Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் 62

‘எனக்கு நீங்க இனி யாருமில்லை’ என ருஹானா சொன்னது ஆர்யனின் இரத்த ஓட்டத்தை நிறுத்தியது. 

அவன் அசையாது நிற்க “நீங்க வெளிய போகலாம்” என்று ருஹானா, அவள் அறையை விட்டு வெளியேற சொன்ன பிறகும் கூட அவளையே பார்த்து நின்றான்.

ருஹானா திரும்பி நின்று கொண்டாள். அவள் கூறிய கடுஞ்சொற்கள் அவளையும் அதிகமாக தாக்க, அவள் கண்களில் இருந்து அருவி கொட்டியது.

ஆர்யன் அவள் கூந்தலில் இருந்து வடியும் நீரை பார்த்தானே தவிர அவள் கண்களின் நீரை பார்க்கவில்லை.

ஒரு நிமிடம் சொட்டும் நீரையே பார்த்திருந்தவன், பின் தலைகுனிந்தவாறே மெல்ல கதவை திறந்து வெளியேறினான்.

அவன் சென்ற பிறகும் அவளின் கண்ணீர் ஓட்டம் நிற்கவேயில்லை.

——-

அறைக்கு வந்த ஆர்யன் ருஹானாவின் சொல்லம்பின் தாக்குதலில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தான்.

அவள் நம்பிக்கையை சிதைத்தது தான் அவனால் தன்னையே மன்னிக்க முடியவில்லை.

மேசையில் இருந்த கண்ணாடி குடுவையை எடுத்து சுவரில் அடித்தான். அதன் துகள்கள் சிதறி மேசையிலும் விழுந்தன.

“ஆ..ஆ..” என கத்திக்கொண்டே இரு கை முஷ்டியை மேசையில் குத்த, வலது கையில் கண்ணாடி துண்டுகள் குத்தி இரத்தம் வடிந்தது.

போன் அடிக்க, இரத்த கையோடு எடுத்து “சொல்லு ரஷீத்!” என்றான்.

“என்ன இப்பவா?”

“உண்மையாவா?”

“ஏன் நீ முன்னாடியே சொல்லல?” என திட்டிக்கொண்டே வேகமாக வெளியேறினான்.

——

எங்கோ பார்த்துக்கொண்டு ருஹானா இவானுக்கு தலை வாரிக்கொண்டிருக்க, இவான் திரும்பி சித்தியை பார்த்தான்.

“சித்தி! ஒரே இடத்துலயே சீவிட்டு இருக்கீங்க” என்று சொன்னதும் சுயநினைவுக்கு வந்த ருஹானா சீப்பை அவன் தலையில் இருந்து எடுக்க, “நீங்க வருத்தமா இருக்கீங்களா, சித்தி?” என கேட்டான். 

“நீ பக்கத்துல இருக்கும்போது நான் ஏன் வருத்தப்பட போறேன், தேனே? பார், நீ எத்தனை அழகா இருக்கே!” முகத்தில் புன்னகை பூசி சொன்னவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அப்போது கதவு படீரென திறந்தது. ஆர்யன் போனை காதில் வைத்தபடியே உள்ளே வந்தான், “இவான்!” என அழைத்தவாறே.

ருஹானாவின் முகம் இறுக்கமாக மாற “சொல்லுங்க சித்தப்பா” என இவான் எழுந்து ஆர்யன் அருகே போனான்.

“நாம வெளிய போறோம்” என ஆர்யன் சொல்லவும், அவனை திரும்பி பார்த்த ருஹானா “எங்கே?” என கோபமாக கேட்டாள். 

“வாக்கிங் போறோமா, சித்தப்பா?” என இவான் கேட்க, இரண்டு பேருக்கும் பதில் சொல்லாமல் ஆர்யன் போனில் பேசினான்.

“இப்போ நேரம் இல்ல. சரியான நேரத்துக்கு போக முடியாது. வேற வழி இல்லயா?”

போனை மடக்கிக்கொண்டு இவானிடம் “ஆமா சிங்கப்பையா! நாம வாக்கிங் தான் போறோம். நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். வா போகலாம்” என்றான்.

உடனே இவான் ஓடிவிட, ருஹானா “என்ன விஷயம்னு சொல்ல மாட்டீங்களா?” என கேட்டாள்.

பாய்ந்து வந்து தயக்கமின்றி அவள் கரத்தை பற்றியவன் “நேரம் வீணாக்க முடியாது. வா” என அவளை இழுத்துக்கொண்டு வேகமாக படிக்கட்டை நோக்கி சென்றான்.

கீழே சகோதரிகள் இருவரும் உல்லாச நடை நடந்து வரவேற்பு அறைக்கு வர, சல்மா “எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றாள்.

“சோ… நீ என்ன சொல்றே சல்மா? இனி அவங்க ரெண்டுபேரும் ஒன்னு சேர மாட்டாங்களா?”

“அந்த தோத்துப்போன சித்தி ஆர்யனை மன்னிக்கவே மாட்டா, அக்கா”

“சரி தான்! இனி ரெண்டுபேரும் அக்கம்பக்கம் கூட வர மாட்டாங்க. நேத்து உணவு மேசைல பார்த்தியா, அவ ஆர்யன் முகத்தை கூட பார்க்கல”

இருவரும் கைதட்டி சிரித்து கொள்ளும்போது மேலே தடதடவென சப்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தனர்.

ஆர்யன் “எனக்கு தகவல் சொல்லிட்டே இரு, ரஷீத்” என சொன்னபடி ருஹானாவின் கையைப்பற்றிக் கொண்டு வேகமாக இறங்கினான்.

அவர்களுக்கு முன்னால் இறங்கிய இவான் “சித்தப்பா! நாம எங்க போறோம்?” என கேட்டான்.

கரீமாவும், சல்மாவும் குழப்பமாக அவர்களை நெருங்கினர்.

“நான் வர்ற வழில உனக்கு கால் செய்றேன், ரஷீத்” என கூறிய ஆர்யன், ருஹானாவிடம் “வேகமா வா” என்றான்.

கரீமா ஓடி வந்தவள் “என்ன ஆர்யன்? இவ்வளவு காலைல எங்க?” என கேட்டாள்.

ஆர்யன் பதில் சொல்லும்முன் இவான் “நாங்க… சித்தப்பா, சித்தி வெளிய போறோம்” என சிரிப்புடன் சொன்னான். 

அவன் கையை பிடித்துக்கொண்டு ஆர்யன் வெளியே போக, பின்தொடர சென்ற ருஹானாவை நிறுத்திய கரீமா “என்ன நடக்குது ருஹானா?” என கேட்டாள்.

“எனக்கு தெரியல கரீமா மேம்” என சலிப்பாக சொன்ன ருஹானா வேகமாக வெளியே சென்றாள்.

இவானை காரில் உட்கார வைத்த ஆர்யன் முன்கதவை திறந்தபடி “சீக்கிரம் காரில் ஏறு” என ருஹானாவிடம் சொன்னான்.

“எதுக்கு, எங்கன்னு நீங்க சொல்லாத வரையில் நான் எங்கயும் வரல” என ருஹானா முரண்டு பிடித்தாள்.

அவளுக்கு பதில் சொல்லாமல் “நாங்க இன்னும் கிளம்பல. வேறயும் யோசித்து வை. நாங்க நேரத்துக்கு வந்துடுவோம்னு நினைக்கிறேன்” என சொல்லியபடி காரில் ஏறினான்.

“சித்தி! வாங்க சீக்கிரம்” என இவான் கூப்பிட ருஹானா கோபமாக அவன் பக்கம் ஏறினாள்.

ஆர்யன் காரை வேகமாக திருப்ப “ஆர்யன்! என்ன! எங்க போறீங்க? எனக்கு கவலையா இருக்கு” என கரீமா கேட்க, அவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.

அவர்களை புரியாத புதிரில் ஆழ்த்திவிட்டு கார் பறந்து செல்ல, அக்காவும் தங்கையும் கடுப்பாக பார்த்து நின்றனர்.

அழகிய விடியற்காலைப்பொழுது நொடியில் மாறி அனலாய் தகித்தது.

அக்கம்பக்கம் நெருங்க மாட்டார்கள் என அவர்கள் நினைத்தவர்கள் இப்போது கைப்பிடியில் இணைந்து செல்கின்றனர்.

அவர்களை பிரிக்க கரீமா சல்மா போடும் சூழ்ச்சி திட்டங்கள் அவர்கள் இருவரையும் நெருங்கவே வைக்கின்றன.

—-  

காரிலும் போன் பேசிக்கொண்டே ஆர்யன் மிக வேகமாக ஓட்ட, என்ன நடக்கிறது என புரியாமல் இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

“இப்போ அவங்க எங்க இருக்காங்க?”

“வேற என்ன செய்யலாம்?”

“டாமிட்! முன்னாடியே எனக்கு சொல்றதுக்கு என்ன?”

ஆர்யன் கத்திய கத்தலில் இவான் பயந்து சித்தியை கட்டிக்கொண்டான்.

சற்று முன்னே ஆர்யன் புறம் சாய்ந்த ருஹானா மெல்லிய குரலில் “இவான் பயப்படறான். மெதுவா ஓட்டுங்க” என்றாள்.

“கிட்டே வந்துட்டோம்” என்றான் வேகம் குறைக்காமல்.

உயர் தர வீடுகள் வரிசையாக அமைந்த ஒரு காலனிக்குள் கார் நுழைய, வாசலில் மலர்க்கொடிகள் படர்ந்த ஒரு வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்.

‘நல்லவேளை வெளிய யாரும் இல்ல’ என முனகியவன் காதில் இருந்த ப்ளூடூத்தை எடுத்து காரில் வைத்துவிட்டு “இங்க தான். இறங்குங்க” என்று சொல்லி போனை கையில் எடுத்தான். 

“சித்தி! இதான் நாம விளையாடுற இடமா?” என ஆவலாக கேட்டபடி இவான் இறங்க “இது எந்த இடம்? இங்க ஏன் வந்திருக்கோம்” என ருஹானா இறங்காமல் கேட்டாள்.

“வா சிங்கப்பையா! உனக்கு சர்ப்ரைஸ் காட்றேன்” என இவானை கைப்பிடித்து ஆர்யன் அழைத்து சென்றான். இவான் வந்தால் ருஹானா தானாக வருவாள் என அவனுக்கு தெரியும்.

“சித்தி! சீக்கிரம் வாங்க! சர்ப்ரைஸ் மிஸ் செய்திடாதிங்க” என்று இவான் சந்தோசமாக உள்ளே சென்றான். சித்தியும், சித்தப்பாவும் இருக்கும் எந்த இடம் என்றாலும் அவனுக்கு ஆனந்தம் தான். விளையாட்டு தான்.

ருஹானா கீழே இறங்கி நிற்க, அவள் அணிந்திருந்த ஆரஞ்சு வண்ண சட்டையின் நிறம் அவள் முகத்தில் கோபமாக பிரதிபலித்தது.

இவானை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பி வந்த ஆர்யன், அவள் நகராமல் நிற்பதை பார்த்து “வான்னு சொல்றேன்ல” என கையை பிடித்து இழுத்தான்.

கையை உதறியவள் “அழுத்தி பிடிக்கிறிங்க. வலிக்கிது” என்றாள். 

“அப்போ முரண்டு பிடிக்காம வா. அங்க இவான் காத்திருக்கிறான்”

ருஹானா முறைத்தபடி உள்ளே வரவும், வாசல் கதவை சாத்தியவன் “நாங்க வந்துட்டோம்” என போனில் சொல்லிவிட்டு “அக்னி சிறகே! அந்த ரூம்க்கு போ. நானும் வரேன். அங்க தான் சர்ப்ரைஸ் இருக்கு” என இவானை அனுப்பி வைத்தான்.

“நிறுத்துங்க எல்லாம்! என்ன நடக்குது இங்க? ஏன் இங்க வந்திருக்கோம்?” என ருஹானா கத்தினாள்.

அப்போது அழைப்புமணி ஒலித்தது.

அவள் காதருகே குனிந்தவன் “சோசியல் சர்வீஸ்ல இருந்து செக்கிங் வந்துருக்காங்க. மறந்திடாதே. நான் இங்க இல்ல. கதவை திறந்து அவங்க கிட்ட நீயும் இவானும் இந்த வீட்டுல தான் தங்கி இருக்கறதா சொல்லு” என கடகடவென சொல்லிவிட்டு, இவான் போன அறைக்குள் சென்று விட்டான்.

திகைத்து நின்ற ருஹானா இரண்டாம் முறை மணியடிக்கும் ஓசை கேட்கவும், வாசல் சென்று சமூகசேவை நிறுவன ஊழியரை உள்ளே அழைத்து வந்தாள்.

அவள் அவரை வரவேற்று அமர வைத்து தண்ணீர் கொண்டு வர உள்ளே செல்ல, அந்த வீட்டை பற்றிய குறிப்புகளை அந்த அதிகாரி நோட்டு புத்தகத்தில் எழுதி கொண்டார். 

ருஹானா கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தவர் “இந்த வீடு காற்றோட்டமா நல்லா இருக்கு. வெளிச்சமும் இருக்கு. டிவி இல்ல. அது நல்ல விஷயம் தான்” என பாராட்டிவிட்டு “நான் இவானை பார்க்கணுமே” என்றார்.

“நான் அவனை கூட்டிட்டு வரேன்” என ருஹானா சொல்ல “இல்ல. நானே அவனை தனியா பார்த்து பேசணும். எந்த ரூம்? சொல்லுங்க” என அவர் எழுந்த வேளையில் அந்த பெண்மணிக்கு போன் அழைப்பு வந்தது. ருஹானா மிகுந்த பதட்டத்துடன் பார்த்து நின்றாள்.

கவலையாக பேசிய கண்காணிப்பாளர் ‘தன் வீட்டில் யாருக்கோ ஆரோக்கிய குறைவு. மற்றொரு நாள் வந்து இவானிடம் பேசுகிறேன்’ என்று சென்று விட்டார்.

அவரை அனுப்பிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட ருஹானா, ஆர்யனை நோக்கி முடி பறக்க வீராவேசமாக சென்றாள்.

அவள் கதவை திறந்து உள்ளே நுழையவும், கட்டிலில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த இவான் “சித்தி! பாருங்க! சித்தப்பா எனக்கு எத்தனை டாய்ஸ் வாங்கி வச்சிருக்கார். எல்லாம் சித்தப்பா கிப்ட்” என  சிரிப்புடன் காட்டினான்.

“நீங்க…” என ருஹானா பல்லை கடித்துக்கொண்டு துவங்கும்முன், ஆர்யன் “இன்ஸ்பெக்டர் போய்ட்டாங்களா?” என்று கேட்டான்.

“ஆமா! அவங்களுக்கு வீட்ல இருந்து அவசரமா அழைப்பு வந்தது. அப்புறமா வரேன்னு போய்ட்டாங்க”

இவான் அருகே அமர்ந்த ஆர்யன் “சிங்கப்பையா. நான் சொன்னது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா? திருப்பி சொல்லு” என்றான்.

“நான் சித்தியோட இங்க தான் இருக்கேன். அர்ஸ்லான் மாளிகைல இருந்து நாங்க இங்க வந்துட்டோம்”

“வெரிகுட். அந்த ஆன்ட்டி மறுபடியும் வருவாங்க. அப்போ அவங்கட்ட இப்படியே சொல்லனும்”

“சரி சித்தப்பா!” என்று சொன்ன இவான், அடுத்து அவன் உள்ளத்தின் ஆசையை ஒரு கேள்வியாக கேட்டான்.

“நாம திரும்பவும் அதே விளையாட்டு விளையாடுறோமா, சித்தப்பா? நீங்க எனக்கு அப்பா. சித்தி எனக்கு அம்மா…” 

ஆர்யன் ருஹானாவை புறம் திரும்பி பார்த்தான். அவனுக்கும் அந்த ஆசை உள்ளுக்குள் இருக்குமோ?

“கண்ணே! அப்புறம் நான் உனக்கு எல்லாம் சொல்றேன். இப்போ விளையாடு” என்று ருஹானா சொல்லி செல்ல, இவான் சரியென தலையாட்ட, ஆர்யன் ஏமாற்றமானான்.

அடிபட்டிருந்த கை குத்தல் எடுக்க, அவன் மனமும் வலிக்க குனிந்து காயத்தை பார்த்தான்.

——– 

ருஹானா கோபத்தை அடக்க சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து குடிக்க, அவள் பின்னால் சென்ற ஆர்யன் அவளின் கோபத்தை கவலை என தவறாக புரிந்துக்கொண்டு “கவலைப்படாதே! அடுத்த முறை இன்ஸ்பெக்ஷன் எப்போன்னு முன்னாடியே நாம தெரிஞ்சிக்கலாம்” என்று தன்மையாக சொன்னான். 

இப்போதெல்லாம் இவளிடம் பேசும்போது மட்டும் ஒரு பிரத்யேகமான மிருதுவான குரலை வைத்திருக்கிறான்.

Advertisement