Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 61  

ருஹானா குறுஞ்செய்தியை படித்ததும் நிலைகுலைந்து போக, அவளது கலங்கிய முகம் கண்டு ஆர்யன் “என்னாச்சு? எதும் கெட்ட தகவலா?” என கேட்டான்.

அவன் குரல் கேட்டு உணர்வு வர பெற்ற ருஹானா எழுந்து நின்று “உங்களால எப்படி இப்படி செய்ய முடிந்தது? நீங்க தான் என்னை மாட்டி விட்டுருக்கீங்க? அப்படித்தானே?” என கேட்டாள். 

‘அச்சோ! தெரிஞ்சிடுச்சா? அதைத் தானே நான் சொல்ல வந்தேன்’ என நினைத்த ஆர்யன் தலைகுனிந்து கொண்டான்.

“நீங்க இல்லன்னு சொல்லுங்க. நீங்க செய்யலன்னு சொல்லுங்க”  என அழுகை நிறைந்த குரலில் கெஞ்சினாள்.

‘எப்படி சொல்வேன் நான்?’ என மனதில் சொன்னவன் அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு தலையை தொங்கப் போட்டான்.

“நீங்க இத்தனை நாளா என் கண்ணுக்கு நேரா பொய் சொல்லிருக்கீங்க. நீங்க தான் என்னை காப்பாத்தினீங்கன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீங்க… நீங்க தான் என்னை சாவோட விளிம்புல தள்ளி இருக்கீங்கஎன வெகுண்டாள்.

ஆர்யன் மனப்பாரம் மேலும் அதிகமானது. 

“நான் என் உயிரை பற்றி கவலைப்படல. ஆனா நான் இவானை திரும்ப பார்க்க முடியாம போயிருக்கும். என்னோட இதயத்தை என்கிட்டே இருந்து பிரிக்க பார்த்திருக்கீங்க! உங்களால எப்படி முடிந்தது?” என மிக சத்தமாக இரைந்தாள்.

ஆர்யன் எழுந்துகொண்டே “நான்….“ என தொடங்க, அவளோ “நீங்க… நீங்க… நீங்க.. என்ன நீங்க? எப்பவும் நீங்க மட்டும் தான்! எப்பவாது உங்களை தவிர வேற யாரையாவது நினைச்சி பார்த்திருக்கீங்களா?” என குரலின் ஓசையை அதிகப்படுத்திக்கொண்டே சென்றாள்.

அவளது கோப வீச்சில் ஆர்யன் அதிர்ந்து போய் நின்றான்.

“உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது அடுத்தவங்களை பத்தி நினைச்சி பார்த்திருக்கீங்களா?”

ஆர்யன் அவளிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டான்.

“நீங்க.. நீங்க ஒரு காட்டுமிராண்டி. உங்களை பத்தி மட்டுமே யோசிக்கிற காட்டுமிராண்டி”

அவளின் சத்தத்தில் மாளிகையே அதிர்ந்தது.

“நீங்க என்னை மட்டும் உதாசீனப்படுத்தல. இவானையும் தான். இவான் மேலே நீங்க வச்சிருக்கற அன்பு கூட உங்களுக்கு அப்புறம் தான்”

இவானை பற்றி ருஹானா இப்படி சொல்லவும் அவனுக்கு பேசமுடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான். பாதிக்கப்பட்டவள் பேசுகிறாள் என அமைதியாக நின்றான்.

இதற்கு மேல் என்ன சொல்வது என யோசித்த ருஹானா “நான் எங்கேன்னு இவான் கேட்டா என்ன பதில் சொல்லியிருப்பீங்க? என்ன சொல்லுவீங்க? உன் சித்தி செத்துட்டா ன்னா? இல்ல உன்னை விட்டுட்டு ஓடிட்டா ன்னா? அவளுக்கு உன்மேலே பாசமே இல்ல ன்னா? சொல்லுங்க..  என்ன சொல்லியிருப்பீங்க?” என குரலெடுத்து கத்தினாள்.

ஆர்யன் தலை நிமிரவேயில்லை.

தலையில் கைவைத்து கொண்டவள் “அல்லாஹ்! இதெல்லாம் என்ன?” என குனிய, “நான் சொல்றதை ஒரு நிமிஷம்….“ என ஆர்யன் கை நீட்டியவாறே பேச வர, அவள் கையை பின்னே இழுத்துக்கொண்டே “தொடாதீங்க. என்னை தொடாதீங்க” என பல்லை கடித்துக்கொண்டு சொல்ல, அவன் கையை மெல்ல மடக்கிக் கொண்டான்.

“நான் இன்னும் ஜெயில்ல இருந்திருக்கலாம். இல்லனா ஆஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருந்திருக்கலாம்”

அவனால் அப்படிப்பட்ட நிலைமையில் அவளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 

“ஏன்?… ஏன் இந்த கோபம்? நாம அந்த அளவுக்கு விரோதிகளா? என்மேலே உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா?என ஆங்காரமாக கேட்டாள்.

‘என்னலாம் பேசுறா இவ? இது எதுவுமே நான் நினைக்கலையே!’ அவன் நொந்துப்போனான்.

“நான் உங்களை எப்பவும் நம்பி இருக்கவும் கூடாது. இங்க வந்திருக்கவும் கூடாது”

சாட்டையாய் அந்த வார்த்தை அவன் மேல் விழ, வேகமாக தலை நிமிர்ந்து அவளை நோக்கினான்.

அவள் முகம் கோபத்தால் சிவந்து கண்கள் நீரில் மிதந்திருந்தன.  

எதுவும் பேச முடியாமல் அவன் நிற்க, வேறு பேச எதுவும் இல்லாமல் அவள் வேகமாக வெளியேறினாள்.

கதவு அருகே முகம் கொள்ளா சிரிப்புடன் நின்ற கரீமாவும், சல்மாவும் தூணுக்கு பின்னே வேகமாக மறைந்து கொண்டனர்.

“இதோட கதை முடிந்தது அக்கா”

“ஆமா டியர்! இந்த சூறாவளில இருந்து அவங்க மீள முடியாது. அதிர்ஷ்ட காத்து நம்ம பக்கம் அடிக்குது”

இருவரும் ஆனந்தமாக நகர்ந்து விட்டனர்.

ருஹானா தனது அறைக்கு சென்று ஓங்கி கதவடைத்தாள். கதவில் சாய்ந்தவாறே அழ ஆரம்பித்தாள்.

போலீஸ் அவளை கைது செய்ததும், ஆர்யன் அவள் தோள் பற்றி நம்பிக்கை அளித்ததும், சிறையில் இவானின் குழந்தை படத்தை தந்ததும் அவளுக்கு படமாய் ஓடியது.

கண்ணீரை துடைத்தவள் பெட்டியை எடுத்து அவளது ஆடைகளை அதில் அடுக்கலானாள்.

“சித்தி!” என இவான் குரல் கேட்கவும் அவள் இயக்கம் அப்படியே நின்றது.

“இதை எங்க மாட்றது?” என அவன் வரைந்த மூவரும் கைகோர்த்து நிற்கும் படத்தை காட்டினான்.

அப்போது தான் பெட்டியை பார்த்த இவான் “சித்தி! நீங்க எங்காவது போறீங்களா?” என கேட்டான்.

அவன் அருகே மண்டியிட்ட ருஹானா “அன்பே! நான் சொல்லப் போறதை கவனமா கேளு” என ஆரம்பித்தாள்.

——–  

வாசிம் வாகிதாவை விரைந்து மருத்துவமனையில் சேர்க்க, பலத்த போராட்டத்துக்கு பின் அவள் உயிர் பிழைத்தாள். என்றாலும் ஒரு முழு நாளுக்கு பின்பே எதுவும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் சொல்ல வாசிம், தன்வீர், பர்வீன், தௌலத் என அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவின் அறையின் வெளியிலேயே கவலையுடன் காத்திருந்தனர்.

——– 

“அவளுக்கு.. இவான் சித்திக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி, ரஷீத்”

“எப்படி தெரிஞ்சது, ஆர்யன்?”

“எனக்கு தெரியல. ஒருவேளை ஹுசைன் போலீஸ்க்கு கொடுத்த வாக்குமூலத்துல சொல்லியிருக்கலாம். அவளோட சகோதரன் அங்க தானே இருந்தான். அவன் இவளுக்கு சொல்லியிருப்பான்

அப்படியா?”

“இருந்தாலும் எனக்கு சரியா தெரியணும். யார் மூலம் அவளுக்கு தெரிய வந்ததுன்னு கண்டுபிடி”

சுரத்தே இல்லாமல் போன் பேசி வைத்த ஆர்யன் எதிரே தட்டுக்களில் மீதி இருந்த கேக்கை பார்த்தான்.

ருஹானா ஆசையாக கேக் எடுத்து வந்ததும், அவனுக்கு ஆறுதலாக பேசி அவன் மனநிலையை மாற்றியதும் எப்போதோ நடந்தது போல அவனுக்கு தோன்றியது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் என்னவெல்லாம் நடந்துவிட்டது! எப்படியெல்லாம் பேசிவிட்டாள்! 

அவள் கூறிய அனைத்தும் உண்மை தானே! அவன் அனுபவிக்க வேண்டியது தான். அவளை வார்த்தைகளாலும் செயல்களாலும் எவ்வளவு துன்புறுத்தினான். இப்போது வாங்கி கட்ட வேண்டியது அவன் முறை. விதைத்தது தானே விளையும்?

இனியாவது அவசரப்பட்டு அவளை தவறாக நினைக்க மாட்டான் தானே! முரட்டுத்தனமாக நடந்து கொள்ள மாட்டான் அல்லவா?

இதுநாள் வரையில் இவனின் கோபத்தின் கொடுமைக்கு மற்றவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்று ஒரு தென்றல் புயலாக மாறி அவனை சூறையாடிவிட்டது. 

தட்டுக்களை எடுக்க வந்த ஜாஃபரிடம் “இவான் சித்தி ரூம்ல தானே இருக்கா?” என ஆர்யன் கேட்க “நான் பார்க்கல ஆர்யன் சார். ரெண்டு மணி நேரம் முன்னே கிச்சன்ல இருந்தாங்க” என பதில் கிடைத்தது.

ஜாஃபர் செல்லவும் ஆர்யனும் ருஹானாவை பார்க்க கதவருகே சென்றான். ஆனால் கதவு திறக்கும்முன் மனம் மாறி மீண்டும் உள்ளே வந்துவிட்டான்.

அவளுக்கு கோபம் தணிய சிறிது அவகாசம் கொடுக்கலாம் என எண்ணி உள்ளேயே இருந்து கொண்டான்.

——–   

காலையில் எழுந்ததும் தன் வழக்கம் மாற்றி இவான் அறையை கூட எட்டி பார்க்காமல் நேரே ருஹானாவை நாடி வந்தான்.

திறந்திருந்த அவள் அறையை பார்த்ததும் ‘உங்களை நம்பி இந்த மாளிகைக்கு திரும்ப வந்திருக்க கூடாது’ என ருஹானா சொன்னது காதில் கேட்க, வேகமாக சென்று இவான் அறையை திறந்தான்.

இவானும் அங்கே இல்லை என்றதும் தவித்து போனவன் ஓட்டமும் நடையுமாக படிக்கட்டில் இறங்கினான்.

“எனக்கு போதும் நஸ்ரியா அக்கா” என இவான் குரல் கேட்டதும் தான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது. குரல் வந்த உணவு அறைக்கு நடந்தான். 

ருஹானாவும், இவானும் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“சித்தப்பா! குட்மார்னிங்!” என இவான் சொன்னதும் ருஹானா சாப்பிடுவதை நிறுத்தி விட்டாள்.

இவானுக்கும் மற்றவர்களுக்கும் ஆர்யன் காலை வணக்கம் சொல்ல, மற்றவர்களும் திருப்பி சொன்னார்கள், ருஹானா தவிர.

அவளை பார்த்துக்கொண்டே ஆர்யன் அவன் நாற்காலியில் அமர, சல்மா “ஆர்யன்! நீங்க கேட்ட தகவல்கள் நான் உங்களுக்கு மெயில் செய்திருக்கேன். அதுல எதும் திருத்தம் இருந்தா  சொல்லுங்க, நான் சரி செய்து தரேன்” என்றாள்.

ஆர்யன் அவளுக்கு பதிலும் சொல்லவில்லை. அவள் புறமும் திரும்பவில்லை.

அவன் ருஹானாவையே பார்க்க, அவளோ அவனை கண்டுகொள்ளவேயில்லை. இந்த நாடகத்தை கரீமா பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“இவான் நீ ஆம்லேட் சாப்பிடுறீயா?” என கேட்டு எடுத்துக் கொடுத்த ருஹானா வேறு எதுவும் சாப்பிடவில்லை.

கரீமா “ருஹானா டியர்! அந்த ஜாமை ஆர்யன் பக்கம் நகர்த்து!” என சொல்ல, அவள் அசையாது இருந்தாள்.

“ருஹானா! உன்கிட்டே தான் சொல்றேன். ஆர்யனுக்கு ஜாம் எடுத்துக் கொடு” என கரீமா சத்தமாக சொல்ல, அப்போதும் அவள் காது  கேட்காதது போல இருந்தாள். ஆர்யன் “இல்ல.. எனக்கு வேணாம்” என்றான்.  

அம்ஜத் சந்தர்ப்பம் தெரியாமல் “ஆஹா ஆர்யன்! ருஹானா செய்த செஸ்ட்நட் கேக் சாப்பிட்டியா? என்ன ருசி! உனக்கு பிடிச்சதா?” என கேட்டான்.

ஆர்யன் பதில் சொல்லவில்லை எனவும் மறுபடியும் அம்ஜத் “கேக் ஆர்யன்.. ருஹானா செய்தது.. அருமையா இருந்தது.. செஸ்ட்நட் கேக்.. உனக்கு பிடிக்குமே! கேக்! சாப்பிட்டியா?” என கேட்டான்.

“ஆமா அண்ணா! நல்லா இருந்தது” என ஆர்யன் ருஹானாவிடம் சொன்னான். அம்ஜத் சிரிப்புடன் தலையாட்ட, ருஹானாவின் முகத்தில் புன்னகைக்கும் பஞ்சமானது.

சல்மாவும், கரீமாவும் சாப்பிடுவதை விடுத்து இவர்களையே மகிழ்வோடு பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ருஹானா “இவான் செல்லம்! நீ சாப்பிட்டு முடிச்சிட்டினா நாம தோட்டத்துக்கு போய் விளையாடலாமா?” என கேட்க, இவானும் குதித்துக்கொண்டு எழுந்தான்.

பொதுவாக “இனிய உணவு” என சொன்ன ருஹானா, கரீமா புன்சிரிப்புடன் தலையசைக்கவும், இவான் கையை பற்றிக்கொண்டு வெளியே செல்ல, தன் பார்வையை சந்திக்காத அவளை ஆர்யன் முறைப்புடன் பார்த்திருந்தான்.

——-

Advertisement