Advertisement

சாக்லேட் தூள்களால் ருஹானா கேக்கை அலங்கரிக்க, பக்கத்தில் நின்ற இவான் “சித்தி! கேக் நல்லா இருக்கு. சித்தப்பாக்கு ரொம்ப பிடிக்கும் தானே” என்று கேட்க, சிரிப்புடன் ருஹானா “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்றாள்.

அப்போது வெளியே சாரா குரல் கேட்டது.

“ஏதாவது வேணுமா ஆர்யன் சார்?”

“இவானும் அவன் சித்தியும் எங்க இருக்காங்க?”

ருஹானா கிசுகிசுப்பாக “இவான்! ஓடிப்போய் உன் சித்தப்பாவை தடுத்து நிறுத்து” என சொல்ல இவான் வெளியே ஓடினான்.

“மெதுவா அக்னி சிறகே! கீழே விழுந்துடாதே”

“சித்தப்பா நீங்க இப்போ உள்ள போக முடியாது”

“ஏன் இவான்?” 

இவானுக்கு என்ன சொல்வது என்று தெரியாததால் அவன் விழித்து நின்றான். “ஏன்னா.. ஏன்னா…”

“கிச்சனை சுத்தம் செய்றாங்களா?” ஆர்யனே கேட்டான்.

இவான் எப்போதும் செய்வது போல கண்களை மூடி தலையை ஆட்டினான்.

“சரி, நான் எப்போ வரலாம்?”

“நீங்க வர வேண்டாம். நாங்க உங்ககிட்டே வருவோம்”

“அப்போ சரி” என புன்னகைத்தபடி ஆர்யன் சென்றுவிட்டான்.

உள்ளே வந்த இவான் “சித்தி! நான் சித்தப்பாவை உள்ளே வர விடல” என்றான்.

“வெல்டன் செல்லம்” என ருஹானா பாராட்ட, இவான் மகிழ்ச்சியானான்.

——–

சல்மா செய்த பற்பல முயற்சிகளும் தோல்வி அடைந்த பின், இறுதியாக ரஷீத்தின் மேல் வேண்டும் என்றே பழச்சாறை கொட்டிவிட, அவன் அதை சுத்தம் செய்ய சென்றான்.

அவன் போனில் குறுஞ்செய்திகளில் தேடியவளின் கண்ணில் லட்டு போல மாட்டியது, ரஷீத்துக்கும் சமூக விரோதி ஹுசைனுக்கும் நடந்த தகவல் பரிமாற்றம்.

மகிழ்ச்சியில் குதித்த சல்மா அதை தனது போனில் போட்டோ எடுத்துக்கொண்டாள்.

———–

ஆர்யன் தன் அறையில் தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடி கல்லாய் சமைந்த முகத்துடன் நின்றிருந்தான்.

சித்தப்பாவிற்கு இனிய அதிர்ச்சி கொடுக்க இவான் ஆவலோடு உள்ளே நுழைய, அவன் பின்னால் பெரிய கேக்கை தூக்கிக் கொண்டு ருஹானாவும் வந்தாள்.

“சித்தப்பா!” என இவான் அன்போடு அழைக்க, திரும்பிய ஆர்யன் சந்தோஷ முகங்களுடன் நின்றிருந்த இவானையும், ருஹானாவையும் பார்த்தான்.

ருஹானாவின் கையிலிருந்த கேக்கை பார்த்ததும் அவன் முகமே மாறி போனது. அவன் அன்னை அவனை தள்ளிவிட்டு போனதும், இவன் அம்மா என பின்னால் ஓடியதுமான நினைவுகள் அவன் மண்டைக்குள் ஓங்கி அடித்தன.

ருஹானாவின் சிரித்த முகம் மாறி ஆர்யனின் இறுகிய முகத்தை குழப்பமாக பார்த்தது. அவனுக்குள் ஏதோ சரியில்லை என அவளுக்கு புரிந்துவிட்டது.

அவன் இடது மணிக்கட்டை பிடிக்கவுமே அவனுடைய பால்ய பருவம் அவனை ஆக்கிரமித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள் “இவான் செல்லம்! உன் சித்தப்பாவின் பிறந்த நாள் பரிசை மறந்திட்டியே! அவர் கேக் வெட்டும்போது கொடுக்கணும்ல. போய் எடுத்துட்டு வா” என அவனை அனுப்பி வைத்தாள்.

நான் வந்த உடனே தான் கேக் வெட்டணும்” என இவான் சொல்லி சென்றான்.

இவான் சென்றதும் ஆர்யனின் வெண்மையான முகம் ரத்தநிறம் கொண்டது. கண்கள் கேக்கையே வெறுப்புடன் நோக்க, ருஹானா “என்ன ஆச்சு உங்களுக்கு?” என கேட்டாள்.

இடது கையை மேலும் அழுத்தி பிடித்தவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“ஏதாவது பேசுங்களேன்” என ருஹானா கெஞ்ச, அவன் பார்த்த பார்வை! கண்ணீர் சிந்திடுமோ செஞ்சூரியன்?

மகனோடு இணைந்து 

அவனை மகிழ்விக்க 

அவள் செய்த முயற்சி

ஆறாத இரணத்தை கிளற….

முழுதாய் மகிழ முடியாமல்

அவள் அறியாதது

அவனை தடுத்திட

அறிந்தும் அறியாமலும்..!

அவனின் உறைந்த தோற்றத்தில் கலங்கிய ருஹானா “எனக்கு தெரியும் உங்களுக்கு இப்படி சர்ப்ரைஸ்லாம் பிடிக்காது… உங்களுக்கு தொல்லை கொடுக்கறது எங்க நோக்கம் இல்ல. கேக் மட்டும் தான் செஞ்சோம். இவான் ரொம்ப ஆசைப்பட்டான். என்னால மறுக்க முடியல.”

மெல்ல மெல்ல ஆர்யனின் முக சிவப்பு மறைய “உங்களுக்கு இது பிடிக்கலன்னு எனக்கு புரியுது. இவான் உங்களை எவ்வளவு நேசிக்கிறான்னு காட்ட விரும்பினான். நானும்…. நான் என்னோட நன்றியை தெரிவிக்க நினைச்சேன், இந்த சின்ன செயல் மூலமா” என அவள் சொல்லவும், ஆர்யன் கண்களை மூடிக்கொண்டான்.

தனது சோகங்களை உள்ளேயே அழுத்திக்கொண்டவன், ருஹானா கேக்கை எடுத்துக்கொண்டு நகரவும் “இது உங்களை பற்றி இல்ல. என் அம்மா… அவங்க போனதுல இருந்து இந்த கேக்கை நான் சாப்பிடுறது இல்ல. இதோட பேரை கூட சொல்ல மாட்டேன்” என நிறுத்தி நிறுத்தி சொன்னான்.

“அம்ஜத் அண்ணா இந்த கேக் உங்களுக்கு அதிகமா பிடிக்கும்னு சொன்னார்”

“அண்ணனுக்கு இது தெரியாது”

“எனக்கு முன்னமே இது தெரிஞ்சிருந்தா இதை செஞ்சிருக்கவே மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் இதை எடுத்துட்டு போறேன்”

கிளம்பிய ருஹானாவை ஆர்யன் தடுக்கவில்லை. ஆனால் இவான் கதவை திறந்துக்கொண்டு தான் வரைந்த படத்துடன் உள்ளே வந்தான்.

இருவரின் கடின முகத்தையும், சித்தி கேக்கை கையில் வைத்திருப்பதையும் பார்த்தவன் “சித்தப்பா! இந்த கேக் உங்களுக்கு பிடிக்கலயா?” என பாவமாக கேட்டான்.

அவனுக்கு ஏமாற்றம் தர விரும்பாத ஆர்யன் ஒரு ஸ்பூன் எடுத்து அந்த கேக்கில் மிக சிறிய துண்டை எடுத்து வாயில் போட்டான். கண்களை சிமிட்டிக்கொண்டே கசப்பான மருந்தை சாப்பிடுவதை போல அதை விழுங்கினான். 

இவானின் மகிழ்ச்சிக்காக அவன் பிடிக்காததையும் செய்வதை ருஹானா கண்ணீர் மல்க பார்த்திருக்க “நல்லா இருக்கு, சிங்கப்பையா!” என ஆர்யன் சொல்ல இவான் முகம் மலர்ந்தது.

ருஹானாவிடம் “அருமையான சுவை!” என சொன்ன ஆர்யன் அவளையே பார்த்திருக்க “சித்தப்பா! இதை பாருங்க” என இவான் படத்தை காட்ட, அதில் அசுரன் சிறுவனின் கையை பற்றியபடி நின்று கொண்டிருந்தான்.

இவான் வரைந்த ஓவியம் கண்டு ஆர்யனின் உள்ளே உருகிப்போனது.     

அவர்கள் அறியாமலே இருவரும் ஆர்யனின் சோக தருணங்களை மகிழ்வான தருணங்களாக மாற்றுகின்றனர்.

பாசம் காணாத பாலைவனத்தில்  நீர் தடாகமாகிடுமா அவர்கள் அன்பு!!!

——-

வாசிம் தனது காவல்துறையின் உதவியோடு பர்வீன் சொன்ன கார் எண்ணை வைத்து வாகிதாவை அவள் அண்ணன் மறைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டான். அவனை அடித்து போட்டுவிட்டு மயங்கி கிடந்த வாகிதாவை மயக்கம் தெளிவித்து எழுப்பி காருக்கு அழைத்து செல்லும்போது கீழே விழுந்திருந்த அவள் அண்ணன் துப்பாக்கியை எடுத்து வாசிமை சுட, நடுவில் வந்த வாகிதா அந்த குண்டை தான் வாங்கிக்கொண்டாள். 

——–

கரீமா ஆர்யனின் அறைக்கதவில் காதை வைத்து ‘எப்போது பெரிய சத்தம் வர போகிறது?’ என ஆவலாய் கேட்டுக்கொண்டிருக்க, சல்மா தனது கைப்பையுடன் ஒயிலாக அங்கே வந்தாள்.

“என்னக்கா செய்றே?”

“அங்கே சண்டை நடக்கும்னு நினைச்சா அவங்க ஜாலியா பேசிட்டு இருக்காங்க. ஆர்யன் கத்துவான்னு பார்த்தா அவன் குரலே காணோம்”

“இப்போ கத்த போறது ஆர்யன் இல்ல. அந்த அவலட்சணம் ருஹானா தான்”

“அப்படினா நீ தேடின ஆதாரம் கிடைச்சிடுச்சா?” கரீமாவின் முகம் பளீரென மலர்ந்தது.

“நீ வா அக்கா! நான் சொல்றேன்” என சல்மா அவளை கூட்டிப் போனாள்.

———   

தட்டுக்களில் கேக்கை வைத்து மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க இவான் ஆர்யனிடம் கேட்டான்.

“சித்தப்பா! உங்களுக்கு கேக் பிடிச்சிருக்கா?”

ஆர்யன் மெல்ல தலையாட்ட “நீங்க கொஞ்சமா தான் சாப்பிட்டீங்க. பாருங்க நான் எவ்வளவு பெருசா சாப்பிட்டேன்” என சொல்ல, ஆர்யன் மௌனமாகவே இருந்தான்.

ருஹானா இவானை திசை திருப்ப பார்த்தாள்.

“அன்பே! நீ வரைந்த படத்துல என்னையும் சேர்த்து வரைய முடியுமா?”

“வரையறேனே! நாம மூணு பேரும் சேர்ந்து இருக்குற மாதிரி தானே சித்தி?”

“ஆமா செல்லம்”

மகிழ்ச்சியாக இவான் படத்தை எடுத்துக்கொண்டு செல்லவும், ருஹானா ஆர்யனிடம் திரும்ப மன்னிப்பு கேட்டாள்.

“எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் செய்திருக்கவே மாட்டேன்”

“உனக்கு தெரியாத இன்னொரு விசயமும் இருக்கு”

ருஹானா புரியாது அவனை பார்க்க “இவானுக்காக நான் எதுவும் செய்வேன். அது உனக்கு தெரியும் தானே?” என ஆர்யன் கேட்க, ருஹானா தலையசைத்தாள்.

“ஆனா எவ்வளவு தூரம் போவேன்னு… இப்போ எவ்வளவு தூரம் போனேன்னு…” என ஆர்யன் சொல்ல தொடங்கும்போது, ருஹானா போனில் குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்டது.

அவள் அதை சட்டை செய்யாமல் ஆர்யன் சொல்வதை கவனித்து கேட்டிருக்க, “அது என்னன்னு பாரு. முக்கியமான தகவலா இருக்க போகுது” என அவன் சொல்லவும் ருஹானா எடுத்து பார்த்தாள்.

‘ஹுசைன்! ஆர்யன் சார் கோபமா இருக்கார். நீ இன்னும் வேலையை முடிக்கலையா?’

ருஹானாவின் முகம் குழப்பமாக, அதை கூர்ந்து படித்தாள்.

‘எல்லாம் முடிஞ்சது ரஷீத் சார். ஆர்யன் சார் சொன்னபடி’

அவள் அதிர்ந்து போனாள்.

‘ஆர்யன் சாருக்கு எல்லாம் சரியா நடக்கணும். இல்லனா அவரை சமாளிக்க முடியாது

‘நீங்க கவலையே படாதீங்க ரஷீத் சார். அந்த பொண்ணு ருஹானாவோட பேர் இப்போ மோசடி விவகாரத்துல நல்லா மாட்டிக்கிச்சி’

ருஹானாவின் திகைத்த முகத்தை எதிரே அமர்ந்திருந்த ஆர்யன் குழப்பமாக பார்த்தான்.

‘உண்மையாவா? ருஹானா கண்டிப்பா ஜெயிலுக்கு போய்டுவா தானே’

‘ஆமா ரஷீத் சார். இன்னும் ரெண்டு நாள்ல போலீஸ் அவளை கைது செய்துடுவாங்க. எல்லாம் ஆர்யன் சார் விருப்பப்படி. போலீஸ்க்கு உங்க மேலே எந்த சந்தேகமும் வராது’

படித்து முடித்து நிமிர்ந்தவள் கண்கள் கலங்கியிருக்க, ஆர்யன் மேல் தளராத நம்பிக்கை வைத்த அவளது இதயத்தில் இடி விழுந்ததுபோல உணர்ந்தாள். 

(தொடரும்)

Advertisement