Advertisement

“மறுபடியும் போலீஸ் என்னை கைது செய்ய வைப்பீங்க. இல்லனா பாதாள அறையில் என்னை அடைத்து வைப்பீங்க. உங்களோட சண்டை போட்டு வாக்குவாதம் செஞ்சி நான் சோர்வாகிட்டேன்” என்ற ருஹானா உள்ளே செல்ல திரும்பினாள். 

“ஆர்யன்!” எனும் குரல் கேட்டு நின்றாள்.

“சையத் பாபா! நீங்க எப்படி இங்க?” ஆர்யனுக்கு ஆச்சர்யம்.

“மார்க்கெட் போயிட்டு வந்தேன். வழியில உங்களை பார்க்கறேன்”

“உள்ளே வாங்க சையத் பாபா! உங்களுக்கு டீ போட்டு தரேன்” ருஹானா விருந்தோம்பல் செய்தாள்.

“உனக்கு ஒன்னும் சிரமம் இல்லயே, மகளே!”

“அதெல்லாம் இல்ல. நீங்க வாங்க”

ஆர்யனும் அவரை அழைக்க உள்ளே சென்றனர்.

———

“நஸ்ரியா! சல்மாவை பார்த்தியா?”

“இல்லயே கரீமா மேம்! நான் எங்க இருக்காங்கன்னு பார்க்கவா?”

“வேணாம் டியர்! நீ வேலைய பாரு” என்ற கரீமா மாளிகை முழுதும் தங்கையை தேடி அலைந்தாள்.

ஆர்யன் அறையில் ஏதோ சத்தம் கேட்கவும் சந்தேகமாக உள்ளே எட்டி பார்த்தாள்.

“சல்மா! ஆர்யன் ரூம்ல என்ன செய்றே? உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? உனக்கு ஆர்யனை பத்தி இன்னும் தெரியலயா? வா, யாரும் பார்க்கறதுக்கு முன்னே வெளிய போய்டலாம்”

“அக்கா! இங்க பாரு. நான் பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசை அவன் திறந்தே பார்க்கல. அவன் என்னை எவ்வளவு அலட்சியப்படுத்துறான்னு இதுல இருந்தே தெரியுது. என்னை பத்திய நினைப்பே இல்ல அவனுக்கு. இவானைப் பத்தியும் அந்த சூனியக்காரி பத்தியும் தான் அவனுக்கு எப்பவும் கவனம். ஏன்? ஏன்? இத்தனை சக்தியான பணக்காரன் என்னை விட்டுட்டு அவ பின்னாடி எப்படி போகலாம்? அந்த பிச்சைக்காரிய எதுக்கு தேர்ந்தெடுத்தான்? நான் அவன் கண்ணுக்கு தெரியலயா?”

சல்மா பலவாறு புலம்பி அழுதாள். அந்த பரிசு பொருளை தூக்கி போட்டாள்.

திகைப்பான கரீமா “சல்மா! நீ ஆர்யனை லவ் பண்றீயா?” என கேட்டாள்.

சல்மா மௌனமாக நின்றாள்.

——–

சையத்தும், ஆர்யனும் வீட்டு முன்வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“அப்படியா! ரொம்ப சந்தோசம். சமூக சேவை நிறுவன சிக்கல் தீர்ந்தது. நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருப்பீங்கன்னு பார்த்தா, அப்படி இல்லயே.  ரெண்டு பேரும் கவலையா தெரியுறீங்க. ஏன்?”

“ஏன்னா ஆற்ற முடியாத ஒரு காயத்தை நான் ஏற்படுத்திட்டேன். உங்களுக்கு தெரியுமே சையத் பாபா! என்னால மன்னிப்பு கேட்க முடியாது. என்னோட புத்தகத்துல அதுபோல ஒரு வாக்கியமே இல்ல”

ஆர்யன் என்ன சொல்ல வருகிறான் என சையத்துக்கு புரிந்தது.

“புண்பட்டவங்களை தேற்றுவது மிக கடினம். நான் இழந்த நம்பிக்கையை எப்படி திரும்ப வாங்குவேன், சையத் பாபா?”

“பொறுமை மகனே! உனக்கு மட்டும் இல்ல யாருக்குமே அது சிரமம் தான். மறக்காதே மகனே! மனிதன் வலிகளால தான் பண்படுத்தப்படுறான். தன்னோட சொந்த இருட்டுல இருந்து வெளிவர முடியாதவன், வெளிச்சத்தை பார்க்கவே முடியாது”

“அந்த இருட்டுக்கு முடிவே இல்லனா என்ன செய்றது சையத் பாபா? சில காயங்கள் எப்பவுமே ஆறலனா என்ன செய்வேன் நான்?

எல்லோர் வாழ்க்கை கதையும்

வரலாற்று புதினம் அன்று…!

கடந்துவந்த பாதை கடுமையாயின்

பக்கங்களில் நிறைந்திருப்பது

துரோகங்களும் வலிகளும்…!!

மன்னிப்பிற்கோ மறத்தலுக்கோ

அத்தியாயம் அங்கே இல்லை..!

புதுமை மிக செய்யின்

புது வாழ்வு துவங்கியே

அழகான அத்தியாயங்கள்

அன்புடன் வரித்திடவேண்டும்…..!

ருஹானா தேநீர் கொண்டுவந்து இருவருக்கும் தர “நீயும் எங்க கூட உட்காரேன், மகளே!” என சையத் அழைத்தார்.

அவள் அதை மறுத்து “இவானுக்கு உணவு தயாரிக்கணும். எதும் தேவைனா கூப்பிடுங்க” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

———

இருள் சூழ்ந்த இரவில் ஆர்யன் காரில் அமர்ந்து இருட்டை வேடிக்கை பார்க்க கேட்டில் சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.

ருஹானா கைகளில் பெட்டிகளோடு கதவை மூடிக் கொண்டிருந்தாள். இவான் ஆர்யனை நோக்கி நடந்து வர, என்னவோ ஏதோ என ஆர்யனும் காரில் இருந்து இறங்கி அவனை நோக்கி எட்டி நடை போட்டான்.

“நாம வீட்டுக்கு போகலாம் சித்தப்பா! இனியும் கார்ல தூங்க வேண்டாம்” என இவான் சொல்ல, ஆர்யன் மனது நிம்மதியானது. 

ருஹானாவிடம் பெட்டிகளுக்காக கை நீட்டி “நான் வைக்கிறேன்” என்றான்.

ஆனால் அவனிடம் தராமல் அவளே டிக்கியை திறந்து உள்ளே வைத்தாள்.

இவானுக்காக கார்கதவை திறந்துவிட்ட ஆர்யன் அவள் வரும்வரை கதவருகே நின்றான்.

அவளோ அவனை பார்க்காமல் வந்து காரில் ஏறி அமர்ந்து கதவை மூடினாள்.

சிந்தனை நிறைந்த அவள் முகத்தை பார்த்துக்கொண்டே ஆர்யன் காரை எடுத்தான்.

———

வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த சல்மாவின் செல்பேசியை பிடுங்கிய கரீமா “என்ன செய்றே சல்மா? காலைல இருந்து ஒரே இடத்துல உட்கார்ந்து போனை பார்த்துட்டு இருக்கே. எழுந்து போய் ஒழுங்கா டிரஸ் செய்” என உத்தரவிட்டாள்.

“நல்லா டிரஸ் போட்டு என்ன பயன்? ஆர்யன் மாளிகைலயே இல்ல. நான் யாருக்காக டிரஸ் செய்யணும்?

அப்போது ஜாஃபர் வேகமாக செல்ல “இவன் ஏன் ஓடுறான்? யார் வந்திருக்கா இந்நேரம்?” என கேட்டபடி கரீமா வாசலை பார்க்க, இவான் குதித்துக்கொண்டு உள்ளே வந்தான். 

“நாங்க வந்திட்டோம் ஜாஃபர் அங்கிள்!”

“வெல்கம் லிட்டில் சார்!” என்ற ஜாஃபர் மற்றவர்களுக்கும் நல்வரவு சொல்லி பெட்டிகளை வாங்கிக்கொண்டு மேலே ஏறினான்.

“வா! நாமும் போகலாம்” என்று ருஹானாவும் இவான் கையை பிடித்து படியேற, ஆர்யன் கதவடைத்து தளர்வாக நடந்து பின்னே ஏறினான். 

இவர்களை சகோதரிகள் உற்று பார்த்துக்கொண்டிருக்க “இன்னும் சண்டை தான் போல, சல்மா! முகத்தை தூக்கி வச்சிருக்காங்க பார். ஒன்னுமே இல்லாததுக்கு நீ நாள்பூரா சோகமா இருந்தே” என கரீமா தங்கையை உற்சாகப்படுத்தினாள்.

“எங்க விட்டோமோ அங்க இருந்தே தொடரலாம் வா. எல்லாமே நமக்கு தான் சாதகமா இருக்கு” என கரீமா மகிழ “நான் போய் அழகா டிரஸ் செய்துட்டு வரேன்” என சல்மா துள்ளி குதித்து எழுந்தாள்.

———

“வா செல்லம்! உனக்கு இரவு உடை போட்டு விடுறேன்” என ருஹானா இவானின் சட்டையை கழட்ட, கதவருகே வந்த ஆர்யனை பார்த்த இவான் “குட்நைட் சித்தப்பா!” என்றான்.

ஆர்யனும் “குட்நைட் சிங்கப்பையா!” என சொன்னவன், ருஹானா மேல் ஒரு பார்வை வீசி சென்றுவிட்டான்.

அத்தனை நேரமும் ஆர்யனையே பார்த்திருந்த ருஹானாவிடம் இவான் “ஏன் நீங்க சித்தப்பாக்கு குட்நைட் சொல்லல, சித்தி?” என கேட்டான்.

அவனுக்கும் பதில் சொல்லாமல் இன்னும் யோசனையாகவே இருந்தாள் ருஹானா.

——-

கமிஷனர் வாசிம் வீட்டு தோட்டம்.

“தன்வீர்! ருஹானா திரும்ப ஆர்யன் அர்ஸ்லானை காப்பாற்றிட்டாங்க” வாசிம் சொல்ல ருஹானாவின் சகோதரன் கேட்டுக் கொண்டிருந்தான்.  

“எனக்கு நிச்சயமா தெரியும். அவங்க கிட்டே ஏதோ ஆதாரம் இருக்கு. ஆனா நான் இதை விடவே மாட்டேன். கண்டிப்பா அர்ஸ்லான் எதுலயாவது மாட்டுவான்”

அப்போது வாகிதா தேநீர் கொண்டுவர “நீ ஏன் ஓய்வு எடுக்காம சுத்திட்டு இருக்கே?” என வாசிம் கடிந்து கொண்டான்.

“இது ஐந்து நிமிட வேலை தானே! இதோ போய் தூங்க போறேன்” என்று சிரிப்புடன் நகர்ந்த வாகிதாவை அன்பாக பார்த்திருந்த வாசிமை தன்வீர் பார்த்தபடியே இருந்தான்.

“இன்னைக்கு வாகிதாக்கு மாற்றமா இருக்கட்டும்னு சையத் பாபா இடத்துக்கு கூட்டிட்டு போனேன், தன்வீர். அவருக்கு பஜார் போற வேலை இருந்ததால உணவகத்தை எங்க பொறுப்புல விட்டுட்டு போனார்”

கண்கள் மின்ன வாசிம் விவரிப்பதை தன்வீர் குறும்பு சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“என்னை உதவியாளா வச்சிக்கிட்டு வாகிதா அங்க வந்தவங்களுக்குலாம் அழகா சாப்பாடு செஞ்சி கொடுத்தா” என சொல்லிக்கொண்டே போன வாசிம் தன்வீரின் பார்வையை கேள்வியாக நோக்கினான்.

“கமிஷனர்! நீங்க இவ்வளவு ஆனந்தமா இருந்து நான் பார்த்ததே இல்ல. நீங்க வாகிதாவை அதிகம் நேசிக்கிறீங்கன்னு நல்லா புரியுது” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

மாட்டிக்கொண்ட உணர்வில் வாசிம் முழித்தபடி அமர்ந்திருந்தான்.

———-

விட்டுப்போன அலுவலக வேலைகளை பார்க்க அமர்ந்த ஆர்யன், ஒரு கோப்பை எடுத்து படித்தான். அதில் அவன் கவனம் செல்லவில்லை எனவும் மற்றொரு கோப்பை எடுத்தான். அதையும் அவனால் பார்க்கமுடியவில்லை. வெறுப்பாக இரண்டையும் மூடி வைத்தான்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டும் அவன் திரும்பவில்லை. ருஹானா வருவாள் என அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  அவளை தவிர வேறு யாரையும் அவன் பார்க்க விரும்பவில்லை.

கதவை மெல்ல திறந்து உள்ளே வந்த ருஹானா கவலை தோய்ந்த ஆர்யன் முகத்தை பார்த்தபடியே பக்கம் வந்தாள்.

காலடியோசை அருகில் கேட்கவும் திரும்பி பார்த்தவனுக்கு ஆனந்த அதிர்ச்சி. 

சுழல் நாற்காலியில் சுழன்று அவளை ஏறிட்டு பார்த்தவன் மனமெங்கும் உற்சாக ஊற்றுக்கள்.

ருஹானா முன்னே வந்து வலது கையை அவனை நோக்கி நீட்டினாள்.

திகைப்பான ஆர்யன் அவள் கையையே பார்க்க, ருஹானா மனதில் ஆர்யன் சையத்திடம் மனம் வருந்தி பேசியது நினைவில் ஓடியது. 

கையிலிருந்த பார்வையை அவள் முகத்தில் பதித்தபடி ஆர்யன் எழுந்து நின்றான்.

கை நீட்டியபடியே அவள் பேச பேச அவன் பிரமிப்பில் ஆழ்ந்தான்.

“இதோட இந்த போரை நிறுத்திக்கலாம் சந்தேகத்தோடவே வாழ்றது எனக்கும் அதிக சிரமமா இருக்கு. இனிமேல் எல்லாமே முன்னைப் போலவே இருக்க போகுது”

ஆர்யன் மனம் மகிழ அவள் சொல்வதை தலை சாய்த்து கேட்டான்.

“நான் இவானோட சித்தி. நீங்க அவனோட சித்தப்பா. நம்மோட அன்புக்குரியவங்களோட வாரிசு அவன். நம்மை இணைத்து வைத்த அந்த ரெண்டு நல்ல உள்ளங்களுக்காக……. கள்ளம் கபடம் இல்லாத இவானுக்காக நம்ம சண்டையை இதோட முடிச்சிக்கலாம். சம்மதமா?” லேசாக கண்கலங்க கேட்டாள். 

அவன் கண்களிலும் மிக மிக மெல்லிய நீர் படலம்.

கையை நீட்டி அவள் கையை பற்றினான். ஒவ்வொரு விரலாக அவள் கையில் பதித்தான், அழுத்தமாக. 

ஆர்யன் இதழோரம் ஒரு இனிய முறுவல். அது அவன் மனதின் அதீத பூரிப்பை பிரதிபலித்தது.

ருஹானா இத்தனை மாதங்களில் முதன்முறையாக அவன் புன்னகைப்பதை கண்டாள்.

சிறியதாக இருந்தாலும் அது அத்தனை வசீகரமாய் இருந்தது!

தன்னையறியாமல் அவளையும் புன்னகைக்க வைத்தது!

அவன் முகத்திலிருந்து அவளை கண்ணெடுக்க விடாமல் கட்டி போட்டது!!

(தொடரும்)

Advertisement