Advertisement

“இவான் மனசு நோகும்னு யோசிக்க மாட்டீங்களா?”

அவன் பார்வையும் கவனமும் அந்த நூலின் மேலேயே இருந்தது.

“நீங்க சரியான காரணம் சொல்லலன்னா நான் உங்க முடிவை ஏத்துக்க மாட்டேன்”

இன்னும் கூர்ந்து நோக்கினான், அவனுக்கு உள்ளே இருந்த ரசிகன்.

“சொல்லுங்க”

ரசிகன் வாய் திறக்கவில்லை. உலக அதிசயத்தை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான். 

“நான் உங்க பதிலுக்காக காத்திட்டு இருக்கேன்”

அவனுக்கு காது கேட்கவில்லை. அவள் கண்ணின் நிறத்தோடு போட்டி போடும் அந்த பச்சை நூலில் தான் கவனம் இருந்தது.

“எதாவது சொல்ல போறீங்களா, இல்லயா?”

அவள் கூந்தலில் ரசிகன் தொலைந்து போனான்.

“ம்ப்ச்!” என்று சலித்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

ரசிகன் ஆர்யனை உசுப்பி விட அவனுக்கு ஸ்மரணை வந்தது.

“நில்!” என்றான்.

அவன் எதையோ சொல்ல போகிறான் என்று ருஹானா திரும்பி அவனை பார்க்க, அவள் பக்கம் நெருங்கினான்.

அவன் கை மெல்ல உயர்ந்து அந்த சிறிய நூலை எடுத்தது. ருஹானா என்ன இது என்று நூலையும் அவனையும் பார்த்தாள்.

அவன் நூலை பார்க்க “எதும் சொல்ல மாட்டீங்களா?” என அப்போதும் விடாமல் கேட்டாள்.

ரசிகன் தொடர்ந்து அவன் வேலையை பார்க்க, குழப்பமான ருஹானா அவனை வித்தியாசமாக பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

அடுத்து போன் அடிக்கும்வரை கையிலிருந்த நூலை பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன். 

“ஹலோ ஆர்யன்! யாக்கூப் பத்தி நல்லா விசாரணை செஞ்சிட்டேன். தவறா ஒன்னும் இல்ல”

“சரியா விசாரிச்சியா, ரஷீத்?”

“ஆமா! ஆனாலும் நான் இன்னும் தேடுறேன். வேற தகவல் இருந்தா உங்களுக்கு சொல்றேன்”

போனை வைத்த ஆர்யன் ‘எப்படி என் கணக்கு தப்பாக போகும்?’ என யோசித்தபடியே, யாக்கூப் முகம் தெரிந்த லேப்டாப்பை பட்டென்று மூடினான்.

———

“என்ன இவான் செல்லம் தோட்டத்துல இருந்து எடுத்துட்டு வந்த பூக்களை ஜாடியில் வைக்காம பெட்ல போட்டுட்டே? அதுக்குள்ள வாடிடுச்சி பார்”

இவான் பதில் சொல்லவில்லை.

“இங்க பார்! நான் கேட்கல! இந்த மலர்கள் தான் கேட்குது, என்ன இவான் கவலையா இருக்கார்… உனக்கு காதுல விழுதா?” என பூக்களை ருஹானா இவான் காதின் அருகே ஆட்டினாள்.

“இவான்… இவான்.. இவான் பேச மாட்டாரா.. பாரேன் பூக்கள் எப்படி பேசுது?”

“சித்தப்பா என்னை கிட்டார் வகுப்புக்கு அனுப்ப மாட்டார். அவர் என்மேலே கோபமா இருக்காரா?”

எப்போதும்போல ஆர்யன் வந்து அறையின் வாசல் அருகே நின்றான்.

“உன்மேலே ஏன் கோபப்பட போறார், கண்ணே! உன் பாதுகாப்பை தான் அவர் யோசிக்கிறார்”

இவான் ருஹானா முகம் நோக்கினான்.

“நாம இந்த மலர்களை பூச்சாடில வைக்கிறோம். தண்ணீ ஊத்துறோம். பத்திரமா வச்சிக்கிறோம் தானே! அது போல தான் உன் சித்தப்பாவும் உன் நல்லதை தான் யோசிக்கிறார். உன்னை பாதுகாக்கறார்”

ஆர்யன் மனம் லேசானது.

“ஆனா என்ன கெட்டது நடக்க போகுது? நான் கிட்டார் தானே கத்துக்க போறேன்?”

இவானின் வருத்தம் கண்டு ஆர்யன் மனம் வேதனையடைந்தது.

———–

காலை உணவு முடித்து ருஹானா இவானை அழைத்துக்கொண்டு அவனை உற்சாகப்படுத்த “உனக்கு பிடிச்ச புக் நான் இன்னைக்கு வாசித்து காட்ட போறேன்”  என அவன் அறைக்குள் வர, அவன் கட்டில் மேல் இருந்த பரிசை நோக்கி ஓடினான்.

ஒரு சிறிய வெள்ளை நிற கிட்டார் சிவப்பு ரிப்பன் சுற்றப்பட்டு இருந்தது. முகம் பிரகாசிக்க “சித்தி! இங்க பாருங்க” என இவான் காட்ட “உன் சித்தப்பாக்கு நன்றி சொல்” என்றாள் அவளும் சிரிப்புடன்.

பின்னால் வந்த ஆர்யனுக்கு இவான் நன்றி சொல்ல, அவன் அருகே வந்து இவானின் சுருள்முடியை பாசமாக தடவினான்.

“அப்போ நாம யாக்கூப் சாரை கூப்பிடலாமா? நாளைக்கே வகுப்பு ஆரம்பிக்கலாம்” என ருஹானா கேட்க ஆர்யன் தலையாட்டினான். அவள் நன்றி சொல்ல, அதற்கும் ஒரு தலை அசைவே பதில்.

——-

“இவ்வளவு பெரிய குடும்பத்தில வளர்றது இவானுக்கு அதிக சந்தோசம் கொடுக்கும்” என்றான் யாக்கூப்.

அர்ஸ்லான் மாளிகை வரவேற்பறை சோபாவில் அவனின் ஒருபக்கம் இவானும் கரீமாவும் மறுபக்கம் அம்ஜத்தும் அமர்ந்திருக்க, சல்மா எதிர் சோபாவில் இருந்தாள்.

ஜாஃபர், சாரா, நஸ்ரியா பின்னால் நிற்க, ருஹானா இவான் அருகில் நின்றாள்.

“இத்தனை அழகான பெண்கள் சூழ இவான் இருக்கறது பார்க்கவே அழகா இருக்கு” எல்லாருக்கும் பிடிக்கும்வண்ணம் பேசினான்.

நஸ்ரியா காபி கொண்டு வந்து கொடுக்க “உங்க விரல் நீளமா மெலிசா இருக்கு. பியானோ எளிதா வாசிக்கலாம்” என சொல்ல, அவளுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.

ருஹானா ‘நல்லா ஐஸ் வச்சி பேசுறானே’ என புருவம் தூக்கினாள்.

நஸ்ரியா கொடுத்த இனிப்பை சுவைத்த யாக்கூப் “நல்லா இருக்கே, இது யார் செய்தது?” என கேட்க, இவான் “என்னோட சித்தி செய்தாங்க” என பெருமையுடன் சொன்னான்.

“பிரமாதமா இருக்கு” என அவன் ருஹானாவை பார்த்து சொல்ல, அவள் புன்னகைக்க, அந்த நேரம் ஆர்யன் எரிக்கும் பார்வையுடன் அங்கே வந்தான். அவன் அணிந்திருந்த கரும்பாசி பச்சை நிற சட்டை கோபத்தில் சிவந்த அவன் முகத்தின் சிவப்பை தூக்கி காட்டியது.

அந்த பச்சை உடை தன் இணையான அவளின் மரகத பச்சை கண்களுக்கு எச்சரிக்கை விடுத்தது, ஆசிரியன் அபாயமானவன் என்று.

ஆர்யன் அருகே நெருங்கி வர யாக்கூப் தன்னிச்சையாக எழுந்து நின்றான். “நல்வரவு” என ஆர்யன் முறைத்துக்கொண்டே கை நீட்ட, யாக்கூப் “நன்றி” என கை கொடுத்தான்.

ஆனால் ஆர்யன் கை யாக்கூப்பை வரவேற்காமல் அழுத்தம் கொடுத்து மிரட்டியது, வலியால் முகம் சுருக்கிய யாக்கூப் தன் கையை விடுவிக்க முயன்றும் முடியவில்லை.

‘அவள் என்னுடையவள். அவளிடமிருந்து தள்ளி நில். நெருங்கினால் உன்னை கொன்று குழி தோண்டி புதைத்துவிடுவேன்’ எனும் தொணி அதில் தொக்கி நின்றது.

ஆர்யன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த ருஹானா இதை கவனிக்கவில்லை. ஆனால் சகோதரிகள் இருவரும் ஆர்யனின் எரிச்சலை கண்டுகொண்டு புளங்காகிதம் அடைந்தனர்.

——-

சமையலறையில் விரல்களை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு சிரித்தபடி இருந்த நஸ்ரியா அருகே இறைச்சியை கொண்டுவந்து வைத்தார், சாரா.

“பெரியம்மா! இதை வெட்டினா என்னோட பியானோ விரல்கள் அழுக்காகிடுமே!” என நஸ்ரியா சொல்ல “வேலை பார்க்கலனா உணவு கிடைக்காது” என சாரா கிண்டலாக சிரித்தார்.

“அவர் என்ன அழகா இருக்கார்! என்ன அருமையா பேசுறார்!” என நஸ்ரியா பெருமூச்சு விட “கனவு காணாம வேலையை பாரு!” என சாரா அவளை திட்ட, உள்ளே வந்த ஜாஃபர் “உங்க டீயை யாக்கூப் சார் புகழ்ந்துட்டு இருக்கார், சாரா. கண்டிப்பா ஏலக்காய் போட்டு இருப்பீங்கன்னு சொல்றார்” என்று சொல்லி சென்றான். 

நஸ்ரியா “பார்த்தீங்களா பெரியம்மா! அவர் எல்லாத்தையும் எப்படி ரசிக்கிறார். பெண்கள் விரும்பும்படி பேசுறார்” என புகழாரம் சூட்ட, கத்தியையும் வெட்டும் பலகையையும் நஸ்ரியா அருகில் சாரா சத்தமாக வைக்க, அவள் முகம் சுருக்கினாள். 

———

“முதல்ல எப்படி பிடிக்கணும்னு கத்துக்கொடுக்கறேன். நம்ம உடம்புல ஒரு உறுப்பு போல கிட்டார் மாறணும்” என யாக்கூப் வகுப்பை ஆரம்பித்தான். 

ஆர்யனும், ருஹானாவும் எதிரே நின்று பார்த்துக்கொண்டிருக்க “இன்னைக்கு முதல் நாள் நிறைய நேரம் பிடிக்கும்” என அவன் சொல்ல, ருஹானா “நீங்க சொல்லிக்கொடுங்க” என நகரப் போனாள்.

“சித்தி! நீங்க இருங்க!” என இவான் சொல்ல, அவள் ஆர்யனை பார்த்தாள். அவன் அவளிடம் தலையாட்டி விட்டு மேலே சென்று விட்டான்.

ருஹானாவை பார்த்துக்கொண்டே யாக்கூப் விரல்களில் தட்டிக்கொண்டிருந்த கிட்டார் சரத்தை தவற விட்டான்.

சுயநினைவு வந்து கீழே இருந்து சரத்தை எடுத்தவன் “நேரா வச்சிக்கோ, இவான்” என யாக்கூப் கிட்டாரை சரிபடுத்தும்போது அவன் செல்பேசி இசைத்தது. யாருடைய அழைப்பு என எடுத்து பார்த்த அவன் திரும்ப வைத்து விட்டான்.

“விரல்களை லேசா பிடி. அழுத்தம் கொடுக்காதே. இறகை பிடிப்பது போல இருக்கட்டும்” என்று சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கும்போது திரும்பவும் அழைத்தது, செல்பேசி.

“நீங்க எடுத்து பேசுங்க. இவானுக்கும் சிறிது இடைவெளி கிடைக்கட்டும்” என ருஹானா சொன்னதும், அவளுக்கு நன்றி சொல்லி எழுந்த யாக்கூப் பின்பக்க வாசல் தாண்டி வெளியே வந்தான்.

தனக்கு பின்னால் கதவை மறக்காமல் மூடிக்கொண்டவன் “என்ன! என்ன வேணும்?” என எரிந்து விழுந்தான்.

“மிஸ்டர் யாக்கூப்! ஏன் நீங்க சிகிச்சைக்கு வரல?” எதிர்முனை வினவியது.

“எனக்கு இனி அது தேவையில்ல, டாக்டர்” எல்லா பற்களும் வெளியே தெரிந்தது.

“நீங்க சிகிச்சை எடுக்கலன்னா என்ன ஆகும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இது பத்தி நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்”

யாக்கூப் திரும்பி கண்ணாடி கதவு வழியே இவானுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த ருஹானாவை பார்த்தான்.

“என்னோட ஷெனாஸ் திரும்பி வந்துட்டா, டாக்டர்”

மருத்துவருக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.

“உங்களுக்கு கேட்டதா, டாக்டர்? அவ என்கிட்டே வந்துட்டா”

“நீங்க என்ன பேசுறீங்க? ஷெனாஸ் இறந்து போய்ட்டாங்க. தயவு செய்து…”

“நான் அவளை கண்டுபிடிச்சிட்டேன். இப்போ கூட அவளை பார்த்துட்டு தான் இருக்கேன், டாக்டர். அவ உயிரோட தான் இருக்கா. அவளும் என்னை பார்க்கறா. என்கிட்டே பேசுறா. அத்தனை அழகான புன்சிரிப்பு அவளுக்கு”

“யாக்கூப் நீங்க என்னை பயமுறுத்தறீங்க”

“நான் அதிக சந்தோசமாக இருக்கேன். ரொம்ப அதிகமா, டாக்டர். என்னோட காத்திருப்பு வீண் போகல. இதோட நாம முடிச்சிக்கலாம்” என்று போனை அடைத்து திரும்பிய யாக்கூப் ருஹானாவை சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

 

Advertisement