Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 65

ஆர்யனுக்கு எதிராக ஆதாரம் தேடும் கமிஷனர் வாசிம், ருஹானாவிடம் அறிவுறுத்தினான்.

“அவன் உங்களை மாட்டிவிட்டதுக்கான துப்பு ஏதாவது உங்ககிட்டே இருந்தா பயப்படாம என்கிட்டே சொல்லுங்க. தயங்காதீங்க. நான் இருக்கறவரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது”

ருஹானா ஆர்யனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில விநாடிகள் கழித்து வாசிமிடம் சொன்னாள்.

“நீங்க ஏன் அவர் மேலே சந்தேகப்படுறீங்கன்னு எனக்கு தெரியும். அவர் சிலசமயம் அதிகாரம் செய்பவரா, அடக்கி ஆள்பவரா தெரியலாம்.  இத்தனைக்கும் பின்ன நான் அவரை நம்புறேன். அவர் வேற தவறுகள் செய்யலாம். ஆனா என்னை மாட்டிவிடறதுக்காக இப்படி கீழ்த்தரமான செயல்கள் செய்ய மாட்டார்”

இத்தனை நேரம் வாசிமை பார்த்து பேசிய ருஹானா இப்போது ஆர்யனை பார்த்து பேசினாள். அவள் பார்வையை சந்தித்த ஆர்யன் சில நிமிடங்களில் அதன் வீச்சை தாங்காமல் தலை குனிந்து கொண்டான்.

“இவான் எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு அவருக்கு தெரியும். இவானுக்கோ எனக்கோ அவர் எப்பவும் தீங்கு இழைக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் கொடுமைக்காரர் இல்ல. நிச்சயமா இல்ல” 

‘அப்படியா’ என்பது போல வாசிம் திரும்பி ஆர்யனை ஆராய்ச்சியாய் பார்த்தான்.

“இருந்தாலும் நீங்க ஜாக்கிரதையா இருங்க. நீங்க மட்டும் தனியாக இல்ல. நானும் தன்வீரும் உங்களுக்கு எப்பவும் துணையா இருப்போம். இதை மறந்திடாதீங்க” என்று சொன்ன வாசிம் ருஹானாவிடம் விடைப்பெற்று காரில் ஏறினான்.

ஆர்யனை முறைத்துக்கொண்டே அவன் செல்ல, ருஹானாவும் அதையே செய்து வீட்டிற்குள் சென்றாள்.

ஆர்யன் கொட்டும்பனியில் கொசுக்கடியில் காவல்வேலையில் தன் துன்பம் தாங்கி நின்றான். உடல் துன்பங்கள் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.

——-

“ஹலோ ரஷீத்! ஷாரிக் ஏதாவது செய்றானா? எதும் தகவல் இருக்கா?”

“நாங்க அவனை கவனிச்சிட்டு தான் இருக்கோம், ஆர்யன். எல்லாம் சரியா தான் இருக்கு. ஆனா நீங்க தான் சரியில்லாதது போல இருக்கே?”

“ரஷீத்! இவான் சித்திக்கு நம்ம திட்டம் பத்தி சொன்னது அவளோட  சகோதரன் இல்ல. போலீஸ்க்கு இதுவரை அதை பற்றி தெரியாது. உன் போன்ல இருந்து தான் போட்டோ எடுத்து அனுப்பி இருக்காங்க”

“என்ன! ஐயோ! நான் அப்படி எதும் எடுக்கல, ஆர்யன்”

“நான் உன்னை சொல்லல ரஷீத்! நீ கவனமா இல்லன்னு சொல்றேன். நம்ம கூட இருக்கறவங்க தான் இப்படி செஞ்சிருக்காங்க. அது யாருன்னு கண்டுபிடி”

“யாருக்கு இப்படிப்பட்ட காரியம் செய்ய தைரியம் இருக்கு?”

“அவ போன்ல அந்த போட்டோவை நானே பார்த்தேன். அந்த கமிஷனர் வாசிம் அவ கூட பேச வந்திருந்தான். அவன் கிட்டே அவ எதும் சொல்லல”

“அப்படினா அவ உங்களை காப்பாத்தி இருக்காளா?”

“ஆமா ரஷீத்! நீ சீக்கிரமா அந்த துரோகியை கண்டுபிடி”

———

ருஹானா இரவில் ஜன்னல் திரையை விலக்கி பார்க்க காருக்குள் விழித்து அமர்ந்திருந்த ஆர்யன் தென்பட்டான். ‘ஆள், படை அத்தனை இருந்தும் இவன் எதுக்கு இப்படி இங்கே காத்து கிடக்கறான்?’ என குழம்பியபடி திரையை மூடி வரவேற்பறை சோபாவில் அமர்ந்து யோசிக்கலானாள். 

——–

சோபாவில் அமர்ந்தவண்ணமே தூங்கிவிட்ட ருஹானா காலையில் கழுத்தை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

“ப்ச்!” என்று அவள் வலித்த இடத்தை தடவிக்கொள்ள, இவான் அரைக்கண்களை மூடிக்கொண்டே வந்து அவளை கட்டிக்கொண்டான். 

“குட்மார்னிங் அன்பே! உனக்கு பசிக்குதா? நீ போய் பல் தேய்த்து முகம் கழுவு. நான் உனக்கு இப்பவே உணவு தயார் செய்றேன்” என அவனை முத்தமிட்டு உள்ளே அனுப்பினாள்.

தன்னிச்சையாக அவள் கைகள் ஜன்னல் திரையை நகர்த்த, அங்கே காரில் ஆர்யன் இல்லை.

அவசரமாக சுற்றுமுற்றும் தேட, வீட்டின் வாசலில் நின்றிருந்த அவனை பார்த்து சினம்கொண்டு வெளியே வந்தாள்.

அவளை பார்த்ததும் பரபரப்பாக படியேறி வந்த ஆர்யன் அவளுடன் பேச முற்பட்டான்.

“என்ன வேணும் உங்களுக்கு?” கசப்பாக கேட்டாள்.

“நேத்து என்னை பற்றி நீ புகார் கொடுத்திருக்கலாம். நீ அப்படி செய்யாததுக்கு உனக்கு என் நன்றி… நான்…”

“இனிமே நான் இது பத்தி பேச விரும்பல” சடாரென பேச்சை முறித்தாள்.

அப்போது அவள் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்து ஒலி எழுப்பியது. அதை படித்தவள் மிகவும் ஆத்திரமாகி பொரிந்து தள்ளினாள்.

“பேங்க்ல இருந்து தகவல் வந்திருக்கு. நீங்க எனக்கு பணம் அனுப்பினீங்களா? ஏன்? உங்களை நான் காட்டி கொடுக்கலன்னா? எந்த நினைப்புல நீங்க பணம் தருவீங்க? என்னோட விசுவாசத்தை விலை கொடுத்து வாங்க முடியும்னு நினைச்சிங்களா? முன்னாடி செஞ்ச அதே தப்பை செய்றீங்க”

“அப்படி இல்ல. இவானை பார்க்க அவங்க வந்தாங்கன்னா….” அவனை பேச விடவில்லை அவள்.

“நான் இவானுக்காக தான் அந்த ஆதாரத்தை கொடுக்கல. உங்களுக்காக இல்ல. உங்க பணத்துக்காக இல்ல. எனக்கு லஞ்சம் கொடுக்க என்ன தைரியம் உங்களுக்கு?”.

அப்போது சமூகசேவை நிறுவனத்தின் லைலா சாலையில் நடந்து வருவதை ஆர்யன் பார்த்துவிட்டான். அவர் வீட்டின் சமீபமாக வர என்ன செய்வது என யோசித்தான். 

“நான் பணத்துக்காக அதை செய்யல. என்னை அவமானப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ஆயிரம் முறை இதை பற்றி நமக்குள்ள வாக்குவாதம் வந்திருக்கு. ஆனாலும் அதே தான் நீங்க திரும்பவும் செய்றீங்க?”

ருஹானாவின் சத்தமான இரைச்சலை கேட்டுக்கொண்டே லைலா இரும்பு கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தார்.

இப்போது ஆர்யனும் குரலை உயர்த்தினான்.

“சரி! உன்னோட கோபம் எனக்கு புரியுது. உனக்கு என்மேலே கோபப்பட எல்லா நியாயமும் இருக்கு. தெரியாம இங்க வந்திட்டேன். நீ திரும்ப திரும்ப என்னை எச்சரிக்கை செய்தே! உன்னை தொல்லை செய்ய எனக்கு உரிமை இல்ல. உன்னோட அனுமதி இல்லாம நான் திரும்ப இங்க வர மாட்டேன்.”

பேசிக்கொண்டே ஆர்யன் ருஹானாவின் கையில் ஒரு காகிதத்தை திணித்தான். ருஹானா என்ன அது என கேட்பதற்குள் படிக்கட்டில் இறங்கினான். ஏறி வந்து கொண்டிருந்த லைலாவை ருஹானா இப்போது தான் பார்த்தாள்.

எதிரே வந்த லைலாவிற்கு மரியாதை நிமித்தம் தலையசைத்த ஆர்யன் அவரை தாண்டியதும் அவரை காட்டி ருஹானாவிற்கு கண்ஜாடை செய்தான்.

ருஹானா முன்னே வந்து லைலாவிற்கு நல்வரவு சொல்லி உள்ளே அழைத்து சென்றவள் “மன்னிச்சிடுங்க. இவான் சித்தப்பா கூட நீங்க வரும்போது சண்டை போட்டதுக்கு. என்கிட்டே அனுமதி வாங்காம இவானை பார்க்க வந்திட்டார். இதுபோல இனி நடக்காது. நான் எச்சரிச்சிட்டேன். நீங்க உள்ள வாங்க” என்றாள்.

“எனக்கு புரிஞ்சது” என்றார் லைலா. 

இவான் கார் வைத்து விளையாடிக்கொண்டிருக்க “நான் இவானோடு கொஞ்சம் பேசணும்” என்று லைலா அவன் அருகே அமர்ந்தார்.  

“உன் சித்தி கூட இங்க சந்தோசமா இருக்கியா, இவான்? இங்க உனக்கு பிடிச்சிருக்கு தானே?”

“ஆமா!”

“உன் சித்தி உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா?”

“ஆமா! சித்தியும் என்னை லவ் பண்றாங்க. நானும் அவங்களை லவ் பண்றேன். சித்தி ஆசையா தராங்களேன்னு சிலசமயம் நான் அதிகமா சாப்பிட்டுடுவேன், பசிக்கலனாலும்”

இத்தனை நேரம் சஞ்சலமாக முகம் சுருங்கியிருந்த ருஹானா புன்னகை செய்தாள். லைலாவும் சிரித்தார்.

“இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?”

“சரி”

“உன்னோட சித்தப்பா இங்க தங்குறாரா?”

“இல்ல.. ஆனா அப்படி இருந்தா நல்லா இருக்கும்”

“நீ அவர் மேலே அதிக பாசம் வச்சிருக்கியா?”

“ஆமா! சித்தப்பா மேலே எனக்கு ரொம்ப அன்பு”

இவானிடம் நன்றி சொல்லி எழுந்தவர் ருஹானாவிடம் கேட்டார்.

“வீட்டை சுத்தி பார்க்கலாமா, ருஹானா மேம்?”

———–

காரில் அமர்ந்து சாலையை வெறித்துக்கொண்டிருந்த ஆர்யன், மிஷால் வீட்டை நோக்கி வருவதை பார்த்தான். வேகமாக காரிலிருந்து இறங்கி அவன் முன்னே நின்றான்.

“நீ இப்போ உள்ள போக முடியாது”

“நான் உன்கிட்டே ஒன்னும் கேட்கல. வழியை விடு”

“சோசியல் சர்வீஸ்ல இருந்து இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்காங்க”

“அப்போ சரி. ஆனா இப்போ மட்டும் தான் நான் ருஹானா கூட பழகுறதை நீ தடுக்க முடியும். அவ உன் நிஜ முகத்தை பார்த்துட்டா ன்னு நினைக்கிறேன். கூடிய சீக்கிரமே எங்க வாழ்க்கையில இருந்து நீ மறைஞ்சி போய்டுவே”

மிஷால் திரும்பி நடக்க அவனை ஆத்திரமாக பார்த்து நின்றான் ஆர்யன். ஏற்கனவே அவனை கண்டாலே ஆர்யனுக்கு ஆகாது. இப்போது அவன் ஆர்யனை ஏளனமாகவும், ருஹானாவுடன் நெருக்கமாகவும் பேசி செல்ல ஆர்யனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

——–

வீட்டை சுற்றி பார்த்த லைலா அங்கங்கே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். இவான் வரைந்த படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதை பார்த்தார். இவானும், ருஹானாவும் சேர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை நின்று பார்த்தார்.

“ஏன் இந்த டாய்ஸ்லாம் பிரிக்காம இருக்கு?”

“அது எல்லாம் இவான் சித்தப்பா வாங்கிட்டு வந்தது”

“இன்னொரு முக்கியமான கேள்வி. நீங்க எங்க வேலை செய்றீங்க? உங்க சம்பளம் எவ்வளவு? உங்களுக்கே தெரியும் இந்த கேள்வியெல்லாம் இவானோட நலத்துக்காக, அவன் எதிர்காலத்துக்காக”

“நான் வேலை செய்றது…“ என ருஹானா தடுமாற அப்போது அவள் போன் அடித்தது.

மிஷால் உணவத்தில் அவள் வேலை செய்வது அவளுக்கு நினைவு வரவில்லையா?

எப்போதாவது தானே உதவி செய்ய போகிறோம் என நினைத்தாளா? ஆனால் அதற்கும் மிஷால் பணம் கொடுத்து விடுகிறான் தானே!

அல்லது ‘இந்த வீடு இருக்கும் செல்வச்செழிப்பிற்கு அங்கே வேலை செய்து கிடைக்கும் பணம் போதாதே’ எனும் எண்ணமா?

“நான் இப்போ வேலை செய்ற இடம்…..” வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. 

மீண்டும் செல்பேசி அழைத்தது. 

“அடிச்சிட்டே இருக்கு. எதாவது அவசரமா இருக்க போகுது. போனை எடுத்து பேசுங்க” என லைலா சொல்ல, ருஹானா அழைப்பை ஏற்றாள். அது ஆர்யன்.

“நான் சொல்றதை மட்டும் கேளு. நீ பேசாதே. நான் உன் கையில கொடுத்த பேப்பரை பாரு. அது முக்கியம்”

“நான் அப்புறம் பேசுறேன்”

“போனை வைக்காதே. இது ரொம்ப அவசியம். உடனே பேப்பரை பாரு”

ஆர்யன் தந்த தாளை பிரித்து பார்த்த ருஹானா “இது என்ன?” என்று கேட்டாள்.

“உன் ஜாப் பேப்பர். ரஷீத் தயாரித்தது. அந்த பேப்பர்ல இருக்குற கம்பெனில தான் நீ வேலை செய்றே. அது எனக்கு சம்பந்தம் இல்லாத கம்பெனி. அவங்க உன்னோடு சம்பளம் பத்தி கேட்பாங்கன்னு தான் உன் வங்கிக்கணக்குல பணம் போட்டேன். இப்போ அவங்க கிட்டே சொல்ல அது உனக்கு உதவியா இருக்கும்” 

லைலா அந்த ஆவணத்தை சரிபார்த்தபின் ருஹானா கொடுத்த தேநீரை குடித்து கிளம்பி வெளியே வந்தார். ருஹானாவும், இவானும் அவருடன் வெளிகேட் வரை வந்தனர்.

இவானின் தலையை செல்லமாக தடவிய லைலா “இவான்! நீ அதிர்ஷ்டமான பையன். உன் சித்தி உன்னை நல்லா பார்த்துக்கறாங்க” என்று சொல்லி விடைப்பெற்றார்.

அவர் சென்றதும் ருஹானாவை கட்டிக்கொண்ட இவான் “சித்தி! அவங்க என்னை கூட்டிட்டு போக மாட்டாங்களே? இனி நாம பிரிய மாட்டோம் தானே!” என கேட்டான்.

அவனுக்கு முத்தம் தந்த ருஹானா “பயப்படாதே என்னுயிரே! யாராலும் நம்மை பிரிக்க முடியாது” என்றாள்.

“சித்தப்பாவும் நம்ம கூட இருக்கலாம். நீங்களும் பயப்படாம இருப்பீங்க. அந்த ஆன்ட்டி உங்களை பயப்படுத்திட்டாங்க. எனக்கு தெரியும்”

“உன் சித்தப்பா ஏற்கனவே எல்லா ஏற்பாடும் சரியா செஞ்சிட்டார்” என்றவள் எதிரே வேகமாக நடந்து வரும் ஆர்யனை பார்த்தாள். 

“நீ உள்ள போய் விளையாடு. நான் பின்னாடியே வரேன்” என இவானை வீட்டிற்குள் அனுப்பி வைத்தாள்.

“என்ன நடந்தது? அவங்களுக்கு எதும் சந்தேகம் வரலயே?” ஆர்யன் படபடத்தான்.

“இல்ல.. எல்லாம் சரியா போச்சி. ஒரு சிக்கலும் இல்ல”

“நல்லது!” அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“நீங்க ஏன் எனக்கு உதவி செய்றீங்க? இன்னோரு முறை என்னை முட்டாளாக்கவா? என்னை மேலும் துன்புறுத்தவா?”

ஆர்யன் முகம் மாறியது. “இவான் உன்கிட்டே நல்லா இருப்பான்னு எனக்கு தெரியும். அதான் இதெல்லாம் செஞ்சேன். வேற எதுவும் இல்ல”

“இப்போ நீங்க எனக்கு உதவி செய்றீங்க! உங்களுக்கு பிடிக்காத செயல் நான் செஞ்சா என்ன ஆகும்?” ருஹானா விரக்தியாக கேட்டாள்.

ஆர்யனுக்கு கோபம் வந்தது

Advertisement