Advertisement

பின்னால் நின்று மகிழ்வுடன் பார்த்திருந்த கரீமா குரலில் மட்டும்   சோகத்தை வரவழைத்து “அவர் மாத்திரை கூட எடுத்துக்கவே இல்ல. நீ போனதுல இருந்து ஒடிஞ்சி போய்ட்டார். நீ நிரந்தரமா திரும்பி வர மாட்டேன்னு பயந்திட்டார். நீ அப்படி போக மாட்டே தானே? ஆமா தானே?” என பின்னி பின்னி கேட்டும் கூட ஆர்யன் அவளுக்கு பதில் அளிக்கவில்லை.

கரீமா முகம் கடுத்தாலும் தன் முயற்சியை விடாமல் “ஒருவேளை நீ எங்க போறே, ஏன் போறே ன்னு அவருக்கு தெரிஞ்சா அவர் அமைதியாகிடுவார்!” என தூண்டில் போட்டாள்.

ஆர்யன் திமிங்கிலம் அதில் வந்து விழுமா என்ன? அவளை கண்டுகொள்ளாமல் “அண்ணா! என்ன நடந்தாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன். அது உங்களுக்கு தெரியும் தானே! உங்களுக்கு கேட்குதா அண்ணா?” என சற்று சத்தமாக சொன்னான்.

அப்போது தான் ஆர்யன் பக்கம் திரும்பிய அம்ஜத் தம்பியை பார்த்து முகம் மலர்ந்தான். கரீமாவின் முகம் மேலும் கடுகடுத்தது.

“ஆர்யன்!” அம்ஜத் பாசமாய் அழைக்க “அண்ணா! நான் தான். இங்க தான் இருக்கேன்” என ஆர்யன் சொல்ல “நீ இங்க தான் இருக்கே. நீ என்னை விட்டு போகல” என குதுகலித்தவன் “இவான்?” என கேட்க, கரீமா உற்று கேட்டாள்.

“அவனும் வருவான் அண்ணா. கவலைப்படாதீங்க. முன்னப்போல எல்லாரும் இங்க இருப்போம்” என ஆர்யன் நம்பிக்கை கொடுக்க “ஆமா ஆர்யன்….. நாம ஒரே குடும்பம்….. ஒன்னா தான் இருப்போம்…. இவான், ருஹானாவும் இங்க தான்…. நீயும் சேர்ந்து மாளிகைல தான்…. அவங்களை கூட்டிட்டு வா… நம்மோட அமைதியை இழக்கக்கூடாது….” என அம்ஜத் விட்டு விட்டு பேசினான்.

ஆர்யன் “நான் எங்கயும் போகல அண்ணா! நீங்க மாத்திரை சாப்பிடுங்க” என கரீமா எடுத்து தந்த மருந்தை கொடுத்து அம்ஜத்தை படுக்க வைத்தான். “இவானும், ருஹானாவும் போகக் கூடாது” என முனகியபடியே அவன் கண்மூடிக்கொண்டான்.

அண்ணன் நன்றாக தூங்கியதை உறுதிபடுத்திக்கொண்ட ஆர்யன் “நான் போகணும். எதும் அவசரம்னா என்னை கூப்பிடுங்க” என சொல்ல “சரி ஆர்யன். நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே!” என கரீமா சொல்லவும் ஆர்யன் புறப்பட்டுவிட்டான்.

போனை எடுத்த கரீமா “ஆர்யன் மாளிகைல இருந்து கிளம்பிட்டான். அவனை பின்தொடர்ந்து போ” என தனது கையாளுக்கு ஆணையிட்டாள். 

இளகிய மனம் கொண்ட அம்ஜத்தை துன்புறுத்தி ஆர்யன் செல்லுமிடம் அறிய கரீமா போட்ட திட்டம் நிறைவேறுமா?

ஆனால் காரை செலுத்திக்கொண்டிருந்த ஆர்யன் சிறிது தூரத்திலேயே தன்னை பின் தொடரும் காரை கண்டு கொண்டான். அவர்களை பிடித்துவிடும் நோக்கில் காலி மைதானம் இருந்த திசை நோக்கி சென்றான். 

கரீமாவின் ஆட்களும் அவன் விரித்த வலையில் வந்து விழுந்தனர். அவர்கள் இருவரையும் அடித்து வீழ்த்தியவன் “உன் பாஸ் ஷாரிக்கை கவனமா இருக்க சொல்லு இல்லைனா அவன் சொந்த ஊரே அவனுக்கு கல்லறை ஆகிடும்” என மிரட்டினான்.

கூலியாட்களை அனுப்பியது யார் என விசாரிக்காமல் ஆர்யனே முடிவு செய்துவிட்டான், அது அவன் எதிரி ஷாரிக் ஆட்கள் என்று.

கரீமாவின் அதிர்ஷ்டம் அவளை மாட்டிவிடாமல் காப்பாற்றிவிட்டது.

தன்னை பின் தொடர ஆள் அனுப்பியது போல ஷாரிக் இவானுக்கும் ஏதும் ஆபத்து விளைவிக்க திட்டமிட்டு இருப்பானோ?’ என பயந்து போன ஆர்யன் ஓடிவந்து காரை எடுத்தான்.

மிக விரைவாக காரை ஓட்டி புது வீட்டிற்கு வந்த ஆர்யன் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு மிரண்டு போனான். பின்பக்கமாக ஓடியவன் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நடமாட்டம் தெரிகிறதா என உற்றுஉற்று நோக்கினான்.

வெளியே இருப்பதை அப்படியே காட்டும் தன்மை உடைய அக்கண்ணாடி உள்ளே உள்ளதை தெளிவாக காட்டாது.

எல்லா பக்கமும் ஓடி ஓடி தேடி தவித்த ஆர்யன் அண்ணன் மகனை காக்க  அல்லாஹ் துணை நாடி நின்றான்.

ஓட்டமாக ஓடி வந்து காரை இயக்கியவன் சாலையின் இருமருங்கிலும் பார்த்தவாறே சுற்றி வந்தான். சட்டென்று அவனுக்கு ஏதோ தோண வண்டியை வேகமாக திருப்பினான்.   

———

“என்ன!! ஆர்யன் கிட்டே பிடிபட்டீங்களா? ரெண்டுபேருமா?”

“பயப்படாதீங்க கரீமா மேம்! உங்க மேல எந்த சந்தேகமும் வராது. அவர் நாங்க ஷாரிக் ஆட்கள்ன்னு நினைச்சிட்டார். நல்லவேளை”

“முட்டாள்! என்ன நல்லது? அவன் எங்க போறான்னு கண்டுபிடிக்காம அவன்கிட்டேயே மாட்டிகிட்டு சந்தோசப்படுறீயா?”

“இல்ல மேம்”

“பேசாதே! அவன் இருக்கிற இடம் தெரியுதான்னு வேற வழியில முயற்சி செய். போனை வச்சிட்டு வேலையை பாரு”

——-

மிஷால் உணவகம்.

“அக்கா! இன்னைக்கு மட்டும் நீங்க இல்லனா இந்த ஆர்டர் நாங்க அனுப்பி இருக்கவே முடியாது” என மிஷாலின் உதவிப்பையன் சதாம் சொல்ல ருஹானா புன்னகைத்தாள்.

சமையல் மேடையில் அமர்ந்து தின்பண்டங்களை நொறுக்கிக் கொண்டிருந்த இவானை கீழே இறக்கிவிட்ட ருஹானா “வா இவான் செல்லம்! நாம போய் வாகிதா அக்காவோட உடல்நலத்தை விசாரிப்போம்” என்றாள்.

“சாக்லேட் அக்காவா?” என இவான் சந்தோசமாக கேட்க “ஆமா அன்பே! போலாம்” என ருஹானா கிளம்பினாள்.

காரை வேகமாக கொண்டுவந்து உணவகம் முன்னே நிறுத்திய ஆர்யன் குடுகுடுவென உள்ளே ஓடிவந்தான். மிஷால் எதிர்ப்பட அவனிடம் பதட்டமாக கேட்டான்.

“இவானும், அவன் சித்தியும் இங்க இருக்காங்களா?”

“இப்போலாம் இங்க அடிக்கடி வர்றீயே, அர்ஸ்லான்” என மிஷால் கிண்டலாக கேட்க, அவனை மீறிக்கொண்டு உள்ளே செல்ல முனைந்தான் ஆர்யன்.

“நீ நினைச்ச நேரத்துல இப்படி உள்ளே போக முடியாது. உன்னோட முரட்டுத்தனத்தை நீ இங்க காட்டினா அதுக்கு பதிலடி கிடைக்கும்”

“உன் அறிவுக்கெட்ட பேச்சை நிறுத்து. கடைசி முறையா கேட்கறேன். இவானும், அவன் சித்தியும் உள்ளே இருக்காங்க தானே!”

“என்னை மீறி நீ உள்ளே போக முடியாது”

“நான் உள்ளே வரல. எனக்கு ஒழுங்கான பதிலை மட்டும் சொல்லு” பொறுமையிழந்த ஆர்யன் சற்று சத்தமாக கேட்டான்.

“ஒழுங்கை பத்தி நீ எனக்கு சொல்றீயா?” என மிஷால் அவனிடம் வம்பு வளர்த்தான்.

“முடிந்தா என்னை தடு” என ஆர்யன் மிஷாலை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.

“என்ன செய்றே?” என கேட்டுக்கொண்டே மிஷாலும் வர, சத்தம் கேட்டு ருஹானா வேகமாக வெளியே வந்தாள்.

ருஹானாவும், இவானும் பத்திரமாக இருப்பதை அறிந்த ஆர்யன் நிம்மதி அடைந்தான். அவன் வேகம் மட்டுப்பட்டது. இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

இப்போது ருஹானாவின் கோபம் அதிகமானது. இவான் இருப்பதால் பொறுமையை இழுத்துப் பிடித்தவள் “இவான்! நீ இங்கயே இரு. உன் சித்தப்பா கிட்டே நான் பேசிட்டு வரேன்” என்றாள்.

அங்கே நிலவிய பதற்றமான சூழ்நிலையை கவனித்த இவான் “சித்தப்பா! சித்தி மேலே கோபப்படாதீங்க” என்றான் பாவமாக.

“இல்ல சிங்கப்பையா! பயப்படாதே! நான் கோவமா இல்ல” என சொன்ன ஆர்யன், வெளியே சென்ற ருஹானாவின் பின்னே நடந்து உணவகத்தின் வாசலுக்கு வந்தான்.

“நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டே” என்ற ஆர்யனின் கனிவான வார்த்தைகளை இடைமறித்த ருஹானா “போதும்! என் வாழ்க்கைல குழப்பம் ஏற்படுத்தாதீங்க. எங்க போனாலும் உங்க கோபத்தை கூடவே கூட்டிட்டு வந்திடுறீங்க! உங்க கோபமும் வெறுப்பும் எல்லை மீறிபோகுது. என்னால தாங்க முடியல. இதுக்கு மேலயும் என்னால பொறுத்துக்க முடியாது” என கோபமாக இரைய தொடங்கியவள் கண்கலங்கி முடித்தாள்.

தன் போனை எடுத்து குறுஞ்செய்தியை அவன் முன்னே நீட்டி காட்டி “இதுக்கு மேலயும் எனக்கு என்ன துன்பம் கொடுக்க போறீங்க?” என ஆவேசமாக கேட்டாள்.

ரஷீத்திற்கும் ஹுசைனுக்கும் நடந்த செய்தி பரிமாற்றத்தை ரஷீத் போனில் இருந்தே எடுக்கப்பட்ட படத்தை பார்த்ததும் ஆர்யன் அதிர்ந்து நின்றுவிட்டான்.

“இன்னும் நான் ஏன் உங்ககூட இருக்கேன்னு என்னை வருத்தப்பட வச்சிடாதீங்க” என அவள் சொல்ல, அந்த வார்த்தைகள் அவனை பலமாக தாக்க, அங்கிருந்து அகன்று காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

——-   

சொந்த அண்ணனால் தனக்கு மரண காயம் ஏற்பட்ட விவரங்களை வாகிதா பகிர்ந்துக்கொள்ள, ருஹானா மிகவும் வருந்தினாள்.

“எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிச்சிட்டே, வாகிதா! நீ ரொம்ப பாவம்” என ருஹானா சொல்ல “எல்லாம் கடந்து வந்துட்டேன், ருஹானா. வாசிமுக்கு தான் நன்றி சொல்லணும். அவர் மட்டும் இல்லனா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியல” என்றாள் வாகிதா.

“நமக்கு பின்னாடி நம்பிக்கையான ஒருத்தர் பக்கபலமா இருக்குறது அவசியம், வாகிதா. அல்லாஹ்க்கு நன்றி. கமிஷனர் வாசிம் போல நேர்மையானவர் உன்கூட இருக்கறதுக்கு”

“அவர் ஒரு விநாடி கூட தன்னோட உயிரை பற்றி கவலைப்படாம ஆபத்துல இருந்து என்னை காப்பாத்தினார்”

“அதிகமா அன்பு வச்சிருந்தா தான் இப்படி செய்ய முடியும், வாகிதா”

வாசிமை நினைத்து பெருமிதம் கொண்ட வாகிதா கன்னம் சிவக்க “வழக்கம்போல் நானே அதிகமா பேசிட்டேன். நீ சொல்லு. ஏன் நீ இங்க இருந்து மாளிகைக்கு போனே?” என ருஹானாவின் புறம் திசை திருப்பினாள்.

“இவானுக்காக தான். ஆனா அதுக்கு அப்புறம் நடந்த நிகழ்ச்சிகள்…. நான் தப்பான முடிவு எடுத்துட்டேனான்னு எனக்கே சந்தேகம் வர வச்சிடுச்சி” என ருஹானா சற்று தொலைவில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இவானை பார்த்துகொண்டே சொன்னாள்.

———-

“நான் ஒரு இதயத்தை புண்படுத்திட்டேன், சையத் பாபா” என மிக வருத்தமாக ஆர்யன் சொல்ல, சையத் கேட்டுக்கொண்டிருந்தார்.

“உடல் காயத்தை விட மனக்காயம் ஏற்படுத்துறது மோசம்ன்னு நான் உணர்ந்துட்டேன், சையத் பாபா. அதை எப்படி சரிசெய்ய போறேன்னு எனக்கு தெரியல”

“இதயம் கண்ணாடி போல மகனே! அது உடைத்தால் எங்க நொறுங்கும், எத்தனை சேதாரம் ஆகும்ன்னு கணிக்கவே முடியாது”

“அதுக்கு தீர்வு இல்லயா, சையத் பாபா?”

“துரதிருஷ்டவசமா அந்த வலிக்கு என்கிட்டே மருந்து இல்ல, ஆர்யன். சிலசமயம் நீ உடைத்த இதயத்தை ஒட்ட வைக்க அன்பான சில வார்த்தைகளே போதும். ஆனா பலசமயங்கள்ல நீ பொறுமையா காத்திருந்து தான் ஆகணும். உனக்கு தரப்படும் தண்டனைகளை ஏற்றுக்க தான் வேணும்”

‘எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். எதையும் தாங்கிக் கொள்வேன். அவள் என்னை மன்னித்தால் அதுவே எனக்கு போதும்’ என ஆர்யன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

——–

காரில் சாய்ந்தபடி ஆர்யன் வீட்டையே பார்த்தபடி நிற்க, அவனை பார்த்தபடியே காரில் இருந்து இறங்கிய வாசிம் “நீ ஏன் இங்க நிற்கிற? ருஹானாவை தொல்லை செய்றீயா?” என கடுமையான தோரணையோடு விசாரித்தான்.

“உங்க வேலையை மட்டும் பாருங்க கமிஷனர்! நான் எங்க போறேன், என்ன செய்றேன்னு கண்காணிக்காதீங்க” என ஆர்யன் சொல்லிக் கொண்டிருக்கும்போது போனில் பேசியபடி கேட்டை திறந்துக்கொண்டு ருஹானா வெளியே வந்தாள்.

“சரி தன்வீர். வாசிம் இங்க வந்துட்டார். நான் பேசிக்கறேன்” என்று போனை நிறுத்திய ருஹானா இருவரின் அருகே வந்தாள்.

“நீங்க என்கூட ஏதோ பேசணும்னு தன்வீர் சொன்னான்” என ருஹானா வாசிமிடம் பேசியபோதும் ஆர்யன் பக்கம் பார்வையை திருப்பவில்லை.

“ஆமா!” என்று வாசிம் வீட்டு வாசலுக்கு வாசிம் நகர, ருஹானாவும் உடன் சென்றாள். 

அவர்கள் பேசுவது ஆர்யனுக்கு கேட்காத தூரம் சென்றதும் “ருஹானா! நான் சொல்ல போறதுக்கு எந்த ஆதாரமும் இல்ல. ஆனா உங்களை எச்சரிக்க வேண்டியது என்னோட கடமை” என சொன்ன வாசிம் ஆர்யனை திரும்பி பார்த்தான். 

ருஹானாவும் திரும்பி பார்க்க தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என ஆர்யனும் உணர்ந்து கொண்டான்.

“இவன் மிக ஆபத்தானவன். உங்களுக்கு நடந்ததுக்கு எல்லாம் இவன் தான் காரணம்னு என்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா என்கிட்டே ஆதாரம் இல்ல. அது மட்டும் இருந்தா இப்போ கூட இவனை தூக்கி ஜெயில்ல போட்டுருவேன்” என வாசிம் கடுப்பாக சொன்னான்.  

ருஹானா தன் கையில் இருந்த போனை அழுத்தி பிடித்துக் கொண்டாள். அதில் வாசிம் தேடும் ஆதாரம் இருப்பதை உணர்ந்தவள் ஆர்யனை திரும்பி உற்று நோக்கினாள். ஆர்யன் புரியாது பார்த்து நின்றான்.

(தொடரும்)

Advertisement