Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 60  

ஆர்யனை புகழ்ந்து ருஹானா பேசிய வார்த்தைகள் அவனுக்கு கடினமாக இருந்தாலும், தன் குணங்களை அவள் அறிந்து வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியையும் தந்தது. அவளை இழந்து விடவே கூடாது என்னும் வைராக்கியத்தையும் தந்தது.

“நீங்க எதுவும் சொல்ல வேணாம். என் மனசுல பட்டதை நான் சொல்றேன்”

அதிகம் பேசும் இயல்பில்லாதவனை, திரும்ப திரும்ப தன்னிடம் பேச வருபவனை ருஹானா பேச விடாமல் பேசினாள்.

“ஏன்னா நான்.. நான் இனி உங்களை பார்த்து பயப்பட மாட்டேன். நீங்க வேணும்னே என்னை புண்படுத்த மாட்டீங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி”

அவன் தான் அவளை அபாயத்தில் தள்ளினான். ஆனால் அவனே தான் அவளை விடுவிக்கவும் செய்தான். என்றாலும் அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவன் குற்றயுணர்வை அதிகரித்தது. அவன் இதயத்தில் கத்திகளாக பாய்ந்தது. 

அவன் பேச வார்த்தைகள் இன்றி நிற்க நான் பேசினதை கேட்டதற்கு நன்றி. நான் போய் இவானை பார்க்கறேன்” என்று அவள் சென்றுவிட்டாள்.

‘ஐயோ! என்ன செய்துவிட்டேன் நான்! இவள் நம்பிக்கையை திரும்ப எப்படி பெறுவேன்?’ என்று ஆர்யன் அப்படியே நின்றுவிட்டான்.

——–

“பெரியப்பா! நான் வரையறது நல்லா இருக்கா?” என இவான் கேட்க, அவன் நெற்றியில் முத்தமிட்ட அம்ஜத் “அற்புதமா இருக்கு!” என்றான்.

“பார்! அந்த அசுரன் ஆர்யனை போலவே இருக்கான்” என அம்ஜத் சொல்வதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த ருஹானா “என்ன செய்றே அன்பே?” என கேட்டாள்.

“பெரியப்பா எனக்கு ஒரு ரகசியம் சொன்னார். இன்னைக்கு சித்தப்பாவோட பிறந்தநாள்” என இவான் சொல்ல ருஹானாவிற்கு ஆச்சர்யம்.

“அதான் இவான் இந்த படத்தை வரையறான். ஆர்யனுக்கு பிறந்தநாள் பரிசு”

“ஏன் அம்ஜத் அண்ணா அது ரகசியம்?”

“ஏன்னா ஆர்யனுக்கு கொண்டாட்டங்கள் பிடிக்காது”

“ஆனா பர்த்டே கேக்?” என இவான் கேட்க ருஹானாவிற்கு ஒரு யோசனை வந்தது.

நாம பார்ட்டி செய்யவேண்டாம். ஒரு கேக் மட்டும் செய்யலாம் தானே?” என புன்னகை பூசிக்கொண்டு ருஹானா கேட்க, அந்த புன்னகை அம்ஜத்தையும் தொற்றிக் கொண்டது.

“செஸ்ட்நட் கேக்!….. செஸ்ட்நட் கேக்! அது ஆர்யனுக்கு ரொம்ப பிடிக்கும்” என சொன்ன அம்ஜத் தலையை தட்டி யோசித்தான்.

“ஆனா அவன் சின்னவயசுல சாப்பிட்டது தான். அதுக்கு அப்புறம் சாப்பிட்டது இல்ல. அவனுக்கு பிடிக்கும்.. பிடிக்கும்” என்றான் அம்ஜத்.

சித்தியும், அக்கா மகனும் ஒருவரையொருவர் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டனர்.

——–

கமிஷனர் வாசிமின் அத்தை தௌலத்துக்கு திடீரென இரத்த அழுத்தம் அதிகமாக, வீட்டில் மாத்திரை இல்லாததால் வாகிதா வெளியே சென்று வாங்க ஓடினாள். “உன் அண்ணன் உன்னை தேடிக்கொண்டு இருக்கிறான். அவனிடம் நீ மாட்டினால் உன்னை இழுத்துட்டு போய்டுவான். போகாதே’ என தௌலத் எச்சரிக்கை செய்தும், தௌலத்தின் உடல்நிலை மோசமாவதை கருத்தில் கொண்டு கவனமாக சென்றுவருவதாக சொல்லிவிட்டு வாகிதா சென்றாள். 

———

ருஹானாவும் இவானும் சமையலைறையில் இருக்க, அங்கே வந்த சாராவும் நஸ்ரியாவும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தனர்.

“இது ரகசியம். யார்கிட்டேயும் சொல்லக்கூடாது” என இவான் வாயில் சுட்டுவிரல் வைத்து எச்சரிக்க, இருவருக்கும் அந்த அழகு பாவனையில் சிரிப்பு வந்தது.

உதட்டில் ஜிப் வைத்து மூடுவது போல சைகை காட்டிய சாரா சிரித்துக்கொண்டே சென்றுவிட, நஸ்ரியா “நாளைக்கு இதே செஸ்ட்நட் கேக் எனக்கும் செய்து தரணும். அப்போ தான் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்” என பேரம் பேசினாள்.

இவான் யோசிக்க ருஹானா சிரிப்புடன் சரி என சொன்னாள். நஸ்ரியாவும் சென்றவுடன் “என்ன செல்லம்! இது மிக கடினமான வேலையா இருக்கும் போல!” என ருஹானா பொய்யாய் கவலைப்பட, இவான் “இப்போ என்ன செய்றது, சித்தி?” என கேட்டான்.

“யாராவது ஒருத்தர் வாசல்ல நின்னு பார்த்துக்கணும். உன் சித்தப்பாவை தடை செய்ய தைரியம் உள்ள ஆள் தான் அதை செய்ய முடியும்”

“நான் தைரியசாலி தானே சித்தி?”

“கண்டிப்பா அன்பே!”

“அப்போ நான் போய் காவலுக்கு நிக்கிறேன். நீங்க கேக் செய்ங்க” என வீரமாக இவான் கிளம்பி போக, சிரிப்புடன் ருஹானா கேக் கலவையை செய்தாள். 

——–

வாகிதா மருந்து வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில், அங்கேயே சுற்றிக்கொண்டிருந்த அவள் அண்ணன் கண்ணில் சிக்கிக்கொண்டாள். அவன் அவளை தரதரவென இழுத்து காரில் ஏற்றுவதை தன்வீரின் அம்மா பர்வீன் பார்த்துவிட்டார். அவர் காரின் பின்னாலேயே ஓட கார் பறந்துவிட்டது.

———

ஆர்யன் இவான் அறையை திறந்து பார்க்க அங்கே யாரும் இல்லை. நேரே ருஹானா அறைக்கு சென்றவன் கதவை தட்டவா வேண்டாமா என யோசித்து நிற்க கதவு திறந்தது. கையில் துணிகளுடன் நஸ்ரியா வெளியே வந்தாள்.

“எனக்கு எதும் வேலை இருக்கா, ஆர்யன் சார்?”

“இவானும், அவன் சித்தியும் எங்கே?”

“அவங்க ரெண்டுபேரும் கிச்சன்ல இருக்காங்க, சார்”

“சரி நீ போ” என ஆர்யன் நடக்க அவன் போன் அடித்தது.

“ஆர்யன்! ஹார்பர்ல சரக்கு டெலிவரில கடைசி நேரத்துல ஒரு சிக்கல். பார்ட்டி ஆன்லைன் மீட்டிங் கூப்பிடுறாங்க. நீங்க வரீங்களா?”

“சரி ரஷீத்! நீ ஆரம்பி. நான் இன்னும் ரெண்டு நிமிஷத்துல சேர்ந்துக்கறேன்” என சொன்ன ஆர்யன் திரும்பி அவன் அறையை நோக்கி நடந்தான்.

———-

இவான் சமையலறை வாசலில் நின்றிருக்க அங்கே வந்த கரீமா “ஏன் இங்க நிற்கிறே, இவான்?” என கேட்டாள்.

“சித்தப்பாவை உள்ளே விடாம இருக்கத்தான். நாங்க சித்தப்பா பிறந்தநாளுக்காக கேக் செய்றோம். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறோம். நீங்களும் அவர் கிட்டே சொல்லிடாதீங்க”

“ஓ.. அப்படியா.. நான் கிச்சனுக்கு வரலாமா?” என இவான் தலையை தடவிய கரீமா, இவான் தலையாட்டவும் உள்ளே வர இவானும் அவளை பின் தொடர்ந்தான்.

கேக் செய்துக்கொண்டிருந்த ருஹானா, கரீமாவை பார்த்து புன்னகை செய்ய “என்ன ருஹானா! நான் எதும் உதவி செய்யவா?” என கேட்டாள்.

“இல்ல, செஸ்நட் கேக்குக்கு எல்லாம் தயாராக்கிட்டேன், கரீமா மேம்”

“என்ன செஸ்நட் கேக்கா?” என்று கரீமா கேட்க “ஆமா, அம்ஜத் பெரியப்பா தான் சொன்னார், சித்தப்பாக்கு இந்த கேக் ரொம்ப பிடிக்கும்னு” என இவான் இடைபுக “அப்படியா? இதுவரைக்கும் இது எனக்கு தெரியாதே” என மர்ம புன்னகை செய்த கரீமா “சரி, எதாவது உதவி தேவைனா கூப்பிடுங்க. நீ செய்றது நல்ல விசயம், ருஹானா. இது ஆர்யனுக்கு அதிக சந்தோசம் தரும்” என்று சொல்லி அந்த புன்னகை மாறாமலே சென்று விட்டாள்.

கரீமா நேராக சல்மா அறைக்கு செல்ல, அவள் தன்னை அலங்கரித்து கொண்டு இருந்தாள்.

“என்ன சல்மா, லீவ் நாளும் அதுவுமா எங்க கிளம்பறே?”

“நான் ஆர்யனுக்கு பர்த்டே கிப்ட் வாங்க போறேன். அப்படியே ஆபீஸ் போய் ரஷீத்க்கு உதவி செய்யப் போறேன். ஆர்யன் எது செஞ்சிருந்தாலும் அது ரஷீத் மூலமா தான் செஞ்சிருப்பான். நமக்கு ஆதாரம் கிடைக்கணும்னா அது அவன்கிட்டே இருந்து தான் எடுக்கணும். அவனோட பேசி எதாவது மாட்டுதான்னு பார்க்க போறேன், அக்கா”

“மிக சிறப்பு! நான் நினைச்சதை விட இந்த இரவு பிரமாதமா வெடிக்க போகுது”

“என்ன அக்கா?”

“அம்ஜத் ருஹானாட்ட ஆர்யனுக்கு செஸ்ட்நட் கேக் பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கார். அது அவங்க அம்மா செய்ற கேக். இப்போ அந்த கேக்கை ஆர்யன் தொடுறதே இல்ல”

“சூப்பர் அக்கா! அப்போ ஆர்யன் கோபத்துல கத்த போறான்”

“ஆர்யன் அவளை காப்பாத்தினான்னு அவனுக்கு நன்றி தெரிவிக்க அவ அந்த கேக் செய்றா. அவன் தான் அதுல அவளை மாட்டிவிட்டான்னு தெரியும்போது அவளோட செயல் என்னவா இருக்கும்?”

“இன்னையோட அந்த ருஹானா குப்பை வெளியே பறந்துடும், அக்கா”

——- 

வீட்டுக்கு வந்த வாசிம் மயங்கி கிடந்த அத்தையை பார்த்து அதிர்ந்து போனான். அவன் உடன் வந்த தன்வீர் வாகிதாவை தேட, வாசிம் தௌலத்தை தண்ணீர் தெளித்து எழுப்பினான். அத்தையிடமிருந்து விவரம் அறிந்த வாசிம், அவருக்கு மருந்து வாங்க ஏற்பாடு செய்துவிட்டு அவசரமாக வாகிதாவை தேட வெளியே சென்றான்.

அவனோடு வந்த தன்வீரின் போனில் அழைத்த அவன் அம்மா பர்வீன் நடந்ததை தெரிவிக்க அவர் இருந்த பகுதிக்கு காரில் இருவரும் விரைந்து சென்றனர்.

——– 

Advertisement