Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 63

ஆர்யனை வெளியே நிறுத்தி ருஹானா கதவடைத்து உள்ளே செல்ல அவன் கோபம் அத்துமீறியது.

அவள் தெரிந்து செய்கிறாளா? கோப மிகுதியில் தன்னையறியாமல் செய்கிறாளா? அர்ஸ்லான் மாளிகையில் அவளை வெளியே நிறுத்தியதற்கு பழி வாங்குகிறாளா?

கைப்புண்ணில் இருந்து கண்ணாடியை அகற்றியவள், அவன் மனக்காயத்தை  கிளறிவிட்டாள்.

ஆர்யன் கதவை தட்ட கையை ஓங்க, அவனது குற்ற உணர்வும் ருஹானாவை அவன் கடுமையாக நடத்திய விதமும் அவனை கட்டிப்போட்டது. 

மௌனமாக வந்து காரில் அமர்ந்து கொண்டவன் ரஷீத்துக்கு அழைத்தான்.

“மாளிகையோட காவலை அதிகப்படுத்து, ரஷீத். எப்பவும் ஒரு கண் அங்க வச்சிக்கோ. அந்த ஷாரிக் எப்போ என்ன செய்வான்னு நமக்கு தெரியாது. விழிப்போட இருக்கணும்”

“நீங்க கவலைப்படாதீங்க, ஆர்யன். நான் கவனமா பார்த்துக்கறேன். மாளிகைல பாதுகாப்பு நல்லா இருக்கு”

“இவான் சித்திக்கு யார் தகவல் தந்ததுன்னு கண்டுபிடிச்சியா?”

“இன்னும் இல்ல”

——-

அர்ஸ்லான் மாளிகையில் சகோதரிகள் இருவரும் தூங்க செல்லாமல் விழித்திருக்க, என்ன நடக்கிறது என புரியாமலும் முழித்திருந்தனர்.

“அவங்க ரெண்டு பேரும் போனா போகட்டும். இவன் ஏன் பின்னாடியே போறான்?” என சல்மா புலம்ப, “ஒரு தகவலும் தெரியலயே!” என கரீமா புலம்ப, அவள் போன் அடித்தது.

“மேம்! என்னால ஆர்யன் சாரை கண்டுபிடிக்க முடியல. நாளைக்கு காலைல மாளிகையில இருந்து கிளம்புவார் தானே! அப்போ பின்னால போய் எங்க இருக்காங்க, என்ன விஷயம்ன்னு கண்டுபிடிச்சி உங்களுக்கு சொல்றேன்”

“சரி! இந்த முறையும் கோட்டை விட்டுடாதே” என சொல்லி கரீமா போனை வைத்தவள் “கவலைப்படாதே சல்மா! நாளைக்கு எல்லாம் தெரிஞ்சிடும்” என்றாள்.

———

இரவில் இவானுக்கு பால் எடுத்துக்கொண்டு வந்த ருஹானா, வரவேற்பு அறையின் பெரிய கண்ணாடி ஜன்னலின் திரையை அகற்றி வெளியே பார்த்தாள்.

எதிரே நின்ற காரில் அமர்ந்து ஆர்யன் கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு இருப்பது அதன் வெளிச்சத்தில் தெரிந்தது.

பாலை டீப்பாயில் வைத்துவிட்டு கோபநடை நடந்து வெளியே வந்தாள். அவள் வருவதை பார்த்ததும் ஆர்யனும் காரில் இருந்து இறங்கி அவளை எதிர்கொண்டான்.

“இங்க ஏன் இருக்கீங்க? நான் இவானை நல்லா பார்த்துக்க மாட்டேன்னு சந்தேகப்படுறீங்களா?”

ஆர்யன் மௌனமே சாதித்தான்.

“பயப்பட அவசியம் இல்ல. இவான் என்கிட்டே பாதுகாப்பா இருக்கான்.. உங்க கூட இருக்கறதை விட..”

“உனக்கு தெரியாத விஷயங்கள் இருக்கு” என ஆர்யன் தொடங்க “கண்டிப்பா இருக்கும். என்ன அது? இல்ல நான் எந்த கேள்வியும் கேட்க கூடாதா?” என அவளிடம் சொல்லாமல் அவர்களை இங்கே கூட்டி வந்த கோபத்தில் கேட்டாள்.

“ப்ச்!’ என்று சலித்தவன் “உங்கள பாதுகாக்க தான் நான் இருக்கேன்” என்றான்.

“யார்கிட்டே இருந்து?”

“என்னோட ஒரு ஆபத்தான எதிரி ஷாரிக். அவன் இத்தனை நாள் வெளிநாட்டுல இருந்தான். இப்போ அவன் அகாபா வந்துருக்கான். என்னை பழிவாங்க… என்னையும் என்னை சார்ந்தவங்களையும் துன்புறுத்த… சமயம் பார்த்துட்டு இருக்கான். நீங்க பத்திரமா இருக்கணும்னு தான் நான் காவலுக்கு இருக்கேன்”

“இந்த எல்லா காரணங்களுக்காகவும் தான் இவான் உங்களைவிட என்கிட்டே இருக்கறது பாதுகாப்புன்னு நான் சொல்றேன்” வெடுக்கென சொல்லிவிட்டு ருஹானா உள்ளே செல்ல, ‘என்னால் இவானுக்கு ஆபத்து வரும் என்று இவள் என்னை குறை சொல்கிறாளா?’ என ஆர்யன் அவளை பார்த்து நின்றான்.

—— 

தன்வீர் மிஷாலின் உணவகத்துக்கு சாப்பிட வந்தவன், அவன் சுரத்தில்லாமல் இருப்பதை பார்த்து காரணம் விசாரித்தான். எதுவும் சொல்லாமல் மிஷால் மழுப்ப “நீ ருஹானாவை காதலிக்கறே ன்னு அவளோட வளர்ப்பு பூனை பமுக் கூட தெரிஞ்சி வச்சிருக்கு. நீ என்கிட்டே மறைக்காதே” என தன்வீர் கிடுக்கி பிடி போட்டான்.

“அப்படிலாம் எதுவும் இல்ல, தன்வீர். அவ ரொம்ப பாவம். சின்ன வயசுல நிறைய இழப்புகளை பார்த்துட்டா. இப்பவும் அவ கிட்டே இருந்து எந்த தகவலும் வரல. அதான் எனக்கு கவலையா இருக்கு”

“அவ்வளவு தானா? மனசை திறந்து உண்மையை சொல்லு, மிஷால்”

“நீ நினைக்கிற மாதிரி இல்ல, தன்வீர். ருஹானா மேல எனக்கு அக்கறை இருக்கு. அவ ரொம்ப நல்லவ. அவளுக்கு எதுலயும் சிறந்தது தான் கிடைக்கணும். எப்பவும் அவ மகிழ்ச்சியா இருக்கணும். அவ்வளவு தான். வேறேதும் இல்ல”

“அதானே.. இதானே காதல்! இதை ஏன் மறைக்கிறே, மிஷால்?”

“நான் அப்படி யோசிக்கல. இதோட நிறுத்து தன்வீர்”

“சரி மிஷால்! நாம வேற சமயம் இதை பத்தி பேசுவோம். நீ ஏன் ருஹானா போன் செய்யணும்னு எதிர்பார்க்கறே? நீயே கால் செய்யேன்” என சொல்லி தன்வீர் விடைபெற, மிஷால் யோசிக்கலானான்.

——–

“என்ன சல்மா? எதும் செய்தி உண்டா?”

“அக்கா! ஆர்யன் ஆபீஸ் கூட வரல. காலைல ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதைக்கூட ரத்து செய்திட்டான்”

“டாமிட்! என்னோட ஆள் அங்க காத்துட்டு இருக்கான். ஆர்யன் வந்தா தானே அவனை பின்தொடர்ந்து போய் அவங்களை எங்க தங்க வச்சிருக்கான்னு பார்க்க முடியும்?”

“அவன் தான் வரலயே அக்கா!”

“இந்த முறையும் எனக்கு தெரியாம அவன் ஏதாவது செஞ்சான்னா என்னால பொறுத்துக்க முடியாது. அவன் என்ன செய்றான்னு எனக்கு தெரியணும். ஆபீஸ்ல தகவல் கிடைக்குதான்னு பாரு, சல்மா” 

——– 

சமையலறையில் வேலையாய் இருந்த ருஹானா வெளி வராண்டா மேசையில் இருந்த போன் அடிக்க, வெளியே சென்றவள் அங்கே நின்றபடியே அழைப்பை ஏற்றாள். 

“சலாம் மிஷால்!”

“ருஹானா! எப்படி இருக்கே? ஒன்னும் பிரச்சனை இல்லயே?”

“நல்லா இருக்கேன். நீ கவலைப்படாதே”

“பர்வீன் ஆன்ட்டி உன்னை கேட்டுட்டே இருக்காங்க. நம்ம வீட்டுப்பக்கம் நீ வந்து அதிக நாட்கள் ஆகுதே. நான் வரவா உன்னை கூப்பிட?”

ருஹானா பதில் சொல்லும்முன் சாலையில் சிமிட் (காய்கறிகள் அடைக்கப்பட்ட ரொட்டி போன்ற வட்டமான உணவு) விற்று செல்பவர் கூவி செல்ல, மிஷால் அந்த குரலை இனம் கண்டு கொண்டான்.

“நீ என்ன நம்ம எரியாலயா இருக்கே?” ஆச்சரியமாக கேட்டான்.

ருஹானா பதில் சொல்லாமல் விழித்தாள்.

“எந்த இடம்?” என மீண்டும் மிஷால் கேட்க, ருஹானா தயங்கியபடி “வந்து.. மிஷால்.. இங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருக்கோம்.. யாருக்கும் தெரியாது. இவானுக்காக….” என்றாள்.

“நீ ஏன் என்கிட்டே சொல்லல? நான் வரேன் உன்னை பார்க்க… முகவரி சொல்லு”

ருஹானா காரில் அமர்ந்திருந்த ஆர்யனை பார்த்தாள். அவன் அவளை கவனிக்கவில்லை. நேர்பார்வையுடன் தெருவை அலசியபடி அமர்ந்திருந்தான்.

“ருஹானா! ஏன் பதில் சொல்ல மாட்றே? எதும் சிக்கலா?”

மிஷால் மறுபடியும் வற்புறுத்த அவள் முகவரியை சொல்ல மிஷால் உடனே புறப்பட்டான்.  

எதிரே மிஷால் வீடு நோக்கி நடந்து வருவதை கண்ட ஆர்யனுக்கு திகைப்போடு கோபமும் எழுந்தது.

அவன் வீட்டை திரும்பி பார்க்க, ருஹானா மிஷாலை வரவேற்க வராண்டாவில் நின்றிருந்ததை பார்த்து அவன் கோபம் மிகுதியானது.

‘யாருக்கும் சொல்லாத இரகசியத்தை மிஷாலிடம் சொல்லும்படி நேர்ந்ததே’ என அதுவரை சங்கடமாக இருந்த ருஹானா, ஆர்யனின் கோப முகத்தை பார்த்ததும் அவளும் கோபத்தின் வசப்பட்டாள். ஆர்யனை சவால்விடுவது போல பார்த்தாள்.

பைகளில் பழங்களும், தின்பண்டங்களும் வாங்கி வந்த மிஷால் அவற்றை ருஹானாவிடம் கொடுத்து “நம் பகுதிக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றான்.

“எதுக்கு இவ்வளவு வாங்கிட்டு வந்தே மிஷால்?”

“அதெல்லாம் நீ சொல்லாதே! நீ இங்க திரும்பி வந்தது எனக்கு மிக மகிழ்ச்சி”

ருஹானா தயக்கமாகவே தலை ஆட்டினாள்.

“வீடு அழகா இருக்கு. ஏற்கனவே நான் இந்த இடத்தை பார்த்திருக்கேன். நீ செய்தது நல்ல செயல், ருஹானா. உனக்கென தனி வாழ்க்கை, உன் விருப்பம்.. இப்படி இருக்கறது தான் நல்லது”

ஆர்யன் இவர்களை சுட்டெரிக்கும் பார்வையால் தூரத்தில் இருந்து பொசுக்கிக் கொண்டிருந்தான். மிகவும் முயன்று எதுவும் செய்யாமல் பொறுமை காத்தான். முன்பு இருந்த ஆர்யன் என்றால் இந்நேரம் மிஷாலை அடித்து துரத்தி இருப்பான்.

“ஆனா.. மிஷால்! இது கொஞ்ச காலத்துக்கு தான்”

“ஒஹ்! அப்புறம் நீ தனியா என்ன செய்யணும்னு பார்க்கணும், அப்படித்தானே?”

“ஆமா, எதுவும் நிரந்தரம் இல்ல, மிஷால்” என்றவள் “ஏன் நிக்கிறே? உட்கார்! நான் டீ கொண்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.

நாற்காலியில் நிதானமாக அமர்ந்த மிஷால் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். ஆனாலும் அவன் கழுத்தை திருகும் நோக்கத்தில் ஆர்யன் காரின் திருப்பு சக்கரத்தை நசுக்குவதை பார்க்க தவறி விட்டான்.

——    

இவானையும் மிஷாலிடம் வெளி வராண்டாக்கு அனுப்பிவிட்ட ருஹானா  உள்ளே இருந்து குடிக்க பானங்கள் கொண்டு வந்தாள்.

தேநீரை மிஷாலுக்கு கொடுத்தவள், இவானுக்கு பால் கப்பை கொடுத்தாள். ருஹானாவை பார்த்து மிஷால் இன்ப புன்முறுவல் செய்தான்.

“குட்டிப்பையா! உனக்கு புது வீடு பிடிச்சிருக்கா?” என மிஷால் கேட்க, இவான் கண்மூடி தலையாட்டினான்.

“பார் அன்பே! உனக்கு மிஷால் அண்ணா பேகல் வாங்கிட்டு வந்துருக்கார்” என ருஹானா எடுத்துக்கொடுக்க, இவான் அதை வாங்கிக் கொண்டான்.

“வால்நட் சாக்லேட் கூட வாங்கிட்டு வந்துருக்கேன். உன் சித்திக்கு அதிகம் பிடிக்கும். உனக்கும் பிடிக்கும் தானே?” என மிஷால் கேட்க, ருஹானாவிற்கு ஆர்யன் அதே சாக்லேட் தனக்காக வாங்கி வந்தது ஞாபகம் வந்து முகம் சுருங்கியது.

“எனக்கும் பிடிக்கும் மிஷால் அண்ணா! ஆனா சாப்பிடக் கூடாது. அது எனக்கு அலர்ஜியாகிடும்” என இவான் சொல்ல “ஓஹ்! அப்படியா?” என மிஷால் கேட்டான்.

“ஆமா மிஷால். அது சாப்பிட்டா அவனுக்கு முகம் வீங்கிடும்” என ருஹானா சொல்ல “சரி இவான்! அடுத்த முறை நான் உனக்கு வேற சாக்லேட் வாங்கிட்டு வரேன்” என மிஷால் சொல்ல சரியென தலையசைத்த இவான், “ஹே! சித்தப்பா!” எனும் சந்தோசக் குரலெழுப்பினான்.

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே பானங்கள் அருந்துவதை காரின் உள்ளே அமர்ந்து ஆர்யன் வறண்ட முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். விலகிட முடியாமல் எட்டி நின்று பார்த்தாலும், அருகில் செல்ல பரபரக்கும் நெஞ்சத்தை எப்படி அடக்குவது என்றே அவனுக்கு தெரியவில்லை.

“சித்தி! அங்க கார்ல பாருங்க. சித்தப்பா இருக்கார்” என காட்ட, ருஹானா பார்க்காவிட்டாலும் மிஷால் ஆர்யனை பார்த்தான்.

எழுந்துக்கொண்டே இவான் “சித்தப்பா ஏன் உள்ள வரல? நான் போய் கூட்டிட்டு வரட்டுமா?” என கேட்க, ருஹானா வேறு வழியில்லாமல் சரி என்றாள்.     

இவான் சென்றதும், மிஷால் கடுப்புடன் “அவன் ஏன் இங்க இருக்கான்? உனக்கு எதும் தொல்லை தர்றானா?” என ருஹானாவிடம் கேட்க, “இல்ல மிஷால்! அதெல்லாம் ஒன்னுமில்ல” என அவள் வேகமாக மறுத்தாள்.

“நெஜமா தான் சொல்றியா?” என கேட்டவன் அவள் பேசாமல் இருக்கவும் “அவனோட அண்ணன் பையனை நீ கூட்டிட்டு வந்து வச்சிருக்கே. அவனை போல ஆள் அதை பார்த்துட்டு சும்மா இருப்பானா? உள்ளயே பகையை வச்சிருப்பான். கண்டிப்பா உன்னை தொந்தரவு செய்வான். எதுக்கு இவ்வளவு தூரம் வந்து நோட்டம் விடுறான்?” என பேசிக்கொண்டே செல்ல, ருஹானாவால் அந்த குற்றச்சாட்டுகளை கேட்க முடியவில்லை.

“அப்படியேதும் இல்ல மிஷால். அவர் என்னோட உரிமையை ஏத்துக்கறார். அதுவும் இல்லாம..” என வீட்டை காட்டி சொல்ல வந்தவள் பேச்சை நிறுத்தி “அதை விடு.. வேற பேசு” என சொல்ல மிஷால் அவளை புரியாது பார்த்தான்.

மனம் முழுக்க ஆர்யன் மேல் கோபம் இருந்தாலும், மிஷால் ஆர்யனை தவறாக எண்ணுவது அவளுக்கு பொறுக்கவில்லை. அவனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாள்.

“நான் சித்தப்பாவை கூட்டிட்டு வந்துட்டேன்” என ராகம் பாடிக்கொண்டே இவான் படியேறி வர, ஆர்யன் பின்னே வந்தான்.

பேசிக்கொண்டிருந்த இருவரும் தலையை குனிந்து கொள்ள, இவான் இருவருக்கும் இடையே வந்து அமர்ந்தான். “பால் ஆறும்முன்ன குடி செல்லம்” என ருஹானா அவன் கையில் கொடுக்க, மிஷால் சாய்ந்து அமர்ந்து மிடுக்காக ஆர்யனை நிமிர்ந்து நோக்கினான்.

சுளித்த புருவங்கள் அவளின் பிடித்தமின்மையை காட்ட, ஆர்யனை வரவேற்காது ருஹானா தேநீர் அருந்த, ஆர்யன் அவளை பார்த்தபடியே எதிரே வந்து நின்றான். அவனது சுருங்கிய நெற்றி அவனது கோபத்தை காட்டியது.

“சித்தப்பா! இங்க பாருங்க. பேகல் இருக்கு. உட்காந்து சாப்பிடுங்க” என இவான் அழைக்க, ருஹானா லேசாக கண்களை உயர்த்தி கால் விநாடி ஆர்யனை பார்த்துவிட்டு, மும்முரமாக தேநீர் அருந்தலானாள்.

Advertisement