Advertisement

“இன்னொரு தடவை சிங்கப்பையா!…… சலாம் சொல்லத்தான் வந்தேன். எனக்கு வேலை இருக்கு. நான் போகணும்” என ஆர்யன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போன் அடித்தது.

“சொல்லு ரஷீத்!……. சரி!…. நான் வந்துட்டே இருக்கேன்” என சொல்லி போனை அடைத்தவன், ருஹானாவை பார்த்து “நான் ஆபீஸ் போகணும். இனிய உணவு!” என சொன்னான். அவளோ காது கேட்காதது போல இருந்தாள். 

உள்ளே எழுந்த கோபத்தையும், கடுப்பையும் அடக்கிக்கொண்டு,  ‘ருஹானாவிடம் இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுவதே முக்கிய குறிக்கோள்’ என உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டு அமைதி காத்தான். 

இவானிடம் “நான் சாயந்தரம் வரேன், இவான். நாம சேர்ந்து சாப்பிடலாம். சரியா?” என ஆர்யன் கேட்க, அவன் “சரி சித்தப்பா! என்றான்.

மீண்டும் ருஹானாவை நோக்கியவன் “எதும் தேவைன்னா எனக்கு கால் செய்” என்றான்.

லேசாக அவனை பார்த்தவள், பார்வையை திருப்பி வேறு எங்கோ பார்த்துக்கொண்டு “சரி, செய்றேன்” என்றாள்.

உள்ளே கொதிகலன் கொதித்தாலும் மிஷாலை ஆர்யன் கண்டு கொள்ளவே இல்லை.  

“இனிய உணவு!” என திரும்பவும் பொதுவாக சொல்லி ஆர்யன் செல்ல, ருஹானாவின் கடுகடுத்த முகத்தை பார்த்த மிஷாலுக்கு மறைந்த புன்னகை மீண்டது.   

நெருங்க முடியா தவிப்புடன்

நண்பனோடு கூடிக் கதைப்பதும்

எரிச்சலை அள்ளித் தெளிக்க…

வற்றாத அன்புடையான் 

வற்புறுத்தி அழைக்க…

அருகே நெருங்குகிறேன்.

அழகிய முகத்தின்

சுளித்த புருவங்கள்

விலகிட சொல்ல…

கோபம் கொண்டு

சிணுங்கும் மனதை அடக்கி

பொறுமையை பற்றுகிறேன்.

இனிதான நேரம் தானில்லை

இனிய உணவாவது ஆகட்டும்!

   ———

“இதோ ரஷீத்! எல்லா ஆவணங்களும் திரும்ப பிரிண்ட் எடுத்துட்டேன்”

“நன்றி சல்மா! ஆர்யன் கையெழுத்து போட்ட ஆவணங்கள் எப்படி காணாம போச்சின்னே தெரியலயே! அத்தனையும் முக்கியமான பத்திரங்கள்”

“ஒருவேளை பெருக்கறவங்க தெரியாம எடுத்து போட்டு இருப்பாங்களோ?”

“அவங்க அதெல்லாம் தொடக்கூட மாட்டாங்க. எதுக்கும் நான் இன்னொரு முறை தேடி பார்க்கறேன்”

சல்மா தன் கைப்பையில் லேசாக வெளியே தெரிந்த ஆவணங்களை மறைத்துக்கொண்டாள்.

அப்போது ஆர்யன் வேகமாக உள்ளே வர, சல்மா அவனை மயக்கும் புன்னகையுடன் வரவேற்க, ஆர்யன் அவளை பார்க்காமல் ரஷீத்திடம் கேட்டான்.

“எங்க போனது பத்திரங்கள்? என்கிட்டே இருந்து நீ தானே சைன் வாங்கி எடுத்துட்டு போனே ரஷீத்?”

“ஆமா ஆர்யன்! ஆனா திடீர்னு காணாம போய்டுச்சி. தேட நேரமில்ல. உடனே வங்கிக்கு அனுப்பணும். இப்போ புதுசா பிரிண்ட் எடுத்தாச்சி. நீங்க சைன் மட்டும் போட்டுடுங்க. அதுக்கு தான் உங்களுக்கு போன் செய்தேன்”

“சரி! அதுக்கு முன்னே நாம பேச வேண்டிய விஷயம் வேற இருக்கு” என ஆர்யன் சல்மாவை பார்க்க, புரிந்துக்கொண்டவள் “நான் என் ரூம் போறேன்” என சிரித்துக்கொண்டே வெளியே சென்றாள்.

“அக்கா! ஆர்யன் ஆபீஸ் வந்துட்டான். உன் ஆளை ரெடியா இருக்க சொல்லு” என சகோதரிக்கும் செய்தி சொன்னாள்.

“ரஷீத்! ஷாரிக் பற்றிய செய்திகளை விசாரிச்சிட்டே இருக்கு. அவன் என்ன வேணும்னாலும் செய்வான். மாளிகை காவலும் பார்த்துக்கோ”

“சரி ஆர்யன்! நீங்களும் மாளிகைல இல்ல. இவானும் அவன் சித்தியும் பாதுகாப்பா இருக்காங்க தானே?”

“ஆமா ரஷீத்! அது நான் பார்த்துக்கறேன்! அவங்களை விட்டு நான் வர முடியாது. என்னோட வேலையெல்லாம் நீ சமாளிச்சிக்கோ!”

அவர்கள் பேசுவதை சல்மா ஒட்டு கேட்டாலும் ஒரு விவரமும் தேறவில்லை.  

——-

மிஷாலுடன் கடைகளுக்கு சென்று தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு ருஹானாவும் இவானும் நடந்து வர, மிஷால் இவானை ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்தான்.

இவானும் மகிழ்வுடன் சம்மதிக்க ருஹானா மறுத்தாள்.

“இவான் செல்லம்! இன்னைக்கு அதிக நேரமாயிடுச்சி. நாம இப்போ வீட்டுக்கு போகலாம். நாளைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்” என அவன் ஆசைக்கு தடை போட மிஷால் அவளை யோசனையாக பார்த்தான்.

“நீ ஏன் வீட்டுக்கு போக பறக்கறே, ருஹானா? இன்னும் நீ அவனுக்கு பயப்படுறியா? அவன் கோபப்படுவான்னு நினைக்கிறியா? வெளிய போக உனக்கு தடை இருக்கா?”

“அப்படிலாம் இல்லயே! எங்க விருப்பப்படி நாங்க எங்கனாலும் போலாமே!”

“அப்போ வா! இவான் ஆசைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு போகலாம்”

மனமே இன்றி ருஹானா அவனோடு நடந்தாள்.

——

கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆர்யன் தன்னை ஒரு கார் பின்தொடர்வதை கவனித்துவிட்டான். போனை எடுத்து ரஷீத்துக்கு அழைத்தான்.

“ரஷீத்! நான் சொன்னது சரியாகிடுச்சி. ஷாரிக் கையாள் என் பின்னாடி வரான்”

“ஓ! அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா? நான் இப்பவே நம்ம ஆட்களை அனுப்புறேன். நீங்க எங்க இருக்கீங்க?”

“நான் புதுவீட்டுக்கு பக்கம் வந்துட்டேன். நான் அவனை ஏமாத்திட்டு வேற பக்கம் போய்க்கிறேன். நீ அங்க கவனமா இரு” 

போனை வைத்துவிட்டு முன்கண்ணாடி வழியாக பின்னால் நோக்கினான். அதே கார் அவனை தொடர்ந்து வரவும் வேகத்தை அதிகரித்தான்.

போனை எடுத்து ‘இவான் சித்தி’ என இருக்கும் தொடர்பில் அழைப்பு பட்டனை அழுத்தினான்.

அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருக்க மறுபக்கம் அழைப்பு ஏற்கப்படவில்லை.

பதட்டம் அடைந்த ஆர்யன், பின் தொடர்ந்த காரை ஒரு சிக்னலில் மாட்டிவிட்டுவிட்டு திறமையாக மற்ற வண்டிகளுக்கு இடையே புகுந்து இவான் வீடு நோக்கி காரை செலுத்தினான். 

சாலையின் முன்னே அவன் பார்த்த காட்சியில் கோப மிகுதியில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டான். ருஹானாவும் இவானும் சாலையில் நடந்துக் கொண்டிருக்க, மிஷாலும் கைகளில் இரு பைகளுடன் அவர்கள் உடன் இருந்தான்.

அவர்கள் மீதான அக்கறையா? மிஷால் அவர்களோடு இருப்பது குறித்து பொறாமையா? எதிரி சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் இவள் அவர்களின் குலக்கொழுந்தை பாதுகாப்பில்லாமல் நடத்தி செல்வதா? எல்லாம் சேர்ந்து அவனை உலுக்கி எடுக்க, சில விநாடிகள் நின்று நிதானித்தவன் காரை செலுத்தி அவர்கள் முன்னால் நிறுத்தினான்.

மூவரும் காரை பார்த்து நடக்காமல் நின்றுவிட, ஆர்யன் காரில் இருந்து இறங்கிகொண்டிருக்கையில் மிஷால் “என்னவாம் இவனுக்கு?” என கேட்டான்.

வேகமாக அவர்கள் முன்னே வந்து நின்ற ஆர்யன், மிஷாலை தீவிழி விழித்தான். ருஹானாவிடம் “என்ன நடந்துட்டு இருக்குன்னு உனக்கு சொன்னேனே! வெளிய போகாதேன்னு சொல்லியும் இவானையும் கூட்டிட்டு வந்துருக்கே! அபாயம் பற்றி தெரிஞ்சும் அத்தனை அலட்சியமா உனக்கு? போனும் எடுக்க மாட்றே!” என பொழிந்தான்.

இவான் வருத்தமாக பார்க்க, மிஷால் “குரலை உயர்த்தி பேசாதே!” என்று ஆர்யனை பார்த்து சொன்னான்.

ஆர்யன் அவனை பார்த்து பதில் சொல்லும் முன்னே “விடு மிஷால்!” என்றவள், ஆர்யனிடம் “சாரி! கடைக்கு போனோம். சீக்கிரம் திரும்பி இருக்கணும்” என தணிவாக சொன்னாள்.

“இது விளையாட்டு இல்ல! மன்னிப்பு கேட்கறதால எந்த பயனும் இல்ல. நினைச்ச நேரத்துக்கு வெளிய போகக் கூடிய நிலைமை இப்போ இல்ல” என கடிந்தவன், மிஷாலிடம் இரு பைகளையும் கேட்டு கைகளை நீட்டினான், ‘இது என் குடும்பம், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல.

முறைப்பு பார்வைகளை இருவரும் பறிமாறிக்கொள்ள பைகளும் கரம் மாறின.

ஆர்யன் அவற்றை டிக்கியில் வைக்க, ருஹானா “நான் உனக்கு அப்புறம் போன் செய்றேன்” என மிஷாலிடம் சொல்ல “சரி, கவனமா இரு!” என அவன் சொன்னான்.

இவானை கூட்டிக்கொண்டு பின்னிருக்கையில் ருஹானா அமர, ஆர்யன் அவர்களை வீடு சேர்த்தான்.

வாசல் வரை ஆர்யன் பைகளை தூக்கிக்கொண்டு வர, இவானை வீட்டினுள் அனுப்பிய ருஹானா திரும்பி ஆர்யனை பார்த்து “நீங்க இறங்கி எங்க கூட வரணும்னு அவசியம் இல்ல” என்றாள்.

“நீங்க பத்திரமா வீட்டுக்குள்ள போயிட்டீங்களான்னு எனக்கு பார்க்கணும்”

“எப்பவும் என்னை சங்கடப்படுத்த தான் எல்லாம் செய்வீங்க, இல்லயா?” 

குரலை உயர்த்தாமல் அவள் கோபமாக கேட்க, அவன் பரிதாபமாக பார்த்தான்.

“எப்போலாம் உங்க மேல நான் நம்பிக்கை வைக்கிறேனோ…. எனக்கு கெடுதலா எதும் செய்ய மாட்டீங்கன்னு நம்புறேனோ… அப்போலாம் அதுக்கு எதிர்மாறா செய்றீங்க! இன்னைக்கும் அதான் செஞ்சீங்க. மிஷால் முன்னாடி நீங்க என்னை எப்படி நடத்தினீங்கன்னு கொஞ்சமாவது யோசித்தீங்களா?”

“உங்களை பாதுகாக்க தான் நான் முயற்சி செய்றேன். நீ நினைக்கிறதை விட ஆபத்து அதிகமா இருக்கு. நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கற?”

அவனிடமிருந்து இரு பைகளையும் பறித்தவள் “எனக்கு உங்க பாதுகாப்பு தேவை இல்ல. எங்களை விட்டு நீங்க விலகி இருந்தா போதும்” என்று கடுமையாக சொல்லி உள்ளே போய்விட்டாள்.

ஆர்யனுக்கு எல்லா பக்கமும் சூழ்நிலைகள் அவனை கட்டு மீற வைக்க, அவனின் புதிய பொறுமைக்கு பலவித சோதனைகள் வந்தாலும் இந்த முறை அமைதி நடவடிக்கைகளே எடுக்கவேண்டும் என்ற மன உறுதியில் இருந்தான்.  

    ——–

இவானை தூங்க வைத்துவிட்டு வரவேற்பு அறைக்கு வந்த ருஹானா, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க அமர்ந்தாள். ஒரு வரி கூட படிக்க முடியாமல் அவளது சிந்தனை எங்கோ இருக்க, புத்தகத்தை மூடி வேறுபக்கம் பார்த்து வெறித்தாள்.

அப்போது மின்சாரம் தடைப்பட அவளை சுற்றிலும் இருட்டு சூழ்ந்தது. இருளுக்கு அஞ்சும் ருஹானா தட்டு தடுமாற கையில் இருந்த புத்தகமும், மடியில் இருந்த அவள் போனும் கீழே விழுந்தது. தரையில் அமர்ந்து தடவியவள் கைகளுக்கு எதுவும் மாட்டவில்லை. மாறாக டீப்பாயில் இருந்த நீர்க்குடுவையை தட்டி விட்டு விட்டாள்.

தவழ்ந்தபடியே தரையை தடவ விரலில் கூர்மையான எதுவோ குத்திவிட்டது. “அஹ்!” விரலை பிடித்தவள் வாராண்டவை நோக்க திரைக்கு பின்னே வெளியே ஒரு உருவம் இருட்டில் தெரிந்தது. லேசான நிலவொளியில் அந்த உருவம் கதவை திறந்து உள்ளே வருவது நிழலுருவமாக தெரிந்தது.

உடனே அவளுக்கு ஆர்யன் அபாயத்தை பற்றி எச்சரித்தது அவளின் நினைவுக்கு வந்தது. “இவான்!” என சொன்னவள் அவனை காக்க அவன் அறைக்கு செல்ல முயன்றாள். ஆனால் அச்சத்தால் அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை.

இருட்டுருவம் கையில் கைபேசி விளக்குடன் அருகே வரவும், மிகவும் கலவரமான ருஹானா நடுங்கி போனாள். அவளுக்கு வேகமாக மூச்சிரைத்தது. 

முகத்தில் வெளிச்சம் அடித்து தன்னை காட்டிக்கொண்ட ஆர்யன், ஆதூரம் மிகுந்த குரலில் “பயப்படாதே! நான் தான்” என்றான்.

கீழே அமர்ந்திருந்த ருஹானா உயிர் மீண்ட நிம்மதியில் கண்கலங்க, அவள் பிடித்துக்கொண்டு எழுவதற்காக ஆர்யன் அவளை நோக்கி கையை நீட்டினான்.

(தொடரும்)

Advertisement