Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 64

இருட்டில் தடுமாறி கீழே கிடந்த ருஹானா, தான் எழுந்து கொள்ள கைநீட்டியபடி நின்ற ஆர்யனை பார்த்தபடியே தன் நடுங்கும் கையை அவன் கைக்குள் வைத்தாள்.

அவள் விரல்களை மென்மையாக பற்றிய ஆர்யன் மெல்ல அவளை எழுப்பினான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, “உனக்கு ஒன்னும் இல்லயே?” என அவன் கேட்க “இல்ல, நான் நல்லா இருக்கேன்” என அவள் பதிலளித்தவள், இன்னமும் தன் கை அவன் கைப்பிடிக்குள் இருப்பதை பார்த்து படக்கென உருவிக் கொண்டாள்.

காலியான தன் உள்ளங்கையை சில நொடிகள் பார்த்திருந்த ஆர்யன், கையை மடக்கிக்கொண்டு, ருஹானாவிற்கு “மூச்சை இழுத்துவிடு. ரெண்டு நிமிடத்துல பதற்றம் சரியாகிடும்” என ஆலோசனை சொன்னான்.

“போன் கீழே போட்டுட்டேன். தேடும்போது டீப்பாயில இடிச்சி பூச்சாடி விழுந்து உடைந்துடுச்சி. விளக்கு அணையவும்…..” என்றவள் ‘பயந்திட்டேன்’ என சொல்லாமல் நிறுத்திக்கொண்டாள். 

அவள் விரலில் இரத்தம் வருவதை கவனித்த ஆர்யன் “உன் விரலில் காயம் பட்டிருக்கு” என்றான்.

“வாஸ் கிழிச்சிருக்கு. பரவால்ல. கிச்சன்ல பேண்ட்எய்ட் இருக்கு. நான் போட்டுக்கறேன்” என ருஹானா நகரப் போக, அவள் கைகளை பற்றி தடுத்த ஆர்யன், பற்றிய கைகளை விடாமல் போன் டார்ச்சின் வெளிச்சத்தில் அவளை உள்ளே அழைத்துப் போனான்.

டப்பாவில் மருந்துப்பட்டியை அவள் தேடி எடுக்க, பாதி இருட்டில் தெரிந்த அழகோவியத்தை பார்த்து அவன் ரசித்து நின்றான். அவள் ஒரு கையால் அதை போட திணற, தன்னிடம் தருமாறு கையை நீட்டினான்.

“இல்ல.. நானே போட்டுக்கறேன்” என அவள் மறுக்க, மீண்டும் அவள் முகம் கண்டு அவன் ரசிக்க, அவள் மேலும் தடுமாறுவதை பார்த்து தானே அவள் கையிலிருந்து வாங்கி அதை பிரித்து விரலுக்கு சுற்றி ஒட்டிவிட்டான் மெதுவாக.

இப்போது வியந்து அவன் மேல் பார்வையை நிறுத்தி இருந்தது அவள்.

ருஹானா போனை பிடிக்க, மெல்ல அழுத்தி ஒட்டி அவன் நிமிர கண்கள் சந்தித்தன. ஒளி பெற்றன.

“நானே சமாளித்து இருப்பேன். நீங்க வந்திருக்க தேவையில்ல” என அவள் சொல்ல “அது எனக்கு தெரியும். ஆனா இவான் பயந்திடுவானேன்னு பார்க்க வந்தேன்” என அவன் சொல்ல, கண்கள் மீண்டும் நேர்கோட்டில்.

களவு போன இதயத்தை 

மேலும் மேலும் களவாடுகிறாள்…

களவு போன இதயமே

அவளிடமென்று அறிவாளா..?

இன்பமாய் அதை

பறிகொடுத்தவனும் உணர்வானா?

மின்சாரம் மீண்டு வர, இவர்களும் பார்வைகளை மீட்டுக்கொண்டனர்.

தன் கையிலிருந்த அவன் போனை அவள் நீட்ட, அதை வாங்கிக்கொண்ட ஆர்யன் வெளியே செல்ல நடக்க “சித்தப்பா!” எனும் குரல் ஒலித்தது.

“எப்போ வந்தீங்க? ஏன் என்னை பார்க்காம போறீங்க?”

“நீ ஏன் தூங்காம வெளிய வந்தே சிங்கப்பையா?”

“நீங்க எங்க போறீங்க, சித்தப்பா?”

ருஹானா வேகமாக அருகில் வந்தவள் “ஏன் தூங்கல நீ?” என கேட்க, இவான் “தூக்கத்துல லெமன் குக்கீஸ் சாப்பிடற மாதிரி கனவு வந்துச்சி. நான் முழிச்சிட்டேன். ஏதோ சத்தம் கேட்டது. பயந்துட்டேன்” என்றான்.

“பயப்படறதுக்கு எதுவும் இல்ல சிங்கப்பையா! நான் உன்கூட இருக்கேன்ல. பயப்படக்கூடாது. சரியா?” என ஆர்யன் கேட்க, இவான் சரியென்றான்.

“சரி நீ உள்ளே போய் படு அன்பே. தூக்கம் கெட்டு போய்டும்” என ருஹானா சொல்ல, “நாளைக்கு எனக்கு லெமன் குக்கீஸ் செஞ்சி தரீங்களா, சித்தி?” என கேட்டான்.

“கண்டிப்பா தேனே!” என ருஹானா சொன்னதும் “சித்தப்பா! நீங்களும் சாப்பிட வாங்க. சித்தி அருமையா செய்வாங்களே! உங்களுக்கும் பிடிக்கும் தானே!” என இவான் அழைக்கவும் ஆர்யன் ருஹானாவை பார்த்தான்.

அவளும் அவனை பார்க்க “எனக்கும் பிடிக்கும்!” என அவள் கண்களை பார்த்து ஆர்யன் சொன்னதும், அவனிடமிருந்து பார்வையை திருப்பிய ருஹானா, இவானிடம்  “நீ போய் படு” என்றாள்.

“சித்தப்பா! நீங்க என்னை தூங்க வைக்கறீங்களா?” என இவான் கேட்க மீண்டும் ருஹானா முகம் பார்த்தான் ஆர்யன்.

ருஹானா தலையசைக்க, இவான் வந்து அவன் கரம் பற்ற அவனோடு உள்ளே சென்றான், ஆர்யன். 

இவானை படுக்க வைத்து போர்த்திவிட்டு ஆர்யன் அருகே அமர, இவான் மறுபடியும் கேட்டான்.

“இங்கயே தூங்குங்க சித்தப்பா”

“இன்னைக்கு முடியாது, சிங்கப்பையா! ஆனா உன்னை விட்டு தூரமா போக மாட்டேன். வெளியே தான் உங்க காவலுக்கு நிற்பேன்”

ருஹானா கதவோரம் வந்து நின்று பார்த்தாள்.

“மறுபடியும் சொல்லு இவான்! சோசியல் சர்வீஸ்ல இருந்து வந்து கேட்டா என்ன சொல்வே?”

“நானும் சித்தியும் இந்த வீட்ல தங்கி இருக்கோம். இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

“இன்னும் ஒன்னு முக்கியமானது இருக்கே, சிங்கப்பையா!”

“என்ன சித்தப்பா? நான் மறந்திட்டேனே!” என இவான் அழகாக யோசிக்க, ருஹானாவும் யோசித்தாள்.

“உன் சித்தி உன்மேல அன்பா இருக்காங்க. நீயும் அவங்க மேலே அன்பு செலுத்துறே. அவங்க உன்னை விட்டு எப்பவும் போக மாட்டாங்க”

இதை கேட்ட ருஹானா திகைத்துபோய் நெக்குருகி நின்றாள். இப்படி ருஹானாவும் இவானும் பிரியாமல் இருக்க பாடுபடுபவன் எதற்கு தன்னை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டான் என்று அவளுக்கு மண்டை குழம்பியது. 

“சித்தி என் மேல அன்பா இருக்காங்க. நானும் சித்தியை லவ் பண்றேன். என் சித்தி என்னை விட்டு எங்கயும் போக மாட்டாங்க. என்கூடவே இருப்பாங்க” என்று நிறுத்தி நிறுத்தி சொன்ன இவான் “நான் உங்களையும் லவ் பண்றேன், சித்தப்பா” என்றான் நேசமுடன்.

ஆர்யனின் புண்பட்ட மனதை மயிலிறகால் வருடியது, இவானின் அன்பு சொற்கள். “சரி நீ தூங்கு” என அவனை தூங்க வைத்தபின் வெளியே செல்ல, அங்கே நின்ற ருஹானாவிற்கு குட்நைட் சொன்னவன் அவள் பதிலை எதிர்பாராமல் வெளியே நடந்தான். 

         ——–

காலையில் வெளி இரும்பு கதவை திறந்த ருஹானா, ஒரு பை நிறைய எலுமிச்சை பழங்கள் அதில் மாட்டப்பட்டிருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் என்றாலும் அதை யார் செய்திருப்பார்கள் என யூகித்தவள் சாலையை நோக்க, அங்கே காரில் அமர்ந்தபடி ஆர்யன் இவளை தான் பார்த்திருந்தான்.

அவனுக்கு கோப முகம் காட்டியவள், பையை மட்டும் தவறாமல் எடுத்துக்கொண்டு கதவடைத்து உள்ளே சென்றாள்.

——

காலை உணவு தயாரிப்பு முடிந்து இவானும் சித்தியும் மேசையில் எல்லாம் எடுத்து வைக்க “செல்லம்! பாரேன்! நாம எக்ஸ்பர்ட் ஆகிட்டே வரோம். லெமன் குக்கீஸ் போனமுறையை விட இப்போ இன்னும் நல்லா வந்திருக்கு” என சொல்லிக்கொண்டே குக்கீஸ் தட்டை எடுத்து வந்தவள் மேசையை பார்த்து திகைத்தாள்.

“ஏன் அன்பே! மூணு தட்டு வச்சிருக்கே?”

“சித்தப்பா சாப்பிட வந்தாலும் வருவாங்க சித்தி. நேத்து சொன்னாங்களே, லெமன் குக்கீஸ் பிடிக்கும்னு. நாம நிறைய நல்ல உணவு செஞ்சிருக்கோம். சித்தப்பாவும் எல்லாம் சாப்பிடுவாங்க தானே!”  

இவானுக்கு ஏமாற்றம் தர விரும்பாத ருஹானா “சரி! போய் கூட்டிட்டு வா” என்றாள்.

கார் அருகே கைகளை கட்டிக்கொண்டு சாலையை கண்காணித்துக் கொண்டிருந்த ஆர்யன், “சித்தப்பா!” என அழைத்தபடி இவான் ஓடிவருவதை பார்த்து அவனும் அவனை நோக்கி ஓடி வந்தான்.

“என்ன நடந்தது இவான்?” பதட்டமாக கேட்டான்

“நீங்க எங்க கூட காலை உணவு சாப்பிட வாங்க. லெமன் குக்கீஸ் செய்துருக்கோம். அப்புறமும் வேறயும் இருக்கு” ஆவலுடன் கூப்பிட்டான்.

வீட்டை நோக்கிய ஆர்யன் அங்கே ருஹானா தென்படாததால் “எனக்கு பசியில்ல சிங்கப்பையா! நீங்க சாப்பிடுங்க” என்றான்.

“கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க சித்தப்பா! சித்தியும் உங்களுக்காக காத்திருக்காங்க” 

காரிலிருந்த போன் அடிக்க “நீ இங்கயே இரு” என இவானிடம் சொல்லி சாலையை கடந்து சென்று போனை எடுக்க, கரீமா அழைப்பு விடுத்திருந்தாள்.

ஆர்யன் அதை புறக்கணித்துவிட்டு இவானோடு உள்ளே சென்றான்.

——— 

“பார் சல்மா! இப்பவும் ஆர்யன் போன் எடுக்கல. அணைத்தும் வைக்கல. கொஞ்சம் முன்னே கூட பிசின்னு வந்தது. என் போன் மட்டும் எடுக்க மாட்றான்”

கரீமா வேக நடை நடக்க, சல்மா ஏளனமாக சிரித்தாள்.

“எங்க இருக்காங்க? ஏன் அவ்வளவு அவசரமா போனாங்க? ஒரே மர்மமா இருக்கு. ஒன்னும் புரியலயே சல்மா”

“ஆமா அக்கா! ஆர்யனை பின்தொடரவும் முடியல. என்ன செய்ய போறே அக்கா? எப்படி கண்டுபிடிப்பே”

கரீமா யோசிக்கும் நேரம் அம்ஜத் அங்கே வந்தான்.

“கரீமா.. கரீமா.. ஆர்யன் வந்திட்டானா?”

“இன்னும் வரல டியர்” எரிச்சலாக சொன்னாள்.

“ஆனா.. ஆனா நேத்தும் வரலயே. அவங்க ஏன் இன்னும் திரும்பல கரீமா?”

“எனக்கு தெரியாது” கோபத்தில் கத்தினாள்.

சல்மா அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பயந்து போன அம்ஜத்தை பார்த்த கரீமா நிதானித்தாள்.

“அம்ஜத் டியர்! அவங்க திரும்ப வராமலும் போகலாம். நாம என்ன செய்றது? அவங்களுக்கு ஏதாவது நடந்திருந்தா நமக்கு ஒன்னுமே தெரியாதே! நம்ம அமைதி கெட்டு போகுமா?’ என வில்லத்தனமாக வினவினாள்.

சல்மா ஆச்சரியமாக பார்க்க, அம்ஜத் தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தான்.

“ஆமா.. கெட்டுப் போகும்… நம்ம அமைதி கெட்டு போகும். ஆர்யன் திரும்பி வரலனா எல்லாம் போய்டும்.. ஆர்யன்.. இவான்…” என புலம்பியபடி அம்ஜத் தலையில் கை வைத்து கொள்ள, கரீமா சல்மாவை பார்த்து ‘எப்படி என் சாமர்த்தியம்!’ என புன்முறுவல் செய்தாள்.

——–   

“சித்தி எலுமிச்சை பழம் பிழிந்து தருவாங்க. நான் அதை மாவுல கலக்குவேன். அப்புறம் சித்தி எனக்கு மாவு உருண்டை தருவாங்க. நான் அதை இப்படி இப்படி உருட்டுவேன்” என சொல்லியபடி இவான் அழகாக செய்து காட்ட ஆர்யன் ரசித்து பார்த்தான்.

ஆர்யன் சாப்பிட்டு முடித்ததை ஓரக்கண் பார்வையில் கவனித்த ருஹானா எழுந்து வந்து ஆர்யனின் கோப்பையில் தேநீர் ஊற்ற, ஆர்யன் நிமிர்ந்து இறைஞ்சுதலாக அவளை பார்த்தான். உர்ரென முகத்தை வைத்திருந்த ருஹானா அவன் கண்களை சந்திக்கவில்லை, அருகருகே இருந்தும்.

‘இந்த வீடு நம்ம மாளிகை போல இல்ல. சின்னது தான். ஆனா அழகா இருக்கு. மாளிகை போல இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என இவான் பேசிக்கொண்டே இருக்க, தேநீரை ஊற்றிவிட்டு ருஹானா எதிரே போய் அமர்ந்தாள்.

அவளை பார்வையால் ஆர்யன் தொடர “அழகா இருக்கு தானே, சித்தப்பா? நீங்களும் இன்னைக்கு எங்களோட இங்க தங்குவீங்கன்னு எனக்கு ஆசையா இருக்கு” என இவான் கூப்பிட, ஆர்யன் பதில் சொல்லவில்லை. ருஹானா ஆர்யனை கோபமாக பார்த்தாள்.

“நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன், சித்தப்பா. கை கழுவிட்டு வரேன். அதுக்குள்ளே போயிடாதீங்க” என இவான் கேட்டுக்கொள்ள ஆர்யன் தலையாட்டினான்.

இவான் சென்றதும் மௌனமாக நிமிடங்கள் கழிந்தன.

“என்னை இங்க சாப்பிட கூப்பிட்டது உனக்கு எவ்வளவு சிரமமா இருந்திருக்கும்னு எனக்கு தெரியும்” என்று இன்னும் ஏதோ சொல்ல போன ஆர்யனை மறித்து ருஹானா “எதுவும் மாறல. நீங்க இங்க இருக்குறதுக்கு காரணம் இவான் வருத்தப்படக்கூடாதுன்னு தான்” என முகத்தில் அடித்தாற்போல சொன்னாள்.

ஆர்யன் திகைத்து பார்க்க அவள் முகத்தை திருப்பிக்கொண்டு தேநீர் அருந்த ஆரம்பித்தாள்.

இவான் வந்ததும் விடைப்பெற்ற ஆர்யன் “காலை உணவுக்கு நன்றி, சிங்கப்பையா. ரெண்டு பேருக்கும் நன்றி” என இருவரையும் பார்த்து சொல்ல “நீங்க வந்ததுல எங்களுக்கும் மகிழ்ச்சி சித்தப்பா” என சம்பிரதாயமாக சொன்ன இவான், ருஹானாவை திரும்பி பார்த்து “சித்தப்பாவை நாளைக்கும் வர சொல்லலாமா சித்தி?” என கேட்டான்.

ருஹானா பதில் எதும் சொல்லாமல் விநாடிகள் கழிய, ஆர்யன் “என்னால வர முடியாது, அக்னி சிறகே! உங்களுக்கு பாதுகாப்பு தர நான் வெளிய நிற்கணும்” என்றான்.

“அப்போ அடுத்த நாள் வாங்க” என விடாது இவான் அழைத்தான்.

ஆர்யன் “பார்க்கலாம் இவான்! நீ இப்போ உள்ளே போ” என அனுப்பி வைத்தான்.

அவர்கள் கதவு மூடி உள்ளே சென்றதும் வெளியே நடந்த ஆர்யன் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டு போனை எடுத்து பார்த்தான்.

“ஆர்யன்! உன் அண்ணனுக்கு உடம்பு சரியில்ல. என்னால சமாளிக்க முடியல. நீ உடனே வா”

கரீமா அனுப்பியிருந்த செய்தியை படித்த ஆர்யன் வீட்டையும், காரையும் மாறி மாறி பார்த்தான்.

———

“அம்மா போனாங்க.. அப்பா போய்ட்டார்.. அக்ரம் போனான்.. தஸ்லீம் போனா.. எல்லாரும் போறாங்க…. நாம சந்தோசமா இல்ல” என ஒவ்வொரு வார்த்தையாக அம்ஜத் நடுங்கியபடி சொல்ல, ஆர்யன் அண்ணனை எப்படி சமாதானப்படுத்துவது என புரியாமல் அருகில் இருந்தான்.

சில மாதங்களாக அண்ணன் மன அமைதியுடன் இருந்ததும், நன்றாக பேசி சிரித்ததும் கவனித்த ஆர்யன் அவனுக்கு இனி இது போன்ற மனத் தாக்குதல் வராது என நிம்மதியுடன் இருந்தான். 

இப்போது அம்ஜத் மன பிறழ்வால் தவிப்பதை பார்த்த ஆர்யன் மனமும் துன்புற்றது.

“அண்ணா! இங்க பாருங்க! நான் உங்க பக்கத்துல தான் இருக்கேன். உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன். என்னை பாருங்க அண்ணா!” என ஆர்யன் தன்மையாக எடுத்துரைத்தும் அம்ஜத் பார்வையை திருப்பவில்லை. அவன் உடல் ஒரு நிலையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தது.

Advertisement