Advertisement

அதற்கு நேர்மாறாக ருஹானா “உங்களுக்கு முன்னாடியே இது தெரியும்! நான் கேட்க கேட்க பதில் சொல்லாம இங்க எங்களை இழுத்துட்டு வந்திருக்கீங்க… வெரிகுட்” என இரைந்தாள்.

ஆர்யன் அவளை விசித்திரமாக பார்க்க “இவானுக்கும் எனக்கும் ஆடை எதும் எடுத்துக்கல. எங்கள பத்தி நினைக்காம நீங்க பாட்டுக்கு எப்பவும் போல உங்க இஷ்டத்துக்கு பறந்து வந்திட்டீங்க!” என மேலும் கத்தினாள்.

“நமக்கு நேரம் எங்க இருந்தது? கடைசி நேரத்துல தான் எனக்கு இப்படின்னு போன் வந்தது” அவனுக்கும் ரோஷம் வந்து கோபமாகவே விவரித்தான். “நேரத்துக்குள்ள வர்றது தான் முக்கியம். நாமளும் சரியான நேரத்துல வந்துட்டோம்”

அவளுக்கே நன்றாக தெரியும், அர்ஸ்லான் மாளிகையில் இவான் இருப்பது சமூக சேவை நிறுவனத்துக்கு தெரிந்தால் திரும்பவும் விசாரணை நடக்கும் என்று. ஆனாலும் ஆர்யன் மேல் கோபம் கொண்ட அவள் அவன் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நாங்க ஒன்னும் உங்க அடிமைகள் இல்ல. உங்க விருப்பத்துக்கு எங்களை வச்சி விளையாட முடியாது. எங்கிட்ட எதும் சொல்லாம நீங்களா எது வேணுனாலும் செய்வீங்களா?” 

‘என்ன அநியாயமாக பேசுகிறாள் இவள்!’ என பார்த்த ஆர்யன் “நீ தானே என் பேச்சை காதுல வாங்காம இருந்தே! உன்கிட்டே பேசக்கூடாதுன்னு சொன்னே! எந்த விளக்கமும் தேவை இல்லன்னு சொன்னே” என பதிலுக்கு சொல்லிவிட்டான்.

அவள் “நான்..“ என பேச வர… “என்ன தேவையோ அதை நான் செய்தேன்… இவானுக்காக..“ என அவனும் சத்தமாக சொல்லவும் தலைகுனிந்து கொண்டாள்.

“உன்கிட்டே இருக்கற கஸ்டடியை  காப்பாத்த… நமக்காக” என்று அழுத்தமாக சொல்லி சென்றுவிட்டான்.

ஏதோ சொல்ல வந்தவள் ‘நமக்காக!’ என்ற வார்த்தையை கேட்டதும், சொல்ல முடியாமல் நின்றாள்.

    ——-

ருஹானா மெல்ல அந்த வீட்டை சுற்றி பார்த்தாள். அங்கே அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், மேசையில் இருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து பார்த்தாள். அவளும், இவானும் இருந்த புகைப்படங்கள் கூட அங்கங்கே இருந்தன.

ஏற்கனவே ஆர்யன் சொன்னான் தானே! ஒரு வீடு பெயரளவுக்கு தனியாக எடுக்கப்பட்டு இருக்கிறது, சமூக சேவை நிறுவனம் விதித்த நிபந்தனையை நிறைவேற்ற என்று.

இரண்டு படுக்கை அறைகள், ஒரு வரவேற்பு அறை, உணவு மேசையோடு கூடிய சமையலறை, வெளியே பார்க்கும்படி அமைந்த வராண்டா அதிலும் சிறிய பிரம்பு மேசை நாற்காலிகள் என அந்த வீடு கண்ணை கவர்வதாக இருந்தது. 

“சித்தி!” என கூப்பிட்டபடி அங்கே வந்த இவான் கையில் ஒரு கலைடோஸ்கோப் இருந்தது.

“இது சித்தப்பா எனக்கு வாங்கி கொடுத்தார்” என நீட்ட, ருஹானா புன்சிரிப்புடன் அதை வாங்கி ஒரு கண்ணால் அதனுள்ளே பார்த்தாள்.

வண்ணமயமான பூக்கள் மாறி மாறி உருண்டு உருமாற அதை திருப்பி பார்த்தவள் “இது தான் கலைடோஸ்கோப், கண்ணே!” என்றாள்.

“கலைடோஸ்கோப்பா? இதை அம்ஜத் பெரியப்பாக்கு காட்டலாமா? அவருக்கும் ரொம்ப பிடிக்கும்”

வீட்டு நினைப்பில் இருந்து அவனை மாற்ற, ருஹானா “காட்டலாமே. அதுக்கு முன்னாடி இங்க யாருக்கோ பசிக்குதாமே” என இவான் வயிற்றில் காதை வைத்து கேட்டாள்.

இவான் வாய் பொத்தி சிரிக்க “வாங்க, இவான் செஃப்! கிச்சன் போய் என்ன செய்றதுன்னு பார்க்கலாம்” என அவன் கையை பிடித்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

இவான் கலைடோஸ்கோப்பில் கவனமாக இருக்க, இவள் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தாள். அது காலியாக இருந்தது. அலமாரிகளை எல்லாம் திறந்தாள். அவற்றிலும் பண்ட பாத்திரங்களை தவிர சமைக்கும் பொருட்கள் ஏதுமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் நிற்கும்வேளையில் ஆர்யனின் குரல் கேட்டது.

இரண்டு கைகளிலும் நிறைய பைகளை வைத்துக்கொண்டு “சிங்கப்பையா! இதை வாங்கி அங்கே வை” என உள்ளே வந்தான். அவன் கண்ணசைவுக்கு பணிவிடை செய்ய அத்தனை பேர் இருக்க, இவன் சிறிதும் சங்கோஜமின்றி கடைக்கு போய் பொருட்களை வாங்கி சுமந்து வந்திருக்கிறான். 

இவான் ஒரு பையை வாங்கி மேசையில் வைக்கவும், ஆர்யனே மற்ற பைகளை மேசையில் வைக்க ருஹானா அருகே வந்தாள்.

“நீ போய் விளையாடு, தேனே! உணவு தயாரானதும் நான் கூப்பிடுறேன்” என அவள் சொல்ல, இவானும் “சரி சித்தி” என சமையலறை விட்டு வெளியே சென்றான்.

ஆர்யன் பைகளில் இருந்து பொருட்களை வெளியே எடுக்க, “நான் பார்த்துக்கறேன்” என ருஹானா சொன்னாலும் ஆர்யன் தான் செய்வதை நிறுத்தவில்லை.

“ஒரே ஜங்க் ஃபுட்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க. காய்கறி ஒன்னையும் காணோம். ஆனா ஏகப்பட்ட சாக்லேட், இனிப்பு இருக்கு. யா அல்லாஹ்!” என ருஹானா குறைப்பட்டுக் கொண்டாள்.

‘என்ன இவ எல்லாத்துக்கும் திட்றா’ என அவளை விநோதமாக பார்த்த ஆர்யன் “இவானுக்கு இது எல்லாம் பிடிக்கும்” என்றான்.

ஒரு பாக்கெட்டை கையில் எடுத்து காட்டியவள் “இதும் இவானுக்கு பிடிக்குமா? இது வால்நட் சாக்லேட். இது அவனுக்கு அலர்ஜி, ஒத்துக்காதுன்னு உங்களுக்கு தெரியும் தானே” என்றாள் கோபமாக.

ஆர்யன் அதை விட கோபமாக “இது அவனுக்கு இல்ல! ஒருமுறை நீ இதை சாப்பிடுறதை பார்த்திருக்கேன்” என சொல்லவும் திகைத்த அவள், கண்களை தாழ்த்தி கொண்டாள். 

இத்தனை நாள் எதிரிகளை போல சண்டை போட்டவர்கள், இப்போது காதலர்களை போல சண்டை போடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு குழந்தை உள்ள தம்பதி போல வாக்குவாதம் செய்கிறார்கள்.

ருஹானா பேசாமல் ஒரு பையை எடுத்துக்கொண்டு குளிர்சாதன பெட்டிக்கு சென்று அதில் அடுக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னால் மற்ற பைகளை எடுத்து சென்ற ஆர்யன் ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுக்க அட்டைப்பெட்டிகளையும், கண்ணாடி புட்டிகளையும்  அவள் குளிர்சாதன பெட்டியில் வைத்தாள்.

ஒரு எண்ணெய் புட்டியை ஆர்யன் எடுத்துக் கொடுக்க, அதை கையில் வாங்கியவள் ‘இதெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய பொருளா?’ என்பது போல ஒரு பார்வை பார்க்க, அவன் பேசாமல் அதை திரும்ப வாங்கி மேசையில் வைத்தான்.

இவனும் மற்றவைகளை முறைப்பாக எடுத்து தர, அவளும் முறைப்பாக வாங்கி உள்ளே வைக்க, அவன் பக்கம் திரும்பாமல் வெடுக்கென வாங்கியவள் ஒரு புட்டியை கை நழுவ விட்டாள்.

அவன் விரைந்து அதை கீழே விழாமல் பிடித்தவன் அவள் கையில் திணித்தான். அப்போது தான் அவன் கை புண்ணை கவனித்தவள் “உங்க காயம் மோசமா இருக்கு. இன்பெக்ஷன் ஆக போகுது” என்றாள். அவன் பதில் சொல்லவில்லை.

அலமாரியை திறந்து ஒரு கிண்ணத்தை எடுத்தவள் அதை மேசை மீது  வைத்தாள். “கண்ணாடி துண்டு ஆழமா போகல. நல்லவேளை, ஆலிவ் ஆயில் வாங்கிட்டு வந்தீங்க. இது கண்ணாடி துண்டை மேலே கொண்டு வந்துடும்” என்று சொன்ன ருஹானா எண்ணெயை கிண்ணத்தில் ஊற்றினாள்.

ஆர்யன் “இதெல்லாம் தேவை இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்” என்று கோபமாக சொல்லி திரும்பி நடக்க போனான்.

வேகமாக அவன் மணிக்கட்டை பற்றிய ருஹானா முறைப்பாகவே “இப்போ நல்லா தான் இருப்பீங்க. ஆனா கண்ணாடி உள்ள போச்சுனா இதயம் வரைக்கும் பாதிக்கும்” என்று சொல்லி அவன் கையை இழுத்தாள்.

ஆனால் உடைந்திருந்த அவன் இதயத்தை அந்த செயல்… அவளின் செயல்.. அது தான் ஒட்டியது, உடனே!

அவள் அவனின் கையை திருப்பி புறங்கையை எண்ணையில் முக்கி சிறிது நேரம் பிடித்தாள். 

ஆர்யன் முகம் மென்மையாக மாற ‘எனக்கும் கருணை காட்டுகிறாளே, இத்தனை கோபத்திலும்’ என வியந்து அவளை பார்த்தான்.   

பின் அவன் கையை தூக்கி ஒரு கையால் பற்றிக்கொண்டு மறுகையால் அதில் பதிந்திருந்த கண்ணாடி துகளை மெல்ல எடுத்தாள், புருவங்கள் சுருக்கி.

வலித்தாலும் அவன் நெற்றி சுருங்கவில்லை. லேசாக மனதின் பாரமும் குறைந்தது, அவனுக்கு.

“இதயம் பாதிப்பானா சரிப்படுத்துறது சுலபம் இல்ல. உடைந்தது எப்பவும் ஒட்டாது” என்று சொல்லி வெளியே எடுத்த கண்ணாடி துண்டை அவன் கையை திருப்பி உள்ளங்கையில் வைத்துவிட்டு சென்றாள். 

சண்டையிடுவதில் மாற்றமில்லை

காயப்படுத்தும் வாக்குவாதமில்லை

அன்போடு கோபமும் கலந்தே

மருந்தாய் மாறும் தருணமிது

—-

“கொத்துக்கறியும், முட்டையுமா? காலை உணவுக்கா?” என இவான் சந்தோசமாக குரல் எழுப்ப, ஆர்யன் முகம் மலர்ந்து போனது.

“இப்போ இதான் இருக்கு அன்பே! நான் காய்கறிலாம் அப்புறம் போய் வாங்கிட்டு வரேன்” என ருஹானா சொன்னாள்.

“ஆனா சித்தி எனக்கு இது அதிகம் பிடிக்குதே! சித்தப்பா நீங்க சூப்பரா வாங்கிட்டு வந்திருக்கீங்க” என இவான் புகழவும், ஆர்யன் தலையை உயர்த்தி ருஹானாவை மிதப்பாக பார்த்தான்.

அவள் கோபமாக எதிரே அமர, ஆர்யன் இவானிடம் “அக்னி சிறகே! நாம இங்க தங்கி இருக்கறது நம்ம மூணு பேருக்குள்ள மட்டும் இருக்கிற ரகசியம்” என்றான்.

“கரீமா பெரியம்மா, சல்மா அக்காக்கு கூட தெரியக் கூடாதா, சித்தப்பா? பெரியப்பாக்கு மட்டும் சொல்லலாம்ல?” 

“இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம், சிங்கப்பையா” என்று சொன்னவன் ருஹானாவை பார்த்து “மாளிகைல இருக்குறவங்களுக்கு மட்டும் இல்ல, வெளியாட்களுக்கும் தெரியக்கூடாது” என்றான்.

“சரி, சித்தப்பா. ஆனா ஏன்?”

ஆர்யனை முந்திக்கொண்டு ருஹானா “ஏன்னா உன் சித்தப்பா என்ன நினைக்கிறாரோ, அதை தான் நாம செய்யணும், அன்பே!” என ஏளனமாக சொன்னாள்.

ஆர்யன் அவளை முறைக்கவும் “முட்டை ஆறும்முன்னே சாப்பிடு தேனே!” என இவானின் கவனத்தை சாப்பாட்டில் திருப்பிய ருஹானா “கண்காணிப்பாளர் திரும்ப வர்றதுக்குள்ள இவானுக்கும், எனக்கும் தேவையான பொருட்களை மாளிகைல இருந்து எடுத்துட்டு வரணும்” என ஆர்யனிடம் சொன்னாள்.

“டின்னருக்கு அப்புறம் போகலாம்” என ஆர்யன் சொன்னான்.

—–

அனைவரையும் பயங்காட்டி விட்டு வாகிதா பிழைத்துக்கொள்ள, வாசிமின் அத்தை தௌலத்துக்கு அவள் மேல் இருந்த வெறுப்பெல்லாம் பறந்தோடியது. அண்ணனால் அபாயம் என தெரிந்தும் தனக்காக மருந்து வாங்க சென்று ஆபத்தில் மாட்டிக்கொண்டதோடு, வாசிமின் உயிரை காப்பாற்ற அவள் குண்டடி பட்டது அவரின் மனதை அடியோடு மாற்றியது.

மனம் திறந்து பேசிக் கொள்ளாவிட்டாலும், வாசிமுக்கும், வாகிதாவுக்கும் தங்களது காதலின் ஆழமும் புரிந்தது.

——–

அர்ஸ்லான் மாளிகை…

“நான் உன்னை கூட்டிட்டு போறேன். ஆனா சத்தம் போடக்கூடாது. ஏன்னா அது ரகசியம்” என இவான் மெதுவாக தன் பொம்மைக்கு சொல்லி அதை எடுத்து வைத்தான்.

அப்போது அங்கே கரீமா “இவான் டியர்!” என வரவும், இவான் எச்சரிக்கையாகி விட்டான்.

“என்ன செய்றீங்க நீங்க? விளையாட போறீங்களா? என்ன விளையாட்டு? என்னையும் சேர்த்துக்கறீங்களா?” என கரீமா கொஞ்ச, அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான்.

“இன்னைக்கெல்லாம் என்ன செஞ்சீங்க?”

“சித்தப்பா உங்களை கூட்டிட்டு போன இடம் நல்லா இருந்துதா?”

“குதிரை சவாரி செஞ்சிங்களா?”

“நாம பிக்னிக் போவோமே.. அந்த பார்ம் ஹவுஸ்… அங்க போனீங்களா?”

ம்ஹீம்.. எதற்கும் அசரவில்லை, ஆர்யனின் அண்ணன் மகன்.

இவானை காப்பாற்ற சித்தப்பனே வந்தும் விட்டான்.

“வா அக்னி சிறகே! எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என இவான் தோள் அணைக்க “ஆர்யன்! பாக்கிங் லாம் செய்துகிட்டு அதிக தூரம் போறீங்களா? வழில சாப்பிட சாராவை உணவு தயாரிக்க சொல்லவா?” என கரீமா நைச்சியமாக கேட்டாள்.

“வேணாம் அண்ணி! நாங்க சில நாட்கள் மாளிகைல இருக்க மாட்டோம்” என எதும் புரிந்துகொள்ள முடியாதபடி சொல்லிவிட்டு, இவானை கைபிடித்து சென்றுவிட்டான்.

     ——-

ஜாஃபர் பெட்டிகளை டிக்கியில் வைக்க, சகோதரிகள் இருவரும் ‘நாம் அவர்களை அடியோடு பிரிக்க நினைக்க, எந்த தொல்லையும் இல்லாமல் இப்படி இருவரும் இணைந்து தங்களை விட்டு தனியாக போகிறார்களே!’ எனும் வயிற்றெரிச்சலோடு வெறுப்பாக பார்த்திருந்தனர்.

ருஹானா இவானோடு பின்னால் ஏற, எந்த சங்கடமும் படாமல் அவர்களின் ஓட்டுனர் போல ஆர்யன் முன்னே அமர்ந்து காரை எடுத்தான்.

கரீமா உள்ளே எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் கையாட்ட, சல்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஏதோ நடந்திருக்கு சல்மா, நம்ம கிட்டே மறைக்கிறாங்க”

“உன்னால கண்டுபிடிக்க முடியலயா, அக்கா?”

“இவான் கிட்டே முயற்சி செய்தேன். முடியல. அதனால் என்ன? என் வழியில கண்டுபிடிக்கிறேன்”

——– 

ஆர்யன் காரை நிறுத்திவிட்டு ‘அக்கம்பக்கம் யாரும் பார்க்கிறார்களா’ என கவனித்துவிட்டு இறங்கி நடக்க, ருஹானா கதவை திறக்க பார்க்க, முடியவில்லை

திரும்பி வந்த ஆர்யன் “சைல்ட் லாக் எடுக்கல போல” என கதவை திறந்துவிட்டான்.

கதவை பிடித்திருந்த அவன் முகத்தை பார்க்காமல் “வா செல்லம்” என இவானை அழைத்துக்கொண்டு ருஹானா சீமாட்டி போல இறங்கி வீடு நோக்கி நடந்தாள்.

ஆர்யன் சேவகன் போல டிக்கியில் இருந்து இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு பின்னால் போக, வாசல்படி ஏறியதும் கையை கதவின் குறுக்கே பிடித்துக்கொண்டு அவனை தடுத்தாள்.

“இந்த வீடு நானும், இவானும் தங்க தானே ஏற்பாடு செய்யப்பட்டது? உள்ளே யார் வரணும்னு நான் முடிவு செய்றேன்” என்று ருஹானா கண்களை விரித்து சொல்ல, இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராத ஆர்யன் திக்பிரமை பிடித்து நின்றான்.

அவன் கைகளில் இருந்து பெட்டிகளை வாங்கியவள், அலங்க மலங்க விழித்த அவன் முகத்தில் கதவை அடைத்தாள். வெளியே வீசிய பனிக்காற்றில் ஆர்யன் கன்னங்களும், காதுகளும் சிவந்து போக, அவன் ஏற்பாடு செய்த வீட்டின் வாசலில் பரிதாபமாக நின்றான். 

 

(தொடரும்)

Advertisement