க தோட்டத்தில் நின்று விரல்களில் சரத்தை தட்டிக் கொண்டிருந்தான்.

அது தவறி கீழே இருந்த பூத்தொட்டியில் விழ பூச்செடியை தள்ளிக்கொண்டு அதை தேடினான்.

பின்னாலிருந்து அதை பார்த்த அம்ஜத் பதறிப்போய் கத்திக்கொண்டே ஓடிவந்தான்.

“என்ன.. என்ன.. என்ன.. செய்யாதே.. தொடதே.. இல்ல… உடைச்சிட்டே.. எடு கையை..” 

“ஸாரி.. இது முக்கியமான செடின்னு எனக்கு தெரியாது” அம்ஜத்தின் பதட்டத்தில் யாக்கூப் பயந்து விட்டான்.

“முக்கியமா? என்ன சொல்லறே நீ?” அம்ஜத் முறைத்தபடி கேட்டான்.

யாக்கூப் இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.

“முக்கியம் இல்லனா நீ பிடுங்கிடுவியா? அது பாவம் இல்லயா?”

வேறு யாரும் பார்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்த யாக்கூப் அங்கிருந்து வேகமாக விலகினான்.

“மனிதர்களுக்கு மட்டும் தான் உயிர் இருக்கா?… இதுக்கும் உயிர் இருக்கு….. முக்கியமானது மட்டும் தான் உயிரோட இருக்கனுமா?…. இதும் முக்கியம் தான்…… என்னோட எல்லா செடியும் எனக்கு முக்கியம் தான்…… பறிக்காதே….. பறிக்காதே….”

புலம்பிக்கொண்டே சிதறிக்கிடந்த செடிகளை எடுத்து அம்ஜத் நட்டு வைத்தான்.  

இளகிய மனங்கொண்ட கருணையுள்ளம்

அது உணர்த்தும் உண்மை இதுதான்..!

உலகின் ஒவ்வொரு உயிரும் இன்னுயிரே

அதில் உயர்வென்ன தாழ்வென்ன..?

இயற்கையின் கொடையை தன்னுயிராய் 

காத்திடும் அருமை அண்ணா…!

——–

ருஹானா கொடுத்த கைக்கடிகாரத்தை கட்டிக்கொண்ட யாக்கூப் பையில் எதையோ தேடினான்.

“என்னோட மியூசிக் புக்…. இங்க தானே வச்சிருந்தேன்… எங்க போச்சி.. கொண்டு வந்தேனே.. இங்க தான் இருந்தது…” என பையை பிரட்டிக்கொண்டே எல்லாவற்றையும் வெளியே கொட்டி, தன்னை மீறி அவன் கத்த, அருகே இருந்த ருஹானாவும், இவானும் அவனை விசித்திரமாக பார்த்தார்கள்.  

“ஏன் பதட்டப்படுறீங்க, அது இல்லனா வேற பாடம் சொல்லிக்கொடுங்க” என ருஹானா சொல்லவும், நிதானத்துக்கு வந்த யாக்கூப் தன் படபடப்பை வெளிக் காட்டிவிட்டோமே என கவலையானான்.

“ஆமா! காணோமேன்னு பயந்திட்டேன்” என சொன்னவன், தாள்களையும், புத்தகங்களையும் உள்ளே எடுத்து வைத்தான்.

இவான் அருகே அமர்ந்தவன் “ஆரம்பிக்கலாமா, இவான்?” என்று கேட்க இவானும் தலையசைத்தான்.

“நேத்து சொல்லிக்கொடுத்தது போல நேரா பிடி”

விரல்களை கிட்டாரில் வைத்த இவான் “இது சரியா, மாஸ்டர்?” என கேட்டான்.

“இல்ல.. நீ தப்பா வச்சிருக்கே! இப்படி வச்சா சில நோட்ஸ் வாசிக்க முடியாது?”

“அப்போ எனக்கு சரியா வராதா?” என இவான் பாவமா கேட்க “தொடர்ந்து பயிற்சி எடுத்தா வந்துடும்” என்றான் யாக்கூப்.

“சில செயல்கள் நடக்க நமக்கு பொறுமை அவசியம். முயற்சியை விடவே கூடாது. அப்படி செய்தா நாம ஆசைப்பட்டது நமக்கு கிடைக்கும்” என ருஹானாவை பார்த்தபடி அவன் சொல்ல, அவளோ இவான் எப்படி செய்கிறான் என பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன ருஹானா மேம்! நான் சொன்னது சரிதானே?” என அவன் கேட்க, அவள் அப்போதும் சோகமாக முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருந்த இவானை பார்த்தவாறே “ஆமா அன்பே! உனக்கும் எளிதா வந்துடும்” என்றாள்.

“இப்போ பார்! உன் சித்தி எப்படி பிடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்” 

“நானா?”

“ஆமா! நீங்க தான். இவானுக்கு எடுத்துக்காட்டா இருக்கட்டும்”

ருஹானாவும் தவறாக பிடிக்க “பார்த்தியா இவான்! உன் சித்தியும் சரியா பிடிக்கல. முதல் முறை யாருக்கும் சரியா வராது” என சொல்லி யாக்கூப் இவானின் முதுகில் தட்ட, அவனின் முகத்தில் புன்னகை பிறந்தது.

எழுந்து ருஹானாவின் அருகே வந்த யாக்கூப், அவள் கையை பிடித்து எப்படி விரல்களை வைப்பது என சொல்லி தந்தான்.

திடுக்கிட்ட ருஹானா வாய் பேசமுடியாமல் நிற்க, மாடிப்படி வளைவில் நின்று பார்த்த ஆர்யனுக்கு கண்கள் சிவந்தன. அந்த கிட்டாரை யாக்கூப் தலையில் அடித்து உடைக்கும் ஆவேசம் வந்தது.

வேகமாக கீழே வர திரும்பியவனை ‘இனி சண்டை இல்லை, கோபம் இல்லை’ என அவன் ருஹானாவிற்கு தந்த வாக்கு கட்டிப்போட அங்கிருந்து சென்றுவிட்டான்.

முகம் வெளுத்துப்போன ருஹானா கிட்டாரை மேசை மேல் வைத்துவிட்டு “போதும் நான் பிடித்தது. நீங்க இவானுக்கு சொல்லிக்கொடுங்க, நான் அப்புறம் வரேன்” என்று சமையலறைக்கு போய்விட்டாள்.

——–

ஆர்யன் யாக்கூப்பை கூப்பிட்டு அனுப்ப, ஆர்யனின் அனுமதி கிடைத்தபின் அறைக்குள் வந்த யாக்கூப் நல்லவன் போல இயல்பாக நடந்து வந்து “ஆர்யன் சார்! என்னை கூப்பிட்டீங்களா?” என்றபடி எதிரே இருந்த சோபாவில் அமர  போனான்.

“உட்கார தேவையில்ல. அவ்வளவு நேரம் பிடிக்காது” என பட்டென்று ஆர்யன் சொல்லவும் அப்படியே நின்றான்.

அவன் கையில் இருந்த சரம் விரல்களிடையே வேகமாக சுழன்றது. அதை கவனித்துக்கொண்ட ஆர்யன் “கல்லூரி படிப்பு இங்க முடிச்சபின்ன உன்னோட மேல்வகுப்பு அயல்நாட்டுல படிச்சியா?” என கேட்டான்.

‘என்ன இதெல்லாம் கேட்கறாங்க?’ என்பது போல யாக்கூப் பார்த்து நிற்க “சரியா?” என ஆர்யன் மீண்டும் கேட்டான்.

“ஆமா!” 

“ஆஸ்திரேலியால ரெண்டு வருஷம் இருந்துருக்கே!”

“ஆமா”

“அங்க ரெயின்போ ஸ்டுடியோல வேலை பார்த்திருக்கே!”

திகைத்து போனவன் தலையை மட்டும் ஆட்டினான்.

“எந்த நகரத்துல இருந்தே?”

“மெ.. மெல்போர்ன்”

ஆர்யன் எழுதிக்கொண்டே யாக்கூப்பின் கையை பார்த்தான். அது நிலைக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தது.

“உன்னோட சம்பளம்” என்று காசோலையை ஆர்யன் நீட்ட, நடுங்கும் கையால் வாங்க முயன்றவன் அதை தவற விட்டான்.

“உன் கை ஆடிட்டே இருக்கே. உனக்கு உடம்பு சரியில்லயா? கவனமா இரு”

ஆர்யன் அக்கறையாக சொல்வது போல் இல்லை. மிரட்டும் தொனி அப்பட்டமாக தெரிந்தது.

மறுபடியும் ஆர்யன் தந்ததை வாங்கிக்கொண்ட யாக்கூப்பிற்கு, நன்றியுரைக்க கூட வாய் வரவில்லை. சிரமப்பட்டு சிரித்தவன் அதை எடுத்துக்கொண்டு வேகமாக போய்விட்டான்.

செல்பேசியை எடுத்த ஆர்யன் ரஷீத்திற்கு அழைத்தான். 

“மியூசிக் டீச்சர் எதையோ மறைக்கிறான், ரஷீத். அவன் ஆஸ்திரேலியால இருந்த நேரத்துல என்ன நடந்ததுன்னு விசாரி. இவன் கண்டிப்பா நல்லவன் இல்ல” 

  ——-

இவானுக்கு கிட்டார் பிடிக்கவும், விரல்களை வைக்கவும் சொல்லி தந்த ருஹானா அவன் கிட்டார் மீட்ட அதை சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

யாக்கூப் கலங்கிய முகத்துடன் வருவதை பார்த்தவள் “என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க?” என கேட்டாள்.

“ஒன்னுமில்ல. நான் நல்லா இருக்கேனே” என அவன் சொன்னாலும், ஆர்யன் கண்டிப்பாக கடுமையாக பேசியிருப்பான் என நினைத்தவள் முகம் கூம்பியது.

இவான் இசைப்பதை பார்த்த யாக்கூப் “நீ சொல்லிக் கொடுத்தியா ஷெனாஸ்?” என்று கேட்க, ருஹானா அதிர்ந்து விழிப்பதை பார்த்தவன் “ஸாரி மேம்! எனக்கு தலை லேசா சுத்துது. ஏதோ ஞாபகத்துல சொல்லிட்டேன்” என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இவானுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.

——— 

Advertisement