Advertisement

செயற்கை குளத்தில் இவான் வண்ண படகுகளை விட்டு விளையாட, ருஹானா சோகமாக இலக்கில்லாமல் வெறித்து நிற்க, ஆர்யன் அங்கே வந்து பின்னால் நின்றான்.

“ஹே! சித்தப்பா!” என இவான் கூவ, ருஹானாவின் முகம் மாறியது. திரும்பி நின்று கொண்டாள். 

பழைய ஆர்யன் என்றால் அவளுக்கு தெளிவுப்படுத்த இப்படி பின்னாடியே செல்ல நாய்க்குட்டி போல வந்திருக்க மாட்டான்.

அவள் என்ன நினைத்தாலும் நினைக்கட்டும் என்று அம்பு விட  சென்றிருப்பான்.

இவனோ அவள் முகம் பார்த்தே நின்றான், ஒரு சொல் முத்து உதிராதா என்று. 

இன்றானால் அவள் மிக அழகாக இருக்கிறாள். கூந்தலை தூக்கி குதிரைவால் போல கட்டி கொண்டிருக்கிறாள். இரு கத்தை முடிகள் அவள் நெற்றியில் அழகாக புரண்டு கொண்டிருந்தது. கருப்பில் பெரிய வெள்ளை புள்ளிகள் போட்ட ஸ்கர்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தாள். கோபத்தில் கொள்ளை அழகாய் இருந்தாள்.

“சித்தி! என் மஞ்சள் படகு மூழ்கிடுச்சி”

அது அவ்வளவு தான் அன்பே!”

“வேற புதுசா செய்யலாம், சிங்கப்பையா!”

“நீங்க செய்து தர்றீங்களா, சித்தப்பா?”

“நீ போய் பேப்பர் கொண்டு வா. நான் செய்து தரேன்”

“சித்தி?” என இவான் அவளிடம் அனுமதி கேட்க, அவள் தலையாட்டினாள்.

“இதோ கொண்டு வரேன்” என்று அவன் உள்ளே ஓடினான்.

ஆர்யன் அவளை நோக்கி ஒரு எட்டு வைக்கவும், தலையை ஒரு வெட்டு வெட்டி சடாரென திரும்பிக் கொண்டாள். ஏனோ கண்களில் நீர் நிறைந்தது.

தயங்கிய ஆர்யன் மனதை தேற்றிக்கொண்டு அவளை நெருங்க, “நீல கலர் பேப்பர் தான் கிடைச்சது” என இவான் ஓடிவந்து அவர்களுக்கு இடையே நின்று கொண்டான்.

இதும் நல்லாத்தானே இருக்கு?” என இவான் கேட்க அதை கையில் வாங்கிய ஆர்யன் தலையாட்டினான்.

“செல்லம்! குளிர் காற்று வேகமாக வீசுது. வா நாம உள்ளே போகலாம்” என ருஹானா அழைக்க “ஆனா படகு?” என இவான் கவலைப்பட “நீ உன் சித்தி கூட உள்ளே போ. நான் உன் ரூம்ல வச்சிடுறேன்” என்றான் ஆர்யன்.

இவான் தோள் மீது கை போட்டு ருஹானா உள்ளே செல்ல, ஆர்யன் அவர்களையே பார்த்து நின்றான்.

ரஷீத் போனில் அழைக்க “சொல்லு ரஷீத்” என்றான்.

“ஆர்யன்! ஹுசைன் வாக்குமூலம் வாங்கி பார்த்தாச்சி. அவன் எதுவும் நம்மைப் பத்தி சொல்லல”

“அவன் ரெக்கார்ட்ல சொல்லாம தனியா சொல்லியிருக்கலாம் ரஷீத். அது எப்படி வெளிய வந்ததுன்னு விசாரி”

“சரி ஆர்யன்! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”

“என்ன ரஷீத்! சொல்லு”

“நம்ம பழைய எதிரி ஷாரிக் திரும்பி அகாபாக்கு வரான்”

“ஷாரிக்கா?”

“ஆமா! போன தடவையே நமக்கும் அவனுக்கும் இடையில நிறைய ரத்தம் சிந்துச்சி. நம்மை பழி வாங்க தான் வரான்னு வதந்தி பரவுது”

“வரட்டும் ரஷீத்! போன முறை நாட்டை விட்டு ஓடினான். இந்த முறை அவன் மரணக்குழியை அவனே தோண்டிக்க போறான்”

——-

மேல்மாடி தோட்டத்தில் நின்று ருஹானாவும் தானும் சேர்ந்து நட்டு வைத்த செடியையே பார்த்தபடி ஆர்யன் நின்றிருக்க, மேல் மாடி தோட்டத்தில் இரைந்து கிடந்த இவானின் விளையாட்டு பொருட்களை எடுக்க வந்த ருஹானா பாவமாக நின்றிருந்த அவனை பார்த்தாள்.

அவள் விளையாட்டு பொருட்களை சேகரித்து நகரவும், அவளை பார்த்துவிட்ட ஆர்யன் அவளிடம் வர எட்டு வைத்தான். அவள் விலகி வேகமாக செல்ல எதிரே வந்த அம்ஜத் “ருஹானா! நீ இங்கயா இருக்கே? என கேட்டான்.

“ஆமா அம்ஜத் அண்ணா! இவான் பொம்மைகளை இங்க விட்டுட்டான். அதை எடுக்க வந்தேன். நீங்க செடிக்கு தண்ணி ஊத்த வந்தீங்களா?”

“ஆமா.. ஆமா.. ஆனா அங்க பாரேன். எப்படி வாடி போச்சி! வந்து பாரு. நீயும் ஆர்யனும் வச்ச செடி” என கையை பிடித்து அழைத்து வந்தான்.

“உனக்கு நினைவு இருக்கா, ருஹானா?” என அம்ஜத் கேட்க, அவள் ஆர்யனை பார்த்துக்கொண்டே தலையாட்டினாள்.

“மத்த எல்லா செடியும் துளிர்த்திடுச்சி. ஆனா இது மட்டும்.. இந்த செடி மட்டும் வாடியே இருக்கு”

ஆர்யனும் ருஹானாவும் அந்த செடியை பாவமாக பார்த்தனர்.

“பெருசா உடைஞ்சிடுச்சி. அந்த பொல்லாத பூனையால சேதாரமாகிடுச்சி”

இருவரும் பதில் எதும் சொல்லாமல் நின்றனர்.

“சில சமயம்… உடைந்தது சரி செய்ய முடியாது. என்ன செய்தாலும் மீட்க முடியாது. காலம் போய்டும். மற்ற செடி வளரும். பூக்கும். பட்டுப்போனதுக்கு மட்டும் சக்தி இருக்காது. அது மட்டும் வளரவே வளராது. சரி தானே?”

ஆர்யன் ருஹானாவை பார்க்க, அவள் தன் கண்ணீரை மறைக்க குனிந்து கொண்டாள்.

“நான் இவானை சாப்பிட வைக்க போறேன், அம்ஜத் அண்ணா” என்று விரைவாக உள்ளே சென்றுவிட்டாள்.

நல்லவேளை அம்ஜத்தின் கேள்விக்கு ருஹானா ஆமாம் என பதில் சொல்லவில்லை. அப்படி நடந்திருந்தால் ஆர்யன் மேலும் புண்பட்டிருப்பான்.

அம்ஜத் காய்ந்த கிளையை தடவிக்கொடுக்க, அவன் தம்பி அதையே பார்த்திருந்தான்.  

அன்பு அண்ணன் மகன் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டான் என்பது அவனுக்கு தாங்கமுடியாத கோபம். அதோடு இத்தனை நாள் கண்ணுக்கு தெரியாத பிணைப்பால் அவனோடு கட்டப்பட்டிருந்த ருஹானாவையும் பிரிவது அவனுக்கே தெரியாமல் அவனால் பொறுக்கமுடியவில்லை.

அவன் கட்டுப்பாட்டிற்குள் வர முடியவில்லை அவன் கோபம். அதனாலேயே யோசிக்காமல் செய்யக்கூடாதவைகளை செய்து விடுகிறான்.

அவன் செய்தது தவறு என அவன் உணர்ந்துவிட்டதை அவன் முகமும் உடல் மொழியுமே சொன்னது. அதற்காக மிகவும் வருத்தப்படுகிறான் என்பதையும் காட்டியது.

அவனிடம் மாற்றம் நிகழ்கிறது தான். ஆனால் அது மெல்ல மெல்ல தான் நடைபெறுகிறது. அதுவும் முன்னேற்றம், பின்னேற்றம் என மாறி மாறி நடக்கிறது. 

அவனது சிறுவயது காயங்கள் ஆழமானவை. வெகுகாலம் புரையோடி போனவை. சில மாதங்களாக தானே அவன் இதயத்துக்கு பன்னீர் தெளிக்கும் ருஹானாவின் அண்மை இதம் அளிக்கிறது.

அவன் உள்ளிருக்கும் நல்ல தன்மைகள் அவளால் மெல்ல வெளிவருகின்றன, உண்மை தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது அவசரத்தனத்தால் ருஹானாவின் மனதை புண்படுத்தி விடுகிறான். அதை அவன் உணர்ந்தபின் அதை ஈடுகட்டும் விதமாக அவன் செய்யும் தன்மையான நடவடிக்கைகள் ஆறுதல் அளித்தாலும், இதுவே தொடர்கதையானால் ருஹானாவால் எத்தனை தான் தாங்க முடியும்? எவ்வளவு தான் பொறுத்துப் போக முடியும்?

——-

இரவு உணவை இவானுக்கு கொடுத்த ருஹானா “செல்லம்! நீ போய் உன் ரூம்ல விளையாடு. நான் இதெல்லாம் கழுவிட்டு வரேன்” என அவனை அனுப்பினாள்.

அவள் அதை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது உள்ளே வந்த ஆர்யன் ருஹானா தவிர அங்கே வேறு யாரும் இல்லை என கண்டுகொண்டு “உன்கிட்டே நான் பேசணும்” என மிருதுவாக சொன்னான்.

அவன் புறம் தலையை கூட திருப்பாத ருஹானா வேகமாக பாத்திரத்தை வைக்க, முள்கரண்டி அவள் விரலில் குத்தி இரத்தம் வந்தது.

ஆர்யன் பதறிப்போய் ஒரு துணியை எடுத்துக்கொண்டு வேகமாக அவள் அருகே வந்தான்.

அவனை கடுமையாக முறைத்த ருஹானா வேறு ஒரு துணியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

தான் தாங்கி தாங்கி போக அவள் முறுக்கிக்கொண்டு போவதை தாங்க முடியாத ஆத்திரத்தில் ஆர்யன், அவன் கையில் இருந்த துணியை வீசி எறிந்தான்.

——–

காலையில் ருஹானா தலைக்கு குளித்துவிட்டு கட்டிலில் அமர்ந்து கூந்தலை கோதிக்கொண்டிருக்க, கதவை தட்டிவிட்டு ஆர்யன் உள்ளே வந்தான்.

அவனை பார்த்ததும் வேகமாக எழுந்தவள் சீப்பை எதிரே இருந்த மேசையில் வைத்துவிட்டு அவனை தாண்டிக்கொண்டு வெளியே போக முற்பட்டாள்.

அவள் கையை அவன் பிடித்து “நீ எங்கயும் போக முடியாது. நான் உன்கிட்டே பேசணும்” என்று சொல்ல, வேகமாக அவனிடமிருந்து கையை உதறி நகர்ந்தாள். 

ஆர்யன் ஒரு நொடியில் சுழன்று கதவருகே சென்று கதவை அடைத்து சாவி கொண்டு மூடி சாவியை கையில் எடுத்துக்கொண்டான்.

அவள் முன்னே வந்து நின்றவன் “நீ என்கிட்டே பேசுற வரைக்கும் நாம இந்த அறையை விட்டு போக முடியாது” என்றான்.

கண்ணெடுத்து நிமிர்ந்து அவனை பார்த்தவள் “முன்னாடி மாதிரி அதிகாரம் காட்டலாம்னு நினைக்கறீங்களா? அது முடியாது” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.

“இனி அந்த பழைய ஆர்யன் இல்ல நான்”

அவள் அவனை அதிசயமாக பார்த்தாள்.

“நான் செய்தது தப்பு. அந்த முட்டாள்தனமான திட்டத்தை நான் போட்டதுக்கு காரணம் நீ எப்படிப்பட்டவ ன்னு நான் முழுசா புரிஞ்சிக்காதது தான்” வார்த்தைக்கும் வலிக்காத வண்ணம் மிருதுவாக பேசினான்.

“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நான் இங்க இருக்கறதுக்கு ஒரே காரணம் இவான் மட்டும்தான்” என ருஹானா சொன்னாள்.

“அவன் உங்களுக்கும் முக்கியம் தானே! உங்களுக்கு தேவைப்பட்டமாதிரி நான் இங்க இருக்கேன். வெளிய போகல. இதுக்கு மேலே உங்களுக்கு என்ன வேணும்?” என அவள் கேட்ட கேள்விக்கு அவனுக்கு சொல்ல பதில் இல்லை.

ஆனால் மனதில் ‘ஆமா, இதுக்கு மேலே எனக்கு என்ன வேணும்? இவ என்னை புரிஞ்சிக்கணும்னு நான் ஏன் நினைக்கறேன்?’ கேள்வி எழுந்தது.

“நான் இன்னும் கஷ்டப்படனும்னு விரும்புறீங்களா? அதான் உங்களுக்கு வேணுமா?”

‘ஐயோ! அப்படி சொல்லாதே! நானா அப்படி ஆசைப்படுவேன்?’ அவனுக்குள்ளேயே அதிர்ந்தது.

“உங்களை நம்பி ஏமாந்து போனேன். நீங்க மாறிட்டீங்கன்னு நினச்சேன். ஆனா அது தப்பு”

கோபமாக பேசினாலும் அவள் குரல் உயர்த்தவில்லை. ஆனால் கண்களில் லேசாக நீர்படலம். 

“உங்க கூட்டுக்கு பின்னாடி இருக்கறது நல்ல மனிதன்…, அன்பான மனிதன் இல்ல. நீங்க வெறும் ஓடு, கல் சுவர் தான்

ஒரு சோக பெருமூச்சு அவளிடம்.

“எனக்கு உங்ககிட்ட இதை பத்தி பேச ஒன்னும் இல்ல. நான் களைச்சி போயிட்டேன். அதிக சோர்வாகிட்டேன்”

“நீங்க எனக்கு புரிய வைக்க முயற்சி செய்றீங்க தப்பு செஞ்சிட்டேன் உன்னை சரியா புரிஞ்சிக்கலன்னு. வீணா நேரத்தை செலவு செய்யாதீங்க. அதுக்கு அவசியமே இல்ல”

“நீங்க இதுவரைக்கும் என்னை அபாண்டமா பேசினது.. எனக்கு ஏற்படுத்தின துன்பங்கள்… இதெல்லாம் நான் ஒரு பொருட்டா எடுத்ததே இல்ல. ஏன்னா நான் உங்களை மனப்பூர்வமா இங்க நம்பினேன்” என நெஞ்சில் கை வைத்து காட்டினாள்.

“ஆனா இப்போ அதே இடத்துல என்னோட நம்பிக்கை எல்லாம் இழந்து நிக்கிறேன்”

“என்னை பொருத்தவரைக்கும் இனி நீங்க எனக்கு ஒன்னுமேயில்லை”

அவள் இறுதியாக செருகிய அம்பு ஆழமாக பாய்ந்தது.

ஆர்யன் இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

அன்பின் போராட்டம் நீண்ட நெடியது

முட்டி மோத தயங்கவில்லை

கல்சுவரில் முட்ட முட்ட…

அதிலும் ஈரம் கசியத் தொடங்க

பாலைவன தடாகம் இடையில்

கண்ணாமூச்சி ஆடுகிறது இருவரிடமும்.

அது தடாகமாக நிலைக்குமா

கானல் நீராய் மறையுமா..?

(தொடரும்)

Advertisement